ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 3, 2018

பயமான உணர்வுகளுக்குள்… “மகரிஷிகளின் உணர்வை இணைத்துக் கொண்டால்…” அது அந்த அச்சுறுத்தும் உணர்வுகளுக்கு அச்சுறுத்தலாகும் – ஞானகுரு

நாம் நல்ல குணம் கொண்டு இருந்தாலும் நம் சந்தர்ப்பம் ஒரு அச்சுறுத்தும் உணர்வை நுகர்ந்து விட்டால் நல்ல குணத்துடன் சேர்ந்து அது பதிந்து விடுகின்றது.

அந்த அச்சுறும் உணர்வுகள் நமக்குள் விளைந்துவிட்டால் நல்ல குணங்களைக் காக்கும் செயலை இழந்து விடுகின்றது.

அந்த அச்சுறுத்தும் உணர்வின் தன்மையை மாற்றிடும் உணர்வைச் சொல்லாக இங்கே உபதேசிக்கின்றேன்.

சொல்லாகச் சொல்கிறேன் என்றால் அந்த அருள் ஞானிகள் நுகர்ந்த அந்த எல்லையில் என்னுடைய நினைவாற்றல் சென்றது. அதை நான் பெற முடிந்தது. பெற்று அதை வளர்த்துக் கொண்டேன்.

1.யாம் பெற்ற நிலையில் அந்த ஞானிகள் பெற்றதை யாம் இங்கே நினைவு கொண்டு சொல்லும்போது
2.உங்கள் நினைவாற்றல் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அந்த எல்லைகளுக்கே சென்று
3.அங்கே உருவான அந்த அருளாற்றல்களை நீங்களும் நுகர முடியும்.

உதாரணமாக ரோட்டில் இன்ன இடத்தில் ஆக்சிடென்ட் ஆனது என்று கேள்விப்பட்ட உடனே “ஆ…” என்று பதிவாகி விடுகின்றது.

பின் அதை யாராவது சொன்னால் மீண்டும் நினைவு வந்து அந்த இடமே தெரிய (படம் போல்) ஆரம்பித்துவிடும். இதைப் போல
1.குருநாதர் கொடுத்த அந்த அருள் வழியில் யாம் உபதேசிப்பதை
2.நீங்கள் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுதெல்லாம்
3.அவர் கண்டுணர்ந்த பல தீமைகளை வென்ற அந்த அருள் உணர்வுகள் உங்களுக்குள் வரும்.

மகரிஷிகளின் உணர்வைச் சேர்க்கச் சேர்க்க அந்த அச்சுறுத்தும் உணர்வுகள் மாறி தெளிந்த உணர்வாக வலிமை மிக்கதாகச் சிந்தித்துச் செயல்படுத்தும் உணர்வாக மாறும். 

மன பலம் பெறுவீர்கள். மன உறுதி கொண்டு நல்லதைச் செயல்படுத்தும் சீரான நிலைகள் வரும். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.