ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 14, 2026

அசைவம் சாப்பிடுவதால் வரும் தீமைகள்

அசைவம் சாப்பிடுவதால் வரும் தீமைகள்


இப்பொழுது ஊரில் ஆட்டை அறுக்கின்றார்கள்… ஆட்டை அறுப்பவர்கள் ஆட்டினை ஈகையுடனா பார்க்கின்றார்கள்?  அதைக் கொல்ல வேண்டும்…! என்ற உணர்வுடன் பார்க்கின்றார்கள்.
 
கறிக் கடைக்குச் சென்று கறி வாங்கச் செல்கின்றவர்கள் கடைக்காரர் ஆட்டை அறுப்பதைப் பார்த்தால் கறி வாங்கச் சென்றவர்களுக்கு எச்சில்…” ஊறிக் கொண்டே இருக்கும்.
 
ஆடு அறுக்கப்பட்டு ஆட்டின் கறி தமது கைக்கு வருவதற்கு முன்னால் ஆடு அறுக்கப்படுவதை ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
 
ஆனால் இப்படி ஆடு அறுக்கப்படுவதை வேடிக்கை பார்க்கப்படும் பொழுது என்ன நடக்கின்றது…? என்பதை நேரடியாக அனுபவபூர்வமாகக் காண்பித்தார் குருநாதர். 
 
கறி சாப்பிடுகின்ற ஆர்வத்தில்,  ஆடு அறுக்கப்படுவதை வேடிக்கை பார்த்து இரசித்துக் கொண்டிருப்பார்கள்.
1.அறுக்கப்படும் ஆடோ கத்திக் கொண்டிருக்கும்.
2.ஆடு அறுக்கின்றவரைப் பார்த்து அவனை  ஏங்கி "இந்த மாதிரிக் கொல்கின்றானே" என்ற  உணர்வோடு வேதனைப்படுகின்றது. 
 
கடைக்காரரோ… ஆட்டை வேதனைப்படுத்திக் கொன்று,  தான் காசு சம்பாதிக்க வேண்டும் என்றிருக்கும் பொழுது இதனின் உணர்வுகள் அவருக்குள் கவர்ந்தபின் இந்த ஆன்மா அடுத்தவரின் உடலில் எப்படிச் செல்கின்றது…? என்பதனைக்  காண்பித்தார் குருநாதர்.
 
அதே சமயத்தில் ஆட்டுக் கறி வாங்கப் போன  இடத்தில் ஆட்டின் இரத்தத்தை வாங்குவதற்காக நின்று கொண்டிருப்பார்கள். ஆட்டை அறுப்பதை இரசித்துக் கொண்டு இரத்தம் எப்பொழுது கொடுப்பார்கள் என்று காத்திருப்பார்கள். ஆட்டை அறுத்து முடித்தவுடனே, இரத்தத்தை தான் தான் முதலில் வாங்க வேண்டும் என்று காத்திருப்பார்கள். 
 
ஆட்டை அறுக்கும் பொழுது ஆட்டினிடத்தில் உருவான வேதனையை நாம் இரசித்து பார்க்கும் பொழுது
1.நுகர்ந்த வேதனையின் உணர்வுகள் நமது உயிரில் பட்டு நம்முள் உமிழ் நீராக மாறி நமது சிறுகுடலில் கலக்கின்றது. 
2.நுகர்ந்த  வேதனையின்  உணர்வுகள் உமிழ் நீராக மாறினாலும் அந்த உமிழ் நீருடன் இயக்க அணுக்கள் கலந்து
3.இரத்தமாக மாறும் பொழுது இயக்க அணு "ஜீவ அணுவாக" மாறுகின்றது.  
4.ஆடு எத்தகைய வேதனைகளை அனுபவித்ததோ அந்த வேதனையின் உணர்ச்சியின் அணுக்கள் உடல் முழுவதும் படர்கின்றது.
5.அந்த உறுப்புகளில் எந்த வேதனை வருகின்றது…? என்பதைச் சுட்டிக் காண்பித்தார் குருநாதர் 
 
நாம் புழுவிலிருந்து மனிதராக வரும் வரையிலும் கொடுமைகளில் இருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வின் வலிமைகளைச் சேர்த்துச் சேர்த்துப் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்தோம் என்பதைப் பார்த்தோம்.
 
இப்போது மனிதரானபின் இரக்கமற்ற நிலைகளில் ஆட்டைக் கொல்லும் பொழுது அப்படிக் கொன்று,  ஆட்டின் உயிரான்மா வெளி வரும் பொழுது கொன்றவரின் உடலிலோ அல்லது கொல்லத் தூண்டியவரின் உடலிலோ ஆட்டின் உயிரான்மா இணைந்து விடுகின்றது.
 
ஏனென்றால்
1.ஆட்டினுடைய எண்ணங்கள் இன்னார்தான் நம்மைக் கொல்லச் சொல்லித் தூண்டினர்  என்றும்
2.இவர்தான் நம்மைக் கொன்றார் என்றும் அந்த உணர்வுகள் அங்கே வந்து
3.அவருடைய  உடலுக்குள் ஆட்டின் உயிரான்மா புகுந்து விடுகின்றது. 
 
ஆனால் ஆட்டைக் கொன்றவரிடத்தில் இரக்கம் ஈகை சிறிதும் இல்லை. ஆகவே அவரிடத்தில் இரக்கமற்றுக் கொல்லும் உணர்வின் வலிமை அதிகமாகின்றது. அந்த மனிதரிடத்தில் பரிவு பண்பு என்பது துளியும் இல்லை.
 
இத்தகைய நிலை வரும் பொழுது
1.இந்த மனித உடலின் முதுமைக் காலத்தில் மிருக உணர்வின் தன்மையே  மிஞ்சும்.
2.மனித உடலின் உணர்வுகள் அனைத்தும் அழுகிவிடும்.
3.பின் மனித உடலை  விட்டுப் பிரியும் உயிரான்மா மிருகப் பிறவிக்கே போகின்றது.
 
நுகர்ந்த உணர்வுக்கொப்ப இன்று மனிதராக இருக்கின்றார்நாளை மனிதரல்லாத நிலைகளில் எப்படிச் சேர்கின்றார்…? என்பதனையும், இது காண்பிக்கின்றது.
 
1.நீ வேடிக்கை பார்க்கின்றாய் நுகர்ந்த உணர்வு உமிழ்நீராக மாறுகின்றது.
2.உமிழ்நீர் ஆகாரத்துடன் கலந்து சிறு குடலில் கலந்தபின் அந்தச் சிறு குடலின் அணுக்கள் எப்படி இயக்கமாகின்றது.
3.பின் பெருங்குடலுக்குப்  போகும் பொழுது வேதனை உணர்வுகள் ஆகாரத்தை ஜீரணிக்க மறுக்கின்றது.
4.நாம் சத்துள்ள ஆகாரங்களைச் சாப்பிட்டாலும் ஜீரணிக்க முடியாத நிலை எப்படி ஆகின்றது…?
5.ஆகாரம் இரத்தமாக மாறி கல்லீரல் மண்ணீரலுக்கு வந்து சேரும் பொழுது இரத்தத்துடன் எப்படி ஜீவ அணுக்களாக மாற்றுகின்றது. 
6.முதலில் இயக்க அணுவாக இருக்கின்றது… உடலுக்குள் போனவுடன் ஜீவ அணுவாக மாறுவதும்
7.அதனுடைய மலம் உடலில் சேரும் பொழுது ஏற்கனவே நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட மலங்களில் பட்டபின், 
8.அது நல்ல அணுக்களின் தசைகளைஉறுப்புகளை எப்படிக் குறைக்கின்றது…? என்பதை அனுபவபூர்வமாகக் காண்பித்தார் குருநாதர். 
 
உடலில் சிறிய புண்ணாக உருவாக்கி சீழ் பிடித்ததென்றால் வட்டமாக அப்படியே கரைத்துக் கொண்டே போகும்.
 
அதாவது வேதனை உணர்வால் விளைந்த அணுக்கள் தசைகளைக் கரைத்து எப்படிச் சீழாக மாற்றுகின்றது என்பதனையும் நமது உடலின் உறுப்புகள் தேய்ந்து மறுபடியும், நம்முள் விஷத்தன்மைகள் எப்படி வளர்ச்சி அடைகின்றது…? என்பதனையும் குருநாதர் அங்கே அனுபவபூர்வமாக அறியச் செய்தார்.
 
ஏனென்றால் எத்தனயோ கோடி  உடல்களைக் கடந்து மனிதராகப் பிறந்தபின் இரக்கமற்ற செயல்கள் செய்து மற்றவர்களைத் துன்புறுத்தி வாழ்கின்றார் என்ற நிலையும் பார்க்கின்றோம்.
 
தெய்வங்களின் பெயரைச் சொல்லி ஒன்றுமறியாத ஜீவன்களைப் பலியிட்டு எனக்குச் சுகம் வேண்டும் என்று வேண்டி பிழைகள் செய்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையும் பார்க்கின்றோம்.
 
1.இது போன்ற பிழைகளைச் செய்து
2.தம்முள் தீமைகளையும் விஷத்தையும் வளர்க்கும் நிலையைத் தவிர்த்து
3.நம்முள் அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை வளர்த்தோம் என்றால்
4.இதற்கு முன் அறியாது சேர்த்த இருளை அகற்ற முடியும்…. தீமைகள் வராது காக்க  முடியும்.