ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 31, 2016

"வாஸ்து" என்பது எது...? வாசு... வாசு தேவன்... வாசி... - விளக்கம்

மனிதனானவன் “முழு முதல் கடவுள்” என்றால் விஞ்ஞான அறிவு கொண்டு எத்தனையோ வகை உயிரணுக்களை இன்று உருவாக்கியுள்ளார்கள்.

எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையில் புற நிலைகள் செய்தாலும் அக நிலைகளிலும் ஜீவ அணுக்களை உருவாக்கும் விஞ்ஞான தத்துவமே இன்று வந்துவிட்டது.

கருவிற்குள் இருக்கும் ஒரு சிசுவின் தன்மையும் அது எப்படி அதனின் உணர்வு இயக்குகின்றது என்று காணுகின்றார்கள்.

அது வளரும் பருவத்தில் கரு உருவான பத்து நாட்களுக்குள் கருவின் சிசுக்கள் எப்படி இயக்குகின்றது என்ற நிலையை எலெக்ட்ரானிக் என்ற உணர்வின் அதிர்வை வைத்து அதனின் நிலையை விஞ்ஞானி அறிகின்றான்.

அது வளர்ந்து வரப்படும் பொழுதே அதில் வரக்கூடிய குறைபாடுகள் என்ன ஏற்படுகின்றது? என்றும் கண்டறிகின்றார்கள்.

எந்த நிலையை இன்று புறத்தால் செய்தாலும் அதே எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற உணர்வின் அதிர்வுகளை உள்ளே விட்டு அந்தக் குழந்தைகள் உருமாறினாலும் உருமாற்றினலும் அதை மாற்றியமைக்கும் சக்தி கொண்டு வருகின்றான் விஞ்ஞானி.

கண்களில் நாம் பார்க்கின்றோம்.

இப்பேர்ப்பட்ட விஞ்ஞான வளர்ச்சிகள் வந்த இந்தக் காலத்திலும் நான் மந்திரத்தால் ஜெபிப்பேன் என்ற நிலைகளும் ஜோதிடம் பார்த்து, வாஸ்து சாஸ்திரம், அந்தச் சாஸ்திரம் பார்த்து நான் செய்வேன் என்ற நிலையில் நாம் சென்று கொண்டிருந்தால் நம்மை நாம் இழுக்குப்படுத்துகின்றோம், மனிதன் நாம் நம்முடைய அறிவை இழந்து கொண்டிருக்கின்றோம் என்று தான் பொருள்.

இங்கே “வாஸ்து” என்பது எது?

வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலையில் கண்ணன் பிறந்தான் என்று தெளிவாக நம் சாஸ்திரங்கள் கூறுகின்றது.

நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ “வாசுதேவன்”, உயிர் சுவாசித்ததை உருவாக்குகின்றான். “தேவகி” நாம் எதைத் தேவை என்று எந்த உணர்வை எடுத்தோமோ அந்தச் சக்தியாக நம்மை இயக்குகின்றது.

தான் பார்க்க வேண்டும் என்ற உணர்வின் தன்மை வரும் பொழுது உடலான நிலைகள் கொண்டு நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் அறிவாகத் நமக்குள் தெரிந்து கொள்கின்றோம்.

கண்கள் இல்லாதபோது கண்ணின் உணர்வின் தன்மையை உருவாக்கியது நம் எண்ணமே. அந்த எண்ணத்தின் தன்மையை உருவாக்கியது உயிரே. இதையெல்லாம் தெளிவாகக் கூறுகின்றது நம் சாஸ்திரங்கள்.

புறத்தால் நாம் இன்று உடலாக இருக்கின்றோம். இன்னது செய்யவேண்டும் என்ற உணர்வின் தன்மை வரப்படும் பொழுதுதான் உணர்ச்சியின் தன்மை அறிவாக உங்களை இயக்குகின்றது.

ஏன் உங்களால் இதைச் செய்ய முடியாது?

விஞ்ஞான அறிவு இந்த நிலைக்கு வந்திருக்கும் பொழுது மெய்ஞானத்தின் தன்மை அறிந்து கொண்ட நம் நாட்டில் இன்னும் அஞ்ஞான வாழ்க்கை வாழ்வது சரியா? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நாம் சுவாசிப்பதை நம் உயிரான ஈசன் உருவாக்குகின்றான். அந்த நிலைப்படி தான் நம் வாழ்க்கை அமைகிறது என்ற நிலையை உணர்ந்து அருள் உணர்வின் தன்மையை உங்கள் சுவாசமாக்கி அந்த அருள் வழியில் நீங்கள் நடந்தால் உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.

நீங்கள் யாரிடமும் சென்று யோசனை கேட்க வேண்டியதில்லை.

எண்ணுவதை எண்ணியபடி நடத்தித் தரும் நாயகனான உங்கள் உயிரின் துணை கொண்டு எத்தகையை இருளையும் மாற்றிட முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள், உங்களால் முடியும்.

October 30, 2016

எண்ணியவுடனே எதுவும் நடக்குமா?

மனிதன் “நீ எண்ணிய உணர்வு தான் உன்னை இயக்குகின்றது” என்று சாஸ்திரங்கள் கூறுகின்றது.

ஆக, அந்த உணர்வில் எதை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ அதன் வழியில் நம்மை அழைத்துச் செல்கிறது. இதைத்தான் கீதையிலே “நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்” என்று வியாசகர் தெளிவாகக் கூறியுள்ளார்.

எண்ணியவுடன் உடனே எதுவும் நடக்குமா..?

எண்ணியவுடனே விஷத்தின் தன்மை இயக்கும். எண்ணியவுடன் உணர்வின் இயக்கம் இருக்கும்.

ஏன்..? அந்த உணர்வின் வலு கொண்டு மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். என்னை அறியாது வந்த தீமைகள் அகல வேண்டும் என்று எண்ணி அதை வலுக் கூட்டிச் செய்ய முடியாதா..,? செய்ய முடியும்.

ஆனால், நாம் இதைச் செய்கின்றோமா? யாருமே இதைச் செய்வதில்லை.

ஏனென்றால், ஒரு வித்தை நாம் ஊன்றினால் அது பல வித்துகளாக உருவாகும். இதைப்போலத்தான் அந்த மகரிஷிகளின் உணர்வின் சத்தை உங்கள் உடலுக்குள் படரச் செய்யும்போது தீமைகள் உங்களுக்குள் நாடாத நிலைகளைச் செயல்படுத்தும்.

“என்ன சாமி சொன்னார் நடக்கவில்லை” என்று நீங்கள் திரை மறைவு போட்டீற்கள் என்றால் அதுதான் விளையும்.

ஏனென்றால் நான் கொடுத்த வித்திற்கு அதற்குண்டான நிலைகளை நீங்கள் செயல்படுத்துவதில்லை என்றுதான் பொருள்.

காரணம், வயலிலே நல்ல வித்தைப் போட்டுவிட்டால் அதற்கு வேண்டிய தண்ணீரும் அதற்குண்டான உரமும் அதற்குண்டான பாதுகாப்பும் பார்த்தால்தான் அதனுடைய பலனை அது கொடுக்க முடியும்.

இதைப்போல உயர்ந்த ஞானியின் சக்திகளை நீங்கள் பெறவும், அது உங்கள் ஆன்மாவில் கலக்கவும் அதன்வழி கொண்டு நீங்கள் சுவாசித்து அந்த உணர்வின் தன்மை அறிந்து கொள்வதற்குத்தான் இவ்வளவு பெரிய நிலைகளைச் செயல்படுத்துவது.

ஏனென்றால் அடிக்கடி உங்களுக்குள் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். நாம் கொண்டு போவது எதுவும் இல்லை.

நாம் எதைக் கொண்டு போகப் போகிறோம்? நம் உடலைக் கொண்டு போகின்றோமா? அல்லது இந்த உடலால் தேடிய செல்வத்தைக் கொண்டு போகின்றோமா?

அதே சமயத்தில் நான் எல்லோருக்கும் நன்மை செய்தேன் பேரும் புகழும் பெறுகின்றோம். நன்மை செய்யும் போது வேதனை என்ற உணர்வை வளர்க்கும்போது நோயாகி அப்புறம் என்ன செய்கின்றோம்?

கடைசியில் நோயாகி நான் இத்தனையும் செய்தேனே என்று பேயாகி யார் மீது பற்று வைத்திருக்கின்றோமோ அந்த உடலுக்குள் போகும். அந்த உடலுக்குள் போய் இதே தீவினையை உருவாக்கி கடைசியில் அந்த வேதனை என்ற உணர்வுக்குத் தக்கவாறு மனிதனல்லாத உருவைத்தான் உருவாக்கும்.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். யாம் உங்களுக்கு ஞாபகப்படுத்தித் தூண்டுகின்றோம்.

ஏனென்றால், குருநாதர் உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கச் சொன்னார், உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கும்படிச் சொன்னார். கோவிலைச் சுத்தப்படுத்தும்படிச் சொன்னார்.

அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றோம்.

October 29, 2016

“தாயின் காக்கும் உணர்வு” பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

நம் தாய் தந்தையர் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் பிள்ளைகளை வளர்த்து வருகின்றார்கள்.

ஆனால், பிள்ளைகள் அம்மா அப்பாவிடம் சண்டைக்கு வந்துவிட்டால் போதும். பையன் என்ன செய்கின்றான்? கோவித்துக் கொண்டு சென்று விடுவான்.

சென்ற பின் உங்கள் அம்மா கீழே விழுந்துவிட்டார்கள். அடிபட்டுக் காயமாகிவிட்டது என்று கேள்விப்படுவான். அதைக் கேட்டுவிட்டு பையன் என்ன சொல்வான்?

“அப்படித்தான் வேண்டும்..,” என்பான்.

அதே சமயத்தில், பையன் அம்மாவை அடித்து உதைத்திருக்கட்டும். அதன் பின் பையன் வெளியிலே செல்லும் போது அவனை அறியாமல் தவறிக் கீழே விழுந்திருக்கட்டும்.

அதைத் தாய் கேள்விப்பட்டவுடன் “அடப் பாவி மகனே என்னை இப்பொழுது தானடா அடித்தாய்.., அதற்குள்ளே கீழே விழுந்துவிட்டாயே..,” என்று வேதனைப்படும்.

எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் கூட பையனைப் பார்க்க வேண்டும் என்று எழுந்து ஓடி வரும்.

அப்பொழுது தாயின் பாசம் எப்படி இருக்கும்? இயற்கையின் உண்மையின் உணர்வுகள் இது. ஆனால், தாயை நாம் எத்தனை பேர் மதிக்கின்றோம்? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

நம்மை மனிதனாக உருவாக்கியது யார்? தாய். தெய்வமாக நம்மைக் காப்பாற்றியது யார்? தாய். நல்ல மொழிகளை நமக்குச் சொல்லிக் கொடுத்த முதல் குரு நம் தாய் தான்.

தாயை முதலில் நாம் மதித்துப் பழக வேண்டும்.

இந்தச் சாமியார், அந்தச் சாமியார் என்று சொல்கிறார்கள் அல்லவா, எந்தச் சாமியாரும் வேண்டியதில்லை.

நீங்கள் உங்கள் தாயை மட்டும் காலையில் பாத நமஸ்காரம் செய்து உங்கள் அருளாசி வேண்டும் எனக்கு நல்லது நடக்க வேண்டும் என்று ஆசீர்வாதம் வாங்கிப் பாருங்கள்.

காட்டுக்குள் சென்றால் புலியோ யானையோ மற்றதோ தாக்க வரட்டும். நீங்கள் “அம்மா..,மா..,மா” என்று மட்டும் சொல்லிப் பாருங்கள். புலி வந்து தாக்குமா? யானை வந்து தாக்குமா?

நான் உங்களிடம் பந்தயம் கட்டுகின்றேன். “தாக்காது”.

தாயின் உணர்வு உங்களுக்குள் பதிவாகி இருக்கின்றது. இந்தக் காற்று மண்டலத்திலும் பரவி இருக்கின்றது. நீங்கள் “அம்மா..,மா..,மா” என்று எண்ணும் போது அந்த அலைகள் வந்து உங்களைக் காக்கும்.

தாக்க வரும் மிருகங்களும் விலகிச் செல்லும்.

உதாரணமாக, ஒரு இடத்தில் நின்று இங்கே இந்த மரத்தின் அடியில் ஒருவன் “ஆ..,” என்று பயந்துவிட்டான் இங்கே “பேய்.. வந்தது…,” என்று சொன்னால் போதும்.

மற்றவர்கள் அதே மரத்துக்கு அடியில் போகும்போது “நேற்று இங்கே ஒரு பேய் வந்தது..,” என்று பதிவாக்குவார்கள். உடனே என்ன ஆகும்?

அந்த மரத்தைக் கண்ணில் பார்த்ததுமே “இங்கே தான்..,” அந்தப் பேய் வந்தது என்று சொன்னால் நமக்குள் அந்தப் பதிவின் உணர்வை நுகர்ந்தவுடன் “கிடு.., கிடு..,” என்று நடுங்குகின்றது.

நடுக்கம் வருகின்றதா இல்லையா..,? பதிவான உணர்வின் அலைகள் நம்மை இயக்குகின்றதா இல்லையா?

அதைப் போன்று தான், தாய் எப்பொழுதுமே தன் பிள்ளைகள் அவர்கள் உயர்ந்தவர்களாக வேண்டும், நல்லவர்களாக வேண்டும் இதையே தாய் தனக்குள் சதா வளர்த்து வைத்துக் கொண்டுள்ளது. அந்த உணர்வலைகள் நமக்கு முன் உண்டு.

ஆக, நாம் குறும்புத்தனம் செய்தால் திட்டாமலா இருப்பார்கள் சாதாரண வாழ்க்கையில் வந்தது.

எது எப்படி இருந்தாலும் தாய் பட்டினியாக இருந்தாலும் தன் பிள்ளைக்குக் கொடுக்க வேண்டும் என்று உணவைக் கொடுக்கத்தான் செய்யும்.

தனக்கு வயிற்றுக்கு இல்லை என்றாலும் தன் குழந்தைகளைக் காப்பதற்குத் தாய் எத்தனையோ சிரமப்பட்டுக் கொடுக்கின்றது. ஆனால், அந்தத் தாயை நாம் மதிக்கின்றோமா?

ஆகவே, நாம் எப்படி இருக்க வேண்டும்?

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் என் தாய்க்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும். எனக்காகப்பட்ட கஷ்டங்கள் எல்லாம் நீங்க வேண்டும். என் தாய் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அவர்களின் அருள் துணை எப்பொழுதுமே எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். என்று நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

உங்களுக்கு ஒரு பெரிய சிரமமே வருகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். தொழிலில் எவ்வளவோ கஷ்டம் வருகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த நேரத்தில் யாம் சொன்ன முறைப்படித் தாயை எண்ணித் தியானியுங்கள். “தாயின் காக்கும் உணர்வு” வந்து உங்களுக்குச் சிந்தனை வரும். உங்களுக்கு நல்ல வழி காட்டும்.

உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மனிதனாக உருவாக்கப்பட்ட நல்ல குணங்கள் காக்கப்படவேண்டும் என்று தவமிருக்கின்றேன்

இன்று பெரும்பகுதி என்ன செய்கின்றார்கள்?

சாமியிடம் சக்தி இருக்கின்றது. அவரிடம் சென்றால் எல்லாம் சரியாகப் போகும் என்று எண்ணுகின்றார்கள்.

சாமியினுடய சக்தியைத்தான் உங்களிடம் கொடுக்கின்றேன். அந்தச் சக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டுமா இல்லையா..,?

சாமி செய்கின்றார் என்று என்னைத்தான் நம்ப முடிகின்றதே தவிர சாமி கொடுத்த சக்தியை நீங்கள் நம்ப முடியவில்லையே.

அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவோம் என்ற நிலைக்கு நீங்கள் வர வேண்டும்.

சில பேர் சங்கடத்துடன் எண்ணுவார்கள். "நான் நினைத்தேன் வரவில்லை..," என்பார்கள். ஒரு தடவைக்கு இரண்டு தடவை எடுத்தால் அது நிச்சயம் கிடைக்கும்.

யாருக்கும் கிடைக்காது என்று எதுவும் இல்லை. 

உங்கள் எல்லோருக்கும் அந்த அருள் சக்திகள் கிடைக்க வேண்டும் நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் தவமிருக்கின்றேன்.

ஏனென்றால், இந்தக் காற்று மண்டலம் நச்சுத்தன்மையாகிக் கொண்டே இருக்கின்றது இதிலிருந்து நீங்கள் மீள வேண்டும்.

நமது குருநாதர் இதைத்தான் சொன்னார். “நீ கடவுளை எங்கேயும் தேடவேண்டாம்.., மனிதனாக உருவாகிய நிலையில் “முழு முதல் கடவுள்” மனிதன் தான்.

உங்கள் உயிர் ஒரு கடவுள். அவனால் அமைக்கப்பட்ட உடல் அது ஒரு கோவில். அந்த ஆலயத்திற்குள் மனிதனாக உருவாக்கப்பட்ட நல்ல குணங்கள் தெய்வங்கள் அது காக்கப்படவேண்டும்.

உங்களைத்தான் நான் பூஜிக்கின்றேன். உங்கள் உயிரைத்தான் கடவுளாக மதிக்கின்றேன். உங்கள் உடலைத்தான் கோவிலாக மதிக்கின்றேன்.

ஏன், உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கக்கூடாதா..? உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கக்கூடாதா..?

நல்லதை உருவாக்கி அந்தத் தெய்வத்தைக் காக்கும் அந்த அருள் உணர்வை உங்களால் பெற முடியாதா? சொல்லுங்கள் பார்க்கலாம்.

எத்தனையோ சிரமத்திற்கிடையில் இதையெல்லாம் நீங்கள் பெறவேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் என்னுடைய தவம் இது தான்.

October 28, 2016

மற்றவர்களைத் தான் நம்பத் தயாராக இருக்கின்றோம் - நம்மை நம்புகின்றோமா...?

வீட்டில் சந்தோஷமாக இருப்பார்கள், ஒரு சிறு குறை வந்துவிட்டால் போதும். கணவன் மனைவிக்குள் சண்டை வந்து ஒரே ரகளை தான்.

“இப்படிச் சொன்னார்களே..,” என்று விஷம் கலந்து வளர்ந்து கொண்டே போகும். இதை நிறுத்தும் நிலை இல்லை. இன்று எத்தனையோ குடும்பங்களில் இது நடக்கின்றது.

ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்திற்குள் எல்லோரும் நல்லது செய்தாலும் ஒரு பிழை வந்தால் அது விஷமாக மாறி நமக்குள் நல்ல குணங்களையே மாற்றுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகக் கோவில்களில் சிலையை வைத்து நம் நல்ல குணங்களைக் காத்திடும் நிலைகளை அழகாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

ஞானிகள் சொன்னபடி அந்த நல்ல சக்திகளை நான் யாராவது எண்ணுகின்றோமா..? எண்ணி எடுத்து அதை நமக்குள் சேர்க்கின்றோமா? கோவிலுக்குள் சென்றவுடன் ஞானிகள் சொன்னதையெல்லாம் மறந்துவிடுகின்றோம்.

கண்களால் அந்தச் சிலையை உற்றுப் பார்த்து நம் உணர்வுகளையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து அந்த அருள் உணர்வுகளை நுகர்தல் வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்கி அந்தச் சக்திகளைப் பெறுதல் வேண்டும்.

அடுத்து எங்கள் குடும்பம் முழுவதும் அந்த அருள் சக்தி படரவேண்டும். கணவன் மனைவி நாங்கள் ஒன்றி வாழ வேண்டும். என் மாமன் மாமியாருக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

கோவிலுக்குள் வரும் அத்தனை பேருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

பயிர் செய்கின்றோம். பருவத்தில் மழை இல்லாமல் விளைச்சல் இல்லாமல் கருகிவிட்டது என்றால் கோவிலில் போய் என்ன நினைக்கின்றோம்?

“இத்தனையும் கஷ்டப்பட்டுச் செய்தேன்.., எல்லாம் பாழாகிப் போய்விட்டது.., பயிர்கள் எல்லாம் கருகிப்போனது..,” என்று இப்படித்தான் எண்ணுகின்றோம்.

ஆனால், அந்தக் கருகிய உணர்வை நாம் எடுத்தோம் என்றால் என்ன ஆகும் என்று நாம் அறியவில்லை.

ஏனென்றால் அதே உணர்வுடன் விவசாயத்திற்குச் செல்லும்போது கண்ணிலிருந்து அந்த (கருகிய) உணர்வுகள் பயிர்களில் தாக்கப்படுகின்றது. நீங்கள் சங்கடத்துடன் ஒரு செடிக்குத் தண்ணீரை ஊற்றிப் பாருங்கள். பயிர் வளராது வாடிவிடும்.

சில குடும்பங்களில் சலிப்பு சஞ்சலம் என்று இருக்கும். அதை மாற்றும் நிலையைக் கோவிலில் வைத்து எடுக்கும்படிக் காட்டியுள்ளார்கள். அதை விட்டு விட்டு என்ன செய்கின்றார்கள்?

சஞ்சல உணர்வுடன் “அவன் இப்படிச் செய்தான், இது இப்படி ஆகிவிட்டது” என்று இதே உணர்வுடன் வயல்களுக்குச் செல்லப்படும் பொழுது அந்த உணர்வுகள் அங்கே படர்கின்றது.

நீங்கள் சங்கடத்துடன் எந்தப் பயிரை நட்டாலும் அது சரியாக விளையாது.

அதிலிருந்த சத்தை எடுத்துத்தான் நமக்குள் உணர்வாக மாறுகின்றது. ஏனென்றால், தாவர இனச்சத்தை உணவாக உட்கொண்ட நிலைகள் தான் உணர்வாகவும் எண்ணமாகவும் நமக்குள் வருகின்றது).

எதன் உணர்வு நம்முடன் சத்தாகின்றதோ நாம் சொல்லாகச் சொல்லும்போது அதில் (செடியில்) போய் இணையத்தான் செய்யும்.

அப்பொழுது நமக்குள் அதை எடுத்து விஷத்தைக் கலந்த உணர்வைப் பாய்ச்சப்படும் பொழுது செடிகள் கருகத்தான் செய்யும். இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தொழிலேயும் இதே மாதிரித்தான் உணர்வுகள் இயக்கமாகின்றது.

பொருளை வாங்கிச் செல்பவர்கள் நலமும் வளமும் பெறவேண்டும். அவர்களுக்கு நல்ல வருமாணம் வரவேண்டும். பாக்கியைச் சரியான முறையில் நமக்குக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமா என்றால் இல்லை.

தொழிலில் சிக்கல் வந்தால் இன்று என்ன செய்கிறோம்?

ஜோசியம் பார்ப்பவரைத் தேடுவோம், ஜாதகக்காரரைப் பார்ப்போம், மந்திரக்காரரைப் போய்ப் பார்ப்போம் சாமியாரைத் தேடிச் செல்வோம். இன்னும் யாரையெல்லாம் பார்க்க வேண்டுமோ அதையெல்லாம் செய்வோம்.

ஆனால், “நீங்கள் ஒரு மந்திரக்காரர்” என்று நீங்கள் நினைப்பதே இல்லை. எதை எண்ணி உள்ளுக்குள் சுவாசிக்கின்றீர்களோ அந்த உணர்வைத்தான் உயிர் இயக்குகின்றது.

“உங்களால் இயக்க முடியாதா..,?”

தீமைகளை நீக்கிடும் அருள் சக்தி பெறவேண்டும். சிந்தித்துச் செயல்படும் திறன் பெறவேண்டும், அறிந்துணர்ந்து செயல்படும் அருள் ஞானம் பெறவேண்டும் என்று எண்ணி எடுப்பதற்காக வேண்டித்தான் கோவிலை உருவாக்கிக் காட்டியுள்ளார்கள்.

ஆக, நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் நம் உயிர் உருவாக்கும். கோவிலுக்குச் சென்று இதை எண்ணி எடுக்க முடியுமா முடியாதா..,?

“ஏன்..,? மற்றவர்களை நம்புகின்றீர்கள்.., உங்களை ஏன் நம்ப முடியவில்லை..,?” நம்பலாம் அல்லவா.

உங்களை நம்புவதற்கு மன பலம் வேண்டும். உங்களை நீங்கள் நம்புவதற்கும் அந்த மன பலத்தை நீங்கள் பெறுவதற்குத்தான் காலையில் துருவ தியானத்தை எண்ணி எடுக்கச் சொல்கிறோம்.

காலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடலிலுள்ள எல்லா உறுப்புகளிலும் படரவேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது தினசரி தியானியுங்கள்.

உங்களுக்குள் பேராற்றல் பெருகும். மன வலிமை பெறுவீர்கள். எதை எப்படிச் செய்யவேண்டும் என்ற உபாயங்கள் உங்களுக்குள் தோன்றும். அருள் வழி வாழுங்கள். பேரானந்த நிலை அடையுங்கள்.

October 27, 2016

சாமி சிலைக்கு ஞானிகள் அபிஷேகம் செய்யச் சொன்னதன் நோக்கம்

கோவிலுக்குச் செல்பவர்கள் இன்று நடைமுறையில் எல்லா அபிஷேகங்களையும் செய்வார்கள்.

செய்துவிட்டு “சாமிக்கு அபிஷேகம் செய்து நான் என்னத்தைக் கண்டேன்? சாமிக்காக வேண்டி நான் எத்தனை நாள் விரதம் இருந்தேன்? எந்தச் சாமியைக் கும்பிட்டு நான் என்ன பண்ணுவது..,?

இப்படித்தான் எண்ணுகின்றார்கள்.

ஏனென்றால், வாழ்க்கையில் தீமையான உணர்வுகள் வருவதை அவ்வப்பொழுது துடைக்காமல் விட்டுவிட்டால் என்ன ஆகும்? ஆக, அழுக்குச் சேர்ந்துவிட்டால் நல்லதைக் காண முடியுமா? முடியாது.

ஒரு பாத்திரத்தில் அழுக்குப்படுகின்றது. உடனே அதைச் சுத்தப்படுத்திவிட்டால் அழுக்குகள் போய்விடும். சுத்தப்படுத்தாது விட்டுவிட்டு அப்புறம் சுரண்டு சுரண்டு என்று சுரண்டினால் பாத்திரம் தேயத்தான் செய்யும்.

ஆகவே, நல்ல உணர்வுகளை நமக்குள் பெறுவதற்காக வேண்டித்தான் ஞானிகள் சிலைகளை வைத்தார்கள்.

நாம் யாராவது சிலைகளை மதிக்கின்றோமா?

ஆனால், இப்பொழுது நாம் எப்படி மதிக்கின்றோம்? கல்லைக் கடவுளாக்கிவிட்டோம். நம் மனதைக் கல்லாக்கிவிட்டோம்.

அந்தக் கல் தான் நமக்குச் செய்கின்றது என்று நினைக்கின்றோமே தவிர கல்லில் காட்டப்பட்ட அந்த ஞானத்தை எடுக்கச் சொன்ன நிலைகளை ஞானிகள் சொன்னதை யாரும் நாம் எடுப்பதில்லை.

ஆகவே, கோவிலில் பாலாபிஷேகம், தேனாபிஷேகம், சந்தனாபிஷேகம் செய்வது எதற்காக என்று நாம் தெரிந்து கொள்தல் வேண்டும்?

பாலைப் போல மணம் பெறவேண்டும். தேனைப் போன்ற இனிமையான வாழ்க்கை நாங்கள் வாழ வேண்டும். சந்தனத்தைப் போன்ற நறுமணம் நாங்கள் பெறவேண்டும். மகிழ்ந்து வாழும் சக்தி நாங்கள் அனைவரும் பெறவேண்டும். எங்கள் குடும்பத்தில் உள்ளோரும் நாங்கள் பார்க்கும் குடும்பங்களில் உள்ளோரும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும், நல்ல மனம் வர வேண்டும் என்று எண்ணுவதற்குத்தான் ஞானிகள் அதைச் செய்யச் சொன்னார்கள்.

இப்படி எண்ணினால் இங்கே நம் உயிரான ஈசனுக்கு அபிஷேகம் நடக்கின்றது. அந்த உணர்வுகள் நம் இரத்தத்தில் கலக்கின்றது. பகைமை உணர்வுகளை நாம் மறக்கின்றோம்.

அதே சமயத்தில் பிறரின் தீமையான உணர்வு நமக்குள் வராது தடுக்கப்படுகின்றது. அருள் உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கின்றோம்.

ஆகவே, பகைமைகளை மறப்பதற்கும் நல்ல உணர்வுகளைச் சேர்ப்பதற்கும் தான் கோவிலில் உள்ள சிலைக்குத் தேனாபிஷேகம், பாலாபிஷேகம் சந்தனாபிஷேகம் செய்கின்றோம்.

பாலாபிஷேகம் செய்யும் போது பாருங்கள். ஒரே ஆனந்தமாக இருப்பார்கள்.

“ஆகா..,” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே “ஐயோ.., பையன் இப்படி இருக்கின்றானே.., வாங்கியவர்கள் பணம் திரும்பக் கொடுக்க மாட்டேன் என்கிறார்களே..,, கொடுத்தவன் என்னை இப்படி ஏமாற்றிவிட்டாரே…, நான் எல்லோருக்கும் நல்லது செய்கின்றேன், என்னைப் பற்றிக் குறையாகப் பேசுகின்றார்களே…,” இந்த உணர்வுகளெல்லாம் முன்னாடி இருந்து கொண்டு நல்லதை நினைக்கவிடாது.

அதே மாதிரி தியானத்தில் இருக்கும் பொழுது பார்க்கலாம்.

எப்படித்தான் உட்கார்ந்திருந்தாலும் கூட உள்ளுக்குள் இருப்பது முன்னடி வந்துவிடும். வந்தவுடன் அவன் அப்படிப் பேசினான், இவன் இப்படிச் செய்கின்றான் என்று இது அத்தனையும் எண்ணத்திற்குள் ஓடும்.

ஏனென்றால், இதெல்லாம் நம் ஆன்மாவில் இருக்கின்றது. நம் ஆன்மாவில் உள்ளது அதில் எதனின் வலுவோ அதுதான் நம்மை இயக்கும்.

அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினால் ஆன்மாவில் உள்ள தீமை செய்யும் உணர்வுகள் எல்லாம் அனாதையாகிவிடும். அனாதையானதை ஈர்க்கும் சக்தியாகும்போது சூரியன் அதனைக் கவர்ந்து கொண்டு மேலே சென்றுவிடுகின்றது.

கோவிலுக்குச் சென்று தீமை செய்யும் உணர்வுகளை நாம் ஒவ்வொருவருமே அனாதையாக்க வேண்டும். அதற்காகத்தான் ஆலயத்தை அமைத்தார்கள் ஞானிகள்.

வீட்டிலோ அல்லது மற்ற இடங்களிலோ இங்கே தியானத்தில் உட்கார முடியவில்லை என்றாலும் கூட அங்கே கோவிலுக்குச் சென்று அந்தச் சிலையைப் பார்த்தாவது அந்த நல்ல உணர்வுகளை எடுத்தீர்கள் என்றால் தீமை செய்யும் உணர்வுகள் அனாதையாகின்றது.

ஆக, தீமைகள் நமக்குள் புகாதபடி தடைப்படுத்திவிடுகின்றோம். ஏனென்றால் நமக்குள் ஈர்க்க மறுப்பதைச் சூரியன் கவர்ந்து மேலே சென்றுவிடுகின்றது.

மற்றவர்களின் ஈர்ப்பு இருக்கும் பொழுது தீமைகளை இங்கே ஈர்க்கின்றது. நாம் அதை இழுக்கத் தவறினால் சூரியன் கவர்ந்து சென்றுவிடுகின்றது.

அன்றைய காலங்களில் எழுத்தறிவு இல்லை. அதற்காகத் தான் இந்த முறைகளைக் கையாண்டார்கள். நம் ஞானிகள் ஞானிகள் காட்டிய இந்த முறையில் ஆலயங்களை நாம் மதித்தால் பகைமைகளை மறக்கலாம்.

ஆகவே, நாம் பகைமைகளை மறப்பதற்கும் நல்ல உணர்வுகளை நமக்குள் சேர்த்துக் கொள்வதற்கும் தான் ஆலயங்களில் அபிஷேகம் செய்யும் நிலைகளைக் காட்டினார்கள் ஞானிகள்.

October 26, 2016

சாதாரண மனிதனையும் மகானாக்கும் மகத்துவம்

நீங்கள் அனைவருமே மகரிஷிகளின் அருள் உணர்வுடன் ஒன்றி வாழச் செய்யக் கூடிய நிலைகள் வளர வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்.

அதிகாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள் எல்லோரும் துருவ தியானத்தை எடுத்தாக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தை எண்ணி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடலிலுள்ள எல்லா உறுப்புகளிலும் படரவேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது தியானியுங்கள்.

இதைப் போன்று கணவன் தன் மனைவியை எண்ணி மனைவிக்கு இத்தகைய சக்திகள் கிடைக்க வேண்டும். அருள் ஞானம் அங்கே பெருகி மனைவியின் அருள் பார்வையில் எனக்குள் அருள்ஞானத்தை வளர்த்திடும் அருள் சக்தியாகப் பெறவேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

கணவன் மனைவி நாங்கள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும். எங்கள் இருவரின் பார்வையில் இருளை அகற்றும் சக்தி எங்களுக்குள் உருப்பெற வேண்டும்

எங்கள் பார்வையில் ஒவ்வொருவரும் அருள் ஞானம் பெறவேண்டும். அறிந்துணர்ந்து செயல்படும் திறன் அனவரும் பெறவேண்டும் என்று தியானித்தல் வேண்டும்.

ஏனென்றால் அந்த ஒவ்வொரு உயிரையும் கடவுள் என்ற நிலையில் மதித்துவிட்டால் நமக்கு வெறுப்பு என்ற நிலைகள் வராது. ஆகவே உயிரை ஈசனாக மதித்து மனிதர் ஒருவரால் தான் இவ்வாறு எண்ண முடியும்.

உயிரால் உருவாக்கப்பட்ட இந்த உடலை சிவனாக மதித்தல் வேண்டும். அந்தச் சிவனுக்குள் நம்முடைய பேச்சும் மூச்சும் நாம் சொல்லும் தன்மை பாதிக்காதபடி அருள் ஞானத்தின் தன்மை அங்கே வளரும்படி நாம் செய்ய வேண்டும்.

நாம் எண்ணும் போது நம் உடலும் சிவமாகின்றது. நாம் எண்ணியதை உயிர் ஈசனாக உருவாக்குகின்றது. அருள் ஞானத்தை நமக்குள் வினையாக்கும்போது நமக்குள் ஒன்றி வாழும் உணர்வுகள் வளர்கின்றது.

நாம் எவரிடமிருந்தும் பிரிந்து வாழவில்லை. ஒருவர் கோபமாகப் பேசினாலோ நமக்குச் சம்பந்தமில்லாமல் அடுத்தவரைத் திட்டும்போது அதை கேட்டறிந்தாலோ நமக்குள் பதிவாகிவிட்டால் அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் அணுவாக விளைந்து விட்டால் அந்த உணர்வின் குணம் தன் இனத்தின் தன்மையைப் பெருக்கும்.

அதனால் தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்கப்பிள்ளை என்று சொல்வார்கள்.

நாம் எதை எதைப் பதிவாக்கிக் கொள்கின்றோமோ அதில் எந்த உணர்வை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்தக் கணக்கின் பிரகாரம் இந்த உடலில் நோயாவதும் அந்தக் கணக்கின் பிரகாரம் இந்த உடலை விட்டுச் சென்றபின் அடுத்த உடல் பேயாகவோ அல்லது மனிதனல்லாத உடலாகவோ மாற்றிவிடும்.

மனித உடலுக்குள் சென்றால் பேயாகும். மனித உடலை விட்டு வெளியே சென்றால் எந்த விஷத் தன்மையை வளர்த்துக் கொண்டதோ அதற்குத்தக்க அடுத்த உடலை உருவாக்கும் நம் உயிர்.

இதைச் சிவ தத்துவத்தில் நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது. ஆகவே, இதையெல்லாம் நாம் மனதில் வைத்துக் காலையில் எப்படியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்.

அகஸ்தியமாமகரிஷிகளையும் துருவ மகரிஷிகளையும் சப்தரிஷி மண்டலங்களையும் எண்ணி இதையெல்லாம் கூட்டி உங்களுக்குள் பெறவேண்டும் என்று வளர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள். மனைவியும் தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள். இரண்டு பேரும் சேர்ந்து தங்கள் தாய் தந்தையருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

எங்களை வளர்ப்பதற்காக அவர்கள் பட்ட துன்பங்கள் அனைத்தும் நீங்கி அவர்கள் என்றென்றும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து வாழவேண்டும் என்று அன்னை தந்தைக்குக் காணிக்கையாகச் செலுத்துங்கள்.

அடுத்து எங்கள் அன்னை தந்தையை ஈன்ற எங்கள் குலதெய்வங்களான முன்னோர்களான பாட்டன் பாட்டி இருந்தால் அவர்கள் சப்தரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அவர்கள் மலரைப் போன்ற மணம் பெறவேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

அவர்களின் அருள் என்றெனெறும் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

அவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றிருந்தால் அடுத்த கணமே “என்னை விட்டுவிட்டுப் போகின்றீர்களே..,” என்று எண்ணிவிடாதீர்கள்.

துன்பங்களை அகற்றிவிட்டு இனித் துன்பமில்லாத நிலைகள் கொண்டு பிறவியில்லா நிலை என்ற ஏகாந்த வாழ்க்கை அவர்கள் வாழ வேண்டும் என்று அவர்களை நாம் விண் செலுத்திப் பழக வேண்டும்.

இதைப் போன்று நம் வாழ்க்கையில் வழி நடத்தினோம் என்றால் மனிதனுக்குப் பின் அடுத்த நிலை அழியா ஒளிச் சரீரம் கல்கி.

ஆனால், மனிதனுக்குப் பின் வேதனை என்றால் மீண்டும் இந்த நரகலோகத்தில் பிறவிக்குத் தான் வர வேண்டும். இதிலிருந்தெல்லாம் மீள வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்குத் தியானம் செய்யும் முறைகளையும் ஆத்ம சுத்தி செய்யும் பயிற்சிகளையும் கொடுக்கின்றோம்.

இங்கே கொடுக்கப்படும் உபதேசங்களைத் திரும்பத் திரும்பப் படியுங்கள். உங்களுக்குள் பதிய வைத்துக் கொள்ளுங்கள். பொழுதுபோக்காகவே இதை வைத்துக் கொள்ளுங்கள்.

அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுடன் ஒன்றி வாழுங்கள். எல்லோரும் நலம் பெறவேண்டும் என்று ஏங்குங்கள். அவர்கள் நலமாக வாழ்வதைக் கண்டு நீங்கள் மகிழுங்கள்.

ஆகவே, இதைப் போன்ற மகிழ்ச்சியின் தன்மையை உங்களுக்குள் வளர்த்து இருள் சூழா நிலை கொண்டு அடுத்து இந்த உடலை விட்டு அகன்றால் எந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பின்பற்றியவர்கள் சப்தரிஷி மண்டலமாக ஆனார்களோ அதனுடன் நாம் அனைவரும் இணைவோம்.

இதை நாம் உறுதிப் படுத்திக்கொள்வோம்.

நம்முடைய வாழ்நாள் அங்கே தான். செல்வம் நம்முடன் வருவதில்லை. நம் உடலே நம்முடன் வருவதில்லை என்றால் உடலில் விளைய வைத்த உணர்வுகள் எதைக் கவர்ந்தோமோ அதன் வழி அங்கே அழைத்துச் செல்லும்.

நமக்குத் தீங்கு செய்தான் தீங்கு செய்தான் என்ற உணர்வை வளர்த்தோம் என்றால் மீண்டும் கீழே செல்கின்றோம். இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட்டு என்றுமே நாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.

ஆகவே, நீங்கள் எல்லோரும் அந்த அருள் ஒளியைப் பெருக்குதல் வேண்டும். நோய்களைப் போக்கும் ஆற்றல் பெறவேண்டும்.

விஷத் தன்மைகள் நமக்குள் புகாது தடுத்துப் பழகுதல் வேண்டும். நமக்குள் பெருக்கிய இந்த ஆற்றல்களை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்தல் வேண்டும்.

மற்றவர்கள் அதை ஏங்கிப் பெறும் போது தீமைகளைப் போக்கும் நிலைகளுக்கு நீங்கள் தயாராகுதல் வேண்டும்.

அதன் வழி நாம் செய்தோம் என்றால் இந்த உடலுக்குப் பின் அருள் ஒளிச் சுடரான அந்த மகரிஷிகளுடன் ஒன்றி வாழலாம்.

இந்த உடலின் ஆசைக்குப் பொருளுக்கும் புகழுக்கும் சென்றால் இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் வந்து மீண்டும் நரகலோகத்தைச் சந்திக்கும் நிலை வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து ஒவ்வொருவரும் விடுபட வேண்டும். நீங்கள் எல்லாம் அருள் ஞானிகளாக உயர வேண்டும் என்பதே எமது தவம்.

நான் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது. மக்கள் எல்லோரையும் அருள் வழியில் ஞானத்தின் பாதையில் அழைத்து வரும் அளவிற்கு நீங்கள் தயாராக வேண்டும். நான் ஒருவனே சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஆகவே நீங்கள் அந்த நிலைக்கு வாருங்கள்.

இந்த உலகமும் காற்று மண்டலமும் நச்சுத் தன்மையிலிருந்து விடுபட வேண்டும். மக்களை அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழப் பழக்க வேண்டும். 

உங்களால் முடியும், நிச்சயம் நீங்கள் செய்வீர்கள். எமது அருளாசிகள்.