ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 19, 2018

மகரிஷிகளையும் ஞானிகளையும் புகழ்ந்து பேசுவதால் நமக்கு எந்தப் பலனும் இல்லை – “அவர்கள் பெற்ற ஆற்றலை நாம் பெற்று” அவர்களைப் போன்ற ஞானியாக வேண்டும்

நெல் விளைய வேண்டும் என்றால் உமியையா போடுவார்கள்…?
1.ஒருவன் தவறு செய்கிறான் என்று தெரிந்தால்
2.அவன் செய்யக்கூடிய அந்தத் தவறுகளை
3.நாம் செய்யக்கூடாது என்ற எண்ணங்களே நமக்குள் வர வேண்டும்.

அவன் குறை செய்கிறான் குற்றம் செய்கிறான் என்று நாம் எண்ணிக் கொண்டேயிருந்தால் அந்தக் குறைகள் நமக்குள் வந்தே தீரும்.

அதை நாம் நீக்குதல் வேண்டும். நீக்குவதற்குத்தான் குருநாதர் காட்டிய மெய் வழியை உங்களுக்குக் கொடுக்கின்றோம். அவர் வழியில் சென்றால் அந்தத் தவறுக்குள் நன்மை எடுக்கும் நிலைகள் வருகிறது.

உமி இல்லை என்றால் அரிசி இல்லை. எதிலுமே எதனின் இயக்கமும் – அந்த விஷம் இல்லை என்றால் நல்ல உணர்வின் இயக்கமும் இல்லை.

உணர்வின் இயக்கங்கள் இப்படி விஷம் கலந்துதான் வருகின்றது.

எப்படி சூரியன் அல்ட்ரா வயலெட் என்ற நஞ்சை எப்படிப் பிரிக்கின்றதோ இதைப் போல் வாழ்க்கையில் நுகர்ந்து அறியப்படும்போது வரும் தீமைகளை அகற்ற மகரிஷிகளின் அருள் உணர்வை அதனுடன் சேர்த்து இந்த விஷத்தின் தன்மையை அடக்குதல் வேண்டும்.

இதை நாம் அவசியம் செய்து பழகிக் கொள்ள வேண்டும். அதுதான் அங்குச பாசவா.

அதை விடுத்துவிட்டு குருநாதரை நான் ரொம்ப மதிக்கிறேன். அவர் மிக மிக உயர்ந்த உயர்ந்த கருத்துக்களை எல்லாம் சொல்கிறார் என்று புகழ்ச்சியாக எண்ணிக் கொண்டு கடைசியில் என்னைக் குழியில் தள்ளி விடாதீர்கள்.

எனக்கு இது தேவையற்றது. நான் யாருடைய போற்றுதலுக்கும் வரவில்லை.

உங்களை உயர்ந்த நிலைகளில் ஆக்கும் நிலைகளுக்கு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுத்த ஆணைகளைச் சிறப்பித்துப் பழகுங்கள்.

அவர் காட்டிய அருள் வழியில் மெய் ஞானத்தை வளர்த்து நீங்களும் அவரைப் போன்ற மெய் ஞானியாக வளர வேண்டும். உங்களால் முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்…!