ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 19, 2012

குரு வழியில் ஞானகுரு (1)


சாமி புத்தகம் குரு வழியில் ஞானகுரு (1)
(பக்கம் 9-12)
பல லட்சம் ஆண்டுகளுக்குமுன், அதாவது காட்டு மனிதர்களாக வாழ்ந்து வந்த புலஸ்தியர்கள், பல மிருகங்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும், விஷச் ஜந்துக்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும், அதாவது பாம்பு, பல விஷக் கிருமிகள் இது போன்ற நிலைகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள, அதற்கு எதிர் நிலையான பச்சிலையை அரைத்து, தன் உடல்களில் பூசிக் கொள்வார்கள்.

அவ்வாறு பூசிக் கொண்டால், அதனின் மணத்தைக் கண்டு, அவர் அருகிலே அந்த விஷப் பிராணிகள் வருவதில்லை. இதைப் போன்ற புலி போன்ற மிருகமோ, யானை போன்ற மிருகங்களோ, இவர்கள் அருகில் வராதபடி, அந்தந்தக் காலங்களில், அவர்கள் உடல்களில், இந்தப் பச்சிலைகளை அரைத்துப் பூசிக் கொள்வார்கள்.

அவ்வாறு பூசிக் கொண்டால், அவர்களிடமிருந்து வெளிப்படும் இம் மணத்தை, சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்ந்து, அலைகளாக மாற்றிக் கொண்டிருக்கும்.

ஆனால், மற்ற உயிரினங்கள், நுகர்ந்தறிந்தே இரை தேட வரும். அப்பொழுது அவர்கள் உடல்களில் பூசியுள்ள பச்சிலையின் வாசனை வெளிவரும்பொழுது, அந்த மணத்தைக் கண்டு அஞ்சி, மற்ற பூச்சிகளோ, யானைகளோ, புலிகளோ, இவர் அருகில் வராதபடி, விலகிச் செல்லும்.

ஆகவே, தனது பாதுகாப்புக்காக தங்களின் உடலில், அவர்கள் பூசிக் கொண்ட அந்த பச்சிலையின் மணங்களை நுகர நேர்கின்றது, அவர்களும் நுகரப்படும் பொழுது, அவர் உடல்களிலேயும், சில விஷத்தன்மையான கிருமிகளை, அவர்கள் அழித்திடும் சக்தியைப் பெறுகின்றார்கள்.

இதன் வழிகளில், அவர்களது வாழ்க்கையில் காலை எழுந்தபின், சூரியனின் உதயத்தைக் கண்டு, கடவுள் நம்மைக் காக்க வருகிறார் என்று,
சூரியனை உற்றுப் பார்த்து, அவர்கள் வழிபடுவது வழக்கம்.
அவ்வாறு, சூரியனை உற்றுப் பார்த்து அவர்கள் வழிபடும் பொழுது,
சூரியனிலிருந்து வெளிப்படும் விஷத்தன்மைகளை
இவர்கள் பார்த்தாலும், இவர்களைப் பாதிப்பதில்லை.

சூரியனின் இயக்கமும், சூரியன் வெளிப்படுத்தும் அந்தச் சக்தியினை, தான் நுகரும் வாயிலில், எதிர்நிலை கொண்டு, அது விஷத்தை எவ்வாறு பிரிக்கின்றது என்ற நிலையும், அவர்கள் உணர்கின்றார்கள்.

இவ்வாறு தங்களது வாழ்க்கையில் உணர்ந்தறிந்து, சந்தர்ப்பத்தால் அறிந்துணர்ந்து, தீமை கொண்ட மற்ற உயிரினங்களிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ள, ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு, பல உபாயங்கள் தோன்றிக் கொண்டே உள்ளது.

இதன்படி, அவர்கள் கற்றுணர்ந்த உணர்வுகளை, அக்காலங்களில், தங்கள் அருகிலே வாழும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதும், அந்தக் கால மக்கள் இவர்கள் எடுத்துச் சொல்வதை, அவர்கள் உடல்களிலே பதிவாக்குகின்றனர்.

இவர்கள் சொல்லிக்கொண்டிருப்பது அனைத்தையும், சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்ந்து, அலைகளாக மாற்றிக் கொண்டிருப்பதும், இவ்வாறு மாற்றிக் கொண்டிருந்த அச்சக்திகள், இன்றும், நாம், நம் குரு காட்டிய அருள்வழியில், அக்காலங்களில் எவர் பெற்றார்கள் என்ற நிலையை, நாமும் உணர முடியும்.

இவ்வாறு எப்படியெல்லாம் இந்த சக்திகள், அது வெளிப்படுகின்றது, அதை, சூரியனின் காந்த சக்தி எவ்வாறு கவர்ந்து கொண்டிருக்கின்றது என்பதனை, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர், அத்தகைய விஷத்தை முறித்திடும் உணர்வின் சத்தை, எம்மை நுகரச் செய்து, அக்கால மக்களின் உருவங்களையும், அக்காட்டுப் பகுதியின் நிலைகளையும்,  என்னை அறியும்படி செய்கின்றார்.

அவர்கள் வெளிப்படுத்திய உணர்வின் சத்துக்கள், எவ்வாறு இப்பூமியில் பரவிக் கொண்டுள்ளது? சாமான்ய மக்களும் அதைப் பெற முடியும் என்பதனை, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தெளிவாக உபதேசித்து, அதனை என் உடலிலே பதிவாக்குகின்றார்.

இவ்வாறு எமக்குள் பதிவான நிலை கொண்டுதான்,
இன்றும் எம் குருநாதர் பேசிய உணர்வின் தன்மையும்,
உபதேசித்த உணர்வும், இன்றும்
அதாவது, உணர்வுகளாகப் பரவிக் கொண்டுள்ளது.

அதனை நீங்கள் அனைவரும் நுகர்ந்தறிந்து, உங்கள் வாழ்க்கையில் அந்தச் சக்திகளைப் பெற முடியும்.

அவ்வாறு, அவர்கள் பூசிக் கொண்ட பச்சிலைகளின் மணங்களையும், நஞ்சினை வென்றிடும் அந்தச் சக்திகளையும் நீங்கள் அனைவரும் பெற்று, அவர்கள் நஞ்சினை வென்றது போன்று, நீங்களும் வெல்வதற்கே இதை யாம் உபதேசிக்கின்றோம்.

 (பக்கம் 12-17)
அகஸ்தியனுடைய தாய் தந்தையர்கள் என்று சொல்லும், அவர்கள் கருவுற்றிருக்கும் பொழுது, இவர்கள் பூசிய முலாம்கள் விஷத்தை அடக்கிடும், விஷத்தை வென்றிடும் அத்தகைய பச்சிலையின் வாசனைகளை அவர்கள் சுவாசிக்கும் பொழுது, அவர்கள் கருவில் வளரும் சிசுவிற்கும் இது இணைகின்றது.

ஆகவே கருவுற்ற காலங்களிலிருந்து,
அந்த 10 மாதங்களில், இவர்கள்
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சக்திகளையும்,
ஒவ்வொரு ஆற்றல்களையும் அவர்கள் உணர்ந்து கொண்டிருப்பதும், அந்த உணர்வுகள், கருவிலே வளரும் இந்த சிசுவிற்கு, பதிவாகிக் கொண்டே இருக்கின்றது.

இவர்கள், காலையில் சூரியன் உதயமாகும் பொழுது, சூரியனை உற்றுப் பார்த்து, கடவுள் என்ற நிலைகளில்,
அவர்கள் வணங்கி வந்ததும், அதன் உணர்வை நுகர்ந்ததும்,
சூரியன் கவரும் மற்ற நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் சக்தியும், 
மற்ற கோள்கள் எவ்வாறு கவர்கின்றது என்ற நிலையும்,
இவர்கள் நுகர்கின்றார்கள்.
அந்த உணர்வுகள், கருவிலே வளரும் சிசுவிற்கும் பதிவாகின்றது.

அவ்வாறு 10 மாதங்களில், அந்தக் கருவில் இருந்து வெளிப்பட்ட இந்தச் சக்திதான், குழந்தையாக அது பிறந்தபின், அவன் உடலிலிருந்து வெளிப்படும் மணத்தைக் கண்டு, மற்ற பாம்பினங்களோ, கொசு போன்ற விஷ ஜந்துக்களோ, மற்ற மிருகங்களோ, இவன் இருக்கும் பக்கம் வருவதில்லை. இந்த மணத்தைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது.

அதைக் கண்ணுற்ற, அந்த அகஸ்தியன் என்று பின்கூறும், அவனது தாய் தந்தையர்கள் “அகஸ்தியனைக்” கடவுளால் கொடுக்கப்பட்ட குழந்தை என்று, அதை இவர்கள் போற்றித் துதிக்கும்நிலை வருகின்றது.

ஆனால் அவன் இருக்கும் பக்கம், மற்ற விஷப் பிராணிகளோ, விஷ ஜந்துக்களோ, மற்ற  கொசு போன்ற தொல்லை கொடுக்கும் மற்ற உயிரினங்களோ, வருவதில்லை.

இதைப்போல இவர்கள் வணங்குவது போன்று,
அந்தக் குழந்தை படுத்திருக்கும் போது,
வானை நோக்கிப் பார்த்து
இவர்கள் எதை எதை எல்லாம் கண்டுணர்ந்தனரோ,
அதையெல்லாம் அவனும் நுகரும் சக்தி பெறுகின்றான்.
அந்த உணர்வுகள் அந்த பச்சிளம் குழந்தையிடம் வளருகின்றது, வளர்ச்சி பெறுகின்றது.

இவ்வாறு வளர்ச்சி பெற்ற அக்குழந்தையோ, தனது வயது வளர்ச்சியில் ஒவ்வொரு வருடம் கூடக் கூட, அவனில் கண்டுணர்ந்த உணர்வுகள், சொல் வடிவில் வெளிப்படுவதும், வெளிப்படுத்துவதும், இதை மற்றவர்கள் தன் அருகிலே இருப்பவர்கள் கேட்டறிவதும், அவர்கள் ஒவ்வொருவரும், அவனைக் கடவுள் பிள்ளை என்று, அந்தக் காடுகளில் வாழ்ந்து வந்த அக்கால மக்கள், போற்றித் துதிப்பதும் வருகின்றது.

இதன் வழிப்படி வளர்ந்த அகஸ்தியன், தன் ஐந்தாவது வயதில், துருவத்தை நுகர்ந்தறியும் ஆற்றல் பெறுகின்றான். மற்ற பிரபஞ்சத்தில், நட்சத்திரங்களும், கோள்களும், அது உமிழ்த்தும் சக்தியை, அது பூமி, தன் சுழற்சியில் துருவ பகுதியில் கவரும் அச்சக்தியினை, இவன் உணரும் பருவம் பெறுகின்றான்.

அவ்வாறு தான் கண்டுணர்ந்த உணர்வினை, இவன் எதை நுகர்ந்து அறிகின்றானோ, அவையனைத்தையும், அவன் உயிர் ”ஓ” என்று ஜீவ அணுவாக மாற்றி “ம்” என்று அவன் உடலாக மாற்றிக் கொண்டேதான் உள்ளது.

அதாவது, தான்  பிறந்ததிலிருந்து, கண் கொண்டு உற்றுப் பார்த்து, உணர்வினை நுகர்ந்தறியும் போது, இவை அனைத்தையும் ஜீவ அணுவாக மாற்றி, “ம்” என்று அவன் உடலாக மாற்றிக் கொண்டேதான் உள்ளது.

இவ்வாறு வானவியில் உணர்வை, தனக்குள் வளர்த்துக் கொண்ட இச்சக்தியின் துணை கொண்டு, தான் வளர்ச்சி பெற்றாலும், இவனை ஈன்ற தாய் தந்தையர்கள், தன்னைக் காத்துக் கொள்ள கடும் விஷத்தைக் கொல்லும் பச்சிலைகளைத் தங்களுக்குள் பூசிக்கொண்ட இந்த நிலைகள், தங்கள் உடலிலே பரவி, அவர்கள் இருவரது உடலையும் விட்டு, அந்த ஆன்மாக்கள் பிரிகின்றது.

பிரிவதற்குமுன், தன் ஐந்து வயதுக் குழந்தையின் எண்ணங்களை ஏங்கி, அவன் தனித்திருப்பானே, அவனை எப்படிக் காப்பது? யார் காப்பது என்ற நிலை கொண்டு, அந்த இரண்டு உயிரான்மாக்களும், இவன் நினைவாகவே, வெளியில் வருகின்றது.

இதைப்போன்று, இன்றைய நிலைகளிலும் பார்க்கலாம். நோயுற்றவரிடம் பற்று கொண்டு, அந்த உணர்வைப் பதிய வைத்திருந்தால், யாரிடம் இந்த உணர்வுகள் அதிகமாக உள்ளதோ, அவருடைய உடலில், அந்த உடலைவிட்டு பிரிந்த ஆன்மா சென்று, அதே உணர்வை இயக்கத் தொடங்கும். அவர்கள் எதையெல்லாம் செயல்படுத்தினார்களோ, அதை அனைத்தையும், அவர்கள் புகுந்த உடல்களில் இயக்கச் சக்தியாக மாற்றுகின்றார்கள். அப்பொழுது அவர்கள் உடலில் இருந்த நோய்கள், இவர் உடல்களிலும் மாறிவிடுகின்றது.

இதைப் போன்றுதான். அன்று அகஸ்தியனின் தாய் தந்தையர்கள், தன் குழந்தை மேல் உள்ள பற்று அதிகரித்து, இந்த உடலை விட்டு அகன்ற அந்த இரு ஆன்மாக்களும், அகஸ்தியனின் உடலுக்குள் அது புகுந்தது.

புகுந்தபின், அந்த உணர்வின் தன்மை வலிமை பெற, அவர்கள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை அனைத்தையும், அகஸ்தியன், இந்த 5 வயதில் வானவியல், புவியியலை உணர்ந்தறிந்து, துருவப் பகுதியில் நமது பூமிக்கு, ஈர்த்து வரும் இந்தச் சக்தியினை உணரும் பருவம் பெறுகின்றான்.

அப்பொழுதுதான், 5வது வயதில் துருவன் என்ற நிலை அடைகின்றான். துருவன் என்ற பெயர் வந்தபின் தன் வளர்ச்சியில், இன்று நட்சத்திரங்கள் எவ்வாறு உரு பெற்றது? நமது கோள்கள் எவ்வாறு உருவானது? சூரியன் எவ்வாறு உருவானது? என்ற நிலையை,
இவனுக்குள் விளைந்த உணர்வின் நிலை கொண்டு,
அவனுக்குள் அறிவின் உணர்வுகள்,
உணரும் பருவம் வருகின்றது.

அவ்வாறு உணரும் பருவங்கள் வரும்பொழுதுதான், தனக்குள் இருக்கும் இயக்கமும், வானியல் இயக்கமும், புவியியல் இயக்கமும் தன்னுள் கண்டுனர்ந்தபின், இந்தத் தாவர இனச் சத்துகள் எவ்வாறு உருவானது, அந்த உணர்வின் சத்தினை உயிரணுக்கள் எவ்வாறு நுகர்ந்தது? என்ற உணர்வுகள், அவனுக்குள் உருப்பெறத் தொடங்குகின்றது.

இவ்வாறு, கேள்விகளின் உணர்வுகள் விளைந்து, விளைந்து, இந்த அண்டங்கள் எவ்வாறு உருவானது என்ற நிலையை, அறியும் உணர்வினைச் செலுத்துகின்றான், இந்தத் துருவன்.

அதாவது, தன் உடலிலே பதிவு செய்து, ஒவ்வொன்றும் அவனுக்குள் இணைந்தே வளர்ச்சி பெற்று வருவதையும், அவன் அவனுக்குள் உணரும் சக்தி பெறுகின்றான்.

அவ்வாறு சக்தி பெற்ற உணர்வின் துணை கொண்டு,  நமது சூரியப் பிரபஞ்சம் எப்படி உருவானது? இதைப் போல, பேரண்டத்தில் எப்படி இத்தகைய நட்சத்திரங்களும், கோள்களும் உருவானது? என்று அறியும் உணர்வினை, விண்ணை நோக்கிச் செலுத்துகின்றான். பின், ஆதியில் அகண்ட அண்டம் எவ்வாறு இருண்ட நிலைகள் கொண்டிருந்தது என்ற மூலத்தையே அறிகின்றான்

நமது குரு அருளால், அந்தத் துருவன் பெற்ற, அவன் கண்டுணர்ந்த அகண்ட அண்டத்தின், அனைத்து சக்திகளையும், நீங்கள் அனைவரும் பெற எமது அருளாசிகள்.

(பக்கம் 19-23) 
உதாரணமாக, இன்று நமது பூமியில், சூரியனில் இருந்து வெளிப்படும் வெப்பம், காந்தம், விஷம், அது நமது பூமியின் ஈர்ப்பிற்கு வரும்பொழுது, இன்று வேப்ப மரத்தின் சத்தினைக் கவர்ந்துக் கொண்டால், அந்த கசப்பின் உணர்வை ஊட்டும் அணுவாக மாறுகின்றது.

அத்தகைய அணுவாக மாறிவிட்டால், அதன் மணத்திற்கு “ஞானம்” என்று பெயரைச் சூட்டுகின்றார், அகஸ்தியர். அதன் வழியில், அதன் இயக்கமாக அந்த அணு இயங்கத் தொடங்கி விட்டால் “காயத்ரி”  என்று பெயரை வைக்கின்றார். “காயத்ரி” என்றால் அதன் வலுவாக அந்த அணு இயக்குமென்று பொருள்.

இவ்வாறு, அந்த மரத்தில் விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால், நிலத்தின் ஈர்ப்பின் துணை கொண்டு, அந்த வித்தில் உள்ள உணர்வுகளின் துணை கொண்டு, அந்த வேம்பின் கசப்பான உணர்வை நுகர்ந்து, அதுவும் வேம்பின் நிலைகள் கொண்டு வளர்ச்சி பெறுகின்றது.

இதைப் போன்று, ரோஜாப் பூவும் தன்னில் வளர்த்துக் கொண்ட உணர்வின் துணை கொண்டு, தனது வித்தின் ஈர்ப்பிற்கு, அதன் உணர்வின் சத்தினைக் கொடுத்து, ரோஜாப்பூ என்ற வளர்ச்சிகள் பெறுகின்றது.

இதைப் போன்று, விஷச் செடியும் வளர்ச்சி பெற்று, அதில் விளைந்த வித்தை ஊன்றினால், நிலத்தின் ஈர்ப்பின் தன்மை கொண்டு, அந்த விஷச்செடி வளர்ச்சி அடைகின்றது.

இப்பொழுது, வேம்பின் கசப்பின் சத்தைக் கவர்ந்துக் கொண்ட காந்தப் புலனறிவு, இந்த வேப்ப மரத்தைக் கடந்து செல்லும்போது, இதன் வலு கொண்டு அது இயங்கத் தொடங்கி விடுகின்றது நமது பூமியில். இதைப் போன்றே, ரோஜாப்பூவின் உணர்வுகளையும் சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்ந்து தன் அலைகளாக, நம் பூமியில் பரவுகின்றது. இதைப் போன்றே, ஒரு விஷச் செடியில் விளைந்த உணர்வின் சத்தை, இதே சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து, அலைகளாக மாற்றிவிடுகின்றது.

இருப்பினும், வேம்பின் (கசப்பு) உந்து விசையின் உணர்வைக் கண்டு, ரோஜாப்பூவின் உணர்வின் (துவர்ப்பு), இதனின் ஈர்ப்பிற்கு, இதனைக் கண்டு, நகர்ந்து ஓடுகின்றது.

ஓடும் பாதையில், விஷச் செடியிலிருந்து உமிழ்த்தும் சக்தியில் மோதியபின் சுழற்சி அடைகின்றது. விஷத்தின் தாக்குதலால், அதைத் தாங்காது சுழலத் தொடங்கி விடுகின்றது.

அவ்வாறு, சுழற்சியில் சுழன்று கொண்டிருக்கும் பொழுது, வேம்பின் உணர்வுகள் ஈர்க்கப்பட்டு, ஒன்றுடன் ஒன்று மோதுகின்றது.

இவ்வாறு மோதலில் ஏற்படும் வெப்பத்தால், இவை அனைத்தும் அதாவது, வேம்பின் உணர்வலைகள் 10 சதவீதமும், ரோஜாப்பூவின் உணர்வலைகள் 3 சதவீதமும், விஷச் செடியின் சத்து 1 சதவீதமும், மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி, இணைந்து விடுகின்றது. அதற்கு ”பரப்பிரம்மம்” என்று காரணப் பெயரைச் சூட்டுகின்றனர்.

ரிக், சாம, அதர்வண, யஜூர் மீண்டும் சாம என்று, வேதங்கள் கூறுகின்றன. உதாரணமாக வேம்பும் ரிக், ரோஜாப் பூவும் ரிக், விஷச் செடியும் ரிக். இதிலிருந்து வரக்கூடிய மணங்கள், வேப்பமரம் கசப்பு உந்தித் தள்ளும் தன்மை கொண்டது, ரோஜாப்பூ, நறுமணம் கொண்டது.  ஒரு விஷச் செடியின் சத்தோ, உணர்ச்சியைத் தூண்டும் அரிப்புத் தன்மை கொண்டது.

இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதும் போது, இந்த உணர்வின் தன்மையை உணர்த்துவதற்காக, இதற்கு “சாம” அதாவது “இசை”. உதாரணமாக, இப்பொழுது, வேம்பின் மணத்தை நுகர்ந்தால் நாம் எப்படிச் சொல்கின்றோம். “ஐய்யய்யய்ய” கசக்கின்றது என்று சொல்கின்றோம்.

ரோஜாப்பூவின் மணத்தை நுகர்ந்தால், “ஆகா! நறுமணம்” என்று சொல்கின்றோம். நுகர்ந்தறியும் உணர்வை, “சாம” என்றாலும் “இசை” என்று காரணப் பெயரை சூட்டுகின்றார்கள்.

இவ்வாறு மூன்றும் மோதும் பொழுது, அதனதன் குணங்களையும், அதனதன் மணங்களையும் இழக்கின்றது. ஒன்றாக இணையப்படும் பொழுது, “அதர்வண” என்று காரணப் பெயரைச் சூட்டுகின்றார்கள்.

வேம்பின் சத்து இழக்கப்படுகின்றது.
ரோஜாப்பூவின் மணமும் குறைக்கப்படுகின்றது.
விஷச் செடியின் அரிப்புத் தன்மையும் குறைக்கப்படுகின்றது.
இவ்வாறு மூன்றும் இணைந்து, ஒன்றாக இணைக்கப்படும் பொழுது, இதில் எந்தெந்த அளவுகோல் கொண்டு, இந்த உணர்வுகள் கலந்துள்ளதோ, எத்தகைய மணங்கள் இதனுடன் கலந்ததோ, அதன் வழிப்படி அது நுகர்ந்து, அதன் உணர்வுக்கு ஒப்ப, மீண்டும் ஒரு புதுச் செடியாக உருவாகின்றது. அதாவது, இத்தகைய நிலை பெற்ற உணர்வுகள், “கருவேப்பிலையாக” அது உருமாறுகின்றது.

ஆகவே, இவ்வாறு உருப்பெறும் உணர்வுகள்
நாம் உணர்வதற்காகத்தான், ”இயல், இசை, நாடகம்”.
இயல்பாகவே அந்த உணர்வுகள் இசையாகப்படும்போது,
இந்த உணர்வுகள் கலந்தபின், அதன் ரூபங்கள்
எவ்வாறு மாறுகின்றது என்ற நிலையைத் தெளிவாக்குகின்றது வேதங்கள்.

ஆக, கருவேப்பிலையை எடுத்துக் கொண்டால்,
சிறிது கசப்பும்,
சிறிது நறுமணமும்,
சிறிது அரிப்பும் இருக்கும்.
ஆகவே, இதைப்போன்றுதான் உலகில் மாற்றங்கள் ஏற்பட்டன என்பதனைத் தெளிவாக்குகின்றார், துருவனானபின் துருவமகரிஷி.

 (பக்கம் 23-27
ஒவ்வொரு உணர்வு கொண்ட அணுக்கள், இன்று வான் வீதியில் பரவிக்கொண்டிருக்கும்போது, தனக்குள் வலிமை கொண்ட உணர்வுகள் வலிமையற்றதைத் தாக்கும்போது, அது வெப்பமாகி, அதன் நிலைகள் இரண்டறக் கலந்து, அதிலிருந்து வெளிப்படும் ஆவி, எடையற்றதாக மாறுகின்றது.

இவ்வாறு எடையற்றதாக மாறும்போது, அது மேகங்களாக ஒரு அடர்த்தி அடைகின்றது. இவ்வாறு அணுக்களில் மோதிய உணர்வுகள், பல மேகக் கூட்டங்களாக அமைந்து, இம்மாற்றம் ஏற்படும் போது, இந்த அணுக்கள் இந்த மேகக் கூட்டத்துக்குள், ஒன்றுடன் ஒன்று மோதும் போது நீராக மாறுகின்றது.

நீருக்குள் சிக்குண்ட இந்த அணுக்கள் எடைகூடி,
அகண்ட அண்டத்தில் ஓடுகின்றது.
ஓடும் வேகத்தில் அதனுடைய உராய்வால்,
அது ஆவியாக மாற்றப்பட்டு,
இந்த அணுக்கள் ஒன்றாக இணைத்து,
ஒரு திடப்பொருளாக உருவாகின்றது.

அவ்வாறு உருபெற்ற பொருளைத்தான் “பரம்பொருள்” என்று அன்றைய துருவன், தனக்குள் கண்டறிந்த உணர்வினை, காரணப் பெயரை வைத்து, வெளிப்படுத்துகின்றான். அவனில் விளையப்பட்ட அந்த உணர்வுகள், இன்றும் இதே சூரியனின் காந்தப் புலனறிவில் கவரப்பட்டு, இன்றும் நம் பூமியில் படர்ந்து கொண்டுள்ளது.

இவ்வாறு அவன் கண்ட பேருண்மையை, “பரம்பொருள்” அதாவது எல்லையே இல்லாதே அகண்ட உலகில். பரம் என்பது ஒரு எல்லை. அது ஒரு பொருளாக, ரூபமாக அமைந்துள்ளது என்பதனை, “பரம்பொருள்” என்று காரணப் பெயரைச் சூட்டுகின்றான் “துருவன்”.

ஆகவே இதன்வழி வளர்ச்சி பெற்று, ஒரு ரூபமாக ஆனபின், அதன் ஓடு பாதையில் ஓடப்படும் பொழுது,
மற்ற அணுக்களுடன் மோதப்படும் பொழுது,
சுழற்சி ஏற்பட்டு,
உராயப்படும்போது வெப்பமும்,
தான் துருவப் பகுதியில், தன் ஓடுபாதையில்,
இத்தகைய அணுக்களை ஈர்த்து,
இதற்குள் உருவாகும் வெப்பமும்,
இந்த அணுக்களும் இரண்டறக் கலந்து,
மற்ற பாறைகளாகவும், மற்ற உலோகங்களாகவும் உருமாறுகின்றது.

இப்படி தன் வளர்ச்சியில் சுழற்சியின் தன்மை பெரும் பொருளாக மாறும் போது, அதனுடைய சுழற்சி வேகமும் கூடி, சுழற்சி வேகம் கூடும் பொழுது வெப்பமும் கூடி, ஈர்க்கும் சக்தியும் கூடி, இவை அனைத்தும் இந்த பரம் பொருளுக்குள், வெப்பம்  அதிகரித்து தன் அருகிலே இருக்கும் பொருள்களை உருமாற்றிக் கொண்டே உள்ளது.

அதிலே உருவாகும் ஆவியின் தன்மை வெளிப்படுத்துவதும், அதற்குள் பல உருமாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே உள்ளது இந்தப் பரம்பொருள். இதை நாம் உணர்வதற்காகத்தான், அன்று துருவன் “சிவலிங்கம்” என்று காரணப் பெயர் வைத்தான்..

இவ்வாறு  சிவலிங்கமாகி, அது உருப்பெற்று, அதன் உணர்வின் வளர்ச்சியில், அது வளர்ச்சியாகி, பெரும் கோளாக உருமாறுகின்றது. பெரும் கோளாக உருமாறும்பொழுது, இதனுடைய சுழற்சியின் தன்மையால், வெப்பத்தின் தன்மை அதிகரித்து, அதிகரித்து அமிலச் சக்தியாக மாறுகின்றது.

இவ்வாறு அமிலச் சக்தியாக மாறுபடும் இந்த சக்திகள், அது நட்சத்திரமாக மாறுகின்றது. அதிலிருந்து வெளிப்படும் அமிலங்கள், அதன் ஈர்ப்புவட்டத்தில் துகள்களாக மாறுகின்றது. அது, தான் உமிழ்த்தும் அந்த அமிலங்களில், தான் ஓடு பாதையில் செல்லும் போது, பல தூசுகள் அதனில் ஈர்க்கப்பட்டு, அதனின் உணர்வின் தன்மை வளர்ச்சி அடையும் பொழுதுதான், “பால்வெளி மண்டலம்” என்ற நிலை அடைகின்றது.

அவ்வாறு அடைந்தாலும், அதனுடைய ஓட்டத்தில், இதனுடைய ஈர்ப்பு சுழற்சியில் சுழலும்பொழுது, தூசிகளாக மாறுகின்றது. அந்த தூசிகளாக மாறுபட்ட இந்த உணர்வினை, சுழற்சியின் ஈர்ப்பில் தனக்குள் உணவாக எடுத்துக் கொள்கின்றது.

தான் வளர்ச்சியில் வெளிப்பட்ட இவைகள் அனைத்தும், உதாரணமாக, நூலாம்படைப் பூச்சி, எப்படி தன் உடலிலிருந்து வெளிப்படும் அமிலத்தை நூலாம்படையாகத் தனக்குள் ஒரு கூட்டாக அமைத்து, அந்த வலைக்குள் சிக்கும் மற்ற உயிரினங்களைத் தனக்குள் உணவாக எடுத்துக் கொள்வதும், அதே சமயத்தில் தன் உடலில் உருவான அமிலத்தை, மற்றொன்றின் மேல் பாய்ச்சப்படும் போது, அதைத் தனது இனமாக உருபெறச் செய்கின்றது.

இதைப் போன்றுதான், நட்சத்திரம் தான் உமிழ்த்தும் அமிலங்களை, நூலாம்படை போன்று வலை விரித்து, அது போகும் பாதையில் சிக்கும் மற்ற உணர்வுகளைத் தன்னுடன் இணைத்து, பால்வெளி மண்டலங்களாக அது உருபெற்று, இதன் சுழற்சியின் வேகத்தில் தூசியாகி, தனக்குள், உணவாக  எடுத்துக் கொள்வதும், இதன் ஈர்ப்ப்பு வட்டத்தில் சுழற்சி பெறும், இவைகள் கோள்களாக உருபெறுவதும், இதைப் போன்று ஒரு பிரபஞ்சமாக உருப்பெறுகின்றது.

இப்பொழுது நட்சத்திரம் எவ்வாறு உருவானதோ, இதைப் போன்றே இது ஈர்ப்பு வட்டத்தில் வருவதை,
மற்ற பிற மண்டலங்களில் இருந்து வரும் சத்தினை,
நட்சத்திரங்கள் எடுப்பதும்,
அந்த நட்சத்திரங்கள் பால்வெளி மண்டலங்களை அமைப்பதும்,
அதிலிருந்து தூசிகளாக வருவதை சூரியன் தனக்குள் இழுத்து,
மற்ற கோள்கள் உருபெற்று, 
ஒரு பிரபஞ்சமாக உருப்பெறுகின்றது.

இவ்வாறு உருபெற்றதுதான், நமது சூரியக் குடும்பம் என்றும், அதற்குள்தான் இந்த உயிரணு தோன்றியது என்ற உணர்வினை, தனக்குள் தன்னை அறிகின்றான்.

ஆகையினால்தான், ஆரம்பத்தில் தாயின் கருவிலே விளைந்த இந்த உணர்வுகள், அவனுக்கு “அகஸ்தியன்” என்று காரணப் பெயரைச் சூட்டினார்கள்.

பின் அவனுடைய வளர்ச்சியில் துருவத்தை நுகர்ந்து, துருவத்தின் வழியில் வரும் உணர்வினை, அது எவ்வாறு உருபெற்றது என்ற நிலையைத் தனக்குள் அறிந்துணர்ந்து, அதன்வழி அவனில் விளையவைத்த உணர்வுகள், இன்றும் நம் பூமியில், சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு பரவிக் கொண்டுள்ளது.

இவ்வாறு உருவான பிரபஞ்சத்தை, அகஸ்தியன் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வின் ஆற்றல்களும், துருவனின் உணர்வுகளில் விளைந்த உணர்வுகளும், நம் பூமியில் பரவிக் கொண்டிருப்பதும், பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருப்பதும், அதனை நாம் அவர்கள் வழியில் நுகர்ந்தறிய வேண்டும்.

அவ்வாறு நுகர்ந்தறிந்து, நமக்குள்ளும் அதை வளர்த்துக் கொண்டு, துருவன் எவ்வாறு இன்று துருவ நட்சத்திரமானானோ, அவனின் ஈர்ப்பு வட்டத்தில் வந்தோர்கள் வாழ்ந்தும் இன்று சப்தரிஷி மண்டலங்களாக, வளர்ந்து கொண்டிருக்கின்றனர்.

அதனை நாமும் பெறமுடியும் என்று, நமது குருநாதர் காட்டிய அருள் வழியில், உங்களுக்குள் பதிவாக்கி, உங்கள் நினைவின் ஆற்றலின் துணை கொண்டு, மனிதன் என்ற முழுமை நீங்கள் அனைவரும் அடைய முடியும். எமது அருளாசிகள்.

(பக்கம் 50-53)
மது குரு, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர், அவர் கண்ட பேருண்மையையும். அகண்ட நிலையும், அவருக்குள் கண்டறிந்த உணர்வினை,
“நான் கண்ட ண்மையின் உணர்வை, உனக்குள் உணர்ந்து கொள்
உன்னை அறியாது சேர்ந்த, தீமையிலிருந்து நீ விடுபடு,
அந்த உண்மையின் உணர்வை, நீ உனக்குள் பெருக்கு,
ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளில், இதைப் பெருக்கு,
அதன் உணர்வினை இந்த  நாட்டிலே பெருக்கு,
அதைக் கவர்ந்தோர் உணர்வுகளிலே, 
இருள் நீங்கி, மெய்ப் பொருள் காணும் சக்தி பெறட்டும் என்பதற்கே, 
உன்னில் இதைப் பதிவு செய்கின்றேன்
என்று இதைச் சொன்னார்.

இவ்வாறு அவர் எமக்குள் பதிவு செய்ததை, யாம் நினைவு கொண்டு, உங்களுக்கு இப்பொழுது உபதேசிக்கின்றோம். ஆகவே, அவர் சொன்ன உணர்வினை யாம் வெளிப்படுத்தும் பொழுது, இந்த உணர்வுகளை, சூரியனின் காந்தசக்தி கவர்ந்து, அலைகளாக மாற்றுகின்றது. 

இந்த உணர்வுகளை நீங்கள் அனவரும் திரும்பத் திரும்பக் கேட்டு, உணர்வுகளைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.  அப்படிப் பதிவாக்கும் பொழுது, அன்று வான்மீகி மகரிஷிகண்ட உண்மைகளையும், அன்று வியாசக பகவான்கண்டுணர்ந்த உண்மைகளையும், இதற்கு முந்தி, அன்று துருவ மகரிஷிகண்டுணர்ந்த உண்மைகளையும், நீங்கள் தொடர் வரிசையில் காணலாம்.

ஆக அவர்கள் கண்டுணர்ந்த உணர்வுகள் அனைத்தையும், நாம் பெற்றால், இருளை உருவாக்கும் நஞ்சினை வென்று, உணர்வினை ஒளியாக மாற்றி, ஆறாவது அறிவை, ஏழாவது நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும், அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இனி, பிறவி இல்லா நிலை என்ற நிலையை, நாம் அனைவரும் அடைய முடியும்.

ஆக நாம் அடைய முடியுமென்றால், அருள் மகரிஷி, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி,
உங்களுக்குள் பதிவாக்கி. நீங்களும் அதை நினைவாக்கி,
துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும்
உங்களுக்குள் பெருக்கும்போது,
அதைக் கண்டு, யாம் மகிழ்ச்சியடைந்து,
அதனை மீண்டும் எக்குள் பெருக்கி.
இந்த உலக மக்கள் பெறவேண்டும் என்ற ஆசையைக் கூட்டி,
அந்த அருள் ஒளியை அனைவரும் பெறவேண்டும்
என்ற உணர்வினை வெளிப்படுத்தி, அந்த உணர்வைக் கண்டு
ஒவ்வொருவரும் மகிழ்வதைக் கண்டு, அருள் பேரானந்தப் படவேண்டும் என்று குருநாதர் காட்டினார். 

பிறர்படும் துயரங்களிலிருந்து, அவர்கள் விடுபடவேண்டும் என்று நாம் நினைவாக்கப்படும்போது, அந்த நினைவின் ஆற்றலே. தீமைகளிலிருந்து அவர்களை விடுபடச் செய்யும் சக்தியாகும்.

உன்னில் வந்த தீமைகளை அகற்ற, பல முறை உன்னைச் சோதித்தேன். தீமைகள் எவ்வாறு சாடுகின்றதென்றும், தீமைகளிலிருந்து விடுபடும் உபாயத்தையும், உன்னிலே பாய்ச்சுகின்றேன். 

இந்த உணர்வின் துணை கொண்டு, நீ விண்ணின் ஆற்றலை ப்படிப் பருகுகின்றாய், இந்த மண்ணுலகில், உனக்குள் சேர்ந்த தீமையை எவ்வாறு நீக்குகின்றாய், என்ற உணர்வினை
உன்னில் காண்”,
உன்னில் நீ பார்”,
உன்னை நீ பார்
என்ற இந்த உணர்வினை, குருநாதர் உபதேசித்து, அந்த உணர்வின் வழிப்படி எமக்குள் பதிவாக்கி, இந்தப் பேருண்மையை, க்குள் வளர்க்கும் திறனைப் பெருக்கினார்.

அத்தகைய உணர்வின் ஆற்றலை, உங்களில் பதிவு செய்கின்றோம். இந்த உணர்வினை நீங்கள்  எண்ணத்தால் வளர்த்துக் கொண்டால், இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற, அருள் உணர்வை நீங்கள் நுகர்ந்தால், உங்களை அறியாது வந்த இருளை நீக்கிடும் சக்தி, அதை உங்கள் உயிரே உருவாக்குகின்றது.

உங்களுக்குள் வரும் தீமைகளை நீங்கள் எண்ணியது எதுவோ, அதன் வழிப்படி உங்கள் உயிர், அதை உருவாக்குகின்றது. நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ, இந்தக் கண்கள் அதை வழிநடத்துகின்றது. 

ஒருவன் தீமை செய்கின்றான் என்றால்,
அதனின் உணர்வின் தன்மையை நமக்குள் பதிவாக்கிவிட்டால்,
தீமை செய்கின்றான் என்று உணர்கின்றோம்.
அதன் அணுவாகவே, நமது உடலில் உருவாகிவிடுகின்றது. 

ஆகவே, அத்தகைய தீமை செய்யும் அணு நமக்குள் உருவாகி விட்டால், அதனின் உணவுக்காக, அது உணர்ச்சிகளைத் தூண்டி, அந்த உணர்வுகளை நாம் நுகரப்படும்போது, நம்மை அறியாமலேயே நாம் தீமை செய்வோராக ஆகி விடுகின்றோம்.  தீமையை செய்யும் சக்தியின் அணுக்களை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

 தைப் போன்ற நிலைகளிலிருந்து,
தீமைகளை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை
நீங்கள் கேட்கும் பொழுதும்,
இதைக் கூர்ந்து கவனித்துப் படிக்கும் பொழுதும்,
அருள் ஞானிகளின் உணர்வுகளை,
அது உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மை பெறும்போது,
அதை உங்களுடைய கண்கள் உற்றுப் பார்த்து,
உணர்வினை நுகரச் செய்து,
உணர்வின் தன்மையை அணுவாக்கி,  உங்கள் உடல்களில் நல்ல உணர்வின் அணுக்களைப் பெறச் செய்வதற்கே,  மது குருநாதர் காட்டிய அருள் ஒளியை, யாம் உங்களுக்குள் பாய்ச்சுகின்றோம்.

(பக்கம் 56-61)
துருவ மகரிஷிகளையும்,
துருவ நட்சத்திரத்தையும்,
சப்தரிஷி மண்டலங்களையும்,
நாம் கூர்மையாக எண்ணி, நமக்குள் பதிவாக்கி,
அந்த உணர்வினை நுகர்ந்து,
நம் உடலுக்குள் அணுவாக மாற்றிடல் வேண்டும்.

அவ்வாறு மாற்றும் உணர்வுகள் நம் உடலுக்குள் இருக்கும், இதற்கு முன் நம் உடலை உருவாக்கிய அணுக்களில், அந்த சக்திகள் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் நாம் தியானித்து, கண்ணின் நினைவாற்றலை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்ற நினைவினை உள்முகமாகச் செலுத்தும் பொழுது, நமது கண்கள், நமது உடலுக்குள் உணர்ச்சிகளை ஊடுருவி, நினைவின் ஆற்றலை உடலுக்குள் பரப்புகின்றது.

உதாரணமாக ஒரு நண்பனிடத்தில் பழகுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அவர் அமெரிக்காவில் இருக்கிறார் என்றால், அவர் நன்மை செய்தார் என்று எண்ணும்பொழுது, அவருக்கு விக்கல் பாய்கின்றது. அதே சமயம், துரோகம் செய்தார் என்று எண்ணினால், இங்கே புரையோடுகின்றது.

இதைப் போன்றுதான், அருள் உணர்வுகளை நமக்குள் நுகர்ந்து, உடலுக்குள் பதிவாக்கி, மீண்டும் அந்த உணர்வை நுகர்ந்து, நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு,  அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவெண்டும் என்று உணர்வினைப் பாய்ச்சும்போது, இந்த உணர்வுகள்,  நம் நினைவாற்றல்களை, அந்த அணுக்களில் உள் செலுத்துகின்றது.

தாரணமாக, நம் உடலில் வேதனைப்படுகின்றோம் என்றால், நம் கண்ணின் நினைவுகள், அந்த வேதனைப்படும் இடங்களுக்கே செல்கின்றது.

அந்த உணர்வினை நமக்குள் நுகரச் செய்கின்றது. அதைக்  குறி வைத்துப் பார்க்கும்படியும் செய்கின்றது. 

இதைப் போன்றுதான், நாம் எடுக்கும், அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்,  நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து அணுக்களும் பெறவேண்டும் என்ற நினைவினை,
உள்முகமாகப் பாய்ச்சும் பொழுது, 
அந்த உணர்வுகள்,
அந்த அணுக்களில் இணைக்கப்படுகின்றது. 

இவ்வாறு இணைக்கும் உணர்வுகள், நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும், அந்த அணுக்கள் பெற்ற உணர்வுகள், அது தீமையை நுகரும் உணர்வுகளை மாற்றி, அந்த மகரிஷிகளின் உணர்வை நுகரும் ஆற்றலாக மாற்றிக் கொண்டே இருக்கும்.

இப்பொழுது செடிகளுக்கு நாம் உரமிடும்போது, அது நீருடன் கலந்து, அது மரத்துடன் ஆவியாக மாற்றி, அதனுடன் இணைந்துவிட்டால், எதன் உரத்தை நாம் இணைத்தோமோ, அந்த உரத்தின் வலிமை கொண்டு, தன் சத்தைக் காற்றில் இருப்பதைக் கவர்ந்து, அந்த மரத்தைச் செழிப்பாக வளர்க்கின்றது.

தைப் போல நமக்குள் இருக்கும் அணுக்களில், எத்தனையோ விதமான பகைமை உணர்வுகள், சலிப்பு உணர்வுகள், வேதனை உணர்வுகள், இப்படி அறியாமல் சேர்த்துக் கொண்ட பல உணர்வின் அணுக்கள், அது எதன் வழிகளில் எந்தெந்த குணங்களில் உருவானதோ, அந்த உணர்வின் தன்மை கொண்டு, அந்த அணுக்கள் இரைக்காக ஏங்கும். 

அவ்வாறு ஏங்கும் பொழுதுதான், நாம் அதை நுகர்ந்து, நம்மை அறியாமல் மனக்கலக்கங்களும், வெறுப்பும், வேதனையும் என்ற நிலைகள் உருவாகி, அதற்குத்தக்க நம் உடலின் இயக்கமும், செயல்களும் உருவாகின்றது.

இதை மாற்றிமைப்பதற்கே, நம் குரு காட்டிய அருள் வழியில். செடிகளுக்கு உரம் கொடுப்பது போன்று, காலை நேரத்தில் இதைப் போன்று அருள் ஒளியை, நம் உடலை உருவாக்கிய அனைத்து அணுக்களுக்கும் பாய்ச்சுவதற்காக, நாம் அனைவரும் துருவ தியானம் இருக்கின்றோம்.

இவ்வாறு  தியானிப்பதனால், நம்முடைய நினைவின் ஆற்றல், நம் உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு அணுக்களிலும் ஊடுருவி, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற முடிகின்றது.

நாம் ஒவ்வொரு நாளும், காலை துருவ தியானம் செய்வதனால், காலையிலிருந்து இரவு வரையிலும்,  பலருடன் பல உணர்வுடன் தொடர்பு கொள்ளும் நாம், அத்தகைய உணர்ச்சிகள்  நமக்குள் வளர்ச்சியடையாது, தடுக்க முடிகின்றது.

அவ்வாறு தியானித்தபின், கணவன் மனைவி ஒருவரை ஒருவர் எண்ணி, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். நம் குழந்தைகளும், நம் குடும்பத்தில் உள்ளவர்களும், உறவினர்களும், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அடுத்து, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் படர வேண்டும் என்று எண்ண வேண்டும். பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், தியானமிருக்கும் அனைத்துக் குடும்பங்களிலும் படர வேண்டும் என்று எண்ண வேண்டும். 

எல்லோரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று, அவர்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள், சாப வினைகள், பாவ வினைகள், பூர்வ ஜென்ம வினைகள் அனைத்தும் அகன்று, அவர்கள்  வாழ்க்கையில் உடல் நலம், மன பலம் பெற்று, தொழில் வளம் பெருகி, செல்வம் பெருகி, செல்வாக்கு, சொல்வாக்கு பெற்று, அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து, மகிழ்ந்து மகிழ்ந்து வாழ வேண்டும் என்று, பிறரை, இதைப் போல எண்ணி ஏங்குதல் வேண்டும்.

அனைத்து குடும்பங்களிலும், வாழ்ந்து வரும் கணவன் மனைவி இருவரும், வசிஷ்டரும் அருந்ததி போன்று ஒன்றி வாழ்ந்து, நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து, சாவித்திரியைப் போன்று ஒன்றிய நிலைகள் கொண்டு, கணவனும் மனைவியும் இரு மனமும் ஒரு மனமாகி, இரு உயிரும் ஒன்றென இணைந்து, இல்லற வாழ்க்கையில் இருளை நீக்கி, நஞ்சினை வென்று, பேரொளியாக்கி மகிழ்ந்து வாழ்ந்து, அவர்களது பார்வையில் அவர்கள் குடும்பங்களில் வளர்ந்து வரும் குழந்தைகள், ஞானக் குழந்தைகளாக, கல்வியில் ஞானிகளாக, உலக ஞானம் பெற்று, உலகைக் காத்திடும் உத்தம ஞானிகளாக வளர வேண்டும் என்று இந்த உணர்வை நாம் ஏங்கி என்ணுதல் வேண்டும்.

இதைப் போன்று நம் நினைவினைப் பாய்ச்சும் பொழுது, இந்த உணர்வின் சக்தி வளர்ந்து, 
நம்முடைய பார்வை, குழந்தைகளை நலமாக்கவும்,
நம் பார்வை நண்பர்களை உயர்வாக்கவும்,
நண்பர்களுடைய பார்வை
நம்மிடையே மதித்து நடக்கும் உணர்வுகளாகவும்,
நம்மை அறியாது வரும் இருளை அகற்றும் சக்தியாகவும், அனைவரும் பெறுகின்றோம்.

நமது குரு காட்டிய அருள் வழியில், மெய்ஞானிகளின் அருள் சக்தியை நாம் பெற்று, அருள் வழியில்  இந்த வாழ்க்கையை வாழ்ந்து, நமது எல்லையான கடைசி எல்லை என்ற பிறவா நிலை அடைதலே, இந்த தியானத்தின் நோக்கம்,
அனைவரும் அருள் ஒளி பெறுக 
அனைவரும் அருள் ஞானம் பெறுக
அனைவரும் இந்த வாழ்க்கையில்
இருள் நீக்கும் சக்தி பெறுக..
ஓம்ஈஸ்வரா குருதேவா.