ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 28, 2018

துப்பாக்கியால் சுடப்பட்ட பின் காந்திஜி சொன்ன உண்மைகள் என்ன…?


யாரையும் நாம் பகைமையாக்கக் கூடாது. பகைமை இல்லாதவர்களாக நாம் மாறுதல் வேண்டும் என்று காந்திஜி பேசினாலும் மதம் இனம் என்ற உணர்வு கொண்டவர்கள் அவரைத் தாக்கப்படும் போது என்ன செய்தார்…?

ஹரே ராம்… ஹரே ராம்… ஹரே ராம்…! என்று தான் அவர் கூறினார்.

அப்பொழுது தன்னைச் சுட்டவரை மற்றவர்கள் தாக்குவார்கள்…! தண்டனை கொடுப்பார்கள்…! என்று முன் அறிவிப்பாக இருந்து தன்னைச் சுட்டவுடன்…,
1.அறியாமல் செய்துவிட்டார்கள்…
2.அவர்களை ஒன்றும் செய்து விடாதீர்கள்…!
3.(இதைப் போன்ற) அந்தத் தவறு செய்வோரின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளாதீர்கள் என்று
4.எல்லோரிடமும் தெளிவாகக் கூறினார் காந்திஜி.

அவன் அறியாது செய்த அந்தச் செயல் மற்றோருக்கு அவன் செய்த செயலை நாம் எண்ணும் போது
1.அதே உணர்வுகள் நமக்குள் வந்து
2.நமக்குள்ளும் அந்தத் தவறு செய்யும் உணர்வுகளை வளர்க்கும் என்றார் காந்திஜி.

இத்தகைய செயலை மற்ற யாரும் செய்யக் கூடாது  என்ற எண்ணத்தை உருவாக்குவதற்காகக் காந்திஜி அவனை (கோட்சேயை) அங்கே பகைமையாக்கவில்லை.

கோட்சே இவரைச் சுடும் போது “அவனைப் பகைவன்…!” என்று அவர் சொல்லவில்லை. பகைமையாக்கும் உணர்வில் இருந்து நாம் விடுபட வேண்டும். “சுதந்திரம் அடைய வேண்டும்” என்ற நிலையைத் தான் அன்று காந்திஜி சொன்னார்.

இதையெல்லாம் நாம் பின்பற்றினால் மனிதன் என்ற சுதந்திரத்தை அடைகின்றோம்.

1.அந்நியர் ஆட்சி என்று வந்தாலும்
2.அந்நியர் என்ற நிலைக்குப் பிரிக்காதபடி  
3.ஒன்று சேர்த்து வாழும் போது சகோதரர்களாக வாழுகின்றோம்.
4.அவன் அடிமைப்படுத்திச் செயல்படும் நிலைகளிலிருந்து மீள வேண்டும் என்று அவர் சொல்லவில்லை.
5.நாம் நம்முடைய சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உணர்ச்சியைத்தான் ஊட்டினார்.
6.அவர்களைப் பகைவர்கள் என்று இவர் சொல்லவில்லை.

நாமெல்லாம் அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். காந்திஜியின் வாழ்க்கையை நாம் ஒவ்வொரு நிமிடமும் செயல்படுத்துதல் வேண்டும்.

இன்று ஒவ்வொரு குடும்பத்திலேயும் பார்த்தோம் என்றால்
1.மகன் தாய் தந்தையைக் கொன்று விடுவேன் என்று சொல்வதும்
2.நான் கேட்டதைக் கொடுக்கவில்லை என்றால் பழிக்கு பழியாக
3.உன்னைத் தீயை வைத்துக் கொளுத்தி விடுவேன் இல்லாவிட்டால் சுட்டுப் பொசுக்குவேன் என்ற நிலைகளில் செயல்படுகின்றார்கள்

அமெரிக்காவில் நடந்தது. இப்போது அது நம் நாட்டிலும் வந்துவிட்டது.

ஒன்றைப் பிடிக்கவில்லை என்றால் உடனே ஒரு இனமாக மாறிவிடுகின்றது. தன்னை வளர்த்த தாயையும் தந்தையும் கூட அழிக்கும்படி வந்து விடுகின்றது. தன்னுடன் கூடப் பிறந்த சகோதரனையும் கூட எதிரியாக்கி விடுகின்றது.

இதைப்போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் நாம் விடுபடுதல் வேண்டும்.

காந்திஜியை நினைவு கொள்தல் வேண்டும். அவர் சாதாரண மனிதன் தான். பட்டினியாக இருந்து நாமெல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கடும் தவம் இருந்தார்,

எதற்காக…?

பிறிதொருவர் செய்யும் தவறின் உணர்வுகள் நமக்குள் வந்து அது வீரியம் அடைந்து விடக்கூடாது. சமத்துவ நிலைகள் வர வேண்டும் என்று சாந்தத்தை உருவாக்கும் நிலைகள் கொண்டு பட்டினியாக இருந்தார். நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து வாழக் கடும் தவம் இருந்தார்.

அனைவரும் பகைமையை மறந்து ஒன்றுபட்டு வாழ்வோம் என்ற நிலை வந்தால் தான் உண்ணாவிரதத்தைக் கை விடுவேன்… உணவை உட்கொள்வேன்…! என்று நமக்காகத் தவம் இருந்தார் காந்திஜி.
1.அவர் எப்படி அந்தத் தவத்தின் வலிமை கொண்டு இருந்தாரோ
2.அதைப் போல அவரின் ஆற்றலை நாமும் எடுப்போம்
3.ஒவ்வொரு குடும்பத்திலும் பகைமையே வராது நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வோம்.

தவறு செய்வோரின் உணர்வை நாம் நுகராது அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து பழகுவோம். மகரிஷிகளின் உணர்வை அவர்களுக்கும் பெறச் செய்வோம்.

மகரிஷிகளின் துணை கொண்டு தவறற்றவர்களாக நாம் எல்லோரையும் உருவாக்குவோம்.

“தாழ்ந்தவர்கள்…!” என்று மற்றவரை நாம் இழிவாக எண்ணினால் வரும் விளைவுகள்


“தாழ்ந்தவர்… உயர்ந்தவர்…!” என்று நாம் தான் வைத்துக்கொண்டமே தவிர தாழ்ந்தவர் என்றோ உயர்ந்தவர் என்றோ இயற்கைக்குக் கிடையாது.

தாழ்ந்ததை எண்ணும் போது தாழ்ந்ததைத் தான் உயிர் உருவாக்குகின்றது.
1.“தாழ்ந்தவர்கள்…!” என்று மற்றோரை நாம் எண்ணும் போது
2.அந்த உணர்வுகள் நம்மைத் தாழ்த்தப்பட்டவனாக ஆக்குகின்றது.
3.நம்மைத் தாழ்த்தப்படும் நிலையே வருகின்றது

எதன் வழியில்…?

நல்ல குணங்கள் இருப்பதால் தான் நாம் மனிதனாக உருவாகியுள்ளோம். ஆனால்
1.மற்றவர்களைப் பார்த்து அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று
2.அசுர உணர்வுகள் கொண்டு நாம் எண்ணுவோமென்றால்
3.அது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைத் தாழ்த்தி விடுகின்றது.
4.நம்மைத் தாழ்த்தப்பட்டவனாக மாற்றுகின்றது என்பதனைத் தெளிவாகக் கூறினார் காந்திஜி.

ஒருவரைத் தாழ்த்தப்பட்டவர் என்று எண்ணப்படும்போது அந்தத் தாழ்த்தப்பட்ட உணர்வே நமக்குள் இருக்கும் நல்ல குணத்தைச் சுதந்திரமாக வாழ விடாதபடி நல்ல குணங்களை என் உடலிலே இயக்காதபடி இந்த மனித உடலை உருவாக்கிய உயிரையே தாழ்த்தப்படும் நிலைக்குக் கொண்டு செல்கிறது.

உயிரினங்களில் ஒன்றை ஒன்று தாக்கித் தன் உணர்வை வளர்த்துக் கொள்ளும் நிலை பெற்ற
1.அந்தத் தாழ்த்தப்பட்ட உணர்வுகள் நமக்குள் வரப்படும் போது
2.மனிதன் என்ற நல்ல நிலை இல்லாதபடி
3.நம் எண்ணமே நம்மைத் தாழ்த்தப்பட்ட உயிரினமாக மாற்றுகின்றது

ஆகவே தாழ்த்தப்பட்டவர் யார்…? அப்படிப்பட்டவர் எவர் இருக்கின்றார்கள்…? தாழ்த்தப்பட்டவராக நம்மை யார் உருவாக்குகின்றார்…?

நம்முடைய எண்ணம் தான்…! நாம் எண்ணியது எதுவோ நமது உயிர் அதை அணுவாக மாற்றி நம் உடலாக மாற்றிவிடுகின்றது.

எல்லோரையும் மகிழ்ச்சி பெறச் செய்யும் மனித உடல் பெற்ற பின் இத்தகைய பகைமை உணர்வு வந்த பின் நமக்குள் என்ன செய்கின்றது என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

பகைமை உள்ளவன் என்று நாம் எண்ணினால் அந்தப் பகைமை உணர்வே நமக்குள் வருகின்றது. “ஒரு தாழ்த்தப்பட்டவன்…” என்னை இப்படிப் பேசிவிட்டான் என்ற அந்த வெறி உணர்வுகள் நமக்குள் வருகின்றது.

என்னைத் தாழ்ந்தவன் என்று பேசக்கூடிய நிலைகள் வந்து விட்டதா…? என்று அந்த உடலுக்குள் வெறி உணர்வைத் தூற்றும் உணர்வு போகும் போது
1.இதைத்தான் அவர்களும் வளர்க்க முடிகின்றது.
2.அதைத்தான் நாமும் வளர்க்க முடிகின்றது.

மனிதனாக வாழ்கின்றோம் என்ற நிலைகளில் நாம் சுதந்திரமாக வாழ முடிகின்றதா…? இல்லை…!

நாம் எல்லோரும் அரவணைப்புடன் வாழ்ந்தால் நமக்குப் பரிபூரண சுதந்திரம் கிடைக்கின்றது என்று தான் காந்திஜி சொன்னார்.

ஒதுக்கப்பட்ட நிலையில் உள்ள கடும் நோயாளிகளையும் காந்திஜி சந்தித்தார். கைகள் உடல் எல்லாம் அழுகி அது அருவருப்பாக இருந்தாலும் அங்கே சென்றார்.

அவர்களைப் பார்த்துக் காந்திஜி இரக்கப்படவில்லை. இரக்கமும் ஈகையும் அங்கு கொண்டு வரவில்லை.
1.மாறாக அவர்கள் நலம் பெற வேண்டும் என்று தான் எண்ணினார்.
2.அவர்கள் உயர வேண்டும் என்ற உணர்வைத் தான் தனக்குள் வளர்த்துக்கொண்டார்.
3.அந்த நோயைப் பற்றி எண்ணவில்லை.

ஆரோக்கியமான உடலாக அவர்கள் பெற வேண்டும் என்ற உணர்வுகளிலே உயிரிலே எண்ணப்படும் போது அது கடவுளாக இயக்குகின்றது. அந்த உணர்வின் தன்மை கொண்டு அவர்கள் சுகமாக வேண்டும் என்று தான் காந்திஜி எண்ணினார்.

“அன்னை தெரஸா” என்பவரும் இதைப்போலத் தான் ஏழ்மைகளில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். இனங்கள் இல்லை. பேதங்கள் இல்லை என்று காந்திஜியின் வழியில் செயல்பட்டார்,

இனம் என்று இருப்பது நமக்குள் நோயின் தன்மை வரப்போகும் போது நமது நல்ல குணங்களைத் தாக்குகின்றது.

இத்தகைய நாம் இனங்களைப் பிரித்து குறை கூறும் போது அந்தக் குறையின் உணர்வு நமக்குள் வரும் போது நல்ல குணங்களைத் தாக்குகின்றது.

நாம் பார்க்கும் அனைவரையும் மதித்துப் பழக வேண்டும். உயிரைக் கடவுள் என்றும் அந்த ஈசன் வீற்றிருக்கும் உடலை ஆலயம் என்று நாம் மதித்துப் பழக வேண்டும்.

இது தான் ஞானிகள் சொன்னது. அந்த ஞானிகள் சொன்ன வழியைப் பின்பற்றி ஒவ்வொருவரும் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்று நாம் தியானிப்போம் தவமிருப்போம்.

February 27, 2018

திருமூலரின் சரித்திரம்


பதஞ்சலி முனிவர் தனக்குள் அந்த விண்ணுலக ஆற்றலை அகஸ்தியன் காட்டிய இந்த முறைகளை மாற்றி கூடு விட்டுக் கூடு பாயும் நிலைகளைச் செய்தவர்.

அதாவது விஷத்தின் தன்மை தனக்குள் செருகேற்றி பாம்பின் உடலுக்குள் புகுந்த பின் பாம்பின் உடலிலுள்ள நஞ்சை இன்னோர் உடலுக்குள் பாய்ச்சி அந்த உடலின் வலிமையை இழக்கச் செய்து அந்த உடலுக்குள் புகுந்து அந்த உடலை ஆட்கொண்டு தன் செயலாக்கங்களுக்குப் பயன்படுத்தும் முறைகள் தான் அது.

அந்த அரசனுக்குத் தான் முனிவர் என்று பெயர் வைத்துப் பதஞ்சலி முனிவர் என்றார்கள்.

மந்திர ஒலியைத் தன் மக்களுக்குள் பதியச் செய்து தன் மதத்தின் கீழ் மடிந்த மக்களின் உணர்வைத் தனக்குள் கவர்ந்து… கவர்ந்து… மிக சக்தி வாய்ந்தவர்களாக மாறுவார்கள்.

யாரைக் கண் கொண்டு பார்த்தாலும் தன் ஆற்றலைப் பாய்ச்சி அவர்களை அடக்கி ஆட்சி புரியும் நிலைகள் பெற்றவர்கள். அப்படிப்பட்டவர்களைத் தான் முனிவர் என்று சொல்வார்கள்.

1.இன்றும் அந்த மந்திர ஒலிகள் பெற்று இறந்தவர்கள் இன்னொரு உடலுக்குள் சென்றால்
2.புகுந்த உடலிலுள்ளோர் ஒரு மனிதனை அறியாது கண் கொண்டு பார்த்தாலும்
3.அந்த மனிதனுடைய உடல் கருகும்.
4.இரும்பைக் காட்டினால் உருகும். ஆனால் அவனுக்கே தெரியாது.

இதை நேரடியாக நான் (ஞானகுரு) கண்டுணர்வதற்காக ஒரு சமயம் பம்பாய் நகருக்கு அருகில் ஒரு குக்கிராமத்திற்கு அழைத்துச் சென்றார் குருநாதர்.

அங்கே உள்ள ஒரு பையனுக்கு அது ஒன்றும் தெரியாது. அவன் உடலுக்குள் புகுந்த அந்த ஆவியால்
1.யாரையாவது அவன் பார்த்தான் என்றால் அல்லது நினைத்தான் என்றால்
2.அந்த உடலில் ஓட்டையே போட்டு விடும்.
3.ஒரு இரும்பைப் பார்க்கிறான் என்றால் கரைந்து அப்படியே தொங்கும்.
4.அந்த அளவிற்கு வெப்பக் கனல் அவன் உடலிலிருந்து வருகிறது.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் மந்திர ஒலிளைப் பாய்ச்சி ஒரு மனிதனின் உடலில் உருவாக்கப்பட்ட உணர்வின் துணை கொண்டு பல மாயாஜாலங்களைச் செய்து காட்டிவிட்டு ஆண்டவனையே நான் கைவல்யப்படுத்துகிறேன் என்று சொல்கிறார்கள்.

அதனின் உண்மை நிலைகளையும் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். மாயாஜாலத்தில் என்னை அங்கே அழைத்துக் கொண்டு போய்க் காட்டினார்.
1.குருநாதர் என்னைக் கட்டி அரவணைத்தார்
2.அவருடன் சேர்ந்தபின் என்னையும் ஆவியாக மாற்றுகிறார்.
3.கண நேரத்தில் அங்கே (பம்பாய்) செல்லும் போது அந்தப் பையனின் நிலையைக் காட்டுகின்றார்.

இது நடந்த நிகழ்ச்சி. நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்...!

இதைப் போன்று தான் அன்று பதஞ்சலி முனிவர் (அந்த அரசன்) அதர்வண வேதத்தைத் தனக்குள் கடைப்பிடித்து அதிலே வளர்ச்சி பெற்றவன்

மாற்று அரசர்கள் போர் முனைக்கு வரும் போது அவர்களிடமிருந்து எப்படித் தப்ப வேண்டும்...? எப்படித் தாக்க வேண்டும்…? என்று இதைப்  பரிட்சாந்தரமாகச் செய்து பார்ப்பதற்காகத் தான் கற்றுணர்ந்த உணர்வினை தன் சேனாதிபதியிடம் சொல்கிறான்.

நான் பாம்பின் ரூபமாக மாறுகின்றேன், இந்த உடலை விட்டு நான் வெளியேறிய பின் என்னுடைய மனித உடலை நீ பாதுகாப்பான இடத்தில் பத்திரமாக வைத்திரு…! என்று சொல்கிறான்.

“சரி” என்று சொன்னான் அந்தச் சேனாதிபதி.

போர் முரசு கொட்டி வரும் மாற்று அரசனிடமிருந்து எப்படி நாம் தப்பிக்க வேண்டும் என்று பதஞ்சலி பரீட்சாந்திரமாகப் பார்ப்பதற்காகப் பாம்பின் உடலில் சென்ற பின் அந்தச் சேனாதிபதி என்ன செய்கின்றான்…!

இது தான் நமக்கு உகந்த தருணம் என்ற நிலைகளில் கூடு விட்டுக் கூடு பாய்ந்த பதஞ்சலி முனிவரின் உடலைச் சிதைத்து எரித்து விட்டான்.

எதிரி அரசனிடம் சரணடைந்து இந்த சாம்ராஜ்யத்தை எனக்குக் கொடுத்தால் போதும் என்று அந்தச் சேனாதிபதி சொன்னான்.

அவன் ஆட்சி புரிவதற்காக வேண்டி இவனை வீழ்த்தினான் அந்தச் சேனாதிபதி. அவன் உணர்வின் சூழ்ச்சியில் சிக்கிய பதஞ்சலியோ காடு மேடெல்லாம் பாம்பாக ஊர்ந்து செல்கின்றான்.

எந்தப் பகுதியில் அந்தக் காடு மேடுகளில் பதஞ்சலி முனிவர் அலைந்தார் என்று அறிந்து கொள்ள வெறும் வேஷ்டி துண்டுடன் ஒரு கிராமத்துக்காரன் போல் சிதம்பரம் பகுதிக்குச் சென்று அவர் போன பாதைகளை எல்லாம் போய்ப் பார்த்து வந்தேன்.

அன்று நடந்த நிகழ்ச்சிகள்… அந்த உணர்வலைகள்… அது எப்படிப் பூமியில் படர்ந்துள்ளது. அதைச் சூரியனின் காந்த சக்தியை எவ்வாறு கவர்ந்துள்ளது…? என்ற நிலையை உணர்த்துகின்றார் குருநாதர்.

(இன்று இருக்கும்) சிதம்பரம் கோவிலுக்கு முன் தெப்பக்குளம் ஒன்று உண்டு. அந்த இடத்தில் விநாயகர் கோவில் ஒன்று உண்டு. அங்கே அக்காலத்தில் ஒரு பாம்புப் புற்று உண்டு.

அந்தப் புற்றுக்குள் தான் பதஞ்சலி நுழைந்து சுழன்று வந்தார். தான் செய்து கொண்ட உணர்வின் தன்மையால் அங்கே சிந்திக்கும் திறன் இல்லை.

ஆனாலும் தன் செயல்களைச் செயல்படுத்த அதற்குகந்த உடலைத் தேர்ந்தெடுப்பதற்காக வேண்டி ஊர்ந்து சென்று காடு மேடு சுற்றினார்.

அப்பொழுதுதான் சூதுவாதற்ற ஒரு மாடு மேய்ப்பவனின் அருகில் சென்று இவனைத் தீண்டி இந்த விஷத் தன்மையை அந்த உடலுக்குள் பாய்ச்சி அந்த விஷத்தின் துணை கொண்டு அவன் உடலுக்குள் சென்று அவன் உணர்வை அடக்கி அந்த உடலைச் செயல்படுத்தத் தொடங்கினான் பதஞ்சலி.

சாயங்காலம் மாடுகளுடன் சேர்ந்து அந்த உடலின் (மாடு மேய்ப்பவன்) வீட்டுக்குச் செல்லுகின்றான்.

அப்போது அவனின் மனைவி கணவன் காட்டில் மாட்டை மேய்த்து விட்டு வந்திருக்கின்றான் என்று சொல்லிப் பல பணிவிடைகள் செய்கிறாள்.

அவனுக்குத் தண்ணீர் கொடுப்பதும்… தண்னீரை மேலே ஊற்றிக் குளிப்பாட்டுவதும்…! இப்படி தொடரப்படும் போது இவனுக்குக் “கூச்சம்” வருகிறது.

ஏனென்றால் மாடு மேய்ப்பவனின் உடலுக்குள் புகுந்த நிலைகளில் அந்த உணர்வுகளைப் பார்க்கப்படும் போது விலகி விலகிச் செல்லுகின்றான்.

அப்போது தன் மனைவி சந்தேகிக்கும் நிலைகள் வருகிறது. ஏனென்றால் தன் கணவனை வரவேற்பதும் அவனை மகிழச் செய்வதும் ஒரு மனைவியின் கடமை என்று அவள் அவ்வாறு செய்கிறாள்.

அப்பொழுது தான் பதஞ்சலி சிந்திக்கத் தொடங்குகின்றான்…!

அரசனாக இருக்கும் போது மாற்று அரசனின் மகளைத் திருமணம் செய்து கொண்டேன்.
1.ஆனாலும் அந்த அரசிக்கு நான் அஞ்சியே வாழ வேண்டியிருந்தது
2.தான் இட்ட சட்டத்தின்படி மக்களுக்கு அஞ்சியே நான் வாழ வேண்டியிருந்தது
3.நாட்டைக் காத்திடும் தன் சேனாதிபதிக்கு அஞ்சி வாழ வேண்டியிருந்தது. (ஏனென்றால்) அவனுக்குக் கொடுத்த அதிகாரத்தின் துணை கொண்டு தன்னைத் தாக்கிடாது அவன் என்ன செய்கிறான் என்று அதற்கு உளவாளிகளை வைத்துப் பாதுகாக்க வேண்டும்.

இத்தனை நிலைகளுக்கும் மத்தியில் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்து எவ்வளவு பெரிய சக்தியைக் கற்றுணர்ந்திருந்தாலும் இந்த நாட்டைக் காக்கும் காவலாளியான சேனாதிபதியே “தன்னை வீழ்த்தி விட்டானே…!” என்று சிந்திக்கின்றான் பதஞ்சலி.

ஆனால் ஒரு சாதாரண மாடு மேய்ப்பவனுடைய வீட்டில் அவனுக்கு அவன் மனைவி செய்யும் சேவைகளைக் கண்ட பின் உண்மையின் உணர்வினை அறியத் தொடங்குகின்றான்.

தான் அரசனாக இருக்கும் போது கற்றுணர்ந்த ஞானிகளால் காட்டப்பட்ட வேதங்கள் ரிக் வேதம் சாம வேதம் அதர்வண வேதம் யஜுர் வேதம் என்ற நான்கு மறைகளின் பேருண்மையை அப்பொழுது உணரத் தொடங்குகின்றான்.

அவனின் உணர்வின் நினைவாற்றலில் எதை எதை இந்த உலகம் எவ்வாறு பெறுகிறது என்ற நிலையை அறிந்து கொள்ளும் ஆற்றல் வருகின்றது.

“தில்லை” – பூமி ஒரு எல்லையாக நின்று வான் வெளியில் சுழன்று கொண்டு நிற்காமல் தன் சுழற்சியின் வேகத்தால் ஈர்ப்பதும் சுழற்சியால் தனக்குள் வெப்பமாவதும் தான் கவர்ந்து கொண்ட உணர்வுகள் விளைவதும் எப்படி…? என்ற பேருண்மைகளை அறிகின்றான்.

அதற்குத் “தில்லை நடராஜா...!’ என்று காரணப் பெயரைச் சூட்டுகின்றான். இந்தப் பூமி நின்று விட்டால் நாம் என்ன கதியாவோம்,,,? என்று இந்த உணர்வின் தன்மையை வெளிப்படுத்தும் போது தான் “திருமூலர்” என்ற பெயர் அவருக்கு வருகிறது.

பூமியின் செயலாக்கத்திருந்து உரு பெறும் உணர்வின் அணுக்களின் செயல்கள் விண்ணுலக ஆற்றலால் எவ்வாறு பெற்றது என்றும் அங்கே வெளிப்படுத்துகின்றான்.

உலகம் உருவாவதற்கு முன் பேரண்டத்தில் இலகுவான வெப்பத்தின் தன்மை தான் ஆதியிலே மூலமாக இருக்கிறது.

அந்த வெப்பத்தில் ஆவியாக உரு பெற்று அமைதி கொண்ட ஆவியாக அது வளர்ச்சி பெறப்படும் போது நாளாக ஆக அதனின் தன்மை விஷத் தன்மையாக மாறுகிறது.

அந்த விஷத்தன்மை அடைந்த பின் புதிதாக உருவாகும் ஆவியின் தன்மையைத் தாக்கி வெப்பமாக மாற்றுகிறது. வெப்பமாக மாற்றிய பின் அணுவாக மாறுகிறது.

1.விஷத்தின் தாக்குதலை ஆதிசக்தி என்றும்
2.தாக்குதலால் உருவாகும் வெப்பத்தைப் ஆதிபராசக்தி - எல்லாவற்றையும் உருவாக்கும் நிலை என்றும்
3.வெப்பத்தின் தன்மை கூடும் போது ஈர்க்கும் காந்தம் உருவாவதை ஆதிலட்சுமி என்றும்
4.ஆதிபராசக்தி என்றும் ஆதிசக்தி என்றும் ஓர் அணுவின் தன்மையை
5.அந்த இயக்கத் தொடரை திருமூலர் உணர்த்துகின்றார்.
(ஆதியிலே உருவான நிலை எப்படி என்பதைத்தான் அவர் வெளிப்படுத்தினர் – தில்லை இரகசியம் என்பது)

இவ்வழியில் அணுக்களின் சேர்க்கையால் இந்த பூமி உருவானது உணர்வுக்குத்தக்க அணுக்கள் மாற்றமானது என்ற பேருண்மையைப் பாடுகிறார்.

1.பற்பல உணர்வுகள் மோதுண்டு மோதுண்டு
2.அதில் அணுக்களின் தன்மை பெருகப் பெருக 
3.அணுக்கள் ஒவ்வொன்றும் தனக்குள் கவர்ந்த உணர்வுகள் மாற மாற
4.ஒன்றைக் கண்டு மற்றொன்று அஞ்சி ஓடுவதும் மற்றொன்றோடு மோதுவதும்
5.மோதலில் ஏற்படும் இணைந்து வெப்பமாவதும் இரண்டு சத்தும் இரண்டறக் கலப்பதும்
6.அணுக்களின் வளர்ச்சியும் அணுக்களில் மாற்றம் எவ்வாறு உருவாகிறது என்ற நிலைகள் அங்கே உணர்த்துகின்றான்.

அதிலே தோன்றிய அந்த அணுக்களின் தன்மை தான் ஆவியாகி மேகமான பின் மேகத்துக்குள் இந்த அணுக்களுக்குள் போர் முறை ஆகப்படும் போது தான் நீராக மாறுகின்றது. நெருப்பிலிருந்து தான் “நீர் தோன்றியது…!” என்று உணர்த்துகின்றார் திருமூலர்.

அந்த நீருக்குள் அணுக்கள் சிக்கி எடை கூடிய நிலையில் ஓடும் போது அதனுடைய உராய்வில் மீண்டும் இந்த நீர் ஆவியாக மாறி இணைந்து கொண்ட உணர்வுகள் ஒன்றாகச் சேர்த்து ஒரு பரமாகிறது. “பரம்பொருள்” ஆனதென்று உணர்த்தினார் திருமூலர்.

ஒரு அமைதி கொண்ட மாடு மேய்ப்பவனின் உடலுக்குள் கூடு விட்டு கூடு பாய்ந்தபின் தான் கற்றுணர்ந்த அனுபவத்தை அந்த அகஸ்தியன் உணர்வை நுகர்ந்து பேருண்மைகளை வெளிப்படுத்துகின்றான்.

மனித வாழ்க்கையில் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிய அகஸ்தியன் துருவ மகரிஷியாக துருவ நட்சத்திரமான நிலையும் அதன் வழியில் பின்பற்றிச் சென்ற சப்தரிஷி மண்டலங்கள் எவ்வாறு இருக்கிறது என்ற நிலையையும் திருமூலர் வெளிப்படுத்திக் காட்டுகின்றார்.

அவர் வெளிப்படுத்தியதை மாற்றித் விட்டு திருமூல மந்திரம் என்று இவர்களுக்கு உகந்த நிலைகள் கொண்டு “மந்திர ஒலியிலே...” சாடி விட்டார்கள்.

அந்தத் திருமூலரின் சமாதியைத் தான் தில்லையம்பதியில் சிதம்பர ரகசியம் என்று இன்றும் காட்டிக் கொண்டு பொருள் தேடுகிறார்கள். பணத்திற்காகத் தில்லை ரகசியம் என்று காட்டுகிறார்கள்.

மகிழ்ச்சி நமக்கு வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

நாடு சுதந்திரம் அடைந்து ஐம்பது வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது.

எதற்காகப் போராடிப் போராடிச் சுதந்திரம் பெற வேண்டும் என்று எண்ணினோமோ நாம் எண்ணிய சுதந்திரம் யாருக்குமே கிடைக்கவில்லை.

1.இன்று கோடிச் செல்வம் வைத்திருந்தாலும் சரி…
2.அரசி்யலில் முன்னணியில் இருந்தாலும் சரி…
3.அதிகாரத்தில் இருக்கும் தலைவர்களாக இருந்தாலும் சரி…
4.நிம்மதியாக இருப்பவர்கள் யாரும் இல்லை…!

உலகம் முழுவதற்கும் அரசியலில் வாழ்க்கை நடத்துவோர் அனைவரும் அவர்கள் நிம்மதியற்ற வாழ்க்கை தான் வாழ்கின்றார்கள். அவருக்குச் சுதந்திரம் என்ற நிலைகள் இல்லை.

வெளியே வர வேண்டும் என்றால் அவர்களும் அஞ்சுகின்றார்கள். அவர்களுக்கு என்று தனிப் பாதுகாப்புடன் தான் வருகின்றார்கள்.

அதே போல் இன்று நாமும் வெளியே செல்ல வேண்டும் என்றால் பஸ்ஸில் சென்றாலும் சரி… ட்ரெயினில் சென்றாலும் சரி… அல்லது ரோட்டில் நடந்து சென்றாலும் கூடச் சரி… நமக்கும் அந்தச் சுதந்திரம் இல்லை.

எவன் பறிப்பானோ…! எவன் அழிப்பானோ…! நம்மை எவன் கொல்வானோ என்ற உணர்வுகள் தான் அது வருகின்றது. சுதந்திரம் என்ற நிலையில் யாருக்கும் வரவில்லை.
1.அரசியலிலும் செல்வத்திலும் அவர்கள் ஓங்கி வளர்ந்திருந்தாலும்
2.இந்த உடலில் சுதந்திரமான வாழ்க்கை இல்லை.
3.ஆனால் சுதந்திர வாழ்க்கை வர வேண்டும் என்றால்
4.”காந்திஜியை நாம் நினைவில் கொள்ள வேண்டும்”

எத்தகைய தீமையும் அவர் தனக்குள் புகாது “அனைவரும் சகோதரர்களே…!” என்ற உணர்வைத் தன் உடலுக்குள் ஊட்டிக் கொண்டார். அதையே சகோதரத்தத்துவமாக அவருக்குள் வளர்த்துக் கொண்டார்.

இந்தியாவில் மதக் கலவரங்களும் இனக் கலவரங்களும் ஏற்பட்டு மக்கள் மடிவதை
1.அசுர சக்திகள் மக்களை மாய்க்கின்றது என்று கூட அவர் எண்ணவில்லை
2.”அசுர சக்தி…” என்றே அவர் எண்ணத்திற்குள் வரவில்லை
3.அனைவரும் ஒன்றென்ற நிலைகளை அவர் அறிந்துணர்ந்தார்
4.அதைப் போன்ற சாந்த நிலைகளே நம்மை வாழ வைக்கும் என்றார்
5.அப்போது தான் இந்த உடலுக்குள் (நமக்கு) சுதந்திரம் கிடைக்கின்றது என்று தெளிவாக உணர்ந்து கொண்டார்.

இன்று எடுத்துக் கொண்டால் மனிதன் அழகாக இருப்பான். செல்வமும் இருக்கும். செருக்கும் இருக்கும். ஆனால் அவனுக்குச் சுதந்திரம் இல்லை.

அம்மம்மா…! நான் எல்லோரையும் போல சாப்பிட முடியவில்லையே… படுக்க முடியவில்லையே… தூங்க முடியவில்லை…! என்று
1.தூக்கமின்மையால் அவனுக்குச் சுதந்திரமாகத் தூங்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை.
2.செல்வம் இருக்கின்றது… சுதந்திர வாழ்க்கை வாழ முடியவில்லை.
3.ஆகவே சுதந்திரம் எது…?

ஒரு நண்பன் “நல்ல உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்…” என்று எண்ணத்தை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அவர்கள் வளர வளர அந்த வளர்ச்சி மிகவும் உயர்ந்ததாக நமக்குள்ளும் வளரும்.

அதே சமயத்தில் “எனக்கு இப்படி இடைஞ்சல் செய்கின்றானே பாவி…!” என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் நமது அந்த நல்ல மனம் சுதந்திரத்தை இழந்து விடுகின்றது.

அதே சமயம் அந்தப் பகைமை உணர்வை நமக்குள் வளர்க்க வளர்க்க நம் உடலுக்குள்ளே எதிரியாக வந்து அது நல்ல செயல்களை அழித்துக் கொண்டேயுள்ளது. அப்போது நாம் சுதந்திரமாக வாழும் தன்மை இல்லை.

நல்ல குணங்களைச் சுதந்திரமாக இயங்கச் செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

தன் அருகிலே இருக்கக்கூடியவர்கள்… தன் சார்புடையவர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும். நாம் பார்க்கும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற இந்த அரவணைப்பு இருக்க வேண்டும்.

அதற்குப் பெயர் தான் “கல்யாணராமா”

அதாவது நம்முடைய எண்ணங்கள் ஒன்று சேர்த்து வாழப்படும் போது தான் நமக்குள் மகிழ்ச்சியான எண்ணங்கள் மலர்கின்றது. அப்பொழுது கல்யாணராமன் ஆகின்றோம்.

கல்யாணராமன் என்றால் எப்படித் திருமணமானால் நாம் மகிழ்ச்சி பெறுகின்றோமோ இதைப்போல எண்ணங்கள் ஒன்று சேர்த்திடும் போது நமக்குள் அந்த மகிழ்ச்சி பொங்குகின்றது.
1.பகைமை அற்ற நிலையாக இருக்கின்றது.
2.மகிழ்ச்சியின் நிலைகள் நமக்குள் அந்த ஆனந்தத்தை நமக்குள் ஊட்டுகின்றது.
3.இதைக் காந்திஜி தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். அவர் மடியவில்லை. அவர் உடல் தான் மடிந்தது.

அவருக்குள் விளைய வைத்த அரும் பெரும் சக்தி உலகில் பரவி உள்ளது. அவருடன் வாழ்ந்த காலத்தில் அவருடன் உறவாடிய உணர்வுகள் கொண்ட அந்த மக்கள் மத்தியிலும் பதிவாகி உள்ளது.

அவர் உடலில் விளைய வைத்த அந்த உயர்ந்த ஞான வித்தை நாம் வளர்த்துக் கொண்டால் அது நமக்குள் பெரும் சக்தியாக மாறும்.

நாம் சுதந்திரமாக வாழ முடியும்…!

February 26, 2018

காந்திஜி சொன்ன சகோதரத்துவம் – விளக்கம்


காந்திஜி இராமயாணத்தைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பின் அந்த வான்மீகி மகரிஷியைத் தான் தன் எண்ணத்தில் எடுத்துக் கொண்டார்.

இந்தியா முழுவதற்கும் பலருடைய எண்ணங்கள் பலவிதமாக இருக்கின்றது. காந்திஜியை வெறுப்போரும் பலர் உண்டு.

ஒருவன் நம்மைத் தாக்குகின்றான். எத்தனை நாளைக்கு நாம் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும்...?

இனக் கலவரம் மதக் கலவரம் என்ற நிலையில் செயல்படும் போது பதிலுக்கு அவனை எதிர்த்துத் தாக்கினால் தான் அதை அடக்க முடியும் என்ற இந்த உணர்வின் வேகங்கள் பரவுகின்றது.

அப்படி பரவும் காலத்தில் காந்திஜி எல்லோருடைய மனதையும் ஈர்க்கும் வண்ணம்
1.நீங்கள் செய்யும் தவறை நிறுத்தும் வரையிலும்
2.நான் உணவு உட்கொள்ள மாட்டேன்...! என்று உண்ணாவிரதம் இருந்து சத்தியாக்கிரகத்தைக் கடைப்பிடிக்கின்றார்.
3.அப்பொழுது எல்லோருடைய நினைவும் அவர் பால் திரும்புகின்றது.

அவர் மேல் பற்று கொண்டோரும் பற்றற்றவரும் அவரை எண்ணும் பொழுது (காந்திஜியின் உணர்வுகள் அவர்களுக்குள் செல்லப்படும் போது) அவர்களுடைய வீரியங்கள் தணிகின்றது.
1.நாம் எப்படியும் காந்திஜியைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு கொண்டு
2.யாரையும் தாக்காத நிலையில் செயல்பட்டார்கள்.

அதன் வழியில் உண்ணாவிரதத்தை நிறுத்திய காந்திஜி நல்ல உணர்வுகள் அனைத்தும் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று அவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தினார்.

இந்தியத் தாய் நாட்டில் அந்தத் தாயின் கருவில் உருவான நாம் அனைவரும் சகோதரர்களே...! என்றார்.

இன பேதத்தால் மொழி பேதத்தால் மத பேதத்தால் பகைமை உணர்வை ஊட்டி அசுரத்தனங்களையும் அரக்கத்தனங்களையும் செய்கின்றார்கள் என்று அவர் “யாரையுமே சொல்லவில்லை...!’

"நாம் எல்லோரும் சகோதரர்கள்...!" என்ற உணர்வை அவர் உணர்ந்தார். மற்றவர்களுக்கும் அதை ஊட்டினாலும் அதற்காக வேண்டி அவர்களைக் குற்றமாகச் சாடவில்லை.

நமக்குள் இன பேதமும் மத பேதமும் வேண்டியதில்லை. பேதங்கள் வரப்படும் போது நாம் எப்படி அதை மாற்ற வேண்டும் என்ற நிலையைத் தனக்குள் உருவாக்கினார்.

உதாரணமாக வல்லபாய் படேல் நாட்டின் சுதந்திரத்திற்காக ரொம்பத் தீவிரமாகச் செயல்பட்டவர்.

சுபாஷ் சந்திர போஸோ நாம் இந்த வேகத்தில் சென்று கொண்டிருந்தால் அந்நியன் நம்மை என்றுமே அடிமையாகத்தான் வைத்திருப்பான் என்பது அவருடைய வேகத் துடிப்பு.

இதே போல் நேருஜி கூட மிகவும் கடுமையாகப் பேசியவர் தான். ரொம்ப கோபக்காரர்தான். ஆனாலும் காந்திஜியின் சாந்த குணங்களை அவர் பின்பற்றத் தொடங்கினார்.

சுதந்திரம் என்றால்... "நம்மை ஒருவர் ஆட்சி புரியக்கூடாது..." அதற்காக காந்திஜி
1.ஆங்கிலேயர்களை... “அந்நியர்கள்...” என்று சொல்லவும் இல்லை.
2.கொடூர உணர்வு கொண்டு நம்மை ஆட்சி புரிவதை விடுத்து விட்டு
3."சகோதரத்துவத்தைத் தான்...” நாம் வளர்க்க வேண்டும்
4.அதைத் தான் நமக்குள் ஆட்சி புரியச் செய்ய வேண்டும் என்று தான் காந்திஜி சொன்னார்.

அந்த உணர்வை அவர் வைராக்கியமாகக் கடைப்பிடித்ததால்... அவருடைய எண்ண வலுவால்... சுதந்திரத்தையும் பெற்றுத் தர முடிந்தது.

காந்திஜி வெளிப்படுத்திய ஆற்றல்மிக்க அந்த உணர்வுகள் நமக்கு முன் பரவியுள்ளது. அதை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

1.”மகிழ்ச்சி...” என்ற உணர்வுகளை என்றுமே நமக்குள்
2.சுதந்திரமாக இயங்கச் செய்வதே (கல்யாணராமா...!)
3.வான்மீகி மாமகரிஷி காட்டிய இராமாயணக் காவியத்தின் மூலக் கரு.

காந்திஜி தன் வாழ்க்கையில் செய்து காட்டியபடி நாம் யாரையும் “அந்நியர்…!” என்று எண்ண வேண்டியதில்லை.

எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகள் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் நாம் தவமிருக்க வேண்டும்.
1.அவ்வாறு தவமிருந்தால் “மகிழ்ச்சி” என்றுமே நம்மிடம் குடி கொண்டிருக்கும்.
2.“மகரிஷிகள்...” என்பதன் உட் பொருளே பிற உயிர்களை “மகிழ்ச்சிப்படுத்துவோர்...!” என்பது ஆகும். 

மதங்களைப் பற்றிய தெளிவான விளக்கம்


மதத்தின் அடிப்படையில் எல்லோரும் வளர்ந்து வந்தாலும் மதங்களுக்குள் “தான்… எனது…!”என்ற நிலைகள் வரும் பொழுது அதற்குள் பல இனங்களாகப் பிரிக்கப்பட்டு விட்டது.

எந்த ஞானியும் மதத்தை உருவாக்கவும் இல்லை… உருவாக்கச் சொல்லவும் இல்லை…! மதங்கள் அனைத்துமே அன்று ஆண்ட அரசர் காலங்களில் உருவானது தான்.

அரசர்கள் உருவாக்கிய மதமும் இனமும் குறுகிய வட்டத்திற்குள் தான் வளரும்.

ஒரு மதம் மற்றொரு மதத்தை நேர்முகமாகப் பார்க்கப்படும் போது ஒன்றுக்கொன்று போர் செய்து அதனால்
1.இரு மதங்களும் மன நிம்மதி இழக்கின்றது.
2.இரு மதத்தவர்களும் மகிழ்ச்சி பெறுவது இல்லை.

ஏனென்றால் மதத்தை உருவாக்கியது மனிதன் தான். கடவுள் அல்ல.

மதத்தை உருவாக்கியது மனிதன் என்றாலும் நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அதை அனைத்தையும்
1.நமது உயிர் “ஓ…” என்று இயக்கி
2.”ம்…” என்று உடலுக்குள் உருவாக்கப்படும் போது
3.உள் நின்று அது கடவுளாக உருபெறச் செய்கின்றது.

மாற்று மதத்தை நாம் குறை கூறிப் பேசுவோம் என்றால் அந்த உணர்வுகளை உயிர் நமக்குள் அணுவாக உருவாக்கிவிடுகின்றது.

நம் உடலுடன் அதைச் சேர்க்கப்படும் போது
1.உள் நின்று கடவுளாக அவனை “எதிரி” என்றே தாக்கச் செய்கின்றது.
2.அவனை வீழ்த்தினால்… தன்னைக் காக்க முடியும்…! என்று
3.இப்படித்தான் எண்ணச் செய்கின்றது.

மனிதர்களான நாம் நமது மதத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து “பிற மதங்கள் தீமையானவை…!” என்று நமது எண்ணங்களை நினைவலைகளை இந்தக் காற்று மண்டலத்தில் பரப்பிக் கொண்டிருக்கின்றோம்.

இதை நிறுத்திப் பழக வேண்டும்.

1.உலக மக்கள் அனைவரும் ஓரினம்
2.நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்
3.நாம் உயிரான ஈசனின் இயக்கத்தால் இயங்குகின்றோம் என்பதை உணர்தல் வேண்டும்.

ஆகவே நம்மை இயக்கும் உயிரான ஈசனுக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் மதத்தின் பெயராலோ குலத்தின் பெயராலோ வெறுப்பையோ குரோதத்தையோ கொடுத்துவிடக் கூடாது.

உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக ஒன்றிணைந்து வாழ வேண்டும். எல்லோரும் மகிழ்ந்த நிலை பெறவேண்டும்.

எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வை நமக்குள் வலுக் கொண்டதாக இணைக்க வேண்டும்.
1.அது நமக்குள் உருவான அனைத்துப் பேதங்களையும் அகற்றச் செய்யும்.
2.மற்றவர் மேல் உள்ள பகைமைகளை மறக்கச் செய்யும்.
3.மகிழ்ந்து வாழச் செய்யும்.