ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 26, 2018

உயிருடன் ஒன்றிய ஒளியாகக் கனியின் தன்மை அடைவதே “மனிதப் பிறப்பின் மகத்துவம்...”

ஒரு மாமரத்தை எடுத்துக் கொண்டால் பிஞ்சாக இருக்கும் பொழுது, துவர்க்கின்றது. காயாகும் பொழுது புளிக்கின்றது. ஆனால் கனியாகும் பொழுது இனிக்கின்றது. கனியானபின் அதனின் சத்து அனைத்தும் வடித்து அதன் வித்தாக மாறுகின்றது.

இதைப் போன்றுதான் நம் உயிரின் தன்மை பிஞ்சான தாவர இனங்கள் போல அந்தச் சத்தின் தன்மை பிஞ்சாகும் பொழுது பரிணாம வளர்ச்சிகள் கொண்டு மிருக நிலைகளும் மற்ற நிலைகளும் அடைகின்றோம்.

பல உயிரினங்களாகத் தோன்றி வளர்ந்து வளர்ந்து காயாகும் பொழுது மனிதனாகி விடுகின்றோம்.

மனிதனானபின் உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ இதைப் போல நம் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் இரண்டறக் கலக்கும் பொழுது சுவை மிக்கதாக இனிப்பாக மாறுகின்றது.

இப்படி மாறும் நிலைகளில்தான் நம் உயிர் முழுமை பெறும் தன்மை பெறுகின்றது.

சூரியன் எப்படிப் பிரகாசிக்கின்றதோ இதைப் போல நாம் சுவாசிக்கும் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியாக வரும் பொழுது
1.இது அழியாச் சரீரமாக
2.என்றென்றும் ஒளியின் சரீரமாக விண்ணிலே நிலைத்திருக்கும்.

சாஸ்திரங்களில் அவ்வளவு பெரிய உண்மைகள் உண்டு. ஆனால் இன்று இந்த சாஸ்திரங்களை மாற்றியமைத்து உண்மையினுடைய நிலைகளை அறியாதபடி செய்து விட்டார்கள்.

மனிதன் அடைய வேண்டிய எல்லையையும் பாதையையும் மாற்றிவிட்டு
1.யாரோ செய்து தருவார்கள் என்றும்
2.அவரவர்கள் தலை விதிப்படித்தான் எல்லாமே நடக்கும் என்று
3.நம்மைச் சிந்திக்கவிடாமலே செய்து விட்டார்கள்.

வடக்குத் திசையே மனிதனுக்கு ஆகாது என்று துருவத்தில் நிலை கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலங்களைப் பற்றியும் சுத்தமாகவே மறைத்து விட்டார்கள்.

மனிதன் அடைய வேண்டிய எல்லையே துருவத்தில் சுழன்று கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷி மண்டலம் தான்.

அங்கே தான் உயிருடன் ஒன்றி ஒளியாக ஆன முப்பத்து முக்கோடித் தேவாதி தேவர்கள் என்ற மகரிஷிகள் ஏகாந்தமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.