ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 16, 2018

என்னுடைய போறாத காலம்… “இப்படி ஆகிவிட்டது…” என்று வேதனைப்படுகிறோம்…! நல்ல நேரம் கெட்ட நேரம் எப்படி வருகிறது…?


ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று நாம் சந்திக்கும் அந்த நேரம் என்ன ஆகின்றது…?
1.அவனைச் சந்தித்துவிட்டுப் போன பிற்பாடு தொழிலில் நஷ்டமாகின்றது.
2.அவனைச் சந்தித்து அதே வேதனையுடன் நாம் போனோம் என்றால் நடை பாதையில் மேடு பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து விடுவோம்.
3.வேதனைப்படுவோரை நினைத்துக் கொண்டே நம் வீட்டு வாசல் படியில் ஏறும் பொழுது படியில் முட்டிக் கீழே விழுந்துவிடுவோம்.

ஆகவே ஒரு வேதனைப்படுவோரைச் சந்திக்கக்கூடிய நேரம் அதைச் சுத்தப்படுத்தவில்லை என்றால் நல்ல நேரம் கெட்ட நேரமாகின்றது.

அதே நேரம் ஒருவர் நல்ல நிலையில் நம்மிடம் சந்தோஷமாகச் சிரித்துப் பேசுகின்றார். அதைக் கேட்டுக் கொண்டு போனால் அது நல்ல நேரமாகின்றது. நம் காரியங்கள் எல்லாம் வெற்றி பெறுகின்றது. அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆக நல்ல நேரத்தையும் கெட்ட நேரத்தையும் உருவாக்குவது யார்…?

நமக்குப் பிடிக்காதவர்களைப் பார்க்க நேர்ந்தது என்றால் இங்கே போகின்றான் பார்…! என்போம். அவன் சந்தோஷமாகச் சிரித்தால் போதும்… இன்னும் ஆத்திரம் அதிகமாகும். அது நமக்குப் பிடிக்காது.

அதே போல் நம்மை அவன் பார்த்தான் என்றால் அவனுக்கும் பிடிக்காது…! இதைத்தான் நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்.

1.ஒரு போக்கிரியைப் பார்த்தவுடனே நமக்குக் “கிடு…கிடு…” என்று நடுங்குகின்றது.
2.போக்கிரியிடம் போய் நாம் நல்லதைச் சொல்ல முடியுமா..?
3.உயிரிலே பட்டால் அந்த வலிமை குருக்ஷேத்திரப் போர்… “இப்படிச் செய்கின்றானே…!” என்று நினைக்கின்றோம்.
4.அப்பொழுது போர் நடக்கின்றது.
5.அடுத்து நம் உடலுக்குள் போய்விட்டால் மகாபாரதப் போராகி நம் நல்ல குணங்களுடன் போர் செய்ய ஆரம்பித்துவிடுகின்றது.

போக்கிரியைப் பார்க்கும் பொழுது நாம் நுகர்ந்த உணர்வை நம் உயிர் பிரம்மமாக மாற்றிவிடுகின்றது. உயிரில் பட்டுத்தான் எல்லாவற்றையும் இயக்குகின்றது.

அப்பொழுது அந்த நேரம் நமக்குக் கெட்ட நேரமாகின்றது. நல்ல நேரமாக அதை எப்படி மாற்றுவது…?

குருக்ஷேத்திரப் போர் நடக்கும் அந்த நேரத்தில் நம் கண்ணன் (கண்கள்) காட்டிய வழியில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று வானை நோக்கி ஏங்கி
2.அந்தப் பேரருள் உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி வலுவாக்கி
3.அந்தப் பதட்டமான பயத்தை நிறுத்தி மனதைத் தைரியப்படுத்த வேண்டும்.

அவன் (போக்கிரி) அறியாமை நீங்க வேண்டும் அவன் சிந்தித்துச் செயல்படும் உயர் ஞானம் பெறவேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.
1.அவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ…
2.இப்படி நாம் எண்ணிவிட்டால் அவர்கள் உணர்வு நமக்குள் சேராது அது நம்மை இயக்காது,,,!
3.அப்பொழுது அந்தத் தீமை நமக்குள் புகாது உடலுக்குள் உருவாகாதபடி தடுத்துவிடுகின்றோம்.

அதைத் தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது…!

தீமை அகல வேண்டும் எல்லாம் நல்லதாக வேண்டும் என்று அப்பொழுது அதை நல்ல நேரமாக மாற்றுகின்றோம். அதாவது அந்தச் சந்தர்ப்பத்தைத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறும் நல்ல சந்தர்ப்பமாக ஏற்படுத்துகின்றோம்.

ஏனென்றால் நமது ஆறாவது அறிவு கார்த்திகேயா. கஷ்டம் என்று தெரிந்து கொள்கின்றோம் அந்தக் கஷ்டத்தை நீக்கத் தெரிந்து கொள்கின்றோம் கார்த்திகேயா…!

அதிகாலையில் எழுந்தவுடன் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் நாங்கள் பார்த்த குடும்பங்கள் எல்லாம் அந்த அருள் சக்தி பெறவேண்டும் அவர்கள் தொழில் சீராக வேண்டும் என்று பகைமையை மறந்து இப்படித் தியானிக்க வேண்டும்.

எல்லோரும் இதே போல் செய்து அந்த அருள் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பாய்ச்சிப் பழக வேண்டும்.

நம் நடைமுறை வாழ்க்கையில் நம்மை அறியாது வரும் தீமைகளை எப்படி அகற்ற வேண்டும்..? தீமையற்ற வாழ்க்கை எப்படி வாழ வேண்டும்…? என்று சாதாரண மனிதனும் அறிந்து கொள்வதற்காகத்தான் ஞானிகள் ஆலயங்களை உருவாக்கி சாஸ்திரங்களைக் காட்டியுள்ளார்கள்.
1.ஞானிகள் காட்டிய வழியில் நாம் சென்றால்
2.கெட்ட நேரத்தை எல்லாம் நல்ல நேரமாக மாற்ற முடியும்…!