ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label நம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல். Show all posts
Showing posts with label நம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல். Show all posts

August 4, 2018

அக்காலங்களில் குகைகளை எப்படி உருவாக்கினார்கள்...?

இரும்பு எவ்வளவு கடினமானது. இந்த இரும்பு உருவாவதற்குக் கதிரியக்கச் சக்தியே முக்கிய காரணம், நட்சத்திரங்களிலிருந்து வருவது தான் கதிரியக்கச் சக்திகள்.

சாதாரண நெருப்பிலே இரும்பை எவ்வளவு நேரம் வைத்திருந்தாலும் அது உருகாது. அந்தக் கதிரியக்கச் சக்தியினுடைய வெப்பம் (அழுத்தத்தால்) அதிகமாகும் போது தான் இரும்பு உருகத் தொடங்குகிறது. ஆனாலும் அந்தக் கதிரியக்கச் சக்தியிலிருந்து அது தான் மாறுவதில்லை.

அதே சமயம் இந்த அணுக் கதிரியக்கங்களைக் குவித்து அதை இரும்பிலே மோதச் செய்தால் இரும்பு அப்படியே ஆவியாக மாறிவிடும்.

அணு ஆயுதங்களை (ATOM BOMB) வெடிக்கச் செய்தால் பெரும் புயலாக மாறி இங்கே இருக்கக்கூடிய இடமே தெரியாத நிலைகளில் ஒவ்வொரு பொருளையும் மாய்த்துவிடும். ஏனென்றால் அணு சக்தியின் வீரியமடைந்த நிலைகள் அது.

இதைப் போன்று தான் எவ்வளவு கடினமான பொருளாக இருந்தாலும் பெரும் மலையாக இருந்தாலும் அதீதமான அழுத்தம் கொண்டு அதை அழுத்தப்படும் போது அப்படியே ஆவியாக மாற்ற முடியும்.

1.அன்று மெய் ஞானிகள் சாதாரண மனிதராக வாழும் காலத்தில்
2.தன் உடலில் எடுத்து கொண்ட விண்ணின் ஆற்றல்கள் கொண்டு
3.அழுத்தத்தின் தன்மை கொண்டு தன் மூச்சலைகளைப் பாய்ச்சி
4.பெரும் குகைகளை உருவாக்கித் தவம் இருந்தார்கள்.
5.அன்று அப்படிச் செய்தார்கள்.

ஆனால் அதற்குப் பின்னாடி வந்த பெரும் பகுதியானவர்கள் மனித இனத்திலிருந்து தான் தப்பித்துக் கொள்வதற்காக இதே அழுத்த நிலைகளை எடுத்துக் கொண்டு தனக்குச் சாதகமான நிலைகளைச் செயல்படுத்திச் சென்றார்கள்.

ஆனால் அவ்வாறு சாதகப்படுத்தினாலும்
1.பல மனிதர்களின் உடலிலிருந்து கதிரியக்கப் பொறியின் சக்திகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டதனால்
2.சில காலம் கழித்து மனித ஈர்ப்புக்குள்ளேயே வந்து சிக்கிக் கொண்டான்.
3.அழுத்தத்தின் தன்மை கொண்டு பல அதிசயங்களைச் செய்த நிலைகள் எல்லாம் அரசர்கள் செய்த நிலைகள்.

நாம் சொல்லும் சித்தன் முனிவன் இவர்கள் எல்லாம் மாற்று அரசர்கள் போர் செய்து வரும் போது தான் தப்பிப்பதற்காகத் தன்னுடைய மூச்சலைகள் கொண்டு சில குகைகளை ஏற்படுத்தினார்கள். அது உண்மைதான்.

இப்படி இந்தப் புற நிலைகள் கொண்டு மனித உணர்விற்குள் வருவதுபோல
1.புறப் பொருளில் இருந்து எடுக்கப்பட்ட கதிரியக்கச் சக்திகள் (RADIOACTIVE MATERIALS) கொண்டு
2.எந்த ஒரு பொருளையும் அழுத்தி ஆவியாக மாற்ற முடியும் என்பதை
3.இன்று விஞ்ஞானிகள் கண்டுணர்நதிருக்கிறார்கள்.

அன்று மெய் ஞானிகள் கண்டுணர்ந்த சில நிலைகளை விஞ்ஞானிகள் இன்று இருக்கக்கூடிய எலக்ட்ரானிக் கம்ப்யூட்டர் என்ற சாதனங்களை உருவாக்கி அலைவரிசைகளில் வைத்து அளந்து அளந்து ஆராய்ந்து அறிந்து கொண்டார்கள்.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்றால் அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல்மிக்க பேரருள் உணர்வுகளைக் கவர்ந்து
1.ஈஸ்வரா... என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரில் அழுத்தமாக எண்ணினால் அது உடலுக்குள் சென்று
2.நம்மை அறியாது ஆட்டிப் படைக்கும் தீமையான உணர்வுகளை ஆவியாக மாற்றி
3.நம்மையும் நம் உடலையும் நம் உயிரான்மாவையும் ஒளியாக மாற்றச் செய்யும்.

December 30, 2017

தீவிரவாத உணர்வுகளை “நம் மூச்சலைகளால்..” அகன்று செல்ல வைக்க முடியும்

நம் பிரபஞ்சததில் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றது.

அந்த உணர்வுகள் நம் பூமியிலே கலந்து கொண்டு இருக்கும்போது ஒரு நட்சத்திரத்திற்கும் இன்னொரு நட்சத்திரத்திற்கும் சேரவில்லை என்றால் ஒதுக்கப்பட்டுச் சுழிக்காற்றுகள் வருகின்றது.

கடல்களிலும் இதே போன்றுதான் எதிர் நிலையான நட்சத்திர அலைகள் தாக்கப்படும் போது அது புயலாக மாறுகின்றது.

மனிதனான நமக்குள்ளும் அந்த 27 நட்சத்திரத்தின் உணர்வுகள் பெருக்கப்பட்டுள்ளது. அந்த 27 நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் இருந்தாலும்
1.எதிர் நிலையான நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் எந்த அளவுக்கு வலுவாக இருக்கின்றதோ
2.அதன் உணர்வு வழிப்படிதான் நம் உடலுக்குள் மற்ற உணர்வுகளை அடிமைப்படுத்துவதும்
3.அதன் நிலைகளில் பல மாற்றங்கள் ஏற்படுவதும் உண்டு.
அகண்ட பேரண்டத்தில் 2000 சூரியக் குடும்பங்கள் ஒன்றுக்கொன்று துணை கொண்டு ஓடி அது வாழ்ந்து கொண்டு சுழன்று கொண்டு இருக்கின்றது.

இருப்பினும் 2000 சூரியக் குடும்பங்களிலிருந்து வரக்கூடிய தூசி மண்டலங்கள் வால் நட்சத்திரமாக அது தனித்துத் தனித்து ஒதுங்கி இருக்கின்றது.

2000 சூரியக் குடும்பங்களுக்கும் நேர்ப்பாதையில் அத்தகைய தூசி மண்டலம் வரும் போது இதைக் கவர்ந்து மீண்டும் சூரியன் அந்தக் கொடிய விஷத் தன்மைகளை மாற்றிவிடுகின்றது.

சூரியனுக்குப் போகும் பாதையில் நமது பூமியின் ஈர்ப்பிற்குள் (வால் நட்சத்திரம்) வந்துவிட்டால்
1.பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் இந்தத் தூசி மண்டலங்கள் மோதும் போது நெருப்பாகி
2.அதனின் விஷத் தன்மைகள் நம் பூமிக்குள் பரவுகின்றது.
3.எந்தப் பகுதியில் பரவுகின்றதோ அங்கெல்லாம் விஷத்தன்மை பரவுகின்றது.
4.தாவர இனங்களானாலும் மற்ற எதுவானாலும் விஷத்தன்மை பரவுகின்றது.

(இப்பொழுது பல வால் நட்சத்திரங்கள் நம் பிரபஞ்சத்திற்குள் வந்து கொண்டிருக்கின்றது. பூமிக்குள்ளும் வந்து கொண்டிருக்கின்றது. பத்திரிக்கைகளிலும் டி.வி,யிலும் பார்ப்பீர்கள்)

இத்தகைய விஷத் தன்மைகள் பூமிக்குள் வந்து கொண்டு இருக்கும் இந்த நிலையில் மனிதருக்குள் கொடூர அசுர உணர்வுகள் ஒவ்வொரு மனித உடலில் தீவிரவாதம் என்ற நிலையில் பரவிக் கொண்டிருக்கின்றது.

அதிலிருந்து தப்ப குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நம் ஆன்மாவில் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை அதிகமாகப் பெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அருள் வட்டமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் வலுவான பின்
1.நாம் விடும் மூச்சலைகளால் இந்த விஷத் தன்மையான தீமையான உணர்வுகள்
2.அது ஒதுங்கி ஓடத் தொடங்கும்.

ஒவ்வொருவரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவர்ந்து வெளிப்படும் நிலையில் ஒதுங்கிய அந்த விஷமான உணர்வுகள் மற்ற எதனின் ஈர்ப்பிற்கும் செல்லாதபடி சூரியனால் ஈர்க்கப்பட்டுவிடும்.

அவைகளைச் சூரியன் கவர்ந்து சென்று அந்த விஷத்தைப் பூராம் கருக்கி விடுகின்றது. எதிர் நிலையான உணர்வுகள் அனைத்தும் மாற்றப்படுவதை நாளடைவில் நீங்கள் இதை உணர முடியும்.

சூரியன் அந்த விஷத் தன்மைகளை எப்படிக் கவர்கின்றது..? எப்படி மாற்றுகின்றது…? என்ற நிலையைக் குருநாதர் என்னை எப்படிக் காண வைத்தாரோ அதைப் போல நீங்களும் பார்த்திட முடியும்.

அந்த நிகழ்ச்சிகளை உங்களிலே அறிந்திடவும் முடியும்.

August 19, 2017

ஒருவரால் துன்பம் வந்து கொண்டேயிருக்கின்றது… என்று எண்ணாதீர்கள் என்னை எண்ணும்போது அவருக்குள் “தீமை செய்யும் எண்ணங்கள் அழிந்து நன்மை பயக்கும் செயலாக அவர் செய்ய வேண்டும்” என்று எண்ணுங்கள்

குருநாதர் எமக்கு (ஞானகுரு) அருளிய அதே அருள் வழிப்படி உங்களுக்கும் அவர் உணர்த்திய பேருண்மைகளைத் தெளிவாகச் சொல்லிக் கொண்டு வருகிறோம்.

வாழ்க்கையில் நம்மையறியாது வரும் தீமையான உணர்வுகளை நீக்கிடும் அருள் சக்திகளை நம்முள் பெறுதல் வேண்டும்.

வயல்களில் களைகளை நீக்குவது போன்று நமது வாழ்க்கையில் வரும் விஷத் தன்மையான களைகளை நீக்க வேண்டும்.
1.அப்படி விஷத் தன்மைகளை நீக்கத் தவறினால்
2.”துன்பமே வாழ்க்கை” என்ற நிலைகள் நம்முள் ஊடுருவி
3.தீமைகள் நமக்குள் வளர்ந்திடும் நிலை பெறுகின்றது.
4.ஆகவே மனிதர்கள் தம்மில் தீமைகளை நீக்கிடும் அருளாற்றலைப் பெறவேண்டும்.

துன்பத்தை நீக்கிப் பேரின்பத்தை உருவாக்கும் அருள் உணர்வுகளையும் நச்சுத் தன்மையைப் பிளக்கும் அருள் உணர்வுகளையும் மகரிஷிகள் தமக்குள் விளைய வைத்து வெளிப்படுத்திய ஆற்றல்கள் இப்புவியில் காற்று மண்டலத்தில் பரவிப் படர்ந்துள்ளது.

நாம் பல ஆயிரம் பேர் ஒன்று சேர்ந்து கூட்டமைப்பாகத் தியானம் இருந்து, காற்றில் பரவிப் படர்ந்துள்ள அருள் உணர்வுகளைத் தம்முள் கவர்ந்து வளர்த்து அதன் வழியில் மற்றவர்களையும் இணைத்திடல் வேண்டும்.

இப்புவியில் விஞ்ஞானிகளால் பரவியுள்ள நஞ்சுகளும் மனிதரை மனிதரே கொன்று குவிக்கச் செய்யும் இரக்கமற்ற செயல்களைச் செயல்படுத்தும் உணர்வுகளும் எண்ண அலைகளும் ஒவ்வொரு மனித உடலிலும் விளைந்து அது வெளிப்பட்டு இந்த காற்று மண்டலத்தில் நச்சுத்தன்மையாகப் படர்ந்துள்ளது.

மக்களை இந்த நச்சுத் தன்மையிலிருந்து மீட்பதற்கு அருள் ஞான உணர்வுகளை நமக்குள் எடுத்து வளர்த்து நஞ்சின் உணர்வுகள் நம்முள் வளராது தடுத்துக் கொள்ள வேண்டும்.

நாம் பெறும் அந்த அருள் ஞான உணர்வுகள்
1.நல்லதை எண்ணும் நல்ல உள்ளங்களில் வளரவேண்டும் என்று ஏங்கி
2.இந்த உணர்வை ஒலிபரப்புச் செய்யும்பொழுது
2.நாம் எடுத்த இந்த உணர்வுகள் காற்றிலே படர்ந்து
4.ஒவ்வொரு உள்ளத்திலும் விளையத் தொடங்கும்.

ஒரு நெல்லை மண்ணில் விதைத்தால் அது நெற் செடியாக விளைந்து அந்த செடியில் பல நெல் மணிகள் விளைகின்றன.

அப்படி விளைந்த பல நெல் மணிகளையும் மண்ணில் விதைத்தால் விதைத்த பல நெல் மணிகளும் விளைந்து மலைபோல நெல் குவிகின்றது. அப்படி மலை போலக் குவிந்தால்தான் அவரவர் பசிக்கு அளவுக்குத் தக்கவாறு உணவாக எடுத்து உட்கொள்ள முடியும்.

1.நீ ஒரு நெல்லாக இருக்கின்றாய்
2.அந்த நெல்லின் தன்மையை பலவாக வளர்த்துக் கொண்டு
3.”சக்தி வாய்ந்த உணர்வின் ருசியை” ஒவ்வொரு உள்ளத்திற்குள்ளும் ஊட்டு
4.தீமைகளை நீக்கிய அருள்ஞான உணர்வுகளை “ஒலி பரப்பு செய்” என்று இதைச் செய்யும்படி குருநாதர் எமக்கு அருள் பணியாக இட்டார்.

குருநாதர் எம்மைக் காடு மேடெல்லாம் அலையச் செய்து யாம் அவர் இட்ட பணிகளைச் “செம்மையாகச் செய்வோமா… செய்ய மாட்டோமா…?” என்று அறிவதற்கு எம்மைப் பல பரீட்சைகளுக்கு உட்படுத்தினார்.

ஒவ்வொரு நிலையிலும் யாம் பலருக்கு பல உதவிகளைச் செய்வோம். ஆனால் எம்மால் நன்மை பெற்றவவர்களில் சிலர் எமக்குத் தீமை செய்ய முயல்வார்கள்.

குருநாதர் தீமைகளை அழித்திட எமக்குப் பல சக்திகளைக் கொடுத்தார். யாம் எண்ணத்தால் எண்ணினால் போதும், தீயவர்களுடைய நிலைகள் செயலற்றதாகிவிடும். ஆனால்  
1.பிறர் நமக்குத் தீமைகள் செய்தாலும் அவர்கள் நம்மை எண்ணும் போது
2.அவர்களுக்குள் “தீமைகள் செய்யும் எண்ணங்கள்தான் அழியவேண்டும்”
3.அவர்களுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் ஓங்கி வளர்ந்து நன்மை பயக்கும் சக்தியாக மலரவேண்டும் என்றுதான்
4.குருநாதர் எம்மைத் தெளிவாக்கி அருள் சக்தியினைக் கொடுத்தார்.

இப்படி ஆற்றல் மிக்க சக்தியினை எமக்கு குருநாதர் கொடுத்திருந்தாலும் எமக்குப் பரிசீலனை வரும் பொழுது அந்த நிலைகளில் கூர்ந்து கவனித்து
1.தீமை செய்பவர்களுடைய உணர்வுகளை எமக்குள் செலுத்தாதபடி,
2.அவர்கள் நலம் பெறவேண்டும்,
3.அவர்கள் அறியாத நிலைகளிலிருந்து விடுபடவேண்டும்,
4.அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் என்ற நிலைகளைத்தான் குருநாதர் காண்பித்த அருள் வழியில் செய்து வருகின்றோம்.

இதன் வழியில்தான் நீங்களும் செயல்படுத்த வேண்டும் என்று உங்களுக்கு யாம் சொல்வது.

நாம் அனைவரும் கூட்டமைப்பாக ஒன்று சேர்ந்து அருள் உணர்வின் ஆற்றலை நம்மில் பெருக்கி அதை நாம் மூச்சாக சொல்லாக வெளிப்படுத்த வேண்டும்.

இதை அறிந்து கொண்டவர்கள் எந்த நிமிடத்திலும் எங்கே சென்றாலும்
1.”எனக்குப் பிறிதொருவர் துன்பம் செய்தார்…
2.எனக்குத் துன்பம் வந்து கொண்டே இருக்கின்றது” என்று எண்ணாதீர்கள்
3.அந்த வேதனையின் உணர்வை நம்மில் மாற்றவேண்டும்.

இதற்குத் தான் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை எமக்குக் குருநாதர் அருளிய அருள் வழிப்படி உங்களுக்கும் தைரியத்துடன் ஏனென்றால் தைரியம் பெறவே இதைக் கொடுக்கின்றோம். 

எமது அருளும் குருநாதர் அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருந்திடப் பிரார்த்திக்கின்றோம்.

July 7, 2017

“யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே” – நம் ஆன்மாவில் படர்ந்துள்ள உணர்வலைகள் மற்றவரை எப்படி இயக்குகின்றது

பூமியில் உள்ள காற்றுக்குள் பல வித செடிகள் மரங்கள் வெளியிட்ட உணர்வின் அலைகள் பரவியிருக்கின்றன.

அவ்வாறு பலவிதமான உணர்வின் அலைகள் பரவி இருந்தாலும் ஒரு வித்து தன் இனத்தின் சத்தை அதிலிருந்து பிரித்து எடுத்துச் செடியாக மரமாக வெளிப்படுகின்றது.

இதைப் போன்றுதான் நமது உடல் பூமிக்குச் சமமானது.

உயிரின் இயக்கத்தால் நாம் கவரும் நிலைகள் மற்றும் பகிர்ந்து கொண்ட உணர்வின் தன்மைகளைப் பதிவு செய்து கொண்டபின் பதிந்த நிலைகளை தன் இனமான உணர்வின் அலைகளைக் காற்றிலிருந்து கவர்ந்து தன் ஆன்மாவாக மாற்றுகின்றது.
பூமியில் ஒரு விதையினை ஊன்றினால் அந்த வித்தானது தனது உணர்வின் சத்தைக் காற்றிலிருந்து கவரும். அந்தப் பரப்புக்குள் நாம் செல்ல நேர்ந்தால் அதன் வாசனையை நாம் அறியமுடியும். இதைப் போன்றுதான்
1.நம் உடலான நிலத்திற்குள்
2.நாம் எண்ணிய உணர்வின் சத்தைப் பதிவு செய்துகொண்டால்
3.உணர்வு அதிலிருந்து கவர்ந்து நமது ஆன்மாவாக மாறுகின்றது.

இருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கும்பொழுது அந்த உணர்வின் அலைகள் நம்முள் கலந்து ஊழ்வினையாகின்றது. அந்த உணர்வின் அலைகள் நமக்குள் பெருகி ஆன்மாவாகின்றது.

அவர்களுக்குள் எந்த வெறுப்பின் தன்மை கொண்டு சண்டையிடுகின்றனரோ அதைப் போன்று சண்டையிடும் உணர்வுகளை நமக்குள் நுகர்ந்து நுகர்ந்து அதையே பதிவாக்குகின்றோம்.

பிறருடைய நிலைகளை எண்ணி “இப்படி ஆகிவிட்டதே...”என்று அந்தச் சோர்வின் தன்மையை நாம் எடுத்துவிட்டால் அந்தச் சோர்வின் உணர்வுகள் நமக்குள் வித்தாகப் பதிவாகி சோர்வின் தன்மை கொண்ட உணர்வின் சத்து அதிகரித்துவிடும்.

பின் அதனின் உணர்வுகள் நம் ஆன்மாவாகும் பொழுது நம்மிடத்தில் தெளிவற்ற நிலைகளாக அமைந்து நாம் சிந்தித்தாலும் சிந்திக்க இயலாத நிலையை நம்மிடத்தில் உருவாக்கிவிடுகின்றது.

1.இந்த ஆன்மாவில் எது பெருகியிருக்கின்றதோ
2.அதனின் உணர்வுகள் - நாம் ஒரு சொல் சொல்வதற்குமுன் வெளிப்பட்டு
3.“யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே...”என்பதைப் போன்று
4.நாம் பேச இருப்பவரின் உணர்வில் “மோதுகின்றது”.

நாம் அவரிடம் உதவி கேட்டுச் சென்றிருப்போம். அவருடைய உதவியைக் கோரி நாம் பேசும் பொழுது...,
1.நம் ஆன்மாவில் கலந்து பெருகியுள்ள சோர்வடைந்த உணர்வுகள்
2.நம் சொல்லைக் கேட்டுக் கொண்டிருப்போரின் சுவாசத்தில் மோதி
3.நமக்கு அவர் உதவி செய்ய விரும்பி இருந்தாலும்
4.உதவி செய்ய விரும்பும் அவரின் எண்ணத்தை இது தடுக்கும் 
5.இங்கே யாரும் தவறு செய்யவில்லை.

ஆனால் உதவி செய்ய விரும்புவரிடத்தில் நமது கஷ்டங்களையும், வேதனைகளையும் எடுத்துச் சொல்லும் பொழுது இந்த உணர்வின் தன்மை அவரிடத்தில் விளைகின்றது.

நாம் எத்தகைய கஷ்டங்களை அனுபவித்தோமோ அதனின் உணர்வுகளை அவர் நுகர்கின்றார். பின்
1.அவர் தலையை ஆட்டிவிட்டு.., “அப்புறம் பார்ப்போம்” என்பார்
2.இங்கே நம்முடைய சொல்லே நமக்கு எதிரியாகின்றது அவர்களல்ல.

அவர் உதவி செய்ய விரும்பினாலும் அவர்களுடைய உணர்வுகள் இத்தகைய நிலைகளில் விளையும்.

அதே சமயம் நமது தொழில்கள் தடைப்படும்பொழுது வேதனை என்ற நிலை வரும். வேதனை என்பதே நஞ்சு.  இந்த நஞ்சின் தன்மை வந்துவிட்டால் இந்த உணர்வின் தன்மை நமக்குள் அதிகமாக வளர்ந்து, கை கால் குடைச்சல் சோர்வு போன்ற நிலைகள் சூழ்ந்துவிடுகின்றது.

பின் நாம் தொழில் செய்ய முடியாத நிலைகளும் நாம் அதன் வழியில் யாருடன் பேச்சின் தொடர்பு வைத்துக் கொண்டாலும் அவைகளைக் கேட்டுணர்வோரின் நிலைகளையும் சோர்வடையச் செய்துவிடும்.

அவர்கள் நம்மைப் பார்க்கும் பொழுது “இவர் எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான்...”என்று நம்மைப் பற்றிய ஒரு எண்ணத்தை அவரிடத்தில் உருவாக்கும்.

“இவர் எதையும் செய்ய மாட்டார்...” என்ற உணர்வே அவரிடத்தில் ஓங்கி நிற்கும். இந்த இடத்தில் நம் ஆன்மாவே நமக்கு எதிரியாக வினை புரிகின்றது.

ஆகவே இதைப் போன்று நம் ஆன்மாவில் படரும் தீமையான உணர்வுகளை நீக்குவதற்குத் தான் ஒவ்வொரு நொடியும் நாம் ஆத்ம சுத்தி செய்துகொள்ள வேண்டும்.

விண்ணிலிருந்து வந்து கொண்டிருக்கும் அந்தத்  துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் புருவ மத்தியில் இயக்கிக் கொண்டிருக்கும் உயிர் வழி நுகர்தல் வேண்டும்.

நுகர்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை  நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் உணவாகக் கொடுத்து உள் முகமாக  இணைக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

இதன் வழி நாம் தொடர்ந்து செய்யும்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் மிக்க சக்தி நமது ஆன்மாவில் பாதுகாப்புக் கவசமாக பெரும் அருள் வட்டமாகி விடுகின்றது.

அது நம்முள் எத்தகைய தீமைகளையும் நம் அருகில் வராதபடி தள்ளிவிடுகின்றது. நம் ஆன்மா பரிசுத்தமாகி நாம் மகிழ்ந்து வாழ முடியும்.

இந்தப் பிறவிக்குப் பின் நம் உயிராத்மா அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து நாம் அனைவரும் பிறவி இல்லா நிலை என்ற அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

June 24, 2017

தியானத்தின் மூலம் நாம் விடும் மூச்சலைகள் "பத்து மைல் சுற்றளவிற்குப் பரவி" நம் ஊரையே காக்கும் அரும் பெரும் சக்தியாகப் பரவும் – உங்களால் முடியும்

விஷத்தன்மைகள் பரவி புவியின் காற்று மண்டலத்தில் கலக்கப்படும் பொழுது அது நமது சுவாசத்தில் கலந்து உடலுக்குள் செல்வதால் உயிரின் இயக்கத்தால் நமது சுவாசம் பலவீனமடைகின்றது.

ஒரு விஷத்தை நாம் உட்கொண்டால் நமது உடல் எப்படிப் பலவீனமடைகின்றதோ அதைப் போன்ற உணர்வுகளை நமக்குள் தோற்றுவிக்கின்றது. 

இது இயற்கையின் செயல்களில் ஒன்று.

விண்ணில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் துருவ மகரிஷி சப்தரிஷி மண்டலங்களாக உள்ளவர்கள் இத்தகைய நஞ்சுகளை அடக்கி ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டே உள்ளார்கள்.

1.தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் அனைவரும்
2.அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கவருவதனால்
3.அவர்களை இந்த விஷத் தன்மைகள் பாதிப்பதில்லை.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அனைவரும் ஒருங்கிணைந்து துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் பெருக்குவது நல்லது.

ஏனென்றால் ஏற்கனவே நமக்குள் பதிவாகி இருக்கும் இருண்ட உணர்வுகளைக் கரைப்பதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

விடும் மூச்சலைகளால் இந்த பூமியில் படர்ந்துள்ள விஷத்தன்மைகள் முறியடிக்கப்படுகின்றன.

இந்த பூமியில் சங்கடத்தாலும் வேதனனையாலும் வெளிப்படுத்தப்பட்டுள்ள உணர்வின் அலைகள் பரவிப் படர்ந்துள்ளன.
 
நாம் கூட்டமைப்பாக இருந்து நல்லுணர்வின் அலைகளை வலுவாக வெளிப்படுத்தினோம் என்றால்  நமது மூச்சலைகள் காற்று மண்டலத்தில் சிறுகச் சிறுகப் பெருகுகின்றது.

ஒரு முறை செய்துவிட்டு அடுத்த முறை தொடராமல் விட்டு விட்டால் கடலில் பெருங்காயத்தைக் கரைத்தது போல் ஆகிவிடும்.

கடலில் கரைத்த பெருங்காயத்தின் மணம் சிறிது நேரம் கரைத்த இடத்தில் இருக்கும். பிறகு அதனின் மணம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்.

இதைப் போன்று அல்லாது நமது மூச்சலைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி இந்தக் காற்று மண்டலத்தில் மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்தியைப் பெருகச் செய்வதன் மூலம் இதனின் வலு அதிகமாகின்றது.

இதனால் புறத்தில் பரவிக் கொண்டிருக்கும் நஞ்சின் வலுவினை இழக்கச் செய்கின்றோம்.

1.நாம் அனைவரும் கூட்டுத் தியானமிருந்து நமது மூச்சலைகளை வெளிப்படுத்தும் பொழுது
2.அந்த அலைகள் நமது காற்று மண்டலத்தில் 
3.குறைந்த பட்சம் “10  மைல்” சுற்றளவிற்கு மேலேயும் அகலமாகவும் பரவுகின்றது. 
4.நாம் விடும் மூச்சலைகள் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மையினைக் குறைப்பதற்கு உதவும்.

ஏனென்றால் ஒரு நூலால் கனமான பொருளைத் தூக்க முடியாது. பல நூலை ஒன்றாகச் சேர்த்து கயிறாகத் திரித்தால் ஒரு கனமான பொருளைத் தூக்க முடியும்.

அதைப் போன்று நம்முடைய எண்ணங்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து அதனின் உணர்வினை நமக்குள் சுவாசித்து மூச்சலைகளை நாம் வெளிப்படுத்தும் பொழுது அது இந்தக் காற்று மண்டலத்தில் வலிமைமிக்கதாகப் பரவும்.

உங்களால் முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.

1.சூரியனுடைய கதிரியக்கங்களில் அதிகமாக நச்சுத் தன்மை தாங்கியிருந்தாலும் 
2.நாம் வெளியிடும் மூச்சலைகள் அந்த நச்சுத் தன்மையை முறியடிக்கும் உணர்வலைகளாக
3.“10 மைல்” அளவுக்காவது இது பரவும்.

அப்போது  இந்த “10 மைல்” சுற்றளவில் உள்ளவர்களுக்கு தீங்குகள் இல்லாத நிலைகளும் அவர்கள் சுவாசத்தில் நல்ல தன்மையினைப் பெறும் நிலையும் ஏற்படுகின்றன.

நம்மிடத்திலும் இந்த நிலையைப் பெறுகின்றோம்.

ஆகவே நாம் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம் உயிர் வழி கவர்ந்து உடலுக்குள் பரவச் செய்து நம் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திற்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை உணவாகக் கொடுப்போம்.

அவ்வாறு அந்த சக்தி வாய்ந்த உணர்வின் ஒளி அலைகளை மூச்சலைகளை “நாம் வாழும் ஊர் முழுவதும் படரச் செய்வோம்”.

நம் ஊர் மக்கள் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற்று இனி வரும் எல்லாத் தீமைகளில் இருந்து விடுபடச் செய்து மகிழ்ந்து வாழச் செய்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அனைவரும் இணைந்து வாழச் செய்வோம். 

எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி நம் அனைவருக்கும் துணையாக இருக்கும். ஓம் ஈஸ்வரா குருதேவா.