ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 26, 2018

27 நட்சத்திரத்தின் சக்தியும் நவக் கோள்களின் சக்தியும் பெற்றால் கிடைக்கும் பலன் என்ன...?

நாம் அனைவருடைய நிலைகளும் 27 நட்சத்திரத்திற்குள் உள்ளடங்கியே இந்த உயிரணுக்கள் இயங்குகின்றது. அதாவது நட்சத்திரத்தின் உணர்வின் எதிர் நிலையான இயக்கமாகத்தான் நம் உயிர் ஒவ்வொன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

நவக் கோள்கள் அது உமிழ்த்தும் உணர்வின் சத்தைத் தான் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அது ஒளியின் சுடராக்க் காந்தப் புயலாக வெளிப்படுத்துகின்றது.

அந்தக் கோள்களிலிருந்து வரக்கூடிய சத்தினை எடுத்துத் தாவர இனங்களாக மாற்றி அந்த நவக்கோளின் சத்துதான் நம் சரீரமாக உருவாகி உள்ளது.

இதிலே எந்தக் கோளின் சத்து அதிகரிக்கின்றதோ அதனின் நிறமும் அதனின் குணமும் அதற்கு எதிர்நிலையான ஒன்பது கோள்களின் குணங்களை எதிர் நிலையாக மாற்றிக் கொண்டிருக்கும்.

அதே சமயத்தில் எதிர் நட்சத்திரமான உணர்வின் நிலைகளும் உடலுக்குள் சேர்த்துக் கொண்ட குணங்களுக்கு எதிர் நிலையாக வரும்பொழுது நமக்குள் எதிர் நிலையான உணர்வுகள் உருவாகும்.

சூரியன் எவ்வாறு பிரபஞ்சத்தை உருவாக்குகின்றதோ அது பேரண்டத்தின் நிலைகள் கொண்டு மற்ற அண்டங்களுடன் இணைந்து இரண்டாயிரம் சூரியக் குடும்பங்கள் இணைந்து வாழ்கின்றது. இது ஒரு அண்டம்.

இதைப்போல தான் நாம் இணைந்துள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு  பிரபஞ்சம். இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கம் போன்று ஒருவருக்கொருவர் துணை கொண்டு நாம் எடுக்கும் நிலைகள் கொண்டு தான் வாழ்க்கையின் இயக்கங்கள்.

உதாரணமாக ஒருவரை நண்பனாக எண்ணிய பின் அவன் தப்பு செய்யமாட்டான் என்று எண்ணிவிட்டால்
1.அவன் தப்பு செய்தாலும் நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
2.அந்த உணர்வின் தன்மை குற்றமற்றதாக நாம் எண்ணி விடுகின்றோம்.
3.குற்றமே செய்பவனானாலும் நாம் குற்றமற்றவனாக எண்ணுகின்றோம்.

ஆனால் குற்றமே செய்யாதவனை அவன் மேல் பகைமை கொண்டால் அவனைக் குற்றவாளி என்றே நாம் சொல்வோம். இதுவெல்லாம் நாம் கவர்ந்து கொண்ட உணர்வின் இயக்க நிலைகள்.

இதைப் போன்ற இயக்கங்களை நாம் மாற்ற வேண்டும் அல்லவா...!

1.நம் உயிரணுக்களை ஒவ்வொரு நட்சத்திரமும் இயக்குவதனால்
2.அதே போல் நம் உடலில் நவக் கோள்களின் சத்து இருப்பதால்
3.27 நட்சத்திரத்தின் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்றும்
4.நவக் கோள்களின் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்றும் தியானிக்கும் பொழுது
5.எதிர்ப்பில்லாது பகைமையில்லாது இந்த உணர்வுடன் நம் அனைவரையும் ஒன்றிச் சேர்க்கும் நிலையே இது.

ஏனென்றால் 27 நட்சத்திரங்களின் உணர்வுகளையும் நவக் கோள்களின் சக்தியையும் எடுத்துத்தான் அந்த உணர்வின் சத்தை ஒளியாக மாற்றியவர்கள் மகரிஷிகள். ஆகையினாலே
1.நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணித் தியானிக்கும் பொழுது
3.அனைத்தையும் ஒருங்கிணையச் செய்து
4.உயர்ந்த சக்தியாக நமக்குள் மாற்றும் திறன் பெறுகின்றோம்.