தவறுகள் செய்யவில்லை என்றாலும் சில சந்தர்ப்பம்
நம்மைப் பிறர் கோபமாகப் பேசுவார்கள். திட்டவும் செய்வார்கள்.
நாம் அவர்களிடம் விளக்கிச் சொன்னாலும்
அவர்கள் ஏற்றுக் கொள்வதும் இல்லை. உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணமும்
இருப்பதில்லை.
அவர்கள் சொன்னதயே சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
அதைக் கேட்டால் நாமும் உணர்ச்சிவசப்பட்டுப் பதிலுக்குத் திட்டுவோம்...! அல்லது மிகுந்த
வேதனைக்குள்ளாவோம்.
இதை எப்படி நிறுத்துவது? நல்லதாக மாற்ற
வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?
“ஈஸ்வரா...” என்று உயிரை எண்ணி அந்த
மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி உடலுக்குள் செலுத்த வேண்டும்.
இப்படி உடலுக்குள் நினைவைச் செலுத்திவிட்டு
உங்களைத் திட்டியவர்கள் அவர்கள் எங்களைப் பார்க்கும் பொழுது, நல்ல சொல்லாகச் சொல்லும்
ஆற்றல் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
அவர்கள் எதையெல்லாம் பேசி எதையெல்லாம்
உங்களுக்குச் சங்கடமாக எண்ணுகின்றனரோ அதே சமயம் நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு,
1.அவர்கள் எதைச் செய்ய வேண்டுமென்று
விரும்புகின்றனரோ
2.அது அவர்களுக்கு நடந்து
3.“அவர்கள் உணரும் ஆற்றல் பெறட்டும்...!”
என்று நீங்கள் எண்ணுங்கள்.
ஒருவர் திட்டிக் கொண்டே இருக்கிறார்
என்று சொன்னால் நாம் சுத்தமாகக் கேட்டுக் கொண்டேயிருந்தபின்
1.திட்டியது அனைத்தையும் நீங்களே வைத்துக்
கொள்ளுங்கள்...!
2.எனக்கு அது எதுவும் வேண்டாம்…! என்று
நாம் அவரிடம் சொல்லிவிட்டால்
3.அது நம்மைப் பாதிக்காது.
நீங்கள் ஆத்ம சுத்தியைச் செய்துவிட்டுத்
திட்டியவரிடம், “நீங்கள் எப்படி எப்படியெல்லாம் திட்டினீர்களோ... அதையெல்லாம் நீங்களே
வைத்துக் கொள்ளுங்கள்... எனக்கு வேண்டாம்... என்று
1.சிரித்த முகத்துடன் சொல்லுங்கள்.
2.அந்த உணர்வுகள் உங்களை ஆட்டிப் படைக்காது.
நாம் ஆத்ம சுத்தி செய்து இவ்வாறு சொன்னவுடன்
“ஆ...” என்று அவர்கள் இழுத்தால் போதும்.
அவர்கள் அறியாமல் செய்த தவறை நாம் விட்ட
மூச்சலைகள் அவருக்குள் ஊடுருவிச் சென்று அவர்கள் செய்த தவறை உணர்த்தும்.
இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.