ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 19, 2018

அதர்வண வேதமும் “மந்திர ஒலிகளும்”

இயற்கையின் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதி அந்த உணர்வுகள் விளைந்ததைத்தான் வியாசகர் அன்று வேதங்களாகக் கூறினார்.
1.உருவம்.., திடப் பொருள் என்பது “ரிக்”
2.அந்தப் பொருளிலிருந்து மணங்கள் வரும்போது “சாம”.
3.ஒரு பொருளுடன் இணைந்து அதை மாற்று நிலைகள் உருமாற்றும்போது இரண்டு செயலும் தன் உணர்வின் சத்தை மாற்றுகின்றது “அதர்வண”.
4.இரண்டும் மாறி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும்போது “யஜூர்”.

ஒரு சத்து மற்றொன்றை எப்படி அது விழுங்கியது? அதன் மூலமாகப் புதிதாக ஒரு பொருள் எப்படி உருவாகின்றது என்பதை இவ்வாறு நான்கு வேதங்களாகக் காட்டியுள்ளார்.

சூரியனில் இருந்து வெளிப்படும் உணர்வுகள் அது ஒன்றோடு ஒன்று சேர்த்து அந்தப் பதிவான உருவான உணர்வுகள் “ரிக்...”

அதே சமயத்தில் அது பூமிக்குள் அது வந்தவுடனே தாவர இனங்களாக மணங்களாக வீச ஆரம்பிக்கின்றது.

மற்ற கோள்கள் அதிகமாக மணங்கள் வீசாது. ஆனால் அதனின் சத்து மற்ற பொருள்களுடன் நெகட்டிவ் பாசிட்டிவ் ஆனவுடனே மணத்தை வீசும் இது “சாம...”

ஒரு வேப்ப இலையை எடுத்துக் கொண்டால் அது மணம் வீசுகின்றது. அது தான் நாதங்கள். இப்படிப் பல நிலைகள்.

ஆனால் அதை எடுத்துச் சாப்பிடும் பொழுது யஜூர். அது பதிவாகின்றது. பதிவான நிலைகள் கொண்டு அது எதை எதை இணைத்து இது ஒன்றாக வேப்ப மரமாக ஆனதோ அது யஜூர் – ஒரு வித்தாக முழுமை அடைகின்றது.

அதே சமயத்தில் அவை ஒன்றை ஒன்று விழுங்குகின்றது “அதர்வணம்...” வலு கொண்டது வலுவற்றதை விழுங்குகின்றது. அப்போது அது விழுங்கி எது வலு கொண்டதோ அதனுக்குக் கீழ் மற்றதை அடிமையாக்குகின்றது.

(உதாரணமாக வேப்ப மரத்தின் மணம் ரோஜாப்பூவின் மணம் விஷச் செடியின் மணம் மூன்றும் ஒன்றானால் கருவேப்பிலையாக உருவாகின்றது)

வலு கொண்டது ஒரு எளிமையானதை விழுங்கினாலும் அதனின் இயக்கம் எப்படி இருக்கிறது?

மிளகாயில் காரம் ஜாஸ்தியாக இருக்கின்றது. அதற்குள் சிறிதளவு  “சப்...” என்று இருக்கும் மாவைப் போட்டவுனே மாவு காரமாகத்தான் இருக்கின்றது.

ஆனால் “சப்...” என்று இருக்கும் மாவு அதிகமாகி விட்டது என்றால் மிளகாயின் காரம் உள்ளுக்குள் மறைந்து காணாமல் போய்விடும். காரத்தின் வீரியத்தைக் குறைத்து விடுகின்றது.
1.மாவு அதிகமாக இருக்கும் போது
2.காரத்தைப் போட்டால் ருசியாக இருக்கின்றது.

இதைப் போலத் தான் நம்மிடம் நல்ல குணங்கள் இருப்பினும் “இப்படிச் செய்கின்றார்களே... இப்படிச் செய்கின்றார்களே...!” என்று அடுத்தவர்களின் குறைகளை எடுத்துக் கொண்டோம் என்றால் அது நல்ல குணத்திற்குள் சேர்ந்து சேர்ந்து நல்லது மறைந்து குறையான குணமாக வளர்ந்து விடும்.

அப்பொழுது நல்ல குணத்தால் உடலாக வளர்ந்த பூரிப்பான சதையும் கரையும். இது தான் அதர்வண வேதம் என்பது.
1.நாம் எதனை எடுத்து எதனை அதிகமாக்குகின்றோமோ
2.அதனின் வலு கொண்டு
3.மற்றதை அழிக்கின்றது.

மந்திரம் ஜெபிப்பவர்கள் இந்த மந்திரத்தை நீ 1008 தரம் ஜெபிக்க வேண்டும் 108 தரம் ஜெபிக்க வேண்டும் என்று சொல்லி அதற்கென்று சில முறைகள் வைத்து அந்த மந்திரங்களை உச்சாடணம் செய்யச் சொல்வார்கள்.

இவ்வாறு செய்து கொண்டே வந்தாய்...!” என்றால் உனக்குக் காளி வசியமாவாள். மாரி உனக்கு வசியமாவாள் என்றெல்லாம் சொல்வார்கள்.

நோயான நிலை எதைக் கேட்கின்றாயோ அது மாறி உனக்குள் வந்து எவ்வளவு தீமையை விளைய வைக்கின்றதோ அதைப் போன்று இதைச் சொல்லி மீண்டும் ஒருவருக்கு ஏவினாய் என்றால் அவர்கள் பூராமே கரைந்து போவார்கள்...!” என்றெல்லாம் அதர்வண வேதத்தில் காட்டுவார்கள்.

தான் எண்ணியபடி மற்றவர்கள் தன்னை வணங்கவில்லை... மதிக்கவில்லை..., என்றால் அந்த எதிரியை வீழ்த்திடும் நிலையாக அவனை அடிபணியச் செய்கின்றேன் என்று மந்திர ஒலிகளை வைத்து இவ்வாறெல்லாம் செய்வார்கள்.

பாலுக்குள் விஷம் பட்டவுடனே நல்ல சத்தை அடக்குவது போல
1.மனிதனுக்குள் விளைந்த நஞ்சின் உணர்வைக் கவர்ந்து
2."நான்" என்ற ஆணவத்தைக் காட்டி மற்றவரை வீழ்த்தத்தான்
3.இந்த மந்திர ஒலிகள் பயன்படுகின்றது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதல்லவா...!

ஏனென்றால் வியாசகர் கொடுத்த அதர்வண வேதத்தை அன்று ஆண்ட அரசர்கள் மந்திர ஒலிகளாக மாற்றி விட்டார்கள். இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.
1.மனித உடலில் விளைய வைத்த மந்திர ஒலிகள்
2.”நமக்குத் தேவையில்லை...!” உடலின் இச்சைக்குத்தான் வழி வகுக்கும்.

வியாசகர் சொன்னது வேதங்கள் என்றாலே “நாதங்கள்...” என்று பொருள். உணர்வின் ஒலிகள் - அந்த ஒலிகளின் உணர்வுக்கொப்ப ரூபங்கள் அடைந்தது என்பதைத் தான் காட்டினார். 


மகரிஷிகளின் அருள் சக்தியை உயிர் வழியாகச் சுவாசித்துப் பழக வேண்டும். மெய் ஒலி பெற்றால் மெய் ஞானம் பெறலாம். அதனின் ரூபமாக ஒளிச் சரீரம் பெறலாம்.