ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label UNIVERSE. Show all posts
Showing posts with label UNIVERSE. Show all posts

March 2, 2026

அகண்ட பேரண்டத்தின் உண்மை நிலைகள்

அகண்ட பேரண்டத்தின் உண்மை நிலைகள்


மற்ற சூரியக் குடும்பத்திலும் நம்மைப் போன்ற மனிதர்கள் வாழ்கின்றார்கள்.
1.நம்மைக் காட்டிலும் வளர்ச்சி இல்லாத மனிதர்களும் உண்டு வளர்ச்சி அடைந்தவர்களும் உண்டு.
2.இங்கே நமக்கு முடிண்டு முடி இல்லாது மொட்டைத் தலையாக உள்ளவர்களும் சூரியக் குடும்பங்களில் உண்டு.
 
நம் சூரியக் குடும்பத்தில் ஒரு பூமி இருக்கிறது என்றால் இரண்டு பூமி இருக்கக்கூடிய குடும்பங்களும் உண்டு. ஒன்று வளர்ச்சி உள்ளதாகவும் உண்டு சிலது வளர்ச்சி இல்லாததும் உண்டு. இரட்டைக் குழந்தை என்று சொல்கிறோம் அல்லவா அது போல…!
 
இதையெல்லாம் விரிவாக்கமாக குருநாதர் ஒரு நாள் காட்டுகின்றார்.
 
சூரியக் குடும்பத்திற்குள் எல்லா இடத்திற்கும் பயணம் செய்வது வருடக் கணக்காகும் என்று சொல்கின்றார்கள். அகண்ட நிலையில் 2000 சூரியக் குடும்பத்திற்கும் போக வேண்டுமென்றால் எப்படி இருக்கும்…?
 
2000 சூரியக் குடும்பம் என்பது அகண்ட அண்டமாக இருக்கிறது, இதைக் காட்டிலும் எத்தனையோ அண்டங்கள் இருக்கின்றது.
 
அதனுடைய விரிவடைந்த நிலைகளை நீங்கள் பார்க்கப் போனால் மனிதனுக்கு ஆயுள் பத்தாது. ஆயுள் பத்தாது என்று மட்டுமல்ல போகவும் முடியாது.
1.ஆனால் போக வேண்டும் என்றால் நம் குருநாதர் காட்டிய வழியில்
2.இந்த அருள் உணர்வுகளைப் பெற்றால் அதுபாட்டுக்குப் போய்க் கொண்டே இருக்கும்.
 
வான்வெளியில் நட்சத்திரங்களாக நம் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் 2000 சூரியக் குடும்பத்தின் ஈர்ப்பில் உள்ளது தான்.
 
நம் சூரியனைக் காட்டிலும் வலுவடைந்த பெரிய அளவில் உள்ள சூரியனும் சில பிரபஞ்சத்தில் இருக்கின்றது. ஒரே அளவாக இல்லை.
 
நீங்கள் ஒரு சமயம் இதையெல்லாம் பார்க்க நேர்ந்தால்
1.இரவிலே படுத்திருக்கும் பொழுது உங்களை மேலே அழைத்துச் செல்லும்.
2.எந்த உணர்வு பதிவானதோ ஆன்மாவிலே கலக்கும். பறப்பது போல் இருக்கும்.
 
ஒரு சிலர் பயந்து போய் எங்கேயோ போய் விடுவோமோ என்று எண்ணிப் பிடித்துக் கொண்டவர்களும் உண்டு. இதெல்லாம் வரும்.
 
ஏனென்றால் இந்த உணர்வுகள் இயக்கப்படும் போது
1.உங்கள் ஆன்மா அதனுடன் தொடர்பு கொண்டு வட்டமிடும்.
2.அதனுடைய உணர்வுகள் அறிவாக இங்கே உங்களுக்குள் வளரும்.
3.ஒரு விழுது பாய்ந்து தான் தாவர இனங்களுக்குள் வளர்ச்சி அடைகிறது
4.அது போல் அகண்ட அண்ட்த்துடன் நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்
 
நீங்கள் இரவிலே கனவு காண்கிறீர்கள் என்றாலும் மற்ற மனிதர்கள் உடலிலிருந்து வரக்கூடியது… மற்றவர் சொல்லும் பொழுது அதைக் கேட்டிருந்தால் இரவில் உயிரிலே படும்.
 
இந்த உர்வு அங்கே அழைத்துச் செல்லும். எங்கேயோ இருக்கின்ற மாதிரி இருக்கும் பள்ளத்திலேயோ மேட்டிலேயோ மலை மீதோ எங்கெங்கோ செல்வதாகத் தெரியும்.
 
அந்தந்த பகுதியில் எந்தெந்த மனிதனுடைய உணர்வு விளைந்து அந்த நினைவாற்றல் இருந்ததோ அப்படி இயக்கப்பட்டு கனவுகளாக வருவதும் உண்டு.
 
இது எப்படியோ அப்படித்தான்…
1.அந்த அருள் ஞானிகள் உணர்வுகள் உங்களுக்குள் விளையப்படும் போது
2.அது உங்களை அங்கே அவர்கள் வாழும் எல்லைகளுக்கு அழைத்துச் செல்லும்…!

October 12, 2024

கிரகணம்

கிரகணம்


மண்டலத்தில் ஜீவன் தோன்றி வாழ்ந்திடும் கால நிலைக்கு இச்சக்திகள் உருப்பெறவே பல கோடி ஆண்டுகள் ஆகி விடுகின்றன.
 
இஜ்ஜீவராசிகள் ஊரும் பக்குவம் எம் மண்டலத்தில் தோன்றியதோ அம்மண்டலத்தின் வளர்ச்சியுடனே இதே நிலையில் தான் பல ஆயிரம் கோடி ஆண்டுகளானாலும் சுழன்று கொண்டே இருக்கும்.
 
இம்மண்டலத்துடன் இதன் ஈர்ப்பு சக்தியின் அமில சக்தி கூடும் நிலையில் தான் இம்மண்டலத்தில் வளர்ந்திடும் மற்ற சக்திகளும் கூடுகின்றன.
 
இந்நிலையில் சுழலும் மண்டலத்திற்கு மாறிக் கிடைக்கும் சக்தி எப்பொழுது எல்லாம் ஏற்படுகின்றது…?
 
இன்று நம் சூரியனைச் சுற்றிச் சுழன்றிடும் 48 மண்டலமுமே சூரியனைச் சுற்றிவரச் சில காலங்கள் கொள்கின்றன. இந்நிலையில் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் என்றெல்லாம் சூரியனைச் சுற்றி வரும் இக்கோளங்கள் சூரியனுக்கும் நம் பூமிக்கும் மத்தியில் ஓடும் பொழுது குறுக்கே வருகின்றது.
 
அந்தச் சமயத்தில்
1.சூரியனின் ஒளிக்கதிர் வீச்சுகள் நம் பூமிக்கு நேராய்த் தாக்கிடாமல்
2.சூரியனைத் தாண்டி எக்கோளம் செல்கின்றதோ அந்தக் கால நிலைக்கொப்ப
3.நம் பூமிக்கு எப்பொழுதும் கிடைத்திடும் ஒளி அலையின் மாற்றத்தினால்
4.சூரியனைத் தாண்டிச் செல்லும் அக்கோளத்தின் மறைப்பினால்
5.நம் பூமிக்கும் சூரியனுக்கும் இடைபட்டுள்ள பால்வெளி மண்டலத்தில் கலந்துள்ள இவ்வொளி அலைகளை
6.இரவில் உள்ள நிலை போல் குளிர்ச்சி கொண்டு மேகங்களாய் கனம் பெற்று
7.எம்மண்டலம் தாண்டிச் செல்கிறதோ அதிலிருந்து வீசிடும் அணுக்களின் சக்தி நிலை கொண்டு
8.பூமியின் சக்தி நிலை இரண்டு நிமிடம் ஒரு நிமிடம் அக்காலக் கெடு நிலையிலேயே பூமியின் சக்தி நிலையிலும் மாற்றம் கொள்கின்றது…
 
நம் பூமிக்கு மட்டும் கிரகணம் பிடித்துத் தாக்கும் நிலை வருவது என்பதல்ல, எல்லா மண்டலங்களுக்குமே இந்நிலையின் தாக்குதலில் வளர்ச்சியும் உண்டுவீழ்ச்சியும் உண்டு…!”
 
ஒவ்வொரு மண்டலத்திலும் அது அது சேமித்த தனித்தனி சக்தி நிலை உண்டு.
 
1.ஒரு மண்டலத்தைத் தாண்டி ஒரு மண்டலம் செல்லும் நிலையிலும்
2.அது அது சேமித்து வளர்த்த அமில சக்தியின் ஈர்ப்பு மற்ற மண்டலத்தின் செயலுடன் தாக்கும் நிலையிலும்
3.ஒவ்வொரு மண்டலத்திற்குமே பல காலங்கள் ஒரு நிலையில் சேமித்த சக்தியின் தன்மை
4.இம்மண்டலங்களின் சுழற்சியில் ஒன்றைத் தாண்டி ஒன்று செல்லும் நிலையில் அது நிமிடக் கணக்காய் இருந்திட்டாலும்
5.அதன் ஈர்ப்பில் இதன் ஈர்ப்பின் நிலையும் மோதுண்ட நிலையில்
6.இவ்விரண்டிற்கும் இடைப்பட்டுள்ள பால்வெளி மண்டலத்திலும் அதன் அமிலத்தன்மை மாறு கொள்கின்றது.
7.அதிலிருந்து ஒவ்வொரு மண்டலத்திற்குமே அதனுடைய இயற்கைக் குணத்தில் சில மாற்றங்கள் வருகின்றன.
 
சூரியனைத் தாண்டி ஓடும் மற்ற மண்டலம் சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட நிலையில் தாண்டி ஓடும் சக்தியினால் எம்மண்டலம் சூரியனைத் தாண்டி ஓடுகின்றதோ அம்மண்டலத்தின் குண நிலை கொண்ட இயற்கை நிலையின் தாக்குதல் நம் பூமிக்கு ஏற்பட்ட அதிலிருந்து இயற்கையிலேயே நற் சக்திகளும் வளர்கின்றன… பல தீய அணுக்களும் வளர்கின்றன.

October 7, 2024

பூமியில் உயிரணுக்களின் தோற்றம் எங்கிருந்து வந்தது…?

பூமியில் உயிரணுக்களின் தோற்றம் எங்கிருந்து வந்தது…?


இப்பாட நிலைக்கொப்ப இந்நிலையில் உணர்த்தி வரும் இம்மண்டலங்களின் சக்தி நிலையும் இன்றுள்ள இம்மண்டலங்களின் சுழற்சியின் வேகத்தைக் காட்டிலும் இப்பூமியின் சுழற்சி சக்தி அதிகபப்டுவதாகவும் இந்நிலை ஒத்தே மற்ற மண்டலங்களின் துரித நிலையும் அதனதன் விகித நிலைப்படி அதிகப்படுவதாக உணர்த்தியுள்ளேன்.
 
இன்று இப்பூமியின் ஈர்ப்பு சக்தி நிலையும் ஓட்ட நிலையும் இந்த 24 மணி நேரம் 18 மணிக்கணக்கில் வரும் நிலையில் இன்று இப்பூமியில் திடப்பொருளாய் உள்ளவற்றின் நிலை எல்லாம் எந்நிலையில் செயல்படும்…?
 
இன்றுள்ள மலைகளும் நீர் நிலைகளும் இயற்கை சக்திகள் அனைத்துமே இப்பூமியின் அசைவின் தொடர்நிலை கொண்டு மாற்றம் கொள்ளப் போகின்றன. அந்நிலையில்
1.இப்பூமியில் இவ்வசைவின்போது ஏற்படும் இயற்கையின் தாக்குதலின் நிலையில்லாமல் தப்பிவிடும் பூமியில் வாழ்ந்திடும் உயிரினங்களின் நிலையும்
2.இப்பூமியின் சுவாச சக்தியே மாறு கொண்ட பிறகு தப்பி வாழ்ந்திடும் ஜீவராசிகளின் சுவாசத்தின் நிலையும் மாறு கொள்வதால்
3.இவ் இயற்கையில் இருந்து தப்பிடும் எந்த ஜீவராசிகளும் பல காலங்கள் வாழ்ந்திட முடிந்திடாது.
4.ஆக… இப்பூமியின் இயற்கை சக்தியே மாற்றம் கொள்ளப் போகின்றது.
 
இப்பூமியில் இப்பூமி தோன்றிய நாள் தொட்டே உதித்த உயிரணுக்கள் எவையுமே உயிரணு அழிந்திடாது மாற்றம் தான் பிம்ப நிலையில் மாறும் என்று உணர்த்தியுள்ளேன்.
 
அதே சமயத்தில் இப்பூமியில் தோன்றிஇப்பூமியின் சுவாசத்தையே சுவாசித்துப் பழக்கப்பட்ட எவ்வுயிராத்மாவும் இப்பூமியில் இருந்து மற்ற மண்டலத்திற்கு மாறு கொண்ட சுவாச நிலையில் சென்று வாழ்ந்திட முடியாது என்றும் உணர்த்தியுள்ளேன்.
 
இக்கலி மாறி கல்கியில் சுவாச நிலை மாறிக்கொண்ட இப்பூமியில் கலியின் காலம் வரை வந்திட்ட உயிர் ஆத்மாக்களின் பிறப்பிடம் எதுவாய் இருந்திடும்…?
 
இக்கேள்வியின் நிலை இந்நிலையிலேயே இருந்திடட்டும்.
 
1.நம் பூமிக்கு உயிரணுக்கள் தோன்றி உயிராத்மாவாய் அறிவு நிலை பெற்ற மனிதர்களாய் வாழும் சக்தி எந்நிலையில் வந்திட்டது…?
2.இன்று நம் சந்திரனின் நிலை என்ன…?
3.நம் பூமியில் மனித உயிரணுக்கள் தோன்றிடும் வித்து எங்கிருந்து ஆரம்பித்தது…?
 
நம் சூரியனின் ஈர்ப்புடன் கூடிய 48 மண்டலங்களில் நம் பூமியைக் காட்டிலும் வியாழன் மண்டலத்தின் அளவு விகித நிலை அதிகம்.
 
ஆனால் இன்று வியாழன் மண்டலத்தின் சக்தி நிலை கூடியிருந்தாலும் உயிராத்மா பிம்ப நிலை கொண்ட மனித இனங்களில் இல்லை. அங்கும் இன்றும் உயிரணுக்களுண்டு. நம் பூமியைக் காட்டிலும் செழிப்பும் பல நிலைகொண்ட கனி வளங்கள் அனைத்தும் உண்டு.
 
ஆனால் நம் பூமி இன்றுள்ள மனித ஆத்மாக்களை வளர்க்கும் நிலை நம்மை விட சக்தி கொண்ட வியாழனிலும் இல்லை. ஆனால் நம் பூமிக்கு உயிராத்மாவின் நிலைபெறும் சக்தி வியாழனிலிருந்து தான் வந்தது.
 
1.ஒரு கோடி இரண்டு கோடி நிலையிலல்ல பல கோடி ஆண்டுகளுக்கு முன்
2.நம் நிலைக்கொப்ப அறிவு நிலைப்பட்டு வாழ்ந்த ஆத்மாக்களைக் கொண்ட மண்டலம்தான் வியாழன் மண்டலம்.
 
இன்று நம் அறிவின் வளர்ச்சியில் மற்ற மண்டலத்திற்குச் செல்லும் ஆசை நிலையின் செயற்கை நிலைக்கொப்ப நம் பூமியிலிருந்து சந்திரன் செவ்வாய் இப்படியுள்ள மண்டலங்களுக்கு ஏவுகணையின் மூலமாய்ச் சென்ற ஆத்மாக்களின் சுவாச நிலை அங்கு இவர்கள் இருந்து வாழாவிட்டாலும் இவர்கள் விட்டு வந்த சுவாச நிலையின் சக்தியிலிருந்து தோன்றிடும் உயிரணுக்களின் வளர்ச்சி நிலையில் வித்திட்டு வந்துள்ளார்கள்.
 
அந்நிலை போன்றே
1.பல கோடி ஆண்டுகளுக்கு முன் வியாழனில் தோன்றிய உயிராத்மாக்கள் நம் பூமிக்கு வந்து சென்ற நிலையினால்
2.நம் பூமியில் உயிராத்மாக்களின் தொடர்நிலை கொண்டது.
3.இங்கு எப்படி இக்கலியில் ஏற்படும் பிரளயத்தைச் செப்புகின்றோமோ அந்நிலை போன்றே
3.அன்று வியாழனில் ஏற்பட்ட பிரளையத்தினால் நம் பூமிக்கு உயிராத்மாக்கள் தோன்றும் நிலை வந்தது.
 
வரப்போகும் இப்பிரளய நிலையினால் நம் பூமியின் விகித அளவு நிலை கூடுவதைப் போல் சந்திரனின் நிலையும் கூடப்போகின்றது.
 
இன்று சந்திரனில் நம் பூமியைப் போல் மழையும் இங்குள்ள காலை பகல் இரவு என்று சூரியனின் ஒளி வீச்சில் கிடைத்திடும் மாற்ற நிலை அங்கில்லை.
 
சந்திரனில் சூரியனின் ஒளிக்கதிர் வீச்சின் நிலை ஒரே நிலையில் ஒளி பாய்ச்சிடும் சக்தி நிலையாய்ச் சுழற்சி கொண்டு இம்மூன்று குமிழ் நிலை கொண்ட சக்தியில் சந்திரனின் நிலை உள்ளதினால் மையப் பகுதியில் உள்ள இப்பள்ளத்தின் நிலையினால் ஒரே நிலையில் சூரியனின் அணுவீச்சுகள் இருந்தாலும் மையப் பகுதியின் பள்ளத்தினால் சந்திரனின் நிலை சிதறாமல் சுழன்று கொண்டுள்ளது.
 
இக்கலியின் மாற்றத்தில் சந்திரனின் நிலையென்ன…? என்பதனை அடுத்து விளக்கிடுவேன்.

September 27, 2024

மண்டலங்களுக்கு “உயிர் நாடியே” பால்வெளி மண்டலம் தான்

மண்டலங்களுக்கு “உயிர் நாடியே” பால்வெளி மண்டலம் தான்


பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில சக்தியின் அமில சக்தி மட்டுமல்ல ஜீவசக்தியினால் உராயும் நிலை கொண்டு தான் ஒவ்வொரு கோங்களுமே செல்கின்றது.
 
ஒவ்வொரு கோளமும்
1.தான் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தின் நிலை இப்பால்வெளி மண்டலத்துடன் மோதுண்டவுடன் தான் ஒலி பிறக்கின்றது
2.இவ் ஒலியினால் தான் ஒவ்வொரு மண்டலமும் சுழல்கின்றது.
 
பால்வெளி மண்டலமாக ஜீவனுடன் உள்ள வான மண்டலத்தையே நாம் பந்த வெளியாகக் காணுகின்றோம். இப்பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள இவ்வமில சக்தியே அனைத்து மண்டலங்களுக்கும் உயிர் நாடி...”
 
இப் பூமியிலிருந்து நாம் காணும் பால்வெளி மண்டலமான இவ்வாண மண்டலத்தில்
1.படர்ந்த மேகக் கூட்டங்கள் ஓடுவதைப் போல் காண்கின்றோம்.
2.மேகக் கூட்டங்கள் மட்டும் ஓடவில்லை… நாமும் தான் ஓடுகின்றோம்
3.அனைத்து மண்டலங்களும்தான் ஒரு நிலையில் நிலைத்து நில்லாமல் ஓடிக்கொண்டே உள்ளன.
 
இப்பூமி சுழலும் வேகத்தைப் பொறுத்து பூமியில் நடக்கும் சீதோஷ்ண நிலைகள் உள்ளன. பூமியிலேயே பல பாகங்களில் பல சீதோஷ்ண நிலை கலந்துள்ளது.
 
இப்பூமியிலிருந்து மற்ற மண்டலங்களில் உள்ள நிலை அறிய நம் சக்தியைச் செயலாற்றுகின்றோம். இப்பூமியிலேயே பூமியின் பூமத்திய ரேகையான மையப் பகுதியில் உள்ள நிலை என்ன…?
 
இப் பூமியில் பூமி சுழலும் 24 மணி நேரக் கணக்கு விகிதப்படி ஒரு நாளையும் இரவு பகல் நிலை ஒவ்வொரு பாகத்திலும் ஏற்படும் நிலை எல்லாம் இப் பூமி சுழலும் வேகத்தையும் அங்கங்கு உள்ள நிலையையும் அறிகின்றோம்.
 
ஆனால் இப்பூமியின் மையப் பகுதியில் என்றுமே சூரியனின் நேர் ஒளிக் கதிர்கள் தாக்குவதில்லை என்பதனை அறிந்துள்ளோமா…?
 
இப்பூமத்திய ரேகையின் மையத்திற்கு சற்றுத் தள்ளிய இடத்தில் தான் பகலும் இரவும் சில காலங்கள் மாறி மாறி வருகின்றன. மையப் பகுதி என்றுமே இருண்ட நிலை தான்.
 
1.ஆனால் அம்மையத்தினால் தான் இப் பூமியில் நிறைந்துள்ள கடலின் நீர் நிலைகள் எல்லாம் உள்ளது.
2.இப்பூமி சுழலும் வேகத்தில் மற்ற இடத்தில் படும் இவ்வொளிக் கதிரின் அமில சக்தியின் நிலையை
3.இம்மையப் பகுதி ஈர்த்துப் டிவங்களாக பாறையைப் போன்று அடர்ந்து பதிந்துள்ளன.
 
இச்சூழலும் நிலையிலேயே மென்மேலும் ஈர்த்து அப்டிவங்களுடன் அவ்வமில நிலை வளர்ந்து கொண்டே உள்ளன.
 
ந்நிலையில் உப்பு அமில சக்திப் படிவங்கள் வளர்ச்சி கொண்டுள்ளனவோ அந்நிலை போன்ற விகிதத்திலேயே இப்பூமி சுழலும் வேகத்தில் பால்வெளி மண்டலங்களில் நிறைந்துள்ள அமில சக்தி மோதுண்டு உருகும் நிலையில்
1.ஆவியான உப்புக் கலந்த நீராக வடிகொண்டு தான்
2.இன்று கடலாக வற்றாத நிலையில் பொங்கிக் கொண்டுள்ளது.
 
இப்பூமத்திய ரேகையின் சிறிது தள்ளி உள்ள நிலையில் சில காலம் ஒளியும் இருட்டும் உள்ள நிலைப்படுத்தித் தான் அந்நிலையின் தொடர்பு நிலை கொண்ட பூமிகளில் உள்ள கடலில் நீர்நிலை பொங்கி வருவதைக் கண்டிடுவீர்.
 
இவ்வுப்புக் கலந்த அமிலத்தின் படிவத்தில் இருந்து உற்பத்தியாகி வருவதுவே கடல் நீர் உப்புக் கரிக்கும் நிலை.
 
ஆனால் கடற்கரை ஓரங்களில் மற்ற கிணறுகளில் உள்ள நீரெல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியுடன் இப் பூமியின் நிலைக்கொப்ப சுவை தருகின்றது.
 
இன்று கடலாகப் பொங்கி உள்ள இடத்திலேயே இக்கடல் நீரின் மட்டத்திற்கு கீழ் அப்பூமியின் நிலையில் இருந்து தோண்டி எடுக்கும் நீரின் சுவை இக்கடல் நீரின் சுவைக்கு மாறு கொண்டதாகத்தான் இருந்திடும்.
 
நம் பூமியின் இயற்கைச் சக்தியின் தெய்வமான சூரியனின் சக்தியிலிருந்து பல சக்தியை நாம் நேராகவும் மற்ற மண்டலத்தில் மோதி ம் மண்டலத்திலிருந்தும் ஒன்றின் துணையுடன் ஒன்றாகச் செயல்படவே இப்பால்வெளி மண்டலத்தின் சக்தியின் துணையினால் செயல் கொண்டுள்ளோம்…”
 
இவ்இயற்கையின் ஒவ்வொரு நிலையையும் உணர்ந்திட்டால்
1.அவ்வாண்டவனின் சக்தி நிலை ஒன்றுடன் ஒன்று செயல்படும் நிலையை அறிந்திட்டால்
2.அவ்வாண்டவன் என்ற சக்தியே தனித்து இல்லாமல் செயல்படுவதாக உணர்கின்றோம்.
3.அனைத்து சக்தியுமே ஒன்றுடன் ஒன்று கலந்து சக்தியாகத்தான் அவ்வாண்டவனின் சக்தி உள்ளது
 
ஒரே சக்தியான நிறைந்த தனித்த சக்தி அச்சக்தியின் கலந்த சக்தி தான் நம் அனைத்து சக்தியுமே…”

September 18, 2024

சித்தர்கள் கடும் தவமிருந்த “மண்டலக் கணக்கு”

சித்தர்கள் கடும் தவமிருந்த “மண்டலக் கணக்கு”


நம் முன்னோர்கள் ஜெபித்த நிலை பூஜை முறை எல்லாமே அன்று இருந்த சித்தர்களின் ஜெப நிலையில் இருந்து அறிந்து வெளியிட்ட சக்தி நிலைகளை வைத்துத் தான் நம் முன்னோர்கள் ஆண்டவனை நாம் ஜெபிப்பதற்குக் கோவில்கள் பூஜை முறை என்று பல வழிகளை நமக்கு உணர்த்தினார்கள்.
1.48 மண்டலங்களின் தொடர்புடைய இப்பூமியின் ஈர்ப்பு நிலையை உணர்ந்து
2.48 மண்டலங்களில் இருந்து நாம் பெறும் சக்தி நிலையை வைத்துத்தான் இப்பூமியின் நிலை உள்ளது.
 
இப்பூமியில் தோன்றியுள்ள உயிரினங்களும் மனித உடல் பெற்ற இவ்வாத்மாக்களும் இப்பூமியில் உள்ளதைப் போல் இப்பூமியைச் சுற்றியுள்ள மண்டலங்களின் தன்மையில் மாறுபட்டுள்ளது.
 
இம்மனித ஜீவாத்மாக்கள் இந்த 48 மண்டலங்களிலும் இல்லை. இந்த 48 மண்டலங்களின் சக்தி கொண்டு தான் பூமியில் உள்ள மனிதர்களின் நிலை எல்லாம் உள்ளன.
 
இப் பூமியின் நிலையே இக்கலி முடிந்து கல்கி வந்த பிறகு பெறக்கூடிய உயிர் நிலைகளின் உருவ அமைப்புகள் மாறுபட்ட தன்மையில் தான் புதிய உயிரணுக்கள் எல்லாம் தோன்றும் நிலையில் உள்ளது.
 
1.மனிதன் பெண் ஆண் என்ற இன வேறுபாட்டுடன் வாழும் தன்மையில் இன்றுள்ள நிலை
2.அடுத்து வரும் கல்கி நிலையில் மாறுபட்ட நிலையில் தான் வருகின்றது.
3.வரும் உண்மைகளை இன்றே நாம் பகர்ந்து விட்டால் பல சித்தர்களின் கோபத்திற்கு ஆளாகும் நிலை நமக்கு எதற்கு…?
 
இந்நூலில் நாம் அறிந்த பல உண்மைகளை சிறுக சிறுகத்தான் அருளி உள்ளோம். இந்நிலையில் இன்னும் பல உண்மை நிலைகள் உள்ளன. அவரவர் எடுக்கும் ஜெப நிலையை கொண்டு அறிந்திடலாம்.
 
அனைத்தையுமே. ஒரு மண்டலம் - 48 நாள் என்ற ஜெப நிலையை நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்தியதும்
1.நமக்கு முதலில் இருந்த சித்தர்கள் கடும் தவம் இருந்த நிலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டலத்தின் சக்தியை ஈர்த்தெடுத்து
2.ஒரு மண்டலம் என்ற 48 நாளை ஜெபத்திற்கு உகந்ததாக எடுத்து ஜெபம் பெற்று அறிந்தனர் பல உண்மைகளை.
4.அதன் வழியில் வந்தது தான் இன்று ஒரு மண்டலம் 48 நாள் என்னும் முறையயெல்லாம்.
 
நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்திய பல முறைகளை நாம் ஊன்றிப் பார்த்தால் ஒவ்வொன்றின் உண்மை நிலையும் நமக்கு புரிந்துவிடும்
 
நம் கண்ணிற்கு நாம் சாதாரணமாகப் பார்க்கும் பொழுது கணக்கில் அடங்க நட்சத்திரங்களைக் காணுகின்றோம். புள்ளி போல் நாம் காணும் நட்சத்திரங்கள் எல்லாம் நாம் வாழும் பூமியை காட்டிலும் பல மடங்கு பெரிய மண்டலமாகச் சுற்றி வாழ்கின்றன.
 
1.இம் மண்டலங்களில் பல மண்டலங்களில் நம்மை ஒத்த இம்ம மனித உடலை பெற்ற ஜீவாத்மாக்களும் உள்ளன.
2.நம்மைக் காட்டிலும் திறம் பெற்ற ஜீவாத்மாக்களும் உள்ளன பல மண்டலங்களில்.
 
ஆனால் நம் பூமியைச் சுற்றியுள்ள நாம் காணும் சூரியனிலிருந்து இந்த 48 மண்டலங்களிலுமே நம்மை ஒத்த மனித உடல் கொண்ட ஜீவாத்மாக்கள் இல்லை.
 
நம் சூரியனைக் காட்டிலும் இன்னும் வேகமாகச் சுழலும் பல சூரிய மண்டலங்கள் உள்ளன. இவ்வுலகிலே நாம் இப்பிறவி எடுத்து வாழும் பாக்கியத்தை ஜெபம் பெற்று எண்ணத்தையும் நினைவையும் என்றும் நாம் பெற்ற சக்தியை அழியாச் சக்தி ஆக்கி
1.இக்கலி எனும் காலத்தில் மீண்டும் கல்கியுடன் கலந்து வாழும் பக்குவ நிலைக்கு
2.நம்மை நாம் பக்குவப்படுத்தும் நிலைக்கு வந்திடவே
3.இப்பாட நிலைக்கு ஈஸ்வரபட்டனாகிய நான் ஆசை என்னும் நிலை கொண்டே இந்நிலையில் வந்து அருளியுள்ளேன்.
4.ஒவ்வொருவரும் கால நிலையை கடத்திடாமல் அருள் பெறுங்கள்
 
இவ்வுலகில் பல நிலைகளை இன்னும் உங்களுக்கு விளக்குவேன்.

September 12, 2024

மற்ற சூரியக் குடும்பத்தின் வளர்ச்சியைக் காட்டிலும் மேலான வளர்ச்சியாக நாம் வளர்ந்து காட்டிடல் வேண்டும்

மற்ற சூரியக் குடும்பத்தின் வளர்ச்சியைக் காட்டிலும் மேலான வளர்ச்சியாக நாம் வளர்ந்து காட்டிடல் வேண்டும்

 
சூரியனின் சக்தியை மட்டும் நாம் பெறவில்லை நமக்கு சூரியன் பல மண்டலங்களின் சக்தியை ஈர்த்து எடுத்து அளிக்கின்றது. நம் பூமியின் நிலையின் சக்தியும் நம் பூமியைப் போல் உள்ள மற்ற பூமி ஈர்த்து எடுத்துச் சுழல்கின்றது.
 
அச்சூரியனிலிருந்து ஒளிக்கதிர்களை நாம் பெறும் பொழுதே பல உயிரணுக்களை பல சக்தி நிலையை நாம் பெற்றுக் கொண்டே உள்ளோம். சூரியனைக் காணும் நாம் அச்சூரியனின் உள் நிலையை உணர்ந்து வாழும் தன்மையை பெற்றிடலாம் நாம் எடுக்கும் ஜெப அருளைக் கொண்டு.
 
சூரியனைச் சுற்றி உள்ள ஒளிக்கதிர்களைப் பெரும் உஷ்ணமாகக்க்கும் நிலையில் உள்ளது என்று எண்ணுகின்றோம். மற்ற மண்டலங்களில் இருந்து வரும் ஒளியின் தன்மையும் சூரியனின் ஒளிக்கதிர்களும் இச்சூரியன் சுற்றும் வேகத்தைக் கொண்டு இச்சூரியன் மேல் ஒளிக்கதிர்கள் பட்டு அச்சக்தியைத் தன்னுள் ஈர்த்து அச்சூரியன் நமக்கு ஒளி தருகின்றது.
 
ளிக்கதிர்கள் வந்து இப்பூமியில் படர்கிறது.
1.அவ்வொளிக் கதிர்களிலே பல வித நிலை கொண்ட கதிர்கள் உள்ளன.
2.ஒவ்வொரு மண்டலங்களைப் பொறுத்தும் ஒவ்வொரு வித ஒளிக் கதிர்கள் அச்சூரியனில் பட்டு இப்பூமியை வந்து தாக்குகின்றன.
3.ஒரே நிலையான காற்றும் ஒளியும் படர்வதாக நாம் எண்ணுகின்றோம்.
4.அவ்வொளிதனிலே பல விதத் தாதுப் பொருட்களை அளிக்கும் தன்மை உள்ள ஒளிக்கதிர்கள் உள்ளன.
 
இப்பூமியில் வளரும் தாதுப் பொருள்கள் எல்லாம் அவ்வொளியிலிருந்து எந்த நிலை கொண்ட தாதுப் பொருளை உடைய ஒளிக் கதிர்கள் இப்பூமியின் மேல் படர்கின்றனவோ அந்த நிலையில் உள்ள நீர்ச்சத்தைக் கொண்டு அந்நிலையில் அது வளரும் ஜீவன் பெற்று வளரும் தன்மை கொண்டே தான் இன்று நாம் தோண்டி எடுக்கும் பல வகை உலோகங்களும் வளரும் நிலைக்கு அவ்வுலோகம் வந்ததும் அந்நிலையில் உள்ள பூமியின் மேல் சூரிய ஒளியின் ஒளிக்கதிர்களில் இருந்து தத்தம் நிலைக்கு உகந்த ஒளிக்கதிர்களை ஈர்த்து தன்னைத்தானே வளர்க்கும் தன்மைக்கு உலோகங்களின் நிலை எல்லாம் உள்ளது.
 
இம்மண்டலங்களிலே ஜீவன் இல்லாத மண்டலங்களும் உயிர் சக்தி இல்லாத மண்டலங்களும் எதுவுமே இல்லை. ஜீவன் பெற்றே ஜீவனுடனே ஆண்டவன் என்ற ஆண்டவன்கள் தாம் எல்லாமே.
 
ஒவ்வொரு மண்டலமும் தத்தம் ஈர்ப்பு நிலைக்கு ஏற்பத் தமக்குள் பல வகை நிலை கொண்ட உலோகத்தன்மையை ஈர்த்து வளர்த்து வாழுகின்றது.
 
1.இம்மண்டலத்தில் உள்ள நிலை கொண்ட உலோகங்கள் பிற மண்டலத்தில் மாறுபட்ட தன்மையில் உள்ளன.
2.இம்மண்டலத்தில் நாம் காணும் வண்ணங்கள் பிற மண்டலத்தில் மாறுபடும் தன்மையில் உள்ளன.
3.அம்மண்டலத்திற்குச் சென்று பார்த்தால் தான் அம்மண்டலத்தின் அழகைக் கண்டிடலாம்.
4.அழகுடனே மணத்துடனே சுழல்கின்றன எல்லா மண்டலங்களுமே.
 
வாழும் வாழ்க்கையை அன்புடனும் அழகுடனும் அறிவுடனும் மகரிஷிகளின் சக்தி பெற்று வாழ்ந்திடும் நாம் கால நிலையை வீண் விரயம் செய்திடாமல்
1.நமக்கு மேல் உள்ள பல மண்டலங்களில் வாழ்ந்திடும் உயிரணுக்களுக்கு மேல் சக்தி பெற்று வாழும் தன்மைக்கு நம்மை நாம் பக்குவப்படுத்தி
2.இக்காற்றுடன் கலந்துள்ள அச்சூரியனின் ஒளி கதிர்களிலிருந்து நாம் நம் சுவாச நிலைக்கு உகந்த சக்தி கொண்ட ஒளிக்கதிர்களை ஈர்த்தெடுத்து
3.இவ் உடலைப் பெரும் பொக்கிஷமாக வைரமாக்கி வாழ்ந்திடும் தன்மை கொண்டே
4.நம் உயிராத்மாவை நமக்குகந்த எல்லா சக்தி நிலைகளும் பெறும் தன்மைக்கு
5.நம் எண்ணமும் சுவாசமும் எடுக்கும் தன்மையை நாம் பெற்று வாழ்ந்திட வேண்டும்.

June 20, 2024

பால்வெளி மண்டலம் எனும் பொக்கிஷம் – MILKY WAY

பால்வெளி மண்டலம் எனும் பொக்கிஷம் – MILKY WAY

 

பூமி எப்படித் தன்னுள் இப்பால்வெளி மண்டலத்திலிருந்து அச்சூரியனின் ஒளிக்கதிரினால் வந்துள்ள அணுக்கதிர்களைத் தனதாக ஈர்த்துப் பல கனி வளங்களை வளர்க்கின்றதோ… அந்நிலை போல் இந்தப் பூமி எனும் மண்டலத்தில் “நம் ஆத்ம மண்டலம் எச்சக்தியையும் கண்டுணர முடியும்...”

இந்தப் பூமியில் சூரியனின் ஒளிக்கதிர் பட்டு இந்தப் பூமியும் நாமும் மட்டும் பயன் பெறவில்லை. இந்தப் பூமிக்கும் மற்ற எல்லா மண்டலங்களுக்கும் பொதுவான இந்தப் பால்வெளி மண்டலத்தில் உள்ள சக்தி நிலையை யார் அறிவார்…?

இந்தப் பால்வெளி மண்டலத்திலும் பல கோடி உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்ந்து அந்த நிலையிலேயே மாற்று உடல் பெற்றுப் பல நிலைகள் நடக்கின்றன.

இந்தப் பால்வெளி மண்டலத்தில் பல அமில சக்திகள் நிறைந்தே திரவ நிலையில் படர்ந்துள்ளன. இன்றைய நம் விஞ்ஞானிகள் அதை உணர்ந்தாலும் அந்தத் திரவங்களையும் நம் பூமிக்கு ஈர்த்து எடுத்திடும் நிலைப்படுத்தி அந்த இயற்கையின் சக்தியையே தன் செயற்கையின் அழிவுக்குச் செயல்படுத்தி விடுவார்கள்.

இன்னும் இந்த வான் மண்டலத்தில் எண்ணிலடங்காத சக்தி நிலைகள் படர்ந்துள்ளன.
1.நாம் காணும் நிலைக்கு மேகங்களும் பால் வெளி மண்டலமாகவும் காட்சி அளித்திடும் இந்த பால்வெளி மண்டலத்தினால் தான்
2.அனைத்துக் கோளங்களுமே ஜீவன் கொண்டு சுழன்று கொண்டிருக்கின்றன.

பூமியும் சூரியனும் சந்திரனும் மற்ற எல்லா மண்டலமுமே
1.தன் நிலையில் ஒரே இடத்தில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுள்ளது என்பது அல்ல.
2.சுழன்று கொண்டே ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று சிக்காத வண்ணம் சுற்றிக் கொண்டே ஓடுகின்றன.

புதிய புதிய நட்சத்திர மண்டலங்களைக் காணுகின்றோம். ஆனால் தொடர்பு கொண்டு என்றும் காணும் நட்சத்திர மண்டலங்கள் இந்தப் பூமியின் ஈர்ப்பு சக்தி நிலை கொண்டும் இப்பூமியின் அமில சக்தியின் தொடர்பு கொண்ட நட்சத்திர மண்டலங்களாக வாழ்ந்திடும் மண்டலங்களும்
1.இந்தப் பூமியின் ஓட்டத்துடன் தன் ஈர்ப்பு சக்தியையும் ஒன்றுபடுத்தி உள்ளதால்
2.இந்தப் பூமியுடனே அவற்றின் நிலையும் சுழன்று அதன் ஈர்ப்புடனே வருகின்றன.

இப் புதிய நட்சத்திர மண்டலங்கள் தான் இப் பூமியின் ஓட்டத்தினால் அங்கங்குள்ள இந்தப் பால்வெளி மண்டலத்திலிருந்து “ஒன்றுபட்ட அமிலத்தினால்” சிறு சிறு நட்சத்திர மண்டலங்களாக ஆங்காங்கே சுழலும் நட்சத்திர மண்டலங்கள்.

இச்சுழலும் வேகத்தில் ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று சிக்குகின்றன. சில நட்சத்திர மண்டலங்கள் மாறு கொண்ட அமில சக்தி கலந்துள்ளதாக இருந்தால்… இந்த ஈர்ப்பில் வந்தடையாமல் அதன் நிலையே உருகும் நிலையாகப் பரந்த நிலைப்படுத்தி பிரிந்து விடுகின்றது.

இன்று காணும் நட்சத்திர மண்டலங்கள் யாவையுமே… இப் பூமியைப் போலவும் இவ் பூமியின் நிலைக்கொப்ப வளர்ந்த நிலை கொண்ட பெரிய மண்டலங்களின் நிலை போலவும் இல்லாமல் ஆவியான அமிலங்கள் ஒன்றுபட்டுக் கரையும் நிலை கொண்ட வடிவத்தில் தான் சுழன்று கொண்டுள்ளது பனிக்கட்டியைப் போல்.

பனிக்கட்டி என்பது குளிர்ந்து நீராகும் தன்மையில் உறைந்து உள்ளது. ஆனால் நட்சத்திர மண்டலங்களின் நிலை அதுவல்ல.

அமிலமாக அமிலத்தையே ஈர்த்து அமிலக் கோளங்களாக உயிரணுக்களை வளர்த்திடாமல் சுழன்று கொண்டுள்ளவை.

இந்த பூமியில் உள்ள எல்லா கனிவர்க்கங்களுமே கரைபவை தான்… ஆவி நிலை கொண்டவை தான் என்று ஏற்கனவே உணர்த்தி உள்ளேன்.

சூரியனிலிருந்து வரும் எல்லா நிலை கொண்ட அமிலத்தையும் ஈர்க்கும் நம் பூமியில் மண்ணும் கல்லும் ஈயம் பித்தளை செம்பு தங்கம் வைரம் இதற்கு மேல் சக்தி கொண்ட பல படிவங்களும் கலந்துள்ளன.

நட்சத்திர மண்டலத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலை கொண்ட அமிலத்தை ஈர்ப்பதினால்
1.நம் பூமியில் உள்ள பல நிலை கொண்ட கனி வர்க்கத்தின் நிலை போல் ஒவ்வொரு நிலை கொண்ட நட்சத்திர மண்டலங்கள் பல கோடி உள்ளன.
2.இன்றைய இந்தக் கலியில் தங்கத்திற்குப் பொருளாதாரச் செல்வமாக மதிப்புத் தந்திடும் நிலையில்
3.தங்கத்தையே ஒரு நிலை கொண்ட அமிலமாக ஈர்த்து… நட்சத்திர மண்டலமாக “பல கோடி சுற்றிக் கொண்டுள்ளது…”

இந்தப் பூமியின் கனிவளங்களின் சக்தி நிலை கொண்ட அமிலங்கள் எல்லாமே தனித்துப் பல நிலைகள் கொண்ட நட்சத்திர மண்டலங்களாகச் சுழன்று கொண்டுள்ளன.

இன்றைய மனிதன் விஞ்ஞானத்தினால் பெரிய கோளங்களின் நிலை அறிந்திடச் செல்கின்றான். இந்த சிறிய கோளமான நட்சத்திர மண்டலங்களின் சக்தி நிலையை அறியாததினால்…!

April 22, 2023

ஒரு பிரபஞ்சம் இயங்குவது போல் தான் ஒரு உடலுக்குள்ளும் இயக்கங்களாகிறது

நம் பிரபஞ்சத்தில் உள்ள இருபத்தியேழு நட்சத்திரங்கள் அவை வெளிப்படுத்தும் உணர்வலைகள் சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது மின்னல்களாக ஆகின்றது.

உதாரணமாக கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம், பால்வெளி மண்டலங்களாக அது மாற்றி வரப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதினால் மின்னலாக மாறுகின்றது.

“வியாழன் கோள்” அந்த 27 நட்சத்திரங்களுடைய சக்திகளையும் கவரும் திறன் பெற்றிருப்பதால் அது எல்லாவற்றையும் சமைத்து தன் ஈர்ப்பு வட்டத்திற்குள் அந்த மின் கதிர்கள் வந்தால் அந்த இரண்டையும் இணைத்து ஒரு அணுவாக மாற்றி விடுகின்றது.

“வெள்ளிக் கோள்” அந்த மின்னலில் இருந்து வெளிப்படும் ஒளிக் கற்றைகளை எடுத்துக் கொள்கின்றது

“செவ்வாய்க் கோள்” மோதலினால் ஏற்படும் நாதத்தின் அந்த ஒலியான உணர்வுகளைப் பிரித்து எடுத்துக் கொள்கின்றது.

“இராகு” மோதலிதனால் வெளி வரும் புகைகளை எடுத்துக் கொள்கின்றது.

“கேது” விஷமான உணர்வலைகளைக் கவர்ந்து கொள்கின்றது.

இதில் பிரிந்த வரும் ஆவித் தன்மைகளை “சனிக் கோள்” எடுத்து நீராக மாற்றிக் கொள்கிறது

“புதன் கோள்” அனைத்தையும் கவர்ந்து உலோகமாக மாற்றிக் கொள்கின்றது.

எல்லாவற்றையும் கலந்து “சூரியன்” ஏகமாக எடுக்கும் பொழுது அது பாதரசமாக மாற்றிக் கொள்கிறது.

இது தான் நம் பிரபஞ்சத்தின் இயக்கம்…!

இதே போன்றுதான் நமது உயிர் அது சூரியனாக இருக்கின்றது எதிர்நிலையான மனிதனுடைய உணர்வுகளை நுகரப்படும் போது அது நமக்குள் மோதலாகிறது (நட்சத்திரத்தின் சக்தி மோதி மின்னலாவது போல்)..

உதாரணமாக ஒரு மனிதன் வேதனைப்படுவதை நாம் பார்க்கின்றோம்… வேதனையை நுகர்கின்றோம்.
1.நம் ஆன்மா இங்கே “நட்சத்திரமாக” இருக்கின்றது
2.ஏனென்றால் மற்றவருடைய உணர்வுகளை அங்கே சேமித்து வைத்திருக்கின்றது
3.பால் வெளி மண்டலமாக அது அமைக்கின்றது.

அந்த வேதனைப்பட்ட உணர்வுகளை ஆன்மாவிலிருந்து நாம் நுகர்ந்து உயிரிலே பட்ட பின் இந்த உணர்ச்சிகள் நம் இரத்த நாளங்களிலே கலந்து இரத்தத்தின் வழி உடலுக்குள் சுழல்கின்றது.

பிரபஞ்சத்தில் உள்ள கேது விஷமான சத்தைக் கவர்வது போன்று
1.நம் உடலில் உள்ள பித்த சுரப்பிகள் விஷத்தை எடுத்துக் கொள்கின்றது
2.கல்லீரல் மண்ணீரல் இவையெல்லாம் இரத்தத்தில் இருந்து வருவதை அதன் உணர்வுகளுக்கொப்ப உணவு எடுத்து அந்த உறுப்புகள் உருவாகின்றது
3.நுரையீரலும் அதே மாதிரித் தான்.

சிறுநீரகங்கள் அந்த இரத்தத்தை வடிகட்டிய பின் அதிலிருந்து இதயத்திற்கு வருகிறது. இரத்தம் அதற்குள் சென்ற பின் எல்லா உறுப்புகளுக்கும் இரத்தத்தை அது பம்ப் செய்கிறது.

இரத்தங்களை நேரடியாக நம் சிறுமூளை பாகங்கள் வரைக்கும் அது கொண்டு செல்கின்றது
1.இந்த மூளையில் சந்திக்கும் இடங்களில் வாயுவாக மாறுகின்றது
2.வாயு நீராக மாறுகின்றது… அமிலமாக மாறுகின்றது…!

அதாவது நாம் எடுத்துக் (சுவாசிப்பது) கொண்ட உணர்வுகள் ஒரு வாயு என்ற நிலையில் இயக்கப்படுகின்றது எதன் உணர்வு இயக்கப்படுகின்றதோ அதிலிருந்து வரக்கூடிய ஆவியாக மாறுகின்றது. ஒரு பொருளை நாம் வேக வைத்த பின் எப்படி ஆவியாக மாறுகிறதோ அது போல்…!

ஆவியாக மாறியதை மேலே நீரை வைத்து குளிர்ச்சி அடையச் செய்தால் அது நீராக வடிகிறது. இதைப் போன்று தான்
1.சுவாசித்த உணர்வின் தன்மை தனக்குள் சேர்த்துக் கொண்ட பின் மேலே போட்டு அது அமிலமாக வடிகின்றது
2.நம் உடலுக்குள் இருக்கும் எல்லாவற்றுக்கும் இது இணையச் செய்கின்றது.

சுவாசித்தது உயிரிலே பட்ட பின் உடலுக்குள் செல்லும் நிலையில் இரத்தத்திலே கலந்து… இந்த இரத்தம் உடல் முழுவதும் சுழன்று வரப்படும் பொழுது எதெனதன் உணர்வோ அது அது எடுத்துத் தன்னை வளர்த்துக் கொள்கின்றது

பிரபஞ்சம் எப்படியோ அப்படித்தான் இந்த உடலான பிரபஞ்சமும்…!

July 10, 2019

அகண்ட அணடத்தின் சக்தியைக் கணவன் மனைவி பெறும் வழி


நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சினை நம் உடல் கழிவாகப் பிரித்து விட்டு நல்லதை...
1.நறுமணம் கொண்ட உணர்வாகவும்
2.நறுமணத்தை அறியும் அறிவாகவும்
3.நறுமணத்தை நுகரும் தன்மையாகவும்
4.நறுமணத்தின் உணர்வு கொண்டு நற்செயலைச் செயல்படுத்தும் உணர்வாகவும் உடல் மாற்றுகின்றது.
5.உடலின் மணங்கள் இவ்வாறு இயக்குகின்றது

ஆனால் மற்ற உயினங்கள் விஷத்தின் தன்மையைத் தனக்குள் சேர்த்துக் கொண்டு தன் உடலில் வலிமை பெறுகின்றது நல்ல உணர்வின் தன்மைகளை நஞ்சாக (கழிவாக) மாற்றுகின்றது.

உடல் வலிமை கொண்டு சிந்திக்கும் செயல் இழந்து ஒன்றோடு ஒன்று போர் முறை கொண்டு அது மற்றொன்றைத் தாக்கி மற்றவைகளின் உணவைப் பரிமாறிக் கொள்கின்றது.
1.இது மிருக உணர்வுகளின் இயக்கங்கள்.
2.ஆக நஞ்சின் வலிமை கொண்டு வரும் பொழுது சிந்திக்கும் தன்மை அவைகளுக்கு இல்லை.

ஆனால் மனிதனோ சிந்தித்துச் செயல்படும் தன்மை பெற்றவன். அந்த நஞ்சினை அடக்கும் உணர்வு கொள்ளும் பொழுது
1.அண்டத்தில் எட்டாத உயரத்தில் இருக்கும் உணர்வின் தன்மையையும் எட்டிப் பிடித்து
2.அகண்ட அண்டத்தில் அந்த அருள் ஒளியின் சுடராக அறியும் வல்லமை பெற்றது “மனிதனின் ஆறாவது அறிவு...”

அகண்ட அண்டத்தின் உணர்வுகளை நம் பிரபஞ்சம் கவர்ந்து சூரியன் ஒளிச் சுடராக மாற்றுகிறது. அதைப் போல
1.நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி
2.ஒளியின் சரீரம் பெறும் அறிவின் தன்மையைத்தான் கார்த்திகேயா என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
3.கார்த்தி என்றால் வெளிச்சம்.

அகண்ட அண்டத்தையும் அறியும் தன்மையும் அண்டத்தில் உருவான நம் பிண்டத்திற்கு (உடலுக்கு) உண்டு. அகண்ட அண்டத்தின் ஆற்றலை நமக்குள் பெறும் தகுதியும் உண்டு.

ஆகவே எத்தகைய நஞ்சின் தன்மை வந்தாலும் அதை வென்றிடும் உணர்வு பெற்ற அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் நுகர்ந்து என்றுமே நமக்குள் பேரின்பம் என்ற நிலையை உருவாக்கிடல் வேண்டும்.

அத்தகைய அருள் ஞானத்தை கணவன் மனைவி இருவருமே பெற்றுப் பழக வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் இரு மனமும் ஒன்றாகி இரண்டறக் கலந்து உணர்வின் ஒளியாக மாற்ற வேண்டும்.

கணவனும் மனைவியும் அருள் ஞான சக்தி பெற்று நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரியைப் போன்று இரு உயிரும் ஒன்றி வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி ஒளியின் உணர்வாக உருவாக்கும் தன்மை பெறவேண்டும். உலக ஞானம் பெற்று இந்த உலகைக் காத்திட வேண்டும்.

உலகில் தான் நாம் வாழ்கின்றோம். நம் உடலுக்குள் உலக உணர்வுகள் அனைத்தும் உண்டு. ஆகவே அந்த உலக உணர்வை பகைமையற்ற நிலையாக்கிப் நம்மிடம் பகைமை வளராது தடுக்க வேண்டும்.

ஒளியின் சுடரான அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்தால்
1.உலக ஞானம் பெறலாம். பகைமைகளை அகற்றிடலாம்.
2.அருள் ஒளியின் சுடராகப் பேரருள் வாழ்க்கை வாழ்ந்து
3.மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற்று
4.நம் பேச்சும் மூச்சும் பிறரை மகிழச் செய்யும் உணர்வாக வளரும்.
5.இந்த உடலுக்குப் பின் அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாத வாழ்க்கை வாழலாம்.

January 24, 2019

மனிதனுக்குள் இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் சக்தியை அறிந்து கொள்ளுங்கள்... பார்க்கலாம்... உணரலாம்...!


அண்டத்தில் உள்ளது இந்தப் பிண்டத்தில் (மனித உடலில்) உள்ளது என்று சொல்கிறோம். அண்டத்தில் இருக்கிற சக்திகள் நம் உடலில் எவ்வாறு இயங்கி கொண்டு இருக்கிறது...? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

அண்டம் என்பது அகண்ட அண்டம். அதிலே பிரபஞ்சம் என்பது ஒரு சூரியக் குடும்பம். 27 நட்சத்திரங்களும் நவக் கோள்களும் அதனுடைய உபகோள்களும் சேர்ந்து ஒரு சூரியக் குடும்பமாகின்றது.

ஒரு நூலாம்படைப் பூச்சி வலையை விரித்துத் தனக்குத் தேவையான உணவை எப்படி எடுக்கிறதோ அது போல் சூரியக் குடும்பத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் வலை வலையாகப் பால்வெளி மண்டலங்களைத் தனக்கென்று அமைத்துக் கொள்கிறது.

நட்சத்திரங்களின் சுழழும் பொழுது அதிலிருந்து வெளிப்படும் அமிலங்கள் நூலாம்படை போல் அது விரிவடைகிறது. விரிவடையும்  போது இந்த மொத்தச் சூரிய பிரபஞ்சமும் சுற்றும் நிலையில் அதிலே மற்ற அகண்ட அண்டத்திலே வரக்கூடிய துகள்களைச் சேமித்து வைத்துப் பால்வெளி மண்டலங்களாக மாற்றுகிறது.

1.கார்த்திகை நட்சத்திரம் முன்னாடி இருக்கிறது. அடுத்து ரேவதி நட்சத்திரம் இருக்கிறது.
2.27 நட்சத்திரங்களும் இப்படி வரிசையில் பல மைல் தூரம் வித்தியாசத்தில் ஒன்றன் கீழ் ஒன்றாக இருக்கும்.
3.வித்தியாசத்தில் இருக்கிறது என்றால் சூரியனுடைய சுழற்சி வேகத்தில் வரும் போது அது பின் தங்கி வரும்.
4.இரண்டாவது நட்சத்திரம் அதைக் காட்டிலும் பின் தங்கி வரும்.
5.மூன்றாவது அதைக் காட்டிலும் பின் தங்கி வருகிறது.
6.சூரியனை ஒட்டி இருக்கும் கோள்களும் இதைப் போன்று தான். ஒன்றன் பின் ஒன்றாகத் தன்னுடைய சுழற்சியில் பின் தங்கி வரும்.

பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடிய துகள்கள் நட்சத்திரங்கள் விரித்த வலையில் ஒட்டி கொள்கிறது. நட்சத்திரம் சுழற்சி ஆகும் போது (RICE MILL போல்) பால்வெளி மண்டலமாகிறது... தூசிகளாக மாறுகின்றது.

அதற்கு அடுத்தது இன்னொரு நட்சத்திரம் எதிர்த்து இருக்கும். இது இடைமறித்து வரும் போது இதற்கும் அதற்கும் மோதலாகி இரண்டு கலவைகள். இப்படி 27 நட்சத்திரக் கலவைகள் மாறி மாறித் தூசிகளாக வருவது தான் பிரபஞ்சத்திற்குள் பரவுகிறது.

நட்சத்திரங்களின் மோதலில் வெளி வரும் இந்தத் தூசிகளை இடைமறித்து முதலில் வரக்கூடியதை கேதுக் கோள் அந்த விஷத் தன்மைகளை மட்டும் எடுத்து கொள்கின்றது. வரக்கூடிய கரும் புகைகளை ராகுக் கோள் எடுத்துக் கொள்கிறது.

ஆவியாக வெளிப்படுவதைச் சனிக் கோள் எடுத்து நீராக மாற்றுகிறது. 27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் கதிரியக்கங்களை வியாழன் கோள் எடுத்துக் கொள்கிறது.

நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் துகள்கள் மோதும் பொழுது வெளிப்படும் ஒளிக்கற்றைகளை வெள்ளிக் கோள் எடுத்துக் கொள்கிறது. மோதலில் உண்டாகும் நாதங்களை செவ்வாய்க் கோள் எடுத்துக் கொள்கிறது.

இதையெல்லாம் கலவையாகிச் சூரியனுக்கு அருகில் இருக்கும் புதன் கோளுக்குள் செல்லும் பொழுது அதனின் அதீத வெப்பத்தால் உலோகங்களாக மாற்றிக் கொள்கிறது.

அந்தந்தக் கோள்கள் உணவாக எடுத்து அது வெளிப்படுத்தும் உணர்வுகள் பல கலவையாகின்றது. ஒவ்வொரு அணுக்களிலும் இந்த விஷத் தன்மையின் உணர்வுகள் கலவையாகின்றது.

இந்தக் கலவையின் தன்மைகள் வரப்படப்போகும் போது மற்ற கோள்களுடன் கலக்கப்படும் போது ஒவ்வொன்றும் மாற்றங்கள் ஏற்படும். மாற்றங்கள் ஏற்பட்டு அதெல்லாம் சூரியனுக்கு வரும் போது அந்த விஷத்தை எல்லாம் தூக்கி எறிந்து விடுகிறது. விஷத்தைப் பிரித்து ஒளியாகப் பாதரசமாக மாற்றுகின்றது.

1.முதலில் அமிலமாக இருந்தது தான் நட்சத்திரங்கள்.
2.அதிலிருந்து  வரப்படும் போது இதனுடைய உணர்வுகள் மாற்றமாகி மாற்றமாகி
3.சூரியன் அதைப் பாதரசமாக மாற்றும் நிலை வரும்.
4.அப்பொழுது அது முழுமையான விந்தாக இந்த உலகையே உருவாக்குவதற்கான  மூலமாக ஆகின்றது.

பாதரசம் மிகவும் எடை கூடியது. எடை கூடிய நிலைகளாக வரப்போகும் போது மற்றதைத் தள்ளுகின்றது. அகண்ட அண்டத்திலிருந்து வரக்கூடிய சக்திகள் நட்சத்திரங்கள் கோள்களில் கலவையான பின் அதைச் சூரியன் இழுத்துக் கவரும் பொழுது மோதலாகின்றது.

சூரியனுக்கு வெளிப்புறத்தில் ஏற்படும் இந்த மோதலினால் தான் வெப்பமாகின்றது. ஆனால் சூரியன் மிகவும் குளிர்ச்சியானது. சூரியனுக்குப் பல ஆயிரம் மைலுக்கு அந்த பக்கம் தான் இந்த மோதல் நடக்கிறது.

வெப்பமாகும் பொழுது கெட்டதைப் பூராம் தூக்கி எறிந்து விடுகிறது. நல்லதைப் பாதரசமாக மாற்றிக் கொள்கிறது. இது மெய் ஞானப்பாடம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதைத் தெளிவாகக் காட்டினார். அந்தப் பாதரசத்தினுடைய நிலைகளை எடுத்துக் காட்டி
1.அது மற்ற  பொருளுடன் சேர்க்கும் போது திடப்பொருளாக எப்படி ஆகிறது...?
2.இன்னொரு பொருளைச் சேர்த்தவுடனே ஆவியாகப் பிரிந்து எப்படிப் போகிறது?
3.ஆவியாகப் போன பிற்பாடு பொருள்கள் எப்படி இணைகின்றது...? என்றும்
4.அதன் துணை கொண்டு உலகில் உள்ள எல்லாவற்றுக்கும் உணவாகக் கொடுக்கவும்
5.மற்றொன்றை எடுத்துச் செல்லவும் மற்றொன்றோடு இணைத்து வாழச் செய்யும் நிலையாகவும்
6.சூரியன் எப்படிச் செயல்படுகிறது...? என்று காட்டினார்..

அப்படிப் பாதரசமாக மாறவில்லை என்றால் உலகம் இல்லை. ஆகையினால் தான் இதை “நாத விந்துகள் ஆதி நமோ நமோ... வேத மந்திர சொரூபாய நமோ நமோ... வெகு கோடி...! என்று அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

ஆதியிலே நாத விந்துகள் என்ற உணர்வின் தன்மை வரப்படும் போது தான் இது எல்லாமே உருவானது.
1.அந்த உணர்வின் இசையின் ஒலிகள் எப்படி உருவானது...?
2.ஒவ்வொன்றும் அந்த உணர்வின் ஒலியாக
3.நமக்குள் சுருதியின் இயக்கமாக
4.அந்த உணர்வின் ஒலியாக
5.அந்த உடலின் ரூபமாக மாறுகின்றது..! என்று இதற்குள் இவ்வளவு கருத்து இருக்கிறது.

27 நட்சத்திரங்களின் கலவைகள் உணர்வின் இயக்கங்களாகவும் நவக் கோள்களின் கலவைகள் உடல் உறுப்புகளாகவும் நமக்குள் அமைந்துள்ளது. உயிர் சூரியனாக இந்த உடலான பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்கிக் கொண்டிருக்கின்றது.

தியானத்தில் அமரும் பொழுது இதை எல்லாம் இணைத்துப் பார்த்தீர்கள் என்றால் அண்டத்தையே நீங்கள் பார்க்கலாம். ஆர்வத்துடன் கேட்டு இதை நீங்கள் பதிவாக்கிக் கொண்டால் தியானத்தில் உங்களை அங்கேயே அழைத்துக் கொண்டு போகும். நிச்சயம் உணரலாம்...!