ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 15, 2018

தீய வினைகள் நமக்குள் எப்படிச் சேர்கின்றது..? சதுர்த்தி என்று எதற்காக ஞானிகள் வைத்துள்ளார்கள்..?

வீட்டில் அண்ணன் தம்பிகள் இருக்கின்றோம். சந்தர்ப்பத்தால் ஒருத்தருக்கொருத்தர் பகைமையாகின்றது.  

தம்பி மேல் கோபம் வந்து விட்டால் தம்பி பிள்ளையைப் போற்றிக் கொண்டு இருப்போமா…? உன் தந்தை செய்வதைப் பார்த்தால்இப்படிச் செய்திருக்கிறான்டா…!” என்று சொல்வோம்.

எப்பொழுது பார்த்தாலும் என் அப்பாவை இப்படியே சொல்லிக் கொண்டே இருக்கின்றீர்கள்...” நீங்கள் என்ன பெரிய ஆளா..? என்று அவன் சொல்வான்.

உடனே பார்..! போயும் போய் இந்தப் பொடிப் பையனிடம் சொன்னோம் பார்...! என்று இவர் எதிர்ப்பார்.

இப்படி எல்லாரிடமும் இந்த விஷம் கலந்து கொண்டே இருக்கின்றது. எவ்வளவு சுவையான பதார்த்தம் செய்தாலும் அதிலே விஷம் பட்டவுடன் அந்த ருசி தான் இயக்கும். மற்ற ருசியையெல்லாம் அது அழித்துவிடும்.

இப்படி நம் வீட்டிற்குள் வினைகளாகச் சேர்ந்து கொண்டே வருகின்றது. இதே மாதிரித் தான் தொழிலிலும் நடக்கிறது. ஆபீஸிலும் நடக்கிறது.

ஆபீஸில் சந்தோஷமாக வேலை பார்ப்போம். வேலை செய்து கொண்டு இருக்கும் போது ஒருவன் மந்தமாக வேலை செய்து கொண்டிருப்பான்.

அவன் சந்தர்ப்பத்தில் வீட்டில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அதனால் அன்றைக்கு சோர்ந்து போய் வந்திருப்பான். அந்த நேரத்தில் பார்க்கும் கணக்கைத் தவற விட்டிருப்பான்.

ஏம்ப்பா இந்த மாதிரிச் செய்தாய்...?என்று கேட்டால் அந்தச் சங்கடத்தில் அவன் என்ன பதில் சொல்வான்?

எங்கே போனாலும்... என் தொல்லை விட மாட்டேன் என்கிறது...! நான் என்ன வேண்டும் என்றா “தப்பாகவா செய்கிறேன்...!” என்று சொல்வான்.

இப்பொழுது நான் என்னப்பா உன்னைக் கேட்டு விட்டேன்...!” என்றால் உடனே பகைமை வந்துவிடும்.

நீ சோம்பேறித்தனமாக இருக்கிறான்.. கொஞ்சம் சுறுசுறுப்பாக இரு...! என்று தான் சொன்னேன். அதற்கு “என் மீதே அவன் எரிந்து விழுகின்றான்...” என்று இப்படி வந்துவிடும்.

அதனால் வந்த எரிச்சல் என்ன செய்கின்றது? நமக்குள் வந்தவுடனே அடுத்து நினைக்கும் பொழுதெல்லாம் என்ன செய்வோம்? அந்த எரிச்சல் உணர்வுடன் தான் சொல்வோம்.

நீ அதைப் போய்ச் செய்யப்பா... போப்பா...என்போம்.

இது என்ன இந்த மனுசன் எரிஞ்சி எரிஞ்சி பேசிக் கொண்டு இருக்கிறான் என்று இது வினையாகச் சேரும்.
1.அப்பொழுது அவரைப் பார்க்கும் போதும் இவனுக்கு எரிச்சல்.
2.இவனைப் பார்க்கும் போது அவருக்கும் எரிச்சல்.
இரண்டு பேர் உடலிலும் இந்த எரிச்சலான உணர்வுகள் வித்தாகின்றது.

இப்போது எப்படி விவசாயப் பண்ணையில் வாங்கி வந்த வித்துக்களைப் பூமியில் விதைக்கும் பொழுது அது அது சேர்த்துக் கொண்ட வினைகளுக்கொப்ப அந்த அந்தச் செடிகளாக வளர்கின்றது.

சோளத்தில் மற்ற பூச்சிகள் விழாது இருக்க பூச்சி மருந்தைச் சேர்ப்பார்கள். அதை சேர்த்துக் கலந்து சோளத்தை விதைத்தவுடனே அந்தப் புழுக்கள் மருந்தின்  வாசனைக்கு வராது.

சோளம் விளைந்தவுடனே அடுத்து இன்னொரு பூச்சி இதைக் காட்டிலும் கொஞ்சம் விஷமான பூச்சி அதிலே போய்ப் படும். அப்பொழுது இந்த மருந்திற்கு ஒன்றும் அது கட்டுப்படாது.

அது பட்டுவிட்டது என்றால் இதைச் சாப்பிடும். முதலில் கொஞ்ச நாட்களுக்கு இந்த வாசனைக்கு வராது. இதில் வந்த விதையை எடுத்து அடுத்தாற்படி போட்டால் இந்த விஷப் பூச்சி வந்து அதைத் தின்றுவிடும்.

இதைப் போல நம்மை அறியாதபடி இந்த உணர்வான வித்துகள் ஒவ்வொன்றாக நம்முடைய நல்ல குணம் அனைத்தையும் தின்று கொண்டே வந்துவிடும்.

எல்லாரிடத்திலும் எந்த ரூபத்திலும் நமக்குப் பகைமை வரும். “நான் நல்லவன்...” என்று தான் நான் பேசுவேன், ஆனால் என்னைப் பார்த்தவுடனே “இவர் மோசமான ஆள்...” என்பார்கள்.

ஒருவர் அங்கிருந்து வருகின்றார். அவர் கஷ்டத்தை எல்லாம் சொல்கிறார். அவர் வந்தவுடனே ஐய்யய்யோ..., இந்த ஆள் வந்தாலே ஒரே தொல்லையாக இருக்கின்றது... “ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பான்...!” என்று வேதனைப்படுகின்றீர்கள்.

அந்த ஆளை நினைத்தவுடனே “வந்து விட்டது தலை வலிக் கேஸ்...” என்று எண்ணி நம்மை அறியாமலே இதைச் சுவாசிப்போம்.

மனிதனுக்கு மனிதன் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் வினைகளாக இந்த உடல் என்ற கட்டடத்தில் ஏறிக் கொண்டேயிருக்கின்றது.

இதைப் போன்ற தீய வினைகள் சேர்வதைத் துடைப்பதற்காகத்தான் “சதுர்த்தி” என்று ஞானிகள் வருடத்திற்கு ஒரு நாளும் மாதத்திற்கு ஒரு நாளும் வைத்துக் காட்டியுள்ளார்கள்.

சதுர்த்தி என்றால் நிறுத்துதல் என்று பொருள். மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானித்துவிட்டு
1.நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்
2.எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
3.எங்கள் பார்வை எல்லோரையும் நலமாக்க வேண்டும்,
4.எங்களைப் பார்க்கும் அனைவருக்கும் நல்ல மனம் வர வேண்டும்,
5,குடும்பத்தில் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்,
6.அவர்கள் இல்லத்தில் மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும்,
7.அவர்களை அறியாத இருள் நீங்க வேண்டும்,
8.அவர்கள் மெய் பொருள் காண வேண்டும் என்று
9.இதையெல்லாம் சதிர்த்தி அன்று எண்ண வேண்டும்.

இவ்வாறு சந்தர்ப்பத்தால் வரும் தீய வினைகளை நிறுத்திப் பழக வேண்டும்.