ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 18, 2018

கரையான் புற்றில் அமரச் செய்து “மெய் ஞானிகளின் உணர்வை” எடுக்கச் சொன்னார் குருநாதர்

“தெரிந்து கொள்ள வேண்டும்…” என்பதற்காக வேண்டி குருநாதர் ஒவ்வொரு நாளும் பல அனுபவங்களை எனக்குக் கொடுத்தார்.

முள்ளில் உட்காரச் சொன்னார். எறும்புக் குழியில் போய் உட்காரச் சொன்னார். எறும்புக் குழியில் உட்கார்ந்தாலும் பரவாயில்லை. கரையான் புற்றில் உட்காரச் சொன்னார்.

கரையான் புற்றிலே உட்கார்ந்தவுடனே என் வேஷ்டி எல்லாம் காணாமல் போய்விட்டது. அப்படியே சல்லடைக் கண் மாதிரி ஆகிவிட்டது. எழுந்தால் வேஷ்டியே இல்லை. துணியைப் பூராம் அரித்துவிட்டது.

வெளியிலே நான் எப்படிப் போவது…! கரையான் புற்றில் உட்கார்ந்து கொண்டு அதைச் செய்யச் சொல்கின்றார்.

காரணம் வேஷ்டித் துணி மண்ணில் விளைந்து வந்த பருத்தி தான். ஆனால் அந்தக் கரையானின் மலம் பட்டவுடனே அந்தத் துணி காணாமல் போகின்றது.

1.மண்ணிலிருந்து செடியாக வந்து பருத்தியாக வந்தது.
2.துணியாக நெய்த பின் அதற்குள் மறைந்த சத்தைக் கரையான் எப்படிக் கரைத்துச் சாப்பிடுகின்றது.
3.கழிவை மீண்டும் மண்ணாக எப்படி மாற்றுகிறது என்ற
4.இந்த இரண்டையும் காட்டுகின்றார் குருநாதர்.

இதே மாதிரித் தான் ஒவ்வொரு பொருளையும் உணவாக உட்கொள்கிறோம். கழிவை வெளிப்படுத்துகின்றோம்.

அதே போல் ஒவ்வொரு எண்ணத்தையும் எண்ணி எடுக்கின்றோம். நமக்குள் சேர்த்து அதிலுள்ள சத்தை எடுத்துக் கொள்கிறோம்.

நாம் எண்ணும் எண்ணத்தில் இருக்கக்கூடிய சத்தை எடுத்து அது என்ன செய்கின்றது? நம்மிடம் இருக்கக்கூடிய உணர்வைக் கரைத்து இது எடுத்துத் தன்னுடன் சேர்த்து வளர்கின்றது. கழிவைப் பூராம் தட்டிவிட்டு விடுகின்றது.

தீமையான எண்ணங்களையும் உணர்வுகளையும் அணுக்களையும் அகற்ற நாம் என்ன செய்ய வேண்டும்?

“ஈஸ்வரா…” என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி விண்ணிலே நினைவைச் செலுத்தி அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை எடுத்து நமக்குள் சேர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

1.கரையான் கழிவை மண்ணாக மாற்றியது போல்
2.அந்த அருள் உணர்வுகள் நம்மிடம் உள்ள தீமைகளை மண்ணாக மாற்றிவிடும்.
3.அருள் உணர்வின் தன்மை ஒளியான அணுக்களாக நமக்குள் உருப்பெறும்.