ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 8, 2018

“நெகட்டிவ் பாசிட்டிவ்…” என்ற எதிர்மறையான உணர்வின் இயக்கங்கள் வந்தாலும் தீய வினைகளாக அதை நமக்குள் சேர விடக்கூடாது

ரோஜாப்பூ மணத்தை நாம் விரும்பி எடுத்துக் கொண்டால் அந்த ரோஜாப்பூவின் மணத்தைப் பற்றித் தான் நாம் பேசுவோம்.

கசப்பான உணவை ருசியாகச் சாப்பிட்டுப் பழகிவிட்டால் அந்தக் கசப்பின் தன்மையைப் பற்றி ரசித்துப் பேசுகின்றோம்.

இனிப்பான பதார்த்தங்களை விரும்பிச் சுவைத்துச் சாப்பிட்டால் “ஆஹா எப்படி இருக்கின்றது…!” என்று சொல்கின்றோம்.

காரத்தை ருசியாக வைத்து அது முன்னிலையில் வைத்து காரத்தைச் சாப்பிட்டவர்கள் “ஆஹா இதைச் சாப்பிட்டால் எப்படி இருக்கின்றது…!” என்று சொல்வார்கள்.

காரத்தைச் சாப்பிட்டவர் காரத்தைப் பற்றி ரசித்துச் சொல்லும் போது இனிப்பை விரும்பிச் சாப்பிட்டவர்களுக்கு வெறுப்பு வரும்.

கசப்பை விரும்பிச் சாப்பிட்டவர்கள் கசப்பைப் பற்றி ரசித்துச் சொல்லும் போது இது மற்றவர்கள் கேட்டு அறிந்தபின் அந்தக் கசப்பான உணர்வு வெறுப்பை உண்டாக்கும்.

இதைப் போல நெகட்டிவ் பாசிட்டிவ் என்ற உணர்வுகள் நமக்குள் எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டி தீய வினைகளாகச் சேருகின்றது.

ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கும் போது தன்னைக் காத்திடத் தன் கௌரவத்தை வளர்த்துக் கொள்ள மற்றவர்களுடன் பேசும் போதே
1.”அடேயப்பா…! பெரிய ஆள் மாதிரி நீ என்ன…,
2.எல்லோரையும் விடப் பெரியவனா…?” என்று சொன்னால் போதும்.

பார்…! நான்கு பேர் மத்தியில் என்னைக் கேவலமாகப் பேசிவிட்டாய். உன்னை என்ன செய்கின்றேன் பார்…? என்று இப்படித் தன் கௌரவம் போய்விட்டதே என்று அவர் பேசத் தொடங்கிவிடுவார்.

இவர் என்ன… இல்லாததைச் சொல்லுகின்றார்…! என்னைக் கேவலமாகப் பேசுகின்றார் என்று எண்ணி பதிலுக்கு இவரும் இதைச் சொன்னார் என்றால் அந்தச் சந்தர்ப்பம் உடனே பழி தீர்க்கும் உணர்வுகளாக உருவாகின்றது.

இந்த உணர்வுகள் நமக்குள் ஒரு வித்தாகி பழி தீர்க்கும் உணர்ச்சிகளைத் தூண்டி நமக்குள் ஒவ்வொரு குணங்களையும் செயலற்றதாக ஆக்கிவிடுகின்றது.

பழி தீர்க்கும் உணர்ச்சிகளை மீண்டும் மீண்டும் ஊட்டி நம் நல்ல எண்ணங்களை அது செயலாக்க விடாதபடி நமக்குள் கடுமையான வினைகளாகின்றது.

நம்மை அழித்திடும் உணர்வாக அந்த வினைகள் வளர்கின்றது. இதை நாம் நிறுத்த வேண்டும்.

அதற்குத்தான் விநாயகர் சதுர்த்தி என்று காட்டினார்கள். நம்மை அறியாது சேரும் தீய வினைகளை உடனுக்குடன் நிறுத்திப் பழக வேண்டும்.

ஒரு வித்து தெரியாமல் மண்ணிலே விழுந்தாலும் அது தன் இனமான சத்தைக் கவர்ந்து வளரத் தொடங்கிவிடும். பின் அது தன் விழுதுகளைப் பாய்ச்சி பெரிதாகவே வளர்ந்துவிடும்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

1.பிறர் செய்கைகள் நமக்குப் பிடிக்கவில்லை பிடிக்கவில்லை என்று
2.வெறுப்படைந்தாலும் அல்லது கோபப்பட்டாலும் அல்லது வேதனைப்பட்டாலும்
3.அது நமக்குள் தீய வினைகளாகத்தான் சேரும்.

அதை மாற்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெறவேண்டும் என்று அந்த நல்ல சக்திகளை நல்ல வினைகளாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தீமைகளைப் பற்றற்றதாக ஆக்கி மகரிஷிகளின் உணர்வைப் பற்றுடன் பற்றும் பழக்கம் நமக்கு வரவேண்டும்.