ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 21, 2018

மக்களை மகிழ்ச்சி அடையச் செய்வதற்காகத்தான் நவபாஷாணச் சிலையைப் போகர் உருவாக்கினார்...!

1.மனிதன் எவ்வாறு வாழ வேண்டும்?
2.தன்னை அறியாது வரும் தீமைகளை எப்படி அகற்ற வேண்டும்? என்று
3,அன்று 5300 ஆண்டுகளுக்கு முன் போகர் வழி வகுத்த நிலைகள்.

நம் ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாக மதித்தான். அவனால் உருவாக்கப்பட்ட ஆலயம் என்று ஒவ்வொரு உடலையும் எண்ணினான். அதற்குள் மனிதனாக உருவாக்கிய 1008 குணங்களையும் அரும் பெரும் சக்திகளாக எண்ணினான்.

அந்த மனிதர்கள் மகிழ்ந்தால் அதன் மூலம் மகிழ்ச்சியின் தன்மையைத் தான் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் தான் கண்டுணர்ந்த நிலையை முருகன் சிலையாக நவபாஷாணத்தில் உருவாக்கினான்.

முருகனைக் கண்டு எத்தனை பேர் மகிழ்ச்சி அடைகின்றனரோ அந்த மகிழ்ச்சியின் தன்மை ஏகி மனிதனுக்குள் உருவான உணர்வின் சத்தை இவன் அந்த உணர்வாகத் தன் உடலுக்குள் வளர்த்துக் கொண்டான்.

அதைப் பெறுவதற்காகத்தான் தன் உடலினின்றே பல கோடித் தாவர இனச் சத்தைப் போகித்து மோகித்து அதைக் காயகல்பமாக மாற்றிக் கொண்டான்.

அந்த நிலையைத் தான் பெறக்கூடிய பாக்கியமாக அடையும் வரையிலும் இன்னொரு உடலுக்குள் போகாது இந்த உடலினின்றே அவன் செயல்படுத்தினான்.

அவன் கண்டுணர்ந்த உணர்வின் சத்தை மக்கள் எடுக்கும் சந்தர்ப்பமாகப் பழனி மலையில் சிலையாக உருவாக்கினான்.

1.மக்கள் மகிழ்ந்து வெளிப்படுத்தும் உணர்வின் ஆற்றலை அவனுக்குள் பெருக்கி
2.மெய் ஞான உணர்வைத் தனக்குள் ஒளியாக்கி
3.அந்த நினைவின் ஆற்றல் கொண்டு உடலை விட்டு விண் செல்லும் மார்க்கத்தைக் கொண்டு வந்தான்.

இன்றும் சப்தரிஷி மண்டலத்தில் ஒரு அங்கமாக ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

இது தான் போகன் அன்று செய்த நிலைகள்.

அந்த போகமாமகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற்று அவன் செய்தது போன்று நம் பார்வையால் சொல்லால் செயலால் மூச்சால் மக்களை மகிழச் செய்வோம்.

1.பிறர் வெளிப்படுத்தும் மகிழ்ச்சியான உணர்வுகளை
2.நம் உயிராத்மாவிற்கு ஊட்டமாக ஏற்று
3.போகரைப் போன்று ஏகாந்தமாக நாமும் விண் செல்வோம்.