ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 12, 2018

நம் உயிரும் ஒரு நட்சத்திரம் தான் – இருபத்தியேழு நட்சத்திரங்களின் முக்கியத்துவம் என்ன...?

ஒவ்வொரு நட்சத்திரமும் இன்னென்ன குணங்கள் கொண்டது என்று ஞானிகள் கண்டுணர்ந்துள்ளார்கள். இருபத்தேழு நட்சத்திரங்களும் பிரபஞ்சத்தில் சுழன்று வரப்படும் போது ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் அது ஒத்து வராது.

மனிதர்கள் நாமும் ஒரு எண்ணம் கொண்டவர் இன்னொரு எண்ணம்  கொண்டவருடன் ஒருவருக்கொருவர் சேர்வதில்லை.

அதைப் போன்று தான் ஒரு நட்சத்திரத்தின் கதிரியக்கமும் இன்னொரு நட்சத்திரத்தின் கதிரியக்கமும் ஒன்று சேராது.

கார்த்திகை நட்சத்திரம் அதனின் ஒளிச் சுடர் கொண்டு ஒரு தாவர இனத்திற்குள் தன் உணர்வின் சக்தியை இயக்கும்போது
1.தன் உணர்வின் சத்தைத் “தான்… தான்…” என்று அறிந்து
2.தனக்குள் மோதும் மற்ற நிலைகளிலிருந்து
3.அது தெளிந்து உணர்ந்து இயக்கும் சக்தியாக ஆகின்றது.

அத்தகைய (கார்த்திகை நட்சத்திர அலைகள் கலந்த) மணத்தை மனிதர்கள் நாம் நுகரும் போது தெளிந்து உணர்ந்து செயல்படும் அறிவாக  அந்த ஆற்றலைப் பெறுகின்றோம்.

ரோகினி நட்சத்திரம் அதனின் ஒளிச் சுடர் ஒரு பொருளிலே பட்டால் தன்னை மறைத்துக் கொண்டு “மறையும் (மறைக்கும்) நிலைகள் பெற்றது” அந்த நிலைகள்.

விஷம் எப்படி ஒரு பொருளுக்குள் பட்ட பின் அதை மறைத்து  தெளிந்திடாத நிலைகள் ஏற்படுத்துகின்றதோ அதைப்போல அந்த உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்ட பின் மற்றொரு பொருளை அறியவிடாது மறைக்கின்றது,

ரோகினி நட்சத்திரத்தின் உணர்வின் சத்து மற்றதுடன் கலக்கப்படும் போது இது மறைகின்றது என்ற நிலையை அன்று காட்டினார்கள் ஞானிகள்.

இதை ஆதாரமாக வைத்துத்தான் ஒரு நட்சத்திரத்தின் இயக்கமாக உயிரை வைத்து அன்று சாஸ்திரங்கள் எழுதினார்கள்.
1.ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் இன்னென்ன நிலைகள் நடக்கும்
2.அதே சமயத்தில் இன்னென்ன கோள்கள் மாற்றமாகின்றது,
3.அந்தக் கோளுடன் இணைக்கப்படும் போது உணர்வின் தன்மைகள் மாறுகின்றது என்று
4.அன்று மெய் ஞானிகள் வானஇயல் சாஸ்திரத்தை எழுதினார்கள்.

ஒரு நட்சத்திரத்தின் இயக்கம் மற்ற கோளுக்குள் இணையும்போது ஒவ்வொன்றாக மாறி கோளிற்குள் பாறையாக எப்படி மாறுகின்றது?

பாறைக்குள் மாற்றத்தின் தன்மை அடைந்து அது தன் மணத்தை வெளிவிடும் போது இதே போல் மற்ற நட்சத்திரத்தின் சத்தை எடுத்து உருவான பாறையின் மணத்திற்கும் வீரிய சக்தியால் ஒன்றுக்கொன்று எப்படி எதிர்ப்பாகின்றது?

எதிர்ப்பாகும் பொழுது சுழற் காற்றாக மாறி ஒன்றுக்குள் ஒன்று மோதி எதனின் உணர்வை இதற்குள் அடக்குகின்றதோ அதனின் தன்மை இணைந்து புது உருமாற்றமாக எவ்வாறு மாறுகின்றது?

இதனின் செயலாக்கங்கள் எப்படியெல்லாம் மாறுகின்றது? அந்த உணர்வின் சத்தை எடுக்கப்படும் போது தாவர இன சத்தின் தன்மைகள் எப்படி மாறுபடுகின்றது?

தாவர இன சத்துக்கள் ஒரு நட்சத்திரத்தின் நிலைகள் கொண்டாலும் மற்ற எதிர் நிலையான நட்சத்திரங்கள் இதனுடன் மோதப்படும் போது எதிர் நிலையான நிலைகள் மறைந்து “நெகட்டிவ்… பாசிட்டிவ்…” என்று எப்படி இயக்கம் வருகின்றது?

நம் உயிரின் தன்மை எப்படித் துடிக்கின்றதோ இதைப் போல தாவர இனங்களுக்குள் எதிர்நிலையான உணர்ச்சிகள் மோதும் போது அந்த உணர்வால் ஈர்க்கும் ஆற்றலை எப்படிப் பெறுகின்றது?

அத்தகைய ஈர்க்கும் ஆற்றலுக்குள் ஒவ்வொரு நட்சத்திரத்தின் இயக்கங்கள் கலந்து எதனின் ஆற்றல் அதிகமாகின்றதோ அதற்குள் எதிர்மறையான உணர்வுகளாகத் தோன்றி ஆக்கச் சக்தியான ஈர்ப்பலைகளாக மாறித் தாவர இனங்கள் எவ்வாறு விளைகின்றது?

இதை எல்லாம் ஆதியிலே அறிந்துணர்ந்தவர் அகஸ்தியர்.

இருபத்தேழு நட்சத்திரத்தின் உணர்வுகள் பாறைகளாக ஆனாலும் எதிர் நிலையான மறைகளாகிக் கலவை ஆகும் போது கார்த்திகை நட்சத்திரத்தின் சத்து அதிகமாக அதற்குள் இணைந்தால் அது மற்றதை அடக்கிக் கோமேதகம் மேதகம் வைரம் வைடூரியம் என்று உருவாகின்றது.

ஒன்றுடன் ஒன்று மோதுவதால் உண்டாகும் எதிர்ப்பு நிலையும் மற்ற நட்சத்திரங்களின் எதிர்ப்பு நிலையும் வரப்போகும் போது மூன்றும் மோதி இணைகின்றது.

அதாவது பூமிக்குள் வரும் போது எதிர் நிலைகளாகி கார்த்திகை நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரமும் எதிர்க்கும் நிலையான மற்ற நட்சத்திரத்திங்களுடைய நிலைகள் மூன்றும் மோதி இரண்டறக் கலந்து ஒரு கருவாக உருவாகின்றது.

ஏனென்றால் மும்முனையாக எதுவும் மூன்று மண்டலமாகத்தான் இயக்கும். வெப்பம், காந்தம் விஷம் இது மூன்றும் இயக்குவது போல
1.வெப்பம் உருவாக்குவதும்
2.காந்தம் தனக்குள் அணைத்துக் கொள்ளும் ஆற்றலும்
3.விஷம் மற்ற உணர்வின் தன்மை துடிக்கச் செய்யும் விசையாக
ஒரு நட்சத்திரத்தின் இயக்கம் அது எவ்வாறு இருக்கின்றதோ அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு மூன்று அணுக்களாக மூன்று மண்டலங்களாக இயக்குகின்றது.

வெறும் கற்பாறைகளானாலும் அந்தப் பாறைக்குள் மோதும் நிலைகள் கொண்டு ஈர்க்கும் நிலை பெற்று அது கருவாகி வடித்துக் கொண்ட சக்தியாக வைரக் கல்லாக விளைகின்றது.

இதனுடைய வீரியத் தன்மை ஆனபின் வெடித்து முழுமை அடைந்து வைரமாக வெளி வருகின்றது.

நட்சத்திரங்களின் விஷத்தன்மைகள் ஒன்றுக்கொன்று மோதும் நிலலைகளில் வான மண்டலங்களின் இயக்கங்களையும் பூமிக்குள் வரும் போது பாறைகளாகவும் மண்களாகவும் வைரங்களாகவும் அதனதன் ஈர்ப்பால் என்னென்ன மாற்றங்கள் ஆகின்றது என்பதை குருநாதர் நேரடியாகக் காட்டினார். 

இருபத்தியேழு நட்சத்திரங்களைப் பற்றி அகஸ்தியன் கண்ட உண்மைகளை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை வெளிப்படுத்துகின்றோம்.