ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 30, 2015

அணுவைப் பிளந்தான் விஞ்ஞானி, உணர்வுக்குள் இருக்கும் தீமையைப் பிளந்தவன் மெய்ஞானி

இன்று விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்துள்ளார்கள். மெய்ஞானி உணர்வுக்குள் இருக்கும் தீமைகளைப் பிளந்து உணர்வின் தன்மை ஒளியாகச் சென்றவர்கள்.

அந்த மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் எடுத்தால் இந்த விஞ்ஞான அறிவால் நமக்குள் ஏற்றுக் கொண்ட தீமையின் உணர்வின் தன்மையைப் பிளக்க முடியும்.

அதனைப் பிளந்திடச் செய்வதற்குத்தான் இன்று எமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி மெய் ஞானியின் உணர்வுகள் படர்ந்திருக்கும் நிலையில் அதை உங்களுக்குள் ஆழமாக அந்த ஞானியின் தன்மையைத் தியானித்து அதனின் நிலையை வலுப்பெறச் செய்து அதையே உபதேசிக்கின்றோம்.

உபதேசிக்கும்போது நீங்கள் எந்த அளவிற்குக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ அந்த உணர்வின் தன்மையை ஊழ்வினையாகப் பதிவு செய்யும்போது அதனின் நினைவு கொண்டு இந்த வாழ்க்கையில் விஞ்ஞான அறிவால் நமக்குள் வரும் தீய வினைகளிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ளலாம்.

இந்த உணர்வின் தன்மையை ஊழ்வினையாகப் பதிவு செய்ததை நினைவு கொண்டு நீங்கள் வரிசைப்படுத்தி தியானித்து யாம் உபதேசிக்கும் உணர்வின் தன்மையை உங்கள் உடலுக்குள் வலுப்பெறச் செய்தல் வேண்டும்.

யாம் உபதேசித்ததை மீண்டும் நீங்கள் எண்ணும்போது ஞானியின் உணர்வலைகளை நீங்கள் எளிதில் சுவாசித்து உங்களை அறியாது வந்த தீயவினைகளை நீக்கமுடியும்.

இன்று விஞ்ஞானி விஞ்ஞானத்தின் நிலைகள் கொண்டு அவன் கல்விக்குச் சென்று பாடநிலைகளில் வளரப்படும்போது அணுவைப் பிளக்கும் ஆற்றலின் நிலையை அவன் பெறுகின்றான்.

அதைப் போல நம் உணர்வுக்குள் நஞ்சு கலந்ததை மெய்ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்து நம் எண்ணத்தால் உணர்வுக்குள் இருக்கக்கூடிய நஞ்சினைப் பிளக்க முடியும்.

ஏனென்றால், உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிய
மகரிஷிகளின் உணர்வினை உங்களுக்குள் பதியச் செய்யும்போது
அதையே நீங்கள் பாட நிலையாக எடுத்து
அவர்களின் ஆற்றலை வளர்த்திட முடியும்.

வளர்த்த நிலைகள் கொண்டு மனித வாழ்க்கையில் எப்பொழுது துன்பமோ துயரமோ நேருகின்றதோ அதை உங்களுக்குள் சேராதவண்ணம் தடுத்து நிறுத்த ஓம் ஈஸ்வரா என்று நீங்கள் எண்ணியதை இயக்கிக் காட்டும் அவனையே ஈஸ்வரா என்று எண்ணி உயிரிடம் வேண்டுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் வானை நோக்கி எண்ணி ஏங்குங்கள்.

ஆண்டென்னாவை விண்ணை நோக்கிச் செலுத்தப்படும்போது அதனின்று குவிந்து பூமிக்குள் படர்ந்து கொண்டிருப்பதை டி.வி.யில் தெளிவாக உணர்த்துகின்றது விஞ்ஞானிகலால் உருவாக்கப்பட்ட சக்தி வாய்ந்த ஆண்டென்னா.

இதைப் போல எமது உபதேசத்தைக் கூர்ந்து கவனித்த நிலைகள் கொண்டு உங்கள் கருவிழியின் இயக்கத்திற்குள் ஆற்றல் மிக்கதாக இந்த உணர்வின் தன்மையப் பாய்ச்சுவதே இப்பொழுது நாம் தியானிக்கும் உணர்வின் நிலை.

இதை மனம் உவந்து உங்களுக்குள் பெறவேண்டும் என்று ஏக்க உணர்ச்சியை ஊட்டினால் அது ஜீவன் பெறுகின்றது. அது உங்கள் கையில்தான் இருக்கின்றது. ஏனென்றால்
நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி இதை நான் செய்தேன்.
அதனின் வழிகளில் நான் பெற முடிந்தது.

அவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் இதைப் பதிவாக்கப்படும்போது இதை விண்ணை நோக்கி நீங்கள் எண்ணும்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணி அதை உங்கள் உடலுக்குள் சேர்க்க முடியும்.

அப்பொழுது உங்கள் வாழ்க்கையில் நல்லதை எண்ணியிருந்தாலும் பிறரின் தீமையை விளைவிக்கும் உணர்வினை நுகர்ந்து அறிய வேண்டும் என்ற நிலைகளில் செயல்பட்டிருந்தாலும் அந்தத் தீமைகள் உங்களுக்குள் விளையாதபடி தடுக்க முடியும்.

ஒரு வெண்மையான துணியை நாம் போட்டிருந்தாலும் அழுக்குப்பட்டால் அடுத்து நிமிடமே சோப்பைப் போட்டு அதை வெளுத்துவிடுகின்றோம்.

இதைப் போல தீமையை வென்ற அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் சேர்த்துத் தீமையை விளைவிக்கும் உணர்வைச் சுத்தப்படுத்தும் நிலையே யாம் இப்பொழுது உபதேசிக்கும் இந்த நிலைகள்.

இதைப் போல அடிக்கடி ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று எண்ணினால்
எப்படி சோப்பைப் போட்டுத் தூய்மையாக்குகின்றோமோ இதைப் போல
அந்த ஞானியின் அருள் சக்தியை எடுத்து
நம் ஆன்மாவைத் துடைத்துவிடலாம்.

பிறர் தவறு செய்வதை நாம் உணர்ந்தபின் அதை உணரும்போது நமக்குள் அந்த வேதனையும் வெறுப்பும் எரிச்சலும் கோபமும் நமக்குள் உணர்ச்சிகளைத் தூண்டி உடலைச் சோர்வடையச் செய்கின்றது.

பின் உடலுடன் இது இயக்கிவிட்டால் அதனின் விளைவே அதிகமாகின்றது.

அதனை விளையவிடாது தடுக்க வேண்டுமென்றால் இப்பொழுது உபதேசித்த உணர்வின் தன்மை ஊழ்வினையாக விளைந்து இதைப் போல நாம் கூர்ந்து அந்த தியானத்தின் நிலைகள் வளர்த்துக் கொண்டால் இதுவே தியானம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்கவேண்டும் அந்த மெய்ப்பொருள் காணும் திறன் நாங்கள் பெறவேண்டும் என்ற உணர்வின் ஏக்கத்தை வலுக் கொண்டு தியானித்தோம் என்றால் அதனின் பலனை நாம் அனுபவிக்கலாம்.

November 28, 2015

வெறும் கல்வி ஏட்டுச் சுரைக்காய் தான் – மெய்ஞானத்துடன் ஒன்றி வாழ்க்கையைச் சீர்படுத்த வேண்டும்

நாம் கற்ற கல்வி இந்த உடலுக்கல்ல. கற்கும் கல்வியில் நாம் எதைக் கற்றாலும் கல்வி நமக்கு இந்த உலகை அறிந்திட உதவும். இந்த ஆறாவது அறிவல்ல.
மெய்ஞானத்தின் உணர்வு கொண்டுதான்
கற்ற கல்வியையும் சீராக்க முடியும்.

கல்வி கற்றுணர்ந்தோர் அனைவரும் கரையேறியது இல்லை. அவர்கள் வாழ்க்கையில் வாழ்க்கையைச் சீர்படுத்தும் நிலையும் இல்லை. கற்றவர்கள் அனைவருமே பெரும்பகுதி மனக் குழப்பம் என்ற இந்த நிலையில்தான் இருக்கின்றனர்.

உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதும்
அதனால் பொருள் தேடும் நிலைகளுக்குத்தான்
கற்கும் கல்வியைப் பயன்படுத்துகிறார்கள்.

அதே சமயத்தில், அந்தக் கல்வியின் நிலைகளில் தேடிய செல்வம் செழிப்பாக இருப்பினும் பக்குவத்துடன் பற்று கொண்ட நிலைகளில் குடும்பத்தில் வாழாது வேதனை கொண்ட நிலையில் வாழ்கின்றனர்.

ஏனென்றால், சந்தர்ப்பத்தால் நமக்குள் சேரும் தீமையான உணர்வுகளை அறிந்திடும் நிலையும், அதை நீக்கிடும் அருள் ஞானமும் அங்கில்லை.

தனக்குள் தீமைகள் விளையாது நல்ல உணர்வுகளை வளர்க்கச் செய்யும் ஆற்றலைப் பெறவேண்டும். அதற்கு அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுக்கப் பழகவேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நம் உடலுக்குள் சேர்த்து
பகைமை என்ற உணர்வு நம் உடலுக்குள் சேராது
ஒற்றுமையுடன் இணைந்து வாழும்
இணைந்து வாழச் செய்யும் அருள் உணர்வுகளை
நாம் வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

வெறும் கல்வி ஏட்டுச் சுரைக்காய் தான். ஆகவே, கல்வி கற்றாலும் மெய்ஞானத்துடன் ஒன்றி மனிதனின் வாழ்க்கையைச் சீர்படுத்தும் நிலை வேண்டும்.

ஏனென்றால், மனிதனாக ஆக்கியது உயிர் தான்.
மனிதனான பின் ஆறாவது அறிவை உருவாக்கியதும் உயிர் தான்.

இந்த ஆறாவது அறிவின் தன்மைதான் உயிரைப் போல உணர்வின் தன்மை ஒளியின் அறிவாக நாம் வளர்க்கும் நிலை பெற்றது.

நாளை வரும் எதிர்காலத்தில் நம்மைக் காக்க நமது குழந்தைகளை அருள் உணர்வு பெறும்படி செய்தல் வேண்டும். வளர்ந்து வரும் குழந்தைகளுக்கும் இதைப் போன்றே அறிவுரைகளைக் கூறிடல் வேண்டும்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நீ பெறுவாய்
நீ தெளிந்த மனம் பெறுவாய்
நீ தெளிவான வாழ்க்கை வாழ்வாய்
கல்வியில் உயர்வு பெறுவாய்
உலக ஞானம் பெறுவாய் உலகைக் காத்திடுவாய்
காத்திடும் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வுகளை நம் குழந்தைகளுக்குப் பாய்ச்சிட வேண்டும்.

ஆகவே, நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் வழி செல்வோம். அன்றைய மெய் ஞானிகள் எப்படி வாழ்ந்தார்களோ அவர்களைப் போன்றே மெய் ஞான வாழ்க்கையை நாம் அனைவரும் வாழ்ந்திடும் நிலையாக இதனைச் சீராகப் பயன்படுத்துவோம்.

November 25, 2015

“வேதனை.., வேதனை..,” என்று வேதனையைச் சுவாசித்தீர்கள் என்றால் சிந்திக்கும் திறனை இழந்துவிடுவீர்கள்

ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் நம் உயிர் இயக்குகின்றது.

எதை ஆசைப்படுகின்றோமோ அந்த ஆசையின் உணர்ச்சிகள் அந்த ஆசை நிறைவேறவில்லை என்றால் வேதனை என்ற நிலைகள் வருகின்றது.

அன்றாட வாழ்க்கையில் நம் சக்திக்கு மீறிய நிலைகள் ஒரு செயலைச் செய்ய முடியவில்லை என்றால் என்ன செய்வோம்?

உதாரணமாக ஒரு இடத்தில் போய்க் கொண்டிருக்கிறோம். பெரிய தங்கக்கட்டி கிடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நாம் விட்டுவிட்டுச் சென்றால் அடுத்தவர்கள் எடுத்துச் சென்றுவிடுவார்களே என்று எடுக்க ஆசைப்படுகின்றோம்.

ஆனால், எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் எப்படித் தூக்கிக் கொண்டு செல்வது? நம்மால் சுமக்க முடியவில்லையே என்ற நிலை வருகிறது.

அப்பொழுது சுமக்க முடியவில்லை என்று எண்ணும்போது “ஐய்யய்யோ.., விட்டுவிட்டுப் போகின்றோமே..,” என்ற வேதனை வருகின்றது.

தங்கம் இங்கே இருக்கின்றது, ஆனால் எடுத்துக் கொண்டு போகமுடியவில்லை என்று எண்ணும்போது வேதனை வருகின்றது. அப்பொழுது என்ன ஆகின்றது? நம் சிந்திக்கும் திறன் குறைந்துவிடுகின்றது.

அந்த நேரத்தில் அதை மூடி வைக்க வேண்டும் என்ற நிலை கூட வருவதில்லை. ஆக, அதை மூடி வைக்காமல் வேறு ஒரு பொருளை எடுத்து வருவதற்காக அடுத்தவர்களிடத்தில் போய்ச் சொல்வோம்.

அடுத்தவர்களிடத்தில் சொன்னவுடன், அவர்கள் “அப்படியா..,” என்று கேட்பார்கள்.

நாம் அந்தத் தங்கக் கட்டியை எடுக்கலாம் என்று திரும்பிப் போவதற்கு முன் அவர்கள் ஆளை வைத்து எடுத்துச் சென்றுவிடுவார்கள். அப்பொழுது என்ன ஆகிறது?

“ஐய்யய்யோ நாம் பார்த்தோமே.., எடுத்துச் செல்லாமல் விட்டுவிட்டோமே” என்ற நிலை வருகிறது. இதுவெல்லாம் சந்தர்ப்பத்தால் வரக்கூடிய நிலைகள்.

நம் ஆசையின் நிலைகளில் வாழ்க்கையில் செல்லும்போது இதைப் போன்று நாம் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் எத்தனையோ வந்து நம்மை மோதுகின்றது.

இதிலிருந்தெல்லாம் மனிதன் விடுபட வேண்டுமா இல்லையா..?

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் நுகரும் உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகிறது? நம்மையறியாமல் தீமைகள் எப்படி வருகிறது?

அந்தத் தீமைகளிலிருந்து நம்மை மீட்டிக் கொள்ளும் வழிகள் என்ன? என்பதை அறிவதற்குத்தான் அனுபவம் பெறுவதற்காக குருநாதர் எம்மைக் காட்டுப் பகுதிக்குள் குறைந்தது 20 வருடம் செல்லச் செய்தார்.

அதே மாதிரி நாட்டுக்குள் வந்து கண்டுணர்ந்த அனுபவத்தால் பெற்ற தீமைகளை வென்ற பேராற்றல்களையும் பேருண்மைகளையும் உங்களுக்குள் அந்த அருள் ஞான வித்துக்களை பதிவாக்கிக் கொண்டே இருக்கின்றேன்.

மகரிஷிகள் பெற்ற ஆற்றல்மிக்க சக்திகளையும் அந்த அகஸ்தியன் நஞ்சினை வென்று துருவனாகி, துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அத்தனை நிலைகளையும் சொல்லியுள்ளேன்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நுகர்ந்து எடுக்க்கூடிய வழிமுறைகளையும் சொல்லியுள்ளேன்.

வேதனைகளை நீக்கிடும் ஆற்றல்மிக்க நிலைகளை 20-30 வருடங்களாகச் சொல்லிக் கொண்டு வருகின்றேன். நீங்கள் எத்தனை பேர் தயார் ஆகியிருக்கின்றீர்கள், அருள் வழியில் வளர்ந்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

உங்கள் கஷ்டத்தை உங்களால்தான் (உங்கள் எண்ணத்தால்தான்) போக்கிக் கொள்ள முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள் என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றோம்.

உங்கள் உயிர் கடவுள், உயிரால் உருவாக்கப்பட்ட உடல் ஆலயம், நீங்கள் எதை எண்ணுகின்றீகளோ அதைத்தான் உங்கள் உயிர் உருவாக்குகின்றது.

வாழ்க்கையில் வேதனை வேதனை என்று அதை எண்ணிக் கொண்டிருந்தால் வேதனைப்பட்டு வாழும் விஷப் பிராணிகளாகத் தான் இந்த உடலுக்குப் பின் நம் உயிர் நம்மை உருவாக்கிவிடும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஆகவே, வேதனை வரும்போது அதை எண்ணாமல் எத்தகைய விஷத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும்
துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நீங்கள் நுகர்ந்தால்
அந்த்த் துருவ நட்சத்திரத்தின் மேல் இச்சைப்பட்டால்
உங்கள் உயிர் அதை உருவாக்கி
அதன் ஈர்ப்பு வட்டத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.

நல்லதைப் பெறவேண்டும் என்று கேட்பது உங்களுக்கு ஒரு கஷ்டமா?

தியானவழி அன்பர்களும் சரி, புதிதாக தியானத்திற்கு வருபவர்களும் சரி எம்மிடம் சொல்லும்போது கஷ்டம் கஷ்டம் என்றுதான் சொல்லிக் கேட்டு வருகின்றார்கள்.

எம்மிடம் கேட்கும் போது எப்படிக் கேட்க வேண்டும் என்று நானும் பல தடவை சொல்லிவிட்டேன்.

என் குடும்பம் நன்றாக இருக்கவேண்டும்,
என் குழந்தைள் நன்றாக இருக்க வேண்டும்,
என் வியாபாரம் பெருக வேண்டும்,
என் விவசாயம் செழிக்க வேண்டும்
நான் பார்ப்போர் அனைவரும் நலமாக இருக்கவேண்டும் என்று
இப்படிக் கேட்பது உங்களுக்கு ஒரு கஷ்டமா?

தபோவனத்திற்கு எதற்கு வருகின்றீர்கள்? உங்களால் நல்லதைக் கேட்கவே முடியாதா?

எனக்கு நல்லதாக வேண்டும் என்று வாக்கைக் கேட்டால் அந்த நல்லதாக வேண்டும் என்று வாக்கைக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

சாக்கடைய முன்னாடி வைத்துக் கொண்டு நல்ல மணத்தைக் கொடுத்தால் எப்படி இருக்கும்? நல்ல மணம் வருமோ? சாக்கடையின் மணம்தான் ஜாஸ்தி தெரியும்.

இதைப் போல நம் உடலில் முதலில் நல்லதைச் செய்யவேண்டும், நல்லதைப் பெறவேண்டும், நல்ல நிலை வேண்டும், அந்த அருள் சக்தி எனக்குக் கிடைக்க வேண்டும்.
அந்த அருள் சக்தி வேண்டும் என்று ஏங்கியிருந்தீர்கள் என்றால்
நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று
ஒரு வாக்கைக் கொடுத்தாலே அது பதிவாகும்.

என் குடும்பத்தில் ஒரே கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லி சிலர் வந்தவுடனே அழுகத் தொடங்குகின்றார்கள். சாமியிடம் சென்றால் சரியாகிவிடும் என்று வந்துவிடுகின்றார்கள்.

நான் நல்ல வாக்குகளைக் கொடுக்கும்போது அதை எடுத்தால் தானே சரியாகும்.

அப்பொழுது கஷ்டத்தையே எண்ணிக் கொண்டிருந்தால் நல்லதைப் பெற முடியாதபடி அங்கே தடையாகின்றது. அப்புறம் உங்கள் உடலுக்குள் நல்லது எப்படிப் போகும்?

நீங்கள் கேட்கும் உணர்வு என் உடலுக்குள் வந்து எனக்கே எரிச்சல்தான் வரும். எரிச்சல் கலந்த உணர்வைத்தான் உங்களுக்குக் கொடுக்க நேரும்.

நீங்கள் ஒருவரிடம் அடிக்கடி இதே மாதிரி கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டேயிருங்கள். அதைக் கேட்டு அவர்களுக்கு எப்படி எரிச்சல் வருகின்றது என்று பாருங்கள்.

அப்பொழுது நீங்கள் சொல்வதை அங்கே அவரால் எடுக்க முடியுமோ? முடியாது. அதனால் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் என்ன செய்யவேண்டும்? தபோவனத்திற்கு எதற்காக வருகின்றீர்கள்?

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்,
எங்கள் உடல் நலம் பெறவேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் படரவேண்டும்,
எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் தொழில் செய்யும் இடங்கள் முழுவதும் படரவேண்டும், என்னிடம் பொருள் வாங்குவோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும், அவர்கள் குடும்பம் முழுவதும் நன்றாக இருக்க வேண்டும் என்று பொருள் எடுத்துக் கொடுக்கும்போது இவ்வாறு பிரார்த்தனை பண்ணிக் கொடுங்கள்.

இப்படிச் செய்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களிடம் வந்து கொண்டே இருக்கும். ஏனென்றால் வாழ்க்கையே தியானம். நல்லதே உங்கள் வாழ்க்கையில் தியானமாகின்றது.

என்னை இப்படிப் பேசினானே, இப்படிப் பேசினானே என்று வேதனைப்படும்போது வெறுப்பும் வேதனையும்தான் விளையும் இதுவும் தியானம்தான்.

வீட்டில் பையனை எண்ணி அவன் சேட்டைக்காரனாக இருக்கின்றான், குறும்புத்தனம் செய்து கொண்டேயிருக்கின்றான் என்று இப்படிச் சொல்லக் கூடாது.
அவன் அறிவுள்ளவனாக வருவான்,
தெளிந்தவனாக வருவான், உலகை அறிவான்
அந்த நிலை பெறுவான் என்று இப்படித்தான் எண்ண வேண்டும்.

ஏனென்றால், சிறு வயதில் அவனுடைய பதிவுகள் அவன் எதன் மேல் ஆசைப்படுகின்றானோ அதன் நிலையே இயக்கும். அப்பொழுது அந்த ஆசையைத் திருப்ப வேண்டும் என்றால் நாம் இது மாதிரிச் செய்யவேண்டும்.

அடிக்கடி இதை அவன் செவிகளில் படும்படி இதைச் சொன்னால் அவனுக்குள் பதிவாகின்றது. அதன் வழி அவன் அருள் வழியில் வளர்ந்து வருவான்.

வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிலையிலும் இப்படி நல்லதாக வேண்டும் என்று எண்ணி எடுத்துப் பழகவேண்டும். நமக்குள் வரும் பல கோடி உணர்வுகள் ஒன்றாகி ஒளி என்ற உணர்வானால் தனுசுகோடி.

இந்த உடலுக்குப்பின் யாருடையந் ஈர்ப்பிலும் சிக்காது ஏகாந்த நிலை என்ற பிறவியில்லா நிலை அடைய முடியும். அழியா ஒளிச் சரீரம் பெறமுடியும். இதுதான் “கல்கி”.


அந்த நிலை பெற்றதுதான் துருவ நட்சத்திரமும் அதன் ஈர்ப்பு வட்ட்த்தில் உள்ள சப்தரிஷி மண்டலங்களும். உங்களை அந்த எல்லைக்குத்தான் அழைத்துச் செல்கிறோம். அதற்கே இந்த உபதேசம்.

November 22, 2015

நல்லதைப் பெறவேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள் ஆனால், வழி தெரியாது தவிக்கின்றார்கள் என்றார் குருநாதர்

ஒரு அம்மா என்னிடம் வந்து கேட்கிறது.

எனக்குக் கை கால் குடைச்சலாக இருக்கின்றது. என் பையன் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான், கொடுத்தவர்கள் எல்லாம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் நான் கஷ்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் விட்டு விடு.
எல்லாம் நல்லதாக ஆக வேண்டும் என்று கேள் அம்மா என்றேன்.

மகரிஷிகளின் அருள் சக்தி அந்த அம்மா பெறவேண்டும் என்ற உணர்வுகளைப் பாய்ச்சினேன்.

அந்த அம்மாவிடம் இப்பொழுது எப்படி இருக்கின்றது? ஒரு கரண்ட் பாய்கிற மாதிரி இருக்கின்றதா என்று நான் கேட்கிறேன்.

இல்லைங்க.., பிள்ளைகள் எல்லாம் சொல்வதைக் கேட்கவில்லை, எல்லோரும் எனக்கு எதிர்ப்பதமாக இருக்கின்றார்கள். எனக்கு வியாபாரம் நஷ்டமாகவே ஆகிக் கொண்டிருக்கின்றது என்று இதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டுள்ளது அந்த அம்மா.

யாருக்கு நான் என்ன சொல்லி என்ன பலன் இருக்கிறது? சிரமப்பட்டு அந்தத் தீமைகளை வென்ற அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பதிவு செய்வதற்காக அதைச் செய்கின்றேன்.

நீங்கள் அதை ஏங்கிப் பெற்றால் தான் அந்த ஆற்றல்கள் உங்களுக்குள் கிடைக்கும். தீமைகளை நீங்கள் நீக்க முடியும், கஷ்டங்களயும் போக்க முடியும்.

மைக்குக்கு முன்னாடி நான் பேசுகிறேன் என்றால் பேசுவதுதான் மைக்குக்கு வந்து உங்கள் காதுக்கு வருகிறது. அதை செவி வழி கேட்கப்படும் போது நீங்கள் ஏங்கி பெறுவதுதான் அங்கே உங்களுக்குள் வேலை செய்யும்..

அதை நாம் தெரிந்து கொள்வதற்கு இல்லாதபடி முடியவில்லை. சாமியார்களை எல்லாம் போய்ப் பார்ப்பது எல்லாக் கோவில்களையும் பா\ர்ப்பது கஷ்டங்களைச் சொல்வதுதான்.
எங்கேயாவது யாராவது எதையாவது செய்து கொடுக்கமாட்டார்களா
என்று காசைச் செலவழித்துக் கொண்டு அலையத் தெரியுமே தவிர
நிம்மதி ஏதாவது பெறுகின்றோமா என்றால் இல்லை.

நமது குருநாதர் இதைத்தான் சொன்னார்.

மனிதனுடைய வாழ்க்கையில் நல்லதைப் பெறவேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள். ஆனால் நல்லது பெறக்கூடிய வழி தெரியாமல் தவிக்கின்றார்கள்.

அவர்களுக்கெல்லாம் ஞாபகத்தை ஊட்டுகின்ற மாதிரி 20 வருடம் ஒரு நாள் இரண்டு நாள் இல்லை ஊருக்குள்ளேயும் காட்டுக்குள்ளேயும் அங்கே ரொம்பவும் சிரமப்படுகின்றார்களோ அந்த இடங்களுக்கெல்லாம் குருநாதர் அழைத்துச் சென்று காட்டினார்.

அவர்களுடைய நிலைகள் எல்லாம் எப்படி இருக்கின்றது?
எதனால் இப்படி சிரமங்கள் ஆனது?
அவர்களுக்கெல்லாம் எப்படி இந்தச் சக்தியைக் கொடுக்க வேண்டும் என்ற அனுபவத்தைத் தெரிந்து கொண்டு வருவதற்குத்தான் கஷ்டங்களை குருநாதர் எமக்குக் கொடுத்து அறியச் செய்தார்.

தீமைகளிலிருந்து வென்று நஞ்சினை வென்று ஒளியின் சரீரமான துருவ நட்சத்திரத்தை எனக்குக் காட்டினார். அதை நுகரும்படி செய்தார். துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எனக்குள் சேர்த்து அதை வளர்த்து வரும் தீமைகளை வெல்ல முடிந்தது. உணர்வை ஒளியாக மாற்ற முடிந்தது.

அந்தச் சக்திகளை அந்த ஆற்றலை உலக மக்கள் அனவரும் பெறும் நிலைக்குத்தான் குருநாதர் காட்டிய வழியில் வேதனைகளிலிருந்து விடுபடும் வழிகளை உபதேச வாயிலாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளோம்.

“கஷ்டத்தை எண்ணாமல்” கஷ்டத்திலிருந்து விடுபடவேண்டும் என்ற எண்ணத்தில்
துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைச் சுவாசித்தீர்கள் என்றால்
தக்க உபாயங்கள் கிடைக்கும். வேதனையிலிருந்து விடுபட முடியும்

November 21, 2015

இன்று கத்தி முனையில் தான் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம்...!

விஞ்ஞான அறிவு எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றது. மனிதனின் இயக்கமும் உயிரணுவின் தோற்றமும் காட்டுகின்றது.

இப்பொழுது என்ன செய்கின்றார்கள்? குழந்தை இல்லையென்றால் சீனாவில் அறிவிப்பு கொடுக்கின்றான்.

விந்துக்களைச் சேமித்து வைத்துக் கொள்கிறான்.

யாருக்காவது குழந்தை இல்லை என்றால் “ட்யூப்”ல் வைத்து குழந்தையை வளர்த்துக் கொள்கின்றான். இப்படி விஞ்ஞான அறிவு போய்விட்டது. குழந்தை இல்லை என்று யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

யாருடைய கருவையோ எடுத்துத் தனக்குள் வளர்த்து தன் குழந்தை என்று சொல்கிறான். தத்துக்கு எடுத்து வளர்க்கின்ற மாதிரி தனக்குள் இவ்வாறு வளர்ந்ததை தன் குழந்தை என்று சொந்தம் கொண்டாடிக் கொள்ளலாம்.

இப்படித்தான் விஞ்ஞான அறிவு எங்கேயோ போகிறது.

அதே மாதிரி கருவில் உருவாகும் குழந்தைகளை ஸ்கேன் மூலம் பார்க்கின்றார்கள். அது முதுகு வளர்ந்திருக்கிறாதா? கண் இருக்கின்றதா? மூளை வளர்ந்திருக்கின்றதா? என்று பார்க்கின்றார்கள்.

இப்பொழுது ஸ்கேனில் மனித உடலில் உணர்ச்சிகளைச் சோதிக்கின்ற மாதிரி கருவில் இருக்கும் குழந்தைகளைச் சோதிக்கின்றார்கள். அது ஏதாவது மூளை வளர்ச்சி குறைவாக இருந்தது அதை அவர்கள் வளரவிடுவதில்லை.

ஐந்து மாதத்தில் உறுப்புகள் வளர்வதைப் பார்க்கின்றார்கள். இந்த உறுப்புகள் மாறி வருவதைப் பார்த்தபின் கை இல்லை கால் இல்லை என்று  இதைப் பார்த்தபின் கருவைக் கலைத்து விடுகின்றார்கள்.

இல்லையென்றால் குழந்தை ஊனமாகப் பிறந்தபின் வேதனைப்பட வேண்டியதிருக்கும்.

கருவிலே இருக்கும்போது ஒரு காக்காய் வலிப்பு வந்தவரைப் பார்க்கின்றனர். அந்த வலிப்பின் தன்மை கருவிலே வளரப்படும்போது குழந்தைக்கு அந்த நோய் வருகின்றது.

இதுவெல்லாம் தாய் நுகரும் உணர்வுகள் எப்படியெல்லாம் மாறுகிறது? என்ற நிலைகளை அன்று மெய்ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

இன்று விஞ்ஞானி நிரூபிக்கின்றான்.

இந்த விஞ்ஞானம் நிரூபித்தும் நாம் இன்னும் அஞ்ஞான வழிகளில் சாமி செய்யும், சாமியா செய்வார், அது செய்யும் இது செய்யும், பூஜை செய்தால் வந்துவிடுமா? யாகம் செய்தால் வந்துவிடுமா? என்றால் பாவத்தைப் போக்க முடியாது.

நமக்குள் அருள் ஒளியைக் கூட்டி
நமக்குள் இருளை அகற்றிப் பழகினாலொழிய
தீமைகள் நம்மை விட்டு அகலாது.
நாம் இந்த உடலுக்குள் எதை அதிகமாகச் சேமிக்கின்றோமோ அதன் வழிதான் நம்மைச் செயல்படுத்தும்.

ஆகவே, நாம் இன்று கத்தி முனையில் இருக்கின்றோம். எந்த நேரத்தில் எது நடக்கும் என்று சொல்ல முடியாது. எந்த குண்டு வெடிக்கும் என்று சொல்ல முடியாது.

அது வெடித்தபின் இந்த விஞ்ஞான உலகில் மனிதன் முழுமையாக மனிதனுடைய எண்ணங்கள் அழிந்திடும் பருவம் வருகின்றது.

அன்று அமெரிக்கா ஹிரோஷிமாவில் போட்ட அணுகுண்டு அது விழுந்த இடத்தில் இன்றும் கருவில் வளரும் குழந்தைகள் ஊனமான நிலையில் உருவாகிறது.

விஞ்ஞான அறிவு கொண்டு ஸ்கேன் வைத்துப் பார்த்து அதையும் கருச்சிதைவு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆக, அந்த மாதிரி நிலைகளில் தான் இருக்கின்றோம்.

இதைப் போல இந்த விஷக் குண்டுகள் உலகம் முழுவதற்கும் பரவும் தன்மை வருகின்றது. இந்த அணுகுண்டைக் காட்டிலும் விஷமான அணுக்கிருமிகள் நம் உடலில் உருவாகி, வேதனையாக்கி இந்த உடலையே சீர்குலைக்கச் செய்யும் நிலைகள் வருகின்றது.

அது எந்த நிமிடத்திலும் வரலாம். இத்தகைய உலகில் தான் நாம் இன்று வாழ்கிறோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நமது உயிர் இந்த உடலை விட்டுச் செல்லும்போது நாம் எதைச் சேமிக்கின்றோம்? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நாம் சேமிக்கும் சொத்து அழியாத சொத்தாக இருக்க வேண்டும்.

அதற்குத்தான் இந்தக் காலை துருவ தியானத்தில் அந்த துருவ  நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து உங்களை வளர்த்துக் கொள்ளச் சொல்கிறோம்.

 அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து கூட்டுத் தியானங்களிலும், பௌர்ணமி தியானங்களிலும் நம்முடைய முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து விண் செலுத்தும்படி செய்கிறோம்.

அங்கே அவர்களை இணைக்கும் பொழுது உடல் பெறும் அந்த நஞ்சான உணர்வுகள் அங்கே பஸ்பமாகக் கரைக்கப்படுகின்றது. அவர்கள் உயிரும் உணர்வின் அறிவும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்கின்றது.

பிறவியில்லா நிலை அடைந்து உயிருடன் ஒன்றி
அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றனர்.
இது மனிதன் தான் செய்ய முடியும்.

நம் முன்னோர்களை அனுப்பினால் அவர்கள் உணர்வுகள் நமக்குள் இருப்பதால் அதன் துணை கொண்டு நாம் அடிக்கடி துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும்  சக்திகளை எளிதில் பெற்று அதை வைத்து நாம் தீமைகளை நீக்கலாம்.