ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 25, 2018

நாம் எண்ணிய சக்தியைப் பெறுவது எப்படி...?

இன்று ரேடியோக்களிலோ மற்ற டி.வி.களிலோ ஒலி/ஒளிப்பரப்புச் செய்யும் உணர்வின் அலைகளை (மின் காந்த அலைகளை) ஒரு இயந்திரத்தில் அதே அலை வரிசையில் வைத்துப் பட நிலைகளையும் ஒலி அலைகளையும் நாம் பார்க்கின்றோம் கேட்கின்றோம்.

இதைப் போன்றுதான் ஒவ்வொரு மனிதனும் நாம் பேசும் சாதாரணப் பேச்சாக இருந்தாலும் சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து அலைகளாகப் படரச் செய்கின்றது.

ஞானிகள் மகரிஷிகள் அவர்கள் உடல்களில் எடுத்துக் கொண்ட ஆற்றல் மிக்க சக்திகளும் அவர்கள் உடல்களிலிருந்து வெளிப்படுத்திய உணர்வலைகளும் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக இன்றும் நமக்கு முன் சுழன்று கொண்டிருகின்றது.

அந்த மகரிஷிகளின் ஆற்றல் மிக்க அச்சக்தியைப் பெறுவதற்குத்தான் தியானம் என்ற நிலைகளில் நம் குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு செயல்படுத்திக் கொண்டு வருகின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெற வேண்டும் என்றால் நமது உயிரின் ஆற்றலையும் அது நமக்குள் இயக்கக்கூடிய சக்தியையும் உணர்ந்தறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு மேக்னட்டில் காந்தத்தை அதிகமாகக் கூட்டச் செய்யும்போது அந்தச் சுழற்சியின் வேகத்தைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றது.

அதைப் போல நம் உயிரின் இயக்க ஓட்டத்தின் நிலைகள் கொண்ட நமக்குள் காந்தப் புலனை அதிகமாகக் கூட்டினால் அதன் வழி கொண்டு நமக்குள் ஆற்றலின் சக்தியை பெருக்கச் செய்ய முடியும்.

குற்றம் செய்தவரை எண்ணும்போது இந்த உணர்வுகள் நமக்குள் இயக்கியவுடன் கோப உணர்ச்சிகள் மிகவும் துரிதமாக இயக்குகின்றது.

இதைப் போன்றுதான் நம் உயிரின் நினைவலைகளை அந்த மகரிஷிகளின் பால் செலுத்தி மெய் ஒளி பெற வேண்டும் என்று ஆற்றலின் நினைவை நாம் கூட்டும் போது
1.இயக்கச் சக்தியின் ஓட்டத்தை அதிகமாக கூட்டி
2.நாம் “எண்ணிய சக்தியைப் பெறக்கூடிய தகுதி…” பெறுகின்றோம்.

ஆகவே இதை நினைவில் கொண்டுதான் இயக்கப்பட வேண்டும். எட்டாத தூரத்தில் விண்ணிலே மகரிஷிகள் இருந்தாலும் இந்த முறையைக் கையாண்டால் அவர்களுடன் நாம் தொடர்பு கொள்ள முடியும்.

ரேடியோ டி.வி. போல்
1.(LIVE) நேரடியாக அந்த அலையின் தொடரிலே உணர முடியும்.
2.அவர்கள் துணை கொண்டு இயக்கவும் இயங்கவும் நம்மால் முடியும்…!

நம்மைக் காக்கும் ஆத்ம சுத்தி:-
தினசரி நாம் உடல் அழுக்கைப் போக்கி விடுகின்றோம். துணிகளில் பட்ட அழுக்கினைத் துவைத்து விடுகின்றோம்.

ஆனால் நம் உணர்வுகளில் (ஆன்மாவில்) படும் அழுக்குகளைப் போக்க ஞானிகள் காட்டிய முறையைக் கடைபிடிக்கத் தவறி விட்டோம்.

அன்றாட வாழ்க்கையில் நம்மை அறியாது எத்தனையோ நிலைகளில் குடும்பத்திலும் சரி தொழிலும் சரி வேலை பார்க்கும் இடங்களிலும் சரி
1.ஒருவருக்கொருவர் பகைமையாகி விடுகின்றது.
2.நம் மன அமைதியைக் குலைத்து விடுகின்றது.

சிறிது நேரம் அமைதியாக இருந்தாலே அந்த எண்ணங்கள் நமக்குள் மேலோங்கி வந்து சிந்தித்துச் செயல்படும் நல்ல உணர்வுகளை மாற்றுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் பிறர் மேல் உள்ள பகைமைகளை எண்ணாது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அதை வளர்க்க வளர்க்க இந்த உணர்வின் தன்மை நமக்குள் வலுப் பெற வலுப் பெற நம்மை எண்ணும்போதெல்லாம் கடும் ஆயுதமாக அவர்களை மாற்றும்.

இதை நுகர்ந்தார்கள் என்றால் அவர்கள் அறிவின் நிலையை மடக்கும். அங்கே தீமையின் நிலையை செயலற்றதாக மாற்றும்.

அவர்கள் சிந்தித்தால் சிந்தித்த வினையின் தன்மை கொண்டு நன்மை அடைவார்கள். இல்லையென்றால்
1.அவருக்குள் விளைந்த உணர்வுகள் அனைத்தும் ஒடுங்கி
2.பிறப்பின் உண்மையை அவர்கள் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.
3.இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

இந்த மனித வாழ்க்கையில்
1.நாம் தீமையைப் பார்க்காமல் இருக்க முடியாது.
2.தீமை என்று உணரவில்லையென்றால் தீமையில் இருந்து விடுபட முடியாது.
3.ஆனால் தீமையை நுகரும் பொழுது அதை ஜீவ அணுவாக மாற்றி விடுகின்றது நமது உயிர்.

அந்தத் தீமையின் உணர்வுகள் மீண்டும் மீண்டும் நமக்குள் வந்தே சேரும். அப்பொழுதெல்லாம். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிரிடம் கட்டளையிட்டு அந்த உணர்வின் தன்மையை ஈர்ப்பின் தன்மை இல்லாது துடைத்தல் வேண்டும்.

ஞானிகள் காட்டிய முறைப்படி பிறரின் உணர்வுகள் நமக்குள் பதிவாகாதபடி தடைப்படுத்த வேண்டும். சந்தர்ப்பத்தால் வாழ்க்கையில் வரும் தீமைகளை நாம் அடிக்கடி தூய்மைப்படுத்தல் வேண்டும்.

இந்த உணர்வை ஒட்டி வரும் போதுதான் நம்மைக் காத்திடும் நிலையாக வளர முடியும்.