ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 26, 2024

“சதமில்லாததை எல்லாம்” நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை

“சதமில்லாததை எல்லாம்” நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை

 

யாம் உங்களுக்கு கொடுக்கும் அரும்பெரும் சக்திகளை நீங்கள் சீராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்.. எங்களை அறியாது சேர்ந்த இரத்தக் கொதிப்பு நீங்க வேண்டும்… அதை நீக்கும் அரும்பெரும் சக்தி நாங்கள் பெற வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும் என்று ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடமாவது தியானிக்க வேண்டும்.

உதாரணமாக ஒருவருக்கொருவர் நண்பர் என்று இருக்கப்படும் பொழுது நண்பனுக்கு நன்மை செய்தான்… என்றால் வெகு தொலைவில் இருந்தாலும் விக்கல் ஆகிறது… துரோகம் செய்தான் என்றால் புரையோடுகிறது.

ஆனாலும் தியானம் எடுத்துக் கொண்ட பின் யாம் உபதேசிக்கும் உணர்வுகள்… உங்களுக்குள் பதிவான அந்த அரும்பெரும் சக்தியை நீங்கள் சீராகப் பயன்படுத்தி
1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
2.துருவ மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
4.எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்
5.சர்வ நோய்களையும் நீக்கிடும் அரும்பெரும் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
6.எங்களுக்குள் அந்த நோய் நீக்கும் சக்தி விளைய வேண்டும் என்று
7.திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்ப… அருள் உணர்வுகளை உடலுக்குள் சேர்க்க வேண்டும்

கணவன்… மனைவிக்கு இது போன்று செயல்படுத்த வேண்டும். மனைவியும்… கணவனுக்கு இதைப் போன்று எண்ணி இந்த உணர்வுகளைப் பாய்ச்ச வேண்டும்.

கணவர் உடலில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்… நோய் நீக்கக்கூடிய சக்தி அவருக்குள் வளர வேண்டும்… அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று
1.இப்படி இருவருமே ஒருவருக்கொருவர் எண்ணிப் பழகுதல் வேண்டும்
2.அடிக்கடி இவ்வாறு எடுத்துக் கொண்டு வந்தால் இருவருமே உடல் நலத்துடன் வாழ முடியும்.

சர்க்கரை நோயோ… ஆஸ்த்மாவோ இருந்தால் “அந்த நோய்களை மறந்து விட்டு” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… உடல் நலம் பெறும் சக்தி பெற வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடலில் எந்த நோய் இருந்தாலும் அது நீங்க வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும்…
1.நோய் நீக்கும் அருல் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் பெருக வேண்டும் என்று
2.திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்ப இந்த நினைவுகளை எடுத்து உடலில் செலுத்துங்கள்.
3.நாளடைவில் நோய்கள் நீங்கும்… துருவ நட்சத்திரத்தினுடைய ஆற்றல் அதிகமாகப் பெருகும்.

இப்படிப் பெருக்கி பழகிக் கொண்டால்தான் விஞ்ஞானத்தால் இனி வரக்கூடிய நஞ்சின் தன்மையை நாம் அகற்ற முடியும்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் உணர்வை வளர்த்துக் கொண்டால் இந்த உடலை விட்டு நாம் செல்லும் போது உணர்வின் ஒளியாக மாறி அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று நாம் வாழ முடியும்.

ஏனென்றால் இந்தப் பூமியில்
1.நமக்கு இந்த உடல் சதம் அல்ல… சேர்க்கும் சொத்தும் நமக்குச் சதம் அல்ல
2.சதம் இல்லாததை எல்லாம் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

ஆனாலும்… சதமான நிலைகளைப் பெறுவதற்கு இந்த உடலைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். இந்த உடலில் இருந்து ஓரளவுக்கு மகரிஷிகள் உணர்வுகளை முழுமையாகப் பெறும் வரையிலும் உடலையும் பாதுகாக்க வேண்டும்.

உடலைப் பாதுகாக்க வேண்டும் என்றால் மகரிஷிகளின் அருள் சக்திகளை அதிகமாக நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்
1.அப்படி வளர்க்கப்படும் பொழுது உடலையும் அது பாதுகாக்கின்றது
2.இந்த உடலில் இருந்து அருள் ஒளி பெறும் தகுதியையும் பெருக்கிக் கொள்ள முடிகின்றது
3.இரு மடங்கு நமக்கு அந்தச் சக்தி கிடைக்கின்றது.

இந்த தியானத்தை அவசியம் நீங்கள் அனுதினமும் கடைப்பிடித்துப் பழகுங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

இதற்கு முன் நம்மை அறியாது சேர்ந்த தீயவினைகள் எதுவாக இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் அதிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும் என்று தான் எண்ணிப் பழக வேண்டும்.

அந்தச் சக்தியை உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்குத் தான் உங்கள் ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாக மதித்து
1.ஒவ்வொரு உயிரும் அந்த சக்தி பெற வேண்டும்
2.அந்த சக்தியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று
3.குரு வழியில் ஐக்கிய உணர்வு கொண்டு அருள் உணர்வுகளைப் பாய்ச்சிக் கொண்டே உள்ளேன் (ஞானகுரு).

அதை நீங்கள் சீராகப் பயன்படுத்தி… எதிர்காலத்தில் வரக்கூடிய தீமையிலிருந்து விடுபடும் சக்தியை வளர்த்து… உலகைக் காத்திடும் மெய் ஞானிகளாக நீங்கள் வளர்ந்திட வேண்டும் என்று குருவின் ஆணைப்படி நான் செயல்படுத்துகின்றேன்.

தான் வேறு… தன் ஆத்மா வேறு…! என்ற எண்ணமே மனிதனுக்கு எழுவதில்லை

தான் வேறு… தன் ஆத்மா வேறு…! என்ற எண்ணமே மனிதனுக்கு எழுவதில்லை

 

மனிதனாகப் பிறந்து வளர்ந்து சகல சம்பத்தும் பெற்று சௌபாக்கியமுடன் வாழ வேண்டும்… சகல சுகங்களையும் அனுபவிக்க வேண்டும்…! என்ற எண்ணத்தில் தான் ஒவ்வொரு மனிதனும் வளரும் நிலையிலேயே எண்ணுகின்றான்.

1.அந்நிலையிலேயே பேராசை கொண்டும் எண்ணிவிடுகின்றான்.
2.அந்தப் பேராசையினால் வருவது தான் சகல கஷ்டங்களும் பிணிகளும் பீடைகளும்.
3.அவன் எண்ணத்திலேயே தான் அவனுக்கு எல்லாமே வருகிறது.

தான் வாழ வேண்டும்… தன் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும்… வறுமை இல்லாத வாழ்க்கை வேண்டும்… தன்னை ஒட்டியுள்ள தன் சந்ததிகள் என்றும் இன்பமுடன் வாழ வேண்டும்…! என்ற எண்ணத்தில் தான் பல கஷ்டங்கள் பட்டு பல செல்வங்கள் சம்பாதித்து தான் இறந்த பிறகும் தான் குடும்பத்தார் நல்ல நிலையில் வாழ வேண்டும்…! என்று சொத்து சுகத்தைச் சேர்த்து விட்டுச் செல்கின்றான் மனிதன்,

1.ஆனால் தான் பிறந்து தன் ஆத்மாவிற்கு என்ன நிலையைத் தேடிக் கொள்கிறான்…?
2.தான் வேறு… தன் ஆத்மா வேறு…! என்ற எண்ணமே மனிதனுக்கு எழுவதில்லை.

தன் ஆத்மாவிற்கு நல்ல நிலை ஏற்படுத்திவிட்டால்… நல்ல நிலை என்பது இன்று தான் வாழும் வாழ்க்கையில் பல ஜெப நிலைகளைப் பெற்று இந்த உடல் வேறு ஆத்மா வேறு என்ற நிலை தெரிந்து இந்த உடலிலேயே தன் ஆத்மாவுக்குண்டான சகல சக்தியையும் தன் ஜெப நிலையில் ஏற்றச் செய்தால்
1.உடலை விட்டு ஆன்மா பிரிந்து சென்றாலும்
2.ஆவி நிலையில் அல்லல்படாமல் பெரும் “தெய்வீக நிலையை” அந்த ஆத்மா பெற்றுவிடும்.

இந்த உடலுடன் உள்ள பொழுதே அந்த ஆத்மாவிற்கு அந்தச் சக்தி நிலையை நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமப்பா…!

1.நம் எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் தானப்பா
2.நம் ஆத்மாவிற்கு நாம் வழங்கும் ஜெப நிலையை ஏற்றுக் கொள்ளும் தன்மை பெற முடிகின்றதப்பா..!

உடலுடன் உள்ள பொழுது எந்தக் கெட்ட அணுவும் அணுகாதபடி எந்தத் தீய சக்திகளும் அணுகாமல் எந்தத் தீய சக்திகளுக்கும் அடிபணிந்து அடிமையாகாமல்
1.தன் எண்ணத்தில் எவன் ஒருவன் உயர்ந்து நிற்கின்றானோ
2.அவனை எந்தத் தீய சக்திகளும் தீமையான அணுக்களும் வந்து அணுகிடாதப்பா…!

ஏனென்றால்..
1.நலிந்தோன் இதயத்திற்கு மேலும் மேலும் நலிந்த நிலை தான் வந்து அண்டிடும்.
2.நல்லோன் இதயத்திற்கு நல்ல நல்ல நிலைகள் தான் வந்து அணுகிடும் அப்பா…!

ஒருவன் எண்ணத்தில் எந்த நிலையில் இருக்கின்றானோ அந்த நிலையில் உள்ள அணுக்கள் தான் அவனை வந்து தாக்கிடும். (பூவின் வாசனை கருவாடு வாசனை கதை போல் தான்…!)

மனித உடலில் உள்ள பொழுதே இப்பொழுது நாம் உண்ணும் உணவும்.. உடுக்கும் உடையும்… வாழும் வாழ்க்கையும்… அன்றன்று மறைவது தான்..! என்ற எண்ணம் மக்களுக்குத் தோன்றி நாம் சேமிக்கும் சொத்தெல்லாம் நம் ஆத்மாவுக்கு எந்த நிலை…? என்று புரிந்து சேமித்து வைக்க வேண்டுமப்பா…!

1.நாம் வேறு நம் ஆத்மா வேறு.
2.அந்த ஆத்மாவில் ஆண்டவன் தான் கலந்துள்ளான்.
3.நம் உடலில் அந்த ஆத்மாவுடன் அவ்வாண்டவன் கலந்து குடியிருக்கின்றான் என்ற எண்ணம் மட்டும் ஒவ்வொருவர் மனதிலும் நிலைத்திருக்க வேண்டுமப்பா..!

காலம் அழிந்தாலும் நம் ஆன்மா அழிவதில்லை. இந்த உடலில் நாம் அந்த ஆத்மாவிற்கு எந்த நற்காரியத்தைச் சேர்த்து வைக்க முடியுமோ அந்த நற்பயனை நாம் சேமித்து வைத்திட வேண்டுமப்பா…!