ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 30, 2016

உலகை உய்விக்கும் வழி

பலருடைய இச்சைகளிலும் பல தீமைகளிலும் பல மதங்களின் இணைப்பிலும் அரசியல் பேத நிலைகளிலும் நாம் வாழும் வாழ்க்கையில் நமக்குள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் விளைந்திட்ட உணர்வின் தன்மைகள் கொண்டு நாம் மீள முடியாத துயரத்தில் சிக்கியிருக்கின்றோம்.

நம் காற்று மண்டலம் மிகுந்த நச்சுத் தன்மையாக இருக்கின்றது. உலக மக்களின் அறிவின் தன்மையில் மெய் ஒளி காணும் தன்மை மறைந்துவிட்டது.

இன்றைய உலகில் மன பேதம் இன பேதம் மொழி பேதம் அரசியல் பேதம் என்ற நிலைகள் மனித வாழ்க்கையில் உருப் பெற்று வளர்ந்துள்ளது. 

அதன் வழிகளில் மனிதனை மனிதன் கொல்லும் நிலைகளும் இரக்கமற்ற செயல்களில் சிறு குழந்தைகளைக் கூடக் கொன்று இரசிக்கும் உணர்வின் நிலைகள் தான் மனிதனுக்குள் விளைந்து இருக்கின்றது.

அதே சமயத்தில் மகரிஷிகள் காட்டிய அருள் வழிகள் அனைத்தும் காலத்தால் மறைந்து விட்டது. மனிதர்களுக்கு அதனை அறியும் தன்மையே அற்றுப் போய்விட்டது.

விஞ்ஞான அறிவால் பெரும் இருண்ட உலகமாக நமது பூமி மாறி வரும் இவ்வேளையில் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் தீமைகளின் தன்மையைப் பிளந்து நம் உணர்வின் தன்மையை மெய் ஞான உலகமாக நாம் மாற்ற முடியும்.

நமக்குள் விளைந்திடும் உணர்வுகளால் பிற்கால சந்ததிகளின் நிலைகளும் மெய்ஞான உலகைச் சிருஷ்டிக்க முடியும். உங்கள் குடும்பத்தைச் சார்ந்தோரும் இந்த நிலை பெறுவார்கள்.

குடும்ப வாழ்க்கையில் அருள்ஞானத்தைப் பின்பற்றி துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை நாம் ஈர்த்தெடுத்துக் கூட்டமைப்பாகத் தியானித்தோம் என்றால் அந்தச் சக்தி கருவில் வளரும் குழந்தைகளுக்குக் கிடைக்கும்.

விஞ்ஞான அறிவால் ஏற்படும் தீமைகளை அழித்திடும் உணர்வின் தன்மை கொண்டு மெய்ஞானியின் உணர்வில் வளர்ந்து உலகில் இருள் சூழ்ந்த நிலைகளை அழித்திடும் தன்மை பெற்ற குழந்தைகளை நாம் உருவாக்க முடியும்.
மகரிஷிகள் தோன்றுவார்கள்
ஆகவே, கருவிலே விளையும் குழந்தைகளுக்கு அந்த மெய்ஞானிகளின் உணர்வைப் “பதிவு செய்..,” என்றார் குருநாதர்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வின் ஆற்றல் இங்கே விளைய விளைய இருள் நீக்கிப் பொருள் காணும் தன்மை வளரும். இதன் உணர்வு கொண்டு குழந்தைகள் பிறக்கப் பிறக்க மகரிஷிகள் தோன்றுவர்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உலகில் விளையும், “இந்த உலகம் உய்யும்” என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்தியுள்ளார்.

திருஞான சம்பந்தர் நான்கு வயதிலே அருள்ஞானத்தின் நிலைகளை எப்படிப் பெற்றாரோ இதைப் போல இக்காலங்களில் தியானம் செய்யும் குடும்பங்களில் கருவுற்று வளரும் குழந்தைகள் அனைத்தும் ஞானக் குழந்தைகளாகப் பிறக்கும்.

அவர்கள் வளர வளர நமக்குப் பாதுகாப்பின் நிலைகள் உருவாகும்.

“தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொன்ன அகஸ்தியமாமகரிஷி கண்டுணர்ந்த உணர்வுகள் இந்தக் குழந்தைகளிடம் விளைவதைக் காணலாம்.

மனிதனாக இருக்கும் நாம் எதை எண்ணுகின்றோமோ அவை அனைத்தையும் நம் உயிர் (ஈஸ்வரன்) கடவுளாக நின்று அந்த உணர்வின் சத்தை உடலாக்குகின்றது.

நாம் ஒரு நெல்லைக் கொண்டு பயிர் செய்தோம் என்றால் அந்தப் பயிரின் தன்மைகள் பல நெல்களாக விளைச்சல் தருகின்றது. ஆகவே, அருள் உணர்வின் தன்மைகளை நமக்குள் பெருக்கிக் கொள்ள நாம் தியானிப்போம்.

எங்கள் குடும்பங்களில் கருவில் வளர்ந்து வரும் குழந்தைகள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா.

எங்கள் குழந்தைகள் உலக அறிவின் ஞானம் பெற அருள்வாய் ஈஸ்வரா.

எங்கள் குழந்தைகள் உலகில் இருளான உணர்வுகளை நீக்கிடும் அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா.

எங்கள் குழந்தைகள் உலகில் பொருளறிந்து செயல்படும் திறன் பெற அருள்வாய் ஈஸ்வரா.

எங்கள் குழந்தைகள் உலகைக் காத்திடும் அருள்ஞானம் பெற அருள்வாய் ஈஸ்வரா.

எங்கள் குழந்தைகள் அருள் மகரிஷிகளின் அருள் ஞான சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா.

உலகில் என்றென்றும் இந்தக் குழந்தைகள் மகரிஷிகளாக வளர்ந்து துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் உலகைக் காத்திடும் நிலைகள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
தியானமும் தவமும்
மன பேதமின்றி மொழி பேதமின்றி மத பேதமின்றி அரசியல் பேதமின்றி நாங்கள் வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

எந்த ஆட்சி இருந்தாலும் மன பேதமில்லாது அரசியல் பேதமில்லாது மக்களுக்காக ஆட்சி புரிந்திட அருள்வாய் ஈஸ்வரா.

மனிதர்களைக் காத்திடும் எண்ணம் ஓங்கி வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

மனிதர்களுக்குள் அறியாது சேர்ந்த தீயவினைகள் அனைத்தும் அகன்றிட அருள்வாய் ஈஸ்வரா.

மனிதனை மனிதன் என்று மதித்திட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இந்தப் பூமி முழுவதும் படர்ந்து விஞ்ஞான அறிவால் காற்று மண்டலத்தில் கலந்துள்ள நச்சுத் தன்மைகள் அகன்றிட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி விண்வெளியிலும் பரவிப் படர்ந்து விஞ்ஞான அறிவால் ஏற்பட்ட நஞ்சின் தன்மை விண்வெளியில் கரைந்திட அருள்வாய் ஈஸ்வரா.

 இவ்வாறு நாம் தியானித்து ஏங்கி எடுக்கும் இந்த உணர்வுகள் உலக மக்கள் அனைவரின் உடலிலும் படர வேண்டும் என்று தியானிப்போம். கூட்டுத் தியானங்களில் தியானிப்போம்.

இதே உணர்வின் நினைவு கொண்டு இரவு படுக்கச் செல்லும் முன்னும் காலையில் எழுந்தவுடன் எல்லோரும் தியானித்து இனி வரும் காலங்கள் அருள் உலகமாக மெய் உலகமாக உருவாகிவிட வேண்டும் என்று தவமிருப்போம்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை நமக்குள் பெற்று இந்தப் பூமியில் படர்ந்துள்ள தீமையான சக்திகளை அகற்றிடும் நிலையாக நாம் இனிமேல் செயல்படுவோம் என்று உறுதி கொள்வோம்.

இதைப் படித்துணர்ந்தோர் குடும்பங்களில் கருவுற்றிருந்தால் மகரிஷிகளின் அருளாற்றலை எடுத்து அருள் ஞானக் குழந்தைகளை உருவாக்குங்கள்.

அவர்களின் எண்ணத்தால் வலுக் கொண்ட நிலை கொண்டு உலகில் தீமைகளை அகற்றிடும் ஞானிகளாக பெரும் மகரிஷிகளாகத் தோன்றிடுவார்கள்.

அருள்ஞான மகரிஷிகளின் நிலைகள் அங்கே விளைந்திடும்.

அதன் வழிகளில் நாம் பிறவியில்லா நிலை அடைவதற்கும் அடுத்து வரும் நிலைகளைப் புனிதப்படுத்தும் நிலையாக உருப் பெரும்.

ஆகவே, துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளைப் பெறுவோம். நம் பேச்சால் மூச்சால் கூட்டுத் தியானத்தின் ஒளி/ஒலி அலைகளால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இந்தப் பூமியில் படரச் செய்து தீமைகள் உருவாக்கும் சக்திகளை மறையச் செய்வோம்.

நம் எண்ணத்தால் நம்மைக் காப்போம்
நம் எண்ணத்தால் நம் குடும்பத்தைக் காப்போம்
நம் எண்ணத்தால் நம் ஊரைக் காப்போம்
நம் எண்ணத்தால் நம் நாட்டைக் காப்போம்
நம் எண்ணத்தால் நம் தாய் பூமியைக் காப்போம்.
ஓம் ஈஸ்வரா குருதேவா.., ஓம் ஈஸ்வரா குருதேவா.., ஓம் ஈஸ்வரா குருதேவா

August 28, 2016

கெட்டது நமக்குள் வராது, நம்மையறியாது வரும் இருள் நீங்கவேண்டும் என்று தியானிப்பதுதான் “தியானம்”

கெட்டது உங்களுக்குள் வராது தடுத்துக் கொள்ளும் நிலையாக அந்த அருள் ஞானிகளின் உணர்வு நாங்கள் பெறவேண்டும், அந்த உணர்வின் சக்தி  பெறவேண்டும், எங்களை அறியாது வரும் இருள் நீங்க வேண்டும் என்று தியானிப்பது தான் தியானம்.

ஆக, நாம் வாழ்க்கையில் நாம்  நல்லதை எண்ணிச் செயல்பட்டாலும், பிறருடைய துன்பங்களை உணர்ந்து தான் நாம் செயல்படுகின்றோம். சிலர் துன்பப்படுவதைக் கேட்டுணர்ந்து அல்லது பார்த்துணர்ந்து நாம் செயல்படும் போது அந்த உணர்வை அறிகின்றோம்.

ஆனால் அவருக்கு உதவி செய்கின்றோம். அவர் உடலில் இருந்து தீமையான உணர்வுகள் நமக்குள் வந்து நம் நல்ல உணர்வை அழித்து விடுகின்றது. ஆனால் அந்த உணர்வை நாம் துடைக்க வேண்டும்.

நல்ல சட்டையைப் போட்டுச் சென்றாலும் அழுக்கு வந்த பின் துவைத்து நாம் சுத்தப்படுத்தி வெளுத்துக் கொள்கின்றோம்.

இதை போல நம் நல்ல உணர்வுக்குள் பிறர் படும் துயரமான உணர்வுகள் கேட்டறிந்து அது அழுக்காகப் படிந்து விட்டால், அந்த ஞானிகள் துடைத்த உணர்வை நம் உடலுக்குள் செலுத்தி இதைத் துடைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அந்த ஞானிகளின் ஆற்றலை எடுக்க வேண்டும் என்றால் முதலில் நம் மூதாதையர்களை நாம் விண் செலுத்த வேண்டும். கூட்டுத் தியானம் இருந்து உணர்வின் சக்தியை ஒங்கச் செய்து உணர்வின் அலைகளுக்குள் நாம் அந்த ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும்.

அப்படி விண் செலுத்தி விட்டால் அந்த அந்தக் குடும்பத்தில் உள்ளோர் இதைப் போல எண்ணினால் விண்ணின்  ஆற்றலைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

அதே சமயத்தில் உங்களை அறியாது வந்த தீமைகளை நீக்கிடும் உணர்வின் ஆற்றல் உங்களுக்குள் இது விளையும். அதற்குத் தான் கூட்டுத் தியானங்களை இங்கே அமைத்துள்ளோம்.
 
இங்கே தபோவனத்திற்கு வரக்கூடியவர்கள் இந்தத் தியான மண்டபத்தில் அமர்ந்து, அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும். என் உடல் முழுவதும் படரவேண்டும் என்ற ஏக்கத்தினை செலுத்தித் தியானிக்க வேண்டும்.

உங்கள் வாழ்க்கையில் எதையெல்லாம் நன்மை பெறவேண்டுமோ, என் பார்வை நல்லதாக வேண்டும், என் சொல்லில் இனிமை பெறவேண்டும், என்னைப் பார்ப்போருக்கு நல்ல உணர்வு பெறவேண்டும் என்று எண்ணவேண்டும்.

யாரையெல்லாம் எண்ணி அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தியால் நலம் பெறவேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ அந்த உணர்வு அது உங்களுக்குள் விளைகின்றது.

அடுத்து நீங்கள் அவருடன் பேசி உறவாடப் போகும் போது இந்தச் சொல்லின் தன்மை அங்கே பட்டு அவர்கள் அறியாமை நீங்கும் தன்மை ஏற்படும்.

ஆகவே, ஞானிகள் கண்ட இந்த வழியில் இங்கே வருவோர் அனைவருமே இதை போல நீங்கள் தியானிப்பது நல்லது.

தீமையான உணர்வுகளை வேக வைத்து அதிலுள்ள நஞ்சினை நீக்கி ஒளியின் உணர்வாக மாற்ற முடியும்

மனிதனின் உடலிலே நாம் எத்தகைய உணவை உட்கொண்டாலும் அதிலே சிறிதளவு நஞ்சு இருந்தாலும், அந்தச் சிறிதளவு நஞ்சினை நீக்கிடும் செயலாக நம் உடல் அமைகின்றது.

நாம் உணவாக உட்கொள்ளும் அந்த உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சினை நம்முடைய உடல் மலமாக மாற்றி விடுகின்றது. மலம் நாற்றமாகின்றது, நல்லதை உடலாக்குகின்றது.

நல்ல உணர்வினை நம் உடலாக்கி, அந்த உடலிலிருந்து வரக்கூடிய அந்த நல்ல எண்ணங்களைக் கொண்டுதான் அந்த வலுக் கொண்டு நம் உடலிலே சேர்க்கும் நஞ்சினைப் பிரித்திடும் அந்த எண்ணங்கள் நமக்குள் உருவாகின்றது.

அதனின் செயலாகச் செயலாக்கி நஞ்சைப் பிரித்து அதைச் சிறிதளவாகக் குறைத்து, அதை அடக்கி மனிதர்கள் நாம் உணவாக உட்கொள்கின்றோம்.

இவ்வாறு நாம் உணவை உட்கொள்கின்றோம். உடல் அதில் மறைந்துள்ள நஞ்சினைப் பிரிக்கின்றது.

ஆனால், அதே சமயத்தில் நஞ்சு கொண்ட மனிதர்கள் பேசும் உணர்வினை, பிறர் செய்யும் தீமையினுடைய நிலையினை நாம் நுகர்ந்து அறியபப்டும்போது, அந்த உணர்வின் தன்மை நமக்குள் நஞ்சாகக் கலந்துவிடுகின்றது. 

ஆனால் அதை நீக்கும் செயலற்றுவிட்டால் அவர்கள் பேசும் நஞ்சான உணர்வு நமக்குள் நல்ல குணங்களுக்குள் கலந்து நம் உடலுக்குள் நல்ல உணர்வுகள் அனைத்தும் வேதனைப்படும் செயலையே செயல்படுத்தும் நிலையாகிவிடும்.

அத்தகையை நஞ்சான உணர்வுகளைப் பிரிக்கின்றோமா..,? அதை நீக்கும் அறிவு நமக்குள் இருக்கின்றதா..,? சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

நாம் காய்கறிக்குள் இருக்கும் நஞ்சினை, நம நமப்பினை அந்த விஷத்தின் தன்மைகளைக் கலைத்து விட்டு, காய்கறிகளைப் பக்குவமாக்கி நாம் சுவைமிக்கதாகப் படைக்கின்றோம்.

இந்த மனித வாழ்க்கையில் ஒருத்தர் வெறுப்புடன் பேசுவார், ஒருத்தர் சலிப்புடன் பேசுவார், ஒருத்தர் சங்கடத்துடன் பேசுவார். அவை அனைத்தும் நாம் நெருப்பைக் கொண்டு காய்கறிகளை வேகவைப்பது போல வேக வைத்துத் தீமைகளை நீக்கிட முடியும்.

எதை வைத்து?

அந்த மகரிஷிகள் இதையெல்லாம் வென்று அந்தத் தீய நிலைகளை எல்லாம் வேகவைத்தவர்கள். அந்த உணர்வின் தன்மை கொண்டு நஞ்சினை அடக்கி, உணர்வின் ஒளியாக மாற்றிச் சுவையான நிலையாக உருவாக்கியவர்கள்.

அவர்கள் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக முப்பத்து முக்கோடித் தேவர்கள் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் அழியாத நிலைகள் கொண்டு இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள், வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்த மகரிஷிகளால் வெளியிடப்பட்ட அந்த ஆற்றல்மிக்க உணர்வின் சத்து சூரியன் காந்த சக்தியால் கவர்ந்து நம் பூமியில் இன்று படர்ந்து கொண்டு இருக்கின்றது.

அதை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்த்தால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் செம்பையும் பித்தளையையும் நீக்குவது போல் நம் வாழ்க்கையில் நம்மை அறியாது சேர்ந்த தீமைகளையும் நீக்கிட முடியும், பிரிக்க முடியும், ஒளியாக்க முடியும்.

நம் உணர்வுகளும் ஒளியின் நிலை பெறும். ஒளியின் சரீரம் அடைய முடியும். மகரிஷிகள் சென்ற எல்லையை நாம் அடைவோம்.

August 27, 2016

குருநாதரிடம் ஆசி பெறும் முறை

குரு அவர்களைச் சந்தித்து அவரின் ஆசியைப் பெறுவதற்காக அன்பர்கள் கூட்டம் அதிகமாக இருக்கலாம்.

குருவைச் சந்தித்து ஆசி பெற வந்திருக்கும் அனைவரது உடல்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்து, அவர்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் மீதும் படர்ந்து, ஜீவான்மாக்கள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி படர அருள்வாய் ஈஸ்வரா என்று நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் அவர்கள் மன பலம், மன வளம், உடல் நலம், செல்வம், செல்வாக்கு, சொல்வாக்கும் தொழில் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று மனதில் எண்ணித் தியானிக்க வேண்டும்.

இவ்வாறு நாம் பிறரின் நலனுக்காக நாம் எண்ணி எடுக்கும் உணர்வானது நம்மிடத்தில் பெருகி அதனின் நற் பலன்களை நாம் முதலில் பெறுகின்றோம்.

குருவிடத்தில் ஆசிர்வாதம் பெறும் சமயம் நேராக நிமிர்ந்து நின்று, நேர் பார்வையுடன், நீங்கள் எதனைப் பெற வேண்டும் என்று எண்ணி வந்தீர்களோ அந்த ஏக்கத்தில் வலுவான நிலையில் ஆசி பெறுதல் வேண்டும்.

உதாரணமாக, தொழில் வளம் பெற வேண்டும், நோய் நீங்கி நலம் பெற வேண்டும், மனக் கவலைகள் அகல வேண்டும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும், புத்திரபாக்கியம் பெற வேண்டும், மகள் திருமணம் நடைபெற வேண்டும், என எண்ணியிருப்பீர்களானால் அவைகளை துருவ நட்சத்திரத்தின் அருள்சக்தியால் பெற வேண்டும் என ஏக்கமுடன் மனதில் எண்ணி, பெற வேண்டும் என்ற எண்ண வலுவுடன் ஞானகுருவிடம் அருளாசி பெற வேண்டும்.

குரு அவர்கள் எப்பொழுதும் நீங்கள் நலம் பெற வேண்டும், உங்களை அறியாது இயக்கும் தீய உணர்வுகளில் இருந்து நீங்கள் விடுபட வேண்டும், நீங்கள் எல்லா நலமும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை எண்ணி சதா தவமிருந்து கொண்டே இருக்கின்றார்கள்.

நாம் துருவ நட்சத்திரத்தினை எண்ணி அந்தச் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வுடன் ஏங்கி ஆசிர்வாதம் பெறும் பொழுது, நமது இன்னல்கள் நீங்கி, பொருள் கண்டுணர்ந்து செயல்படும் நிலையினை நமக்குள் உருவாக்கும்.

மன மகிழ்ச்சியினை நமக்குள் ஏற்படுத்தும்.

ஞானகுருவின் பாதங்களில் விழுந்து வணங்குவதைத் தவிர்க்க வேண்டும். பாத நமஸ்காரம் என்பது அரசர்களால் உருவாக்கப்பட்டது. அது நமக்குத் தேவை இல்லை.

நமது தாய் தந்தைக்குத்தான் பாத நமஸ்காரம் செய்ய வேண்டும்.

குரு அவர்கள் உபதேசிக்கும் பொழுது அதைக் கூர்ந்து கேட்டு, அவர் உபதேசிக்கும் உணர்வின் ஆற்றல்கள் அனைத்தும் நம்முள் பதிய வேண்டும் என்ற ஏக்கத்தில் உற்று நோக்கிப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.

அப்படி உற்றுக் கேட்பதினால் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகள் நம்மில் பதிவாகின்றது.

நாம் தியானித்து “ஆத்ம சுத்தி” செய்யும் சமயங்களில் அவ்வுணர்வுகள் நம்மிடம் பெருகி நம்மை அறியாது நம்மை இயக்கும் தீமையை விளைய வைக்கும் உணர்வுகளில் இருந்து நாம் விடுபட முடிகின்றது.

அதனால் உங்களுக்குள் மன மகிழ்ச்சி ஏற்படுகின்றது.


ஆகவே, மேல் கண்ட முறைகளில் நீங்கள் உங்கள் எண்ணத்தைச் செலுத்தி, அவ்வழியில் எல்லா நலமும் எல்லா வளமும் பெற பிரார்த்திக்கின்றோம்.

குருவின் துணையால் விண்ணின் ஒளியை அடைவோம்.

August 26, 2016

மெய்ஞான தியான வளர்ப்பு திருச்சபை - மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அனைவரும் பெறவேண்டும் என்று நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் உபதேசித்த அருள் நெறிகளின் படி யாம் (ஞானகுரு) இந்தத் திருச்சபையை அமைத்துள்ளோம்.

இந்தத் திருச்சபையில் நடைபெறும் கூட்டுத் தியானங்கள் மூலம் அன்பர்கள் அனைவரும் ஏங்கித் தியானித்து வெளிப்படுத்தியுள்ள உணர்வலைகள் இந்த மண்டபம் மட்டுமல்லாது தபோவனம் முழுவதிலும் பரவிப் படர்ந்துள்ளது.

ஆகையால் தபோவனம் வருவோர்கள் அவர்கள் குடும்பங்களில் சலிப்பு சஞ்சலம் சம்பந்தப்பட்ட எந்த நிலை இருந்தாலும் “அது நீங்க வேண்டும் என்ற நோக்கில் தான் இந்தத் திருச்சபை மண்டபத்தில் அமர்ந்து தியானிக்க வேண்டும்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை ஒரு நிமிடம் எண்ணி ஏங்கி அந்தச் சக்தி பெறவேண்டும், எங்களுக்குள் பதிய வேண்டும் என்ற எண்ண வலுவுடன் தியானியுங்கள்.

இவ்வாறு நாம் தியானிக்கும் சமயம் நம் வாழ்வில் கண்டுணர்ந்த  வேதனைகளோ சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ மற்றும் இது போன்ற தீமையை நமக்குள் விளைய வைக்கும் உணர்வுகள் தியானத்தைக் கலைக்குமானால் அவைகளை விலக்கித் தள்ள வேண்டும்.

அதை எண்ண வேண்டியதில்லை.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்ற வலுவான எண்ணம் கொண்டு குறைந்தது 15 நிமிடமாவது அமைதியாக ஏக்கத்துடன் தியானத்தைத் தொடர வேண்டும்.

ஏனென்றால், நாம் தனித்திருந்து தியானத்தின் மூலம் கவர முடியாத துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை திருச்சபை மண்டபத்தில் அமர்ந்து தியானிப்பதன் மூலம் எளிதில் கவர முடியும், சுவாசிக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளைச் சுவாசித்து நம்மையறியாது சேர்ந்த இருளான உணர்வுகளை நீக்கிட முடியும். துருவ நட்சத்திரத்தின் உணர்வால் ஒளி பெற்று  அதன் மூலம நமக்குள் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் நிலைகள் ஏற்படும்.

தெய்வங்களை நம்புகின்றோம். ஜோதிடங்களை நம்புகின்றோம், யாகங்களை நம்புகின்றோம், சாமியார்களை நம்புகின்றோம். நம்மை நம்புகின்றோமா..,?

நாம் நம்மை நம்புவதில்லை. ஆகவே, நாம் நம்மை நம்பிப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வின் ஒளி அலைகளை உங்களுக்குள் சேர்த்து உங்களையறியாது சேர்ந்த தீய உணர்வுகள மாய்த்து உங்கள் எண்ணம் சொல் செயல் புனிதம் பெற அருளாசிகள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்
புஞ்சை புளியம்பட்டி – 638 459
ஈரோடு மாவட்டம்

August 25, 2016

உலக மக்கள் அனைவரும் “ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக” ஒன்றிணைந்து வாழ வேண்டும்

உலகில் உள்ள மதங்களும் இனங்களும் அரசியலும் மக்களைக் காத்திடும் கருத்தின் அடிப்படையில் தான் இயங்குகின்றன. மக்கள் இன்னல்களிலிருந்து விடுபட வேண்டும், உணர்வுகள் தூய்மை பெறவேண்டும் என்று தான் அனைத்து அரசியலும் பேசுகின்றன.

இருப்பினும் மக்களை ஒன்று சேர்க்க வேண்டிய இவைகளுக்குள் பிரித்தாளுகின்ற தீமையின் உணர்வுகள் ஊடுருவி கோபம், குரோதம், அகங்காரம் என்ற உணர்வுகள் வளர்ந்து மக்களின் நல் உணர்வுகளை அடிமைப்படுத்தியுள்ளன.

இவைகள் அனைத்தும் மக்களிடையே பகைமைகளைத்தான் வளர்க்கின்றன.

மதமும் அரசியலும் நாட்டைக் காத்து மனிதனை நல்வழி நடத்திச் செல்ல உத்தேசித்தாலும் அவற்றில் உள்ள பேதங்கள் உருவாகி புலி தன் பசிக்காக மானை அடித்துக் கொள்வது போன்று பேதங்களால் மனிதனின் நல் உணர்வுகளில் கோப உணர்வுகள் புகுந்து நல்ல உணர்வுகளைச் செயலற்றதாக்கி அதனைக் கொன்று புசித்துக் கொண்டு உள்ளன.

மத பேதமானாலும் சரி, இன பேதமானாலும் சரி, அரசியல் பேதமானாலும் சரி அந்த பேதங்கள் அனைத்தும் மற்ற மதத்தை அழித்திட வேண்டும், மற்ற இனத்தை அழித்திட வேண்டும், பிறிதொரு அரசியலை அழித்திட வேண்டும் என்ற வெறி கொண்ட உணர்வுகளே வளர்ந்து நல்ல குணங்களை அழித்து விழுங்கிக் கொண்டுள்ளன.

மனிதர்களான நாம் நமது மதத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து “பிற மதங்கள் தீமையானவை.., என்று நமது எண்ணங்களை நினைவலைகளை இந்தக் காற்று மண்டலத்தில் பரப்பிக் கொண்டிருக்கின்றோம்.

இதனால் விளைந்த தீமைகளும் வெறித்தன்மையான உணர்வுகளும் நமக்குள் ஒருவரை ஒருவர் கொன்று புசிக்கும் உணர்வுகளை விளையச் செய்து பூமியில் பரவச் செய்து விடுகின்றன.

இதிலிருந்து மனிதன் காக்கப்பட வேண்டும் என்றுதான் மதங்களும் பேசுகின்றன, அரசியலும் பேசுகின்றன. ஆனால், இதில் உண்டாகும் “பேதங்கள் மனித உணர்வைக் கொன்றுவிடுகின்றன.

நமக்கு முன் படர்ந்து கொண்டிருக்கும் தீயவினைகளை நாம் அகற்ற வேண்டும்.

மத பேதம் இன பேதம் மொழி பேதம் அரசியல் பேதம் ஆகியவைகளை அடக்கி “உலக மக்கள் அனைவரும் ஒன்று என்ற நிலையை வளர்த்திட வேண்டும்.
உலக மக்கள் அனைவரும் ஓரினம், நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்
உலக மக்கள் அனைவரும் ஓரினம், நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள். நாம் உயிரான ஈசனின் இயக்கத்தால் இயங்குகின்றோம். நம்மை இயக்கும் உயிரான ஈசனுக்கு மதத்தின் பெயராலோ குலத்தின் பெயராலோ வெறுப்பையோ குரோதத்தையோ கொடுத்துவிடக் கூடாது.

ஆகவே, நமது உயிரான ஈசனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் எது? என்று உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.

நம் பூமியே நமக்குத் தாய். நாம் மகிழ்ச்சியுடன் இருக்கும் பொழுது அதனைக் காணும் தாய் மனமும் மகிழ்ச்சியடைகின்றது.

நாம் மகிழ்ச்சி அடையும் பொழுது வெளிப்படும் மூச்சலைகள் நமது தாய் பூமியில் படர்கின்றது. இந்த மகிழ்ச்சியான உணர்வுகள் பூமியில் படரும் பொழுது தாய் பூமியும் மகிழ்ந்திடும் நிலைகள் உருவாகும்.

உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக ஒன்றிணைந்து வாழ வேண்டும். எல்லோரும் மகிழ்ந்த நிலை பெறவேண்டும்.

எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்ற உணர்வை நமக்குள் வலுக் கொண்டதாக இணைக்க வேண்டும்.

ஆகவே, தியானம் மேற்கொள்ளும் அனைவரும் ஒன்று கூடி ஒருங்கிணைந்து ஆத்ம சுத்தி செய்து கொண்டு பின் உலக மக்களுக்காகத் தியானிக்க வேண்டும்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை ஒரு பத்து நிமிடம் கண்களை மூடி உடல் முழுவதும் படரவிடுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இந்த உலகம் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா. உலக மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

உண்மையான தவம்
துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் உலக மக்கள் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் மத பேதமின்றி, மொழி பேதமின்றி, மன பேதமின்றி, அரசியல் பேதமின்றி வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

உலக மக்கள் அனைவரும் சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திட வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று திரும்பத் திரும்ப இதை எண்ணி ஏங்கித் தியானியுங்கள், தவமிருங்கள்.

கோவிலுக்குச் சென்று ஆண்டவன் அருளைப் பெறவேண்டும் என்று எண்ணுவது தவம் இல்லை. “அந்த அருள் சக்தி உலகில் உள்ளோர் எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கித் தவமிருப்பது தான்  உண்மையான தவம்.

ஒவ்வொருவரும் இவ்வாறு எண்ணி ஏங்கித் தியானித்தால் ஏங்கி எடுத்த அந்தத் துருவ நட்சத்திர உணர்வலைகள் இந்த பூமிக்குள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் படர்கின்றது. உலகெங்கிலும் படர்கின்றது.

நம் பூமியே நமக்குத் தாய் என்கிற பொழுது அந்தத் தாய்க்கு நாம் சேவை செய்வது எவ்வாறு இருக்க வேண்டும் என்று நாம் சிந்தித்தல் வேண்டும்.

பூமியில் பிறந்த நாம் அனைவரும் அத்தாயின் பிள்ளைகள் என்று ஒருங்கிணைந்து  “நாம் அனைவரும் சகோதரர்கள் என்ற நிலையில் மத பேதமின்றி, மொழி பேதமின்றி, மன பேதமின்றி, அரசியல் பேதமின்றி வாழ்ந்திடுவதே நலம்.

நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று எண்ண வேண்டும். “இந்த எண்ணம் தான் நமது தாய் பூமியைக் காக்கும்.
அருள் உலகை உருவாக்குங்கள்
இந்த உலகில் மனிதனாகப் பிறந்து தன்னையும் உலகையும் பல கோடி உணர்வையும் அறிந்து உயர்ந்த ஞானிகள் இந்த மனித வாழ்க்கையில் ஏற்படும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற நோக்குடன் பெற்ற உணர்வின் துணையால் உண்மையின் உணர்வை அறிந்து தன் நிலைகளில் உணர்வை ஒளியாக மாற்றி “விண் சென்ற மகரிஷிகள் பலர்.

மனிதராகப் பிறந்த அனைவரும் நட்பின் நிலைகள் கொண்டு சகோதரர்களாக வாழ வேண்டும் என்ற தத்துவத்தைத் தமக்குள் கண்டறிந்து அந்த உணர்வை வளர்த்து ஒருங்கிணைத்து ஒளியாக மாற்றிச் சென்றவர்கள் தான் சப்தரிஷிகள்.

அவர்கள் சென்ற பாதையில் நாம் செல்வோம். நாளைய உலகை அருள் உலகமாக மெய் உலகமாக மகரிஷிகள் உலகமாக உருவாக்குவோம்.

August 24, 2016

ஒரு அழுக்கு நீரில் நந்நீர் சேரச் சேர அழுக்கு நீர் மறையத்தான் செய்யும் – ஆன்மாவைத் தூய்மைப்படுத்துங்கள்

யாம் எவ்வளவோ உயர்ந்த உணர்வுகளை உபதேசித்தாலும் இங்கே என்னிடம் வருபவர்கள் குறைகளைப் பேசிக் கொண்டுதான் வருகின்றனர்.

அருள் ஒளி நாங்கள் பெறவேண்டும்.
எங்களுக்குள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்.
நாங்கள் மெய்ப்பொருள் காணும் சக்தி பெறவேண்டும்.
எங்கள் பார்வையில் இருளை அகற்றும் திறன் பெறவேண்டும்.
இருள் சூழா நிலைகள் நாங்கள் பெறவேண்டும் என்று
வேண்டிப் பெறுங்கள் என்று பல முறை சொல்லியும் பார்த்து விட்டேன்.

 இங்கே அணுகி வருகின்றனர். ஆனால், ஆசை இந்த உடலின் இச்சைக்கே வருகின்றது.

தீமைகளை அகற்றிடும் அருளாற்றல்களை நீங்கள் பெறுவதற்கு எத்தனையோ முறைகளைச் சொல்கின்றேன். என்னையும் இருள் சூழும் நிலைகளுக்கே வருவோரெல்லாம் குறைகளைச் சொல்லிக் கொண்டே வருகின்றார்கள்.

நிவர்த்தி செய்யவேண்டும் என்று கேட்போர் இல்லை.

ஏனென்றால் எல்லோரும் இருளிலிருந்து மீள வேண்டும் என்று கூறுகின்றோம். அந்த உணர்வின் சக்தியைப் பெறவேண்டும் என்ற அருள் ஒளியைப் பாய்ச்சுகின்றோம்.

ஏங்கிப் பெற்றாலும் தனக்குள் இருளை வைத்து அதை மறைத்துவிட்டு அதை வளராது செய்யும் நினைவாற்றலே உங்களுக்குள் பெருகுகின்றது. அதைப் பெருக்கிக் கொண்டேதான் இருக்கின்றீர்கள்.

அருள் சுடரை உங்களுக்குள் உருவாக்கும் ஆறாவது அறிவின் திறனைப் பயன்படுத்துங்கள். உங்கள் வாழ்க்கையில் எத்தகைய நிலைகள் வந்தாலும் "இப்படி ஆகிவிட்டதே..,, இப்படி வருகின்றதே...," என்று எண்ணாதீர்கள்.

வரும் தீமைகளிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ள துருவ நட்சத்திரத்தை எண்ணுங்கள். அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும், அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உள்முகமாக உடலுக்குள் பாய்ச்சுங்கள்.

தீமையின் பால் நினைவினைச் செலுத்தாமல் புருவ மத்தியில் எண்ணி துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கொண்டு தடுத்துக் கொள்ளுங்கள். உங்களால் முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.

ஏனென்றால், ஒரு அழுக்குத் தண்ணீரில் நல்ல நீரை விட்டால் அப்பொழுது அழுக்காகத் தான் தெரியும்.

நந்நீர் சேரச் சேரச் சேர அழுக்கு நீர் மறையத்தான் செய்யும்.

ஆகவே, இந்த உடலில் நமக்கு நன்மை ஏற்பட வேண்டுமென்றால் அருள் ஒளியை எடுத்தால் உடலில் மகிழ்ச்சி பெறும் தன்மை வரும். மகிழ்ந்திடும் தன்மை கொண்டு உணர்வின் தொடராக ஒளியின் சரீரமாக மாற்றிடும் வல்லமையும் பெறுகின்றீர்கள்.

எந்த வாகனத்தில் சென்றாலும் விபத்து ஏற்படாமல் தடுக்கத் தியானிக்க வேண்டிய முறை

ஒட்டுனர்கள் வாகனங்களைச் செலுத்த ஆரம்பிப்பதற்கு முன் பயணம் இனிமையானதாகவும் சுமுகமானதாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கீழ்க்கண்டவாறு ஆத்ம சுத்தி செய்து கொள்தல் வேண்டும்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை ஒரு பத்து நிமிடம் கண்களை மூடி உடல் முழுவதும் படரவிடுங்கள்.

பின்பு துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் எங்கள் பயணம் இனிமையானதாகவும் சுமுகமானதாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

எங்களைப் பார்ப்பவர்கள் நல்ல எண்ணம் கொண்டு செயல்பட அருள்வாய் ஈஸ்வரா, எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு நிமிடம் எண்ணி ஏங்கித் தியானித்துவிட்டு வண்டியை ஓட்ட ஆரம்பியுங்கள்.

இவ்வாறு நீங்கள் ஆத்ம சுத்தி செய்துவிட்டு வண்டியை எடுத்தீர்கள் என்றால் நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்ட உணர்வுகள் உங்களுக்குப் பாதுகாப்பைக் கொடுக்கும்.

அதே சமயத்தில் நீங்கள் எடுத்துக் கொண்ட பணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் நீங்கள் எண்ணிய வண்ணம் நடைபெறுவதற்கும் ஏதுவாகும்.

சாலையில் நாம் வண்டிகளை ஒட்டிச் செல்லும் சமயங்களில் பல விபத்தின் நிலைகளைப் பார்க்க வேண்டி வரும். அதைப் பற்றி நாம் பிறரிடம் விவரித்துச் சொல்வோம்.

அந்த விபத்து எதனின் நிலைகளில் ஏற்பட்டதோ அதே உணர்வுகள் நம்மையும் நம்மையறியாமலே விபத்தில் சிக்க வைத்துவிடும்.

ஆகவே, உடனுக்குடன் மேலே சொல்லியபடி ஆத்ம சுத்தி செய்து வந்தால் நாம் போகும் பாதையில் கலவரமோ, தடையோ அல்லது வழிப்பறியின் நிலைகள் இருந்தால் நாம் செய்த ஆத்ம சுத்தியின் வலு நம்மைக் காக்கும்.

அதாவது, அந்தப் பக்கம் செல்லாது நம் உணர்வே தடுத்து நமக்குப் பாதுகாப்பைக் கொடுக்கும்.

அதே சமயத்தில் நாம் போகும் பாதையில் பல வாகனங்கள் வருகின்றது. சிலர் தவறான முறையில் வருவார்கள். வழக்கமாக நாம் என்ன செய்வோம்?

கோபப்பட்டுப் பேசுவோம். அவர்கள் தவறினைச் சுட்டிக் காட்டிக் கோபப்படுகின்றோம். இப்படி அடிக்கடி கோபப்பட்டால் நம் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுவிடும்.

ஆகவே, ஆத்ம சுத்தி செய்து அந்தக் கோப உணர்வுகள் நமக்குள் பதியாது தடை செய்தல் வேண்டும்.
வாகன உரிமையாளர்கள் ஆத்ம சுத்தி செய்ய வேண்டிய முறை
முதலில் கூறியபடி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளை வலுவேற்றிக் கொண்ட பின் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் இந்த வாகனத்தில் பயணம் செய்வோர்களும் பணி புரிபவர்களும் ஆரோக்கிய நிலையில் இருந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் தொழிலாளர்கள் குடும்பம் முழுவதும் படர்ந்து அவர்கள் அனைவரும் மன வளம், மன பலம், ஆரோக்கியம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

எங்கள் வாகனத்தைப் பார்க்கும் அனைவருக்கும் நல்ல எண்ணம் வந்திட அருள்வாய் ஈஸ்வரா. நாங்கள் எடுத்துச் செல்லும் பொருள்களைப் பயன்படுத்துவோர் அனைவரும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இப்படி ஒரு ஐந்து நிமிடமாவது தியானிக்க வேண்டும்.

அடுத்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை ஆத்ம சுத்தி மூலம் உங்களுக்குள் வலுவேற்றிக் கொண்டு உங்கள் பார்வையால் வாகனத்தைப் பாருங்கள்.

அது நன்மை பயக்கும் செயலாக அமையும்.

உங்கள் சொல் பிறரை மகிழ்விக்கும் தன்மைக்கு உயரும். உங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெறும். உங்கள் தொழிலில் கவனமுடன் செயல்படுவீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அனைவரும் பெறுக. எல்லா நலமும் வளமும் பெறுக.

ஓம் ஈஸ்வரா குருதேவா.