ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 25, 2018

அரவணைப்பதில் “தாயாகவும்…” பகைமைகளை எண்ணாததில் “சேயாகவும்…” நாம் இருத்தலே நலம் பயக்கும்

பிறரை நாம் மதித்துதான் பழக வேண்டுமே தவிர தாழ்த்திப் பழகவே கூடாது. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அதைத் தான் எனக்கு (ஞானகுரு) முதலிலே சொல்லிக் கொடுத்தார்.

குழந்தை தாயை ஏசி விட்டால் அந்தத் தாய் அரவணைத்துச் செயல்படும். ஆகவே “தாயாக நீ இரு…!” என்றார்.

தாய் அடித்து விட்டாலும் மீண்டும் தாயின் நிலைகளைக் குழந்தை அணுகி இருக்கின்றது. அந்த இடத்தில் “நீ சேயாக இருக்க வேண்டும்” என்றார் குருநாதர்

இதைப் போன்று தாயகவும் சேயாகவும் நாம் ஒருக்கிணைந்த நிலைகள் கொண்டு வாழ வேண்டும் என்று குருநாதர் முதலிலே எனக்குக் காட்டினார்.

எத்தனையோ பேர் உன்னைப் பேசுவார்கள்… ஏசுவார்கள்…! அப்போது நீ தாயாக இருந்து அதை ஏற்று அவர்களுக்கு நீ சேய்க்கு உபதேசிப்பது போல ஒவ்வொரு நிலைகளுக்கும் அதை நீ காத்தருள வேண்டும்.

தாய் தன் குழந்தையை எப்படிக் காக்கின்றதோ அதை போலக் காத்து வர வேண்டும். ஆகவே நாம் அனைவரும் குரு காட்டிய வழிகளில் தாயாக மாற வேண்டும்,

சேயை எப்படி வளர்க்கின்றோமோ அதைப் போல் பிறர் நம்மை ஏசி விட்டாலும் பேசிவிட்டாலும் அதை மறந்து பழக வேண்டும் என்பதைத் தெளிவாக்கினார் குருநாதர்.

குழந்தையை யாராவது திட்டி விட்டாலும் அடுத்தாற் போல் “இந்தா பிஸ்கட்…” என்று கொடுத்தால் வாங்கிக் கொள்ளும். ஆகவே
1.அந்தச் சேயைப் போல பிறர் மேல் உள்ள பகைமையை
2.நாம் மறந்து பழக வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணத்தை நமக்குள் உயர்த்த வேண்டும்.

இதைப் போன்ற நிலைகளை நாம் பின்பற்றுதலே குரு காட்டிய நல்ல வழி.

அதற்குத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்குள் இதைக் கூட்டமைப்பாக உருவாக்கி உபதேசிக்கின்றோம். இல்லை என்றால் யாமும் காட்டுக்குப் போயிருப்போம்.

ஏனென்றால் அங்கே இடைஞ்சலான இடத்தில் போய் உட்கார்ந்தாலும் அங்கு நான்கு பேர் நல்லதைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் வருவார்கள்.

கஷ்டப்பட்டுப் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் வருபவர்கள் நிச்சயம் அருள் ஞானத்தைப் பெறுவார்கள். குரு காட்டிய வழியில் பிறரை நாம் வாழ்த்த வேண்டும்…!