ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 18, 2018

பிறர் நம்மை மதிக்க வேண்டும் என்று எண்ணி பூமிக்குள் நாம் வாழுகின்றோம் - மற்றவர்களை உயர்த்த வேண்டும் என்ற மகரிஷிகள் விண்ணிலே வாழ்கிறார்கள்

நாம் வாழும் இன்றைய கலாச்சாரப்படி எதையெல்லாம் எண்ணி வளர்த்துக் கொள்கின்றோமோ அதன் வளர்ச்சியில் “மீண்டும் மீண்டும்” பிறவிக்குத்தான் வருகின்றோம்…!

கலாச்சார முறைப்படி ஆசைகளை வளர்த்து எந்தெந்த உணர்வுகளைத் தூண்டிவிட்டு இருக்கின்றார்களோ அந்த உணர்வுகள் உடலுக்குள் வலுப் பெற்று விடுகின்றது.

கலாச்சாரப்படி எல்லோருக்கும் நல்லது செய்தேன். நான் ஆண்டவனை அனு தினமும் வணங்கினேன். ஆனால் எனக்கு “இப்படிக் கெடுதல் செய்துவிட்டார்களே...!” என்று வேதனைப்பட்டால் மற்றவர்களின் உணர்வு அதிகரிக்கின்றது.

அப்பொழுது இந்த உடலை விட்டுச் சென்றபின் “ஆவேச உணர்வு” தான் இருக்கும். யாரை எண்ணி ஆவேச உணர்வை வளர்த்துக் கொள்கின்றார்களோ அந்த உடலுக்குள் போய்ப் பேயாகத்தான் ஆட்டும்.

ஏனென்றால் இந்தக் கலாச்சாரத்தில் காட்டிய முறைப்படி
1.தன்னை மதிக்க வேண்டும் என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது
2.அந்த மதிப்பு கொடுக்கவில்லை என்றால்
3.பகைமை உணர்வுகளை ஊட்டச் செய்து
4.அவர்களை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்ற உணர்வுகள் வருகின்றது.

ஆனால் மகரிஷிகள் தன்னை உயர்த்த வேண்டும் என்ற நிலையை இழந்து பிறர் உயர்த்தப்பட வேண்டும் என்ற உணர்வுகள் கொண்டு செயல்பட்டவர்கள்.

அவர்கள் பார்ப்போரெல்லாம் உயர்ந்த நிலைகள் பெற வேண்டுமென்று உயர்வின் ஒளியைக் கூட்டி மற்றவர்களை உயர்த்த நினைத்தவர்கள்.
1.உயர்த்த வேண்டுமென்ற உணர்வுகள் இவர்களுக்குள் விளைந்து
2.அதுவே அவர்கள் உயரக் காரணமாகின்றது.

மகரிஷிகளைப் பின்பற்றியவர்கள் அனைவரும் பிறவா நிலை அடைந்து கல்கி என்ற நிலையில் ஒளியின் சரீரம் பெற்று இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

ஆக... கலாச்சாரப்படியும் ஆச்சாரப்படியும் வாழ்ந்தாலும் மீண்டும் மீண்டும் வேதனைப்படும் உடல்களை எடுத்துத்தான் நாம் பூமிக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

மகரிஷிகளோ இந்த உடலில் நஞ்சினை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி என்றுமே ஒளியின் சரீரமாக விண்ணிலே வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

குருநாதர் காட்டிய உண்மை நிலை இது. எது தேவையோ அவரவர் அதை எடுத்துக் கொள்ளலாம்.