ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 13, 2018

குப்பைக்குள் மறைந்த மாணிக்கத்தை எடுப்பது போல் இந்த மனிதச் சரீரத்திலிருந்து தான் “உயர்ந்த குணத்தை விளைய வைக்க வேண்டும்…!” என்றார் குருநாதர்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஏழ்மையாக இருந்து ஒரு பித்தரைப் போன்று இருந்து தான் உலகம் இப்படி இருக்கிறது என்று எல்லா நிலைகளையும் எமக்குச் (ஞானகுரு) சுட்டிக் காட்டினார்.

குப்பையிலிருந்துதான் மரம் சத்து எடுக்கிறது, ஆகவே குப்பையான இந்தச் சரீரத்திலிருந்து தான் சத்தான எண்ணங்களைக் கூட்ட வேண்டும் என்றார்.

1.சரீரத்தைக் குப்பையாக எண்ணினாலும்
2.உனக்குள் இருக்கக் கூடிய நல்ல எண்ணத்தை – அந்த “வைரத்தை…!”
3.குப்பையான சரீரத்திலிருந்து விளையச் செய்..! உனக்கு அதுதான்… “சொந்தம்” என்றார் குருநாதர்.

ஒவ்வொரு மனிதனுடைய உடலிலும் எத்தனையோ வகையான துன்பங்கள் இருக்கிறது. துன்பங்களையும் துயரங்களையும் விளைவிக்கக் கூடிய பல எண்ணங்கள் இருக்கிறது.

அத்தகைய துன்பத்தையும் துயரத்தையும் விளைவிக்கக் கூடிய எண்ணங்களிலிருந்து மக்களை மீட்க வேண்டும். அவர்களிடமிருந்து மகிழ்ச்சியை எதிர்பார்க்க வேண்டும்.

“அந்த மகிழ்ச்சியே… உனக்குச் சொர்க்கம்…!” என்றார் குருநாதர்.

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியைக் கடைப்பிடிக்கும் நாம் திடீரென்று யாரையுமே முதலில் பழித்துப் பேசிவிடக் கூடாது. குறைபாடுகள் இருந்தாலும் அணுகி அதை நிவர்த்தி பண்ணுவதற்கு என்ன வழியோ அதற்காக வேண்டி நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

1.சொல்லிப் பார்ப்போம்.
2.அவரால் முடியவில்லை என்றால் அது அவருடைய சந்தர்ப்பம்.
3.அதற்காக வேண்டி “முடியவில்லையே…! அவர் தவறு செய்கிறாரே…!” என்ற உணர்வை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது.

“தவறுகள் செய்கிறார்களே…!” என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தால் அவர்களுடைய தவறான உணர்வைத்தான் நமக்குள் வளர்த்துக் கொள்கிறோம். இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நாம் செய்ய வேண்டியது…,
1.யார் எதைப் பேசினாலும் குறைத்துப் பேசினாலும்
2.வாழ்க்கையிலே அவர்கள் உயர்ந்த நிலை பெறவேண்டும்
3.அவர்கள் அறியாது அவர்களுக்குள் துன்பத்தைத் தோற்றுவிக்கும் உணர்வுகளிலிருந்து மீள வேண்டும் “ஈஸ்வரா” என்று
4.ஒவ்வொரு உயிரும் கடவுள் என்ற நிலையில் “நேசிக்கும் உணர்வாக…”
5.உயிரான ஈசனிடம் வேண்டி நாம் சுவாசிக்கும் பொழுது இந்த உணர்வு நமக்குள் விளைகின்றது.

அடிக்கடி இப்படிச் செய்து எண்ணத் தொடங்கினால் அவர்களுக்கு நல்லது உண்டாகும். அதனால் நமக்கு மகிழ்ச்சி ஏற்படும்.