ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 26, 2018

மூஷிக வாகனா – விண்ணின் ஆற்றலைப் பெறும் “உயிர் வழி சுவாசம்”

மனிதனின் வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலேயே எத்தனையோ தீமைகள் வருகிறது.

உதாரணமாக நாம் தொழில் செய்யும் இட்த்தில் ஒருவன் இடைஞ்சல் செய்து இருப்பான். அவன் உணர்வைப் பதிவாக்கியிருப்போம். அவன் மேல் வெறுப்பாக இருப்போம்.

தொழிற்சாலைக்குள்ளே அவனைப் பார்த்தவுடனே நமக்குக் கொதிப்பு வரும். “நமக்கு இடைஞ்சல் செய்தான்... இடைஞ்சல்காரன்...!” என்ற நிலையில் அந்த உணர்வுகளை நம்மை அறியாமலே நமக்குள் வளர்த்துக் கொள்வோம்.

நமக்குள் இது தீய வினையாகச் சேர்த்து உடல் வலிக்கிறது... கை வலிக்கன்றதே...! என்ற நிலையில் ஒரு விதமான நோயாக மாறும்.

இதைப் போல ஒவ்வொரு இடத்திலும் பிறருடைய தீமைகளைச் சேர்த்து நமக்குள் அதை ஒட்டி விட்டால் அது வளர்கின்றது. அதெல்லாம் வினைகளாக (வித்துக்களாக) நமக்குள் சேர்கின்றது.

இப்படி யாரிடத்தில் பேசினாலும் அந்த உணர்வுகளை எல்லாம் இந்த சூரியன் காந்த சக்தி கவர்ந்து இந்தப் பரமான இந்த பூமியில் பரமாத்வாக அலை அலையாகப் பரவி வைத்து இருக்கின்றது.

உதாரணமாக நாம் பாம்பைப் பார்த்துப் பாம்பின் உணர்வை நமக்குள் பதிவு செய்து கொள்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

அடுத்தாற்போல் நாம் நடந்து செல்லும் பாதையில் ஒரு கயிறு கீழே கிடந்தாலும் சரி.. “இது பாம்பு மாதிரித் தெரியுதே...!” என்ற இந்த நினைவு வரும்

வீட்டில் ஒரு கயிற்றை பார்த்து விட்டாலும் பாம்பு மாதிரி இருக்கும். ஒரு மரத்தில் ஒரு  கிளை தொங்கிக் கொண்டு இருந்தாலும் அது பாம்பு மாதிரிதான் இருக்கிறது என்ற அந்த எண்ணம் வரும். ஏனெனில்
1.இந்த உணர்வின் “நினைவாற்றல்...” அது எதுவோ
2.கண் அதன் வழியில் “அதுவாகத்தான்” காட்டும்.

அப்போது அதையே எண்ணி எண்ணி நமக்குள் எடுத்துக் கொண்டால் இது வினைகளாகி அந்த நினைவின் செயலாகும் போது உடலுக்குள் பாம்பின் உணர்வுகள் அதிகமாக விளைந்து விடுகின்றது.

1.திடீரென்று மரணமடையப்படும் போது அந்த நினைவு வந்து விட்டால்
2.இன்று நாம் மனிதன் என்று நினைக்கின்றோம்
3.அடுத்து அந்தப் பாம்பின் ஈர்ப்புக்குள் தான் செல்வோம்.

“மூஷிக வாகனா...!” நாம் சுவாசித்த உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாகும் போது உயிர் நம்மை அதுவாக்கிவிடும்.

ஏனென்றால் நமக்குள் அந்த வினையாகப் (பாம்பின் உணர்வுகளை) பதிவு செய்து இருக்கின்றோம். அந்த உணர்வின் அலைகள் இதே சூரியனின் காந்த அலைகள் கவர்ந்து வைக்கின்றது.

சூரியன் அதன் அடிப்படையில் இயங்கும் அணுக்களுக்கு எப்படி இரையைக் கொடுக்கின்றதோ அதைப் போல நாம் கவர்ந்து கொண்டபின் நாம் மனிதனானாலும் இந்த உணர்வின் அணுக்களுக்கு அது சேமித்து வைத்துக் கொள்கின்றது.

1.நாம் எண்ணும் போது சேமித்து வைத்திருக்கும் பரமாத்மாவிலிருந்து இழுத்து
2.நம் ஆன்மாவாக (நெஞ்சுப் பகுதிக்கு முன்) மாறுகின்றது.
3.இந்த ஆன்மாவிலிருந்து நாம் சுவாசித்தவுடனே
4.உடலுக்குள் சென்று நம் ஜீவான்மாவாக மாறுகின்றது.

ஆக மொத்தம் ஜீவான்மாவில் எதனின் சக்தியை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ அதனின் உணர்வின் செயலாக அடுத்த நிலை அடைகின்றோம்.

நம் ஆன்மாவில் தீமைகள் சுருண்டு கொண்டு நம்மை ஆட்டிப் படைக்கும் தீமைகளிலிருந்து விடுபடுவதற்காகத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் ஆத்ம சுத்தி என்ற சக்தி வாய்ந்த ஆயுதமாக்க் கொடுத்துள்ளோம்.

ஒவ்வொரு நொடியும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி வரும் தீமைகளைத் தடுத்து மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா அது எங்கள் உடல் முழுவதும் படர அருள்வாய் ஈஸ்வரா என்று விண்ணிலே நினைவினைச் செலுத்தினால் நம் ஆன்மா பரிசுத்தமாகிவிடும்.

தீமை வரும் பொழுதெல்லாம் இதை அவசியம் செய்தால்
1.ஆன்மாவிலிருந்து சுவாசிப்பதற்குப் பதில்
2.விண்ணிலிருந்து உயிர் வழி கவரும் சுவாசமாகிவிடும்.