ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 30, 2018

மகான்கள் அனைவருமே அனுபவ வாயிலாக அறிந்தவர்கள் தான் – படித்து வரவில்லை...!

வியாசகர் வான்மீகி சமீபத்தில் வந்த அருணகிரிநாதர் இராமலிங்க அடிகள் இராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் ஏனைய மகான்கள் என்று சொல்லும் அனைவருமே
1.கல்வி கற்று உணர்ந்தவர்கள் அல்ல கல்வியில் ஞானம் பெற்றவர்கள் அல்ல…!
2.அவர்கள் கற்றுணர்ந்ததெல்லாம் தங்களுடைய அனுபவத்தில் கண்டுணர்ந்தவைகள் தான்.

அனுபவபூர்வமாகத் தான் பெற்ற உயர்ந்த சக்திகளையும் தங்கள் உடலில் விளைய வைத்த ஆற்றல் மிக்க உணர்வுகளையும் போதனைகளாக மக்களுக்கு வெளிப்படுத்தினார்கள்.

சந்தர்ப்பத்தால் நுகர்ந்த சக்தி தான் அவர்களுக்குள் அது அவ்வாறு உருப்பெறுகின்றது.

அவர்கள் பெற்றது போல் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்காக சப்தரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தை உருவாக்குகின்றோம்.

நான் (ஞானகுரு) கல்வி கற்காதவன் தான். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அவரைப் பின்பற்றிய உணர்வு கொண்டு அதைப் பதிவு செய்து அதனின் துணை கொண்டு விண்ணின் ஆற்றலைப் பெற முடிந்தது.

மக்களின் உணர்வின் தன்மையும் தீமைகளை அகற்றும் உணர்வையும் கண்டறிய முடிந்தது. தீமைகளை அகற்றும் சக்திகளை எனக்குள் வளர்த்துக் கொள்ள முடிந்தது.

கற்றவர்களோ கற்காதவர்களோ… அறிந்தவர்களோ அறியாதவர்களோ… என்று (உங்களை) நீங்கள் யாரும் எண்ண வேண்டாம். அறிய வேண்டும் என்பதற்காகத்தான் வருகிறோம்.

பள்ளிக்குச் செல்வோர் அனைவரும் அறிந்து கொண்டு செல்வதில்லை.
1.அறிந்து கொண்ட பின் பள்ளிக்குச் செல்லவில்லை.
2.அறிவதற்குத் தான் பள்ளிக்குச் செல்கிறோம்.

அதைப் போன்று உலகை அறிவதற்காகவும் மெய் ஞானம் பெறுவதற்காகவும் தான் இங்கே வந்துள்ளோம். அதைப் பெறும் நிலைகளை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அருள் ஞானிகளின் உணர்வைச் சந்தர்ப்பத்தால் நமக்குள் கூட்டி அதைப் பெறவேண்டும் என்ற ஆசையிருந்தால்… அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணமிருந்தால்…,
1.கல்வி வேண்டியதில்லை…!
2.மெய் ஞானம் தன்னிச்சையாக வரும்.

தீமைகளை அகற்றும் ஞானங்கள் பிறந்தால் அருள் ஞானத்தின் உணர்வு கொண்டு இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திட முடியும்.

குருநாதர் காட்டிய வழியில் இந்த உபதேசத்தின் வாயிலாகப் பதிவு செய்யும் உயர்ந்த எண்ணத்தை நீங்கள் கவர முடியும், அருள் மகரிஷிகளின் உணர்வுகளை ஒவ்வொருவரும் பெற முடியும்.

மகா மகான்களாக வளர உங்களாலும் முடியும்…!