ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 27, 2018

காலையில் தியானம் செய்யும் முறை – “பிரம்ம முகூர்த்தம்”

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவரும் அரும்பெரும் சக்திகளைப் பெறுவதற்காக அதிகாலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள் துருவ தியானம் செய்ய வேண்டும்.

எழுந்து வசதியாக உட்கார்ந்து செய்யவும் செய்யலாம். படுக்கையில் விழிப்பு வந்தபின்
1.நேரடியாகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின்பால் தொடர்பு கொண்டு
2.புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் எண்ணத்தைச் செலுத்தி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெரொளி உடல் முழுவதற்கும் படரவேண்டும் என்று உள் முகமாகச் செலுத்த வேண்டும்.

உள் முகமாகச் செலுத்தச் செலுத்த நம் ஆன்மாவில் இருக்கும் தீமைகளை நீக்கிக் கொண்டு இருக்கும்.

காலையில் நீரை ஊற்றி நம் உடல் அழுக்கைப் போக்கக் குளிக்கின்றோமோ அதைப் போல ஆன்மாவில் பட்ட தீமைகளை நீக்க அந்த மகரிஷியின் அருள் சக்திகளை நம் உடலுக்குள் இப்படிச் செலுத்த வேண்டும்.
1.உடலுக்குள் வலு பெறச் செய்து தான்
2.ஆன்மாவில் உள்ள தீமைகளை நீக்க வேண்டும்.

வேதனையை உருவாக்கும் அணுக்கள் வலு பெற்றால் அதனின் உணர்வு நம் ஆன்மாவாகி நாம் சுவாசிக்கும் போது வேதனையின் எண்ணங்கள் தான் வரும்.

ஆகையினால் இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்தே ஆகவேண்டும். உங்களைக் காக்க இந்த எண்ணம் உங்களுக்கு உதவும்.

நான் சொல்வது கொஞ்சம் சிக்கலாகவும் தெரியும். கடினமாகவும் தெரியும். பதிய வைத்து விட்டால் சந்தர்ப்பம் வரும் போது நினைவிற்கு வரும்.

பள்ளிக்கூடத்தில் போய் நாம் பாடத்தைப் படித்தவுடனே எல்லாவற்றையும் தெரிந்து கொள்வது இல்லை. அதைத் திரும்பத் திரும்பப் படிக்கும் போது தான் அந்த நினைவாற்றல் நமக்குள் பெருகுகின்றது.

ஒரு தடவை பதியச் செய்து விட்டாலும்
1.அதைப் பெற வேண்டும் என்று எண்ணம் இருந்தால் தான்
2.திரும்பத் திரும்ப நாம் மனதில் பதிவு செய்வோம்.
3.அதை வளர்ப்போம்.

ஏனென்றால் இரண்டு சூடத்தையும் தேங்காயையும் பழத்தை விநாயகருக்குக் கொண்டு போய் வைத்து இரண்டு அருகம்புல்லையும் கொடுத்துவிட்டால் “அவன் பார்த்துக் கொள்வான்” என்கிற நினைவில் நாம் இருந்தவர்கள். அந்தப் பழக்கத்தில் இருந்ததால்
1.ஒரு நிமிடத்தில் எண்ணி
2.எங்கேயோ இருக்கக்கூடிய துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெறுகின்றோம் என்று
3.இப்படிச் சொல்கிற பொழுது இது கொஞ்சம் கடினமாக இருக்கின்றது.
4.ஆனால் அதைப் பெறக்கூடிய தகுதியை உங்களுக்கு கொடுக்கின்றோம்.

நல்ல வித்தைக் கொடுத்து அதை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம். அதை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் நிலையில் தான் இருக்கின்றது.

இதற்கு முன்னாடி நாம் இதையெல்லாம் செய்யாமல் இருந்தாலும் கூட இப்பொழுது அந்த அருள் ஞானிகளின் ஞான வித்தைக் கொடுக்கின்றோம்.

அதை முறைப்படி பதிவு செய்து கொண்டீர்கள் என்றால் சரியாக நான்கு நான்கரை மணிக்கெல்லாம் அவசியம் விழிப்பு வரும்.

அந்த நேரத்தில் வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். எழுந்து உட்கார்வதற்கு உங்களுக்குச் சோம்பேறித்தனமாக இருந்தாலும்
1.உங்கள் எண்ணத்தை நேராகத் துருவ மகரிஷிக்கு அனுப்புங்கள்.
2.அந்த துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.

காலையில் இந்தத் துருவ நட்சத்திரத்தின் நிலைகள் நமக்குள் ஒளிக் கதிராக வருகின்றது. அதை எண்ணி இந்த உணர்வை உங்கள் உடலுக்குள் வலு சேருங்கள்.

உங்கள் கண்ணின் நினைவை விண்ணிற்குச் செலுத்தித் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் நினைவை உயிருடன் ஒன்றி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்துங்கள்.

பத்து நிமிடத்திலிருந்து அரை மணி நேரமாவது செய்ய வேண்டும்.உள்ளுக்குள் செலுத்தச் செலுத்த ஆன்மா தூய்மை அடையும். உடல் நலம் பெறுவீர்கள்.

எந்த அளவுக்கு நன்னீரை விட்டுக் குளிக்கின்றீர்களோ இதைப் போல அருள் ஞானியின் உணர்வை உங்கள் உடலுக்குள் சேர்த்து உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு செய்தால் பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்கள். அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சிருஷ்டியாக்கும் நேரம் என்று பொருள்.