ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 27, 2018

மகரிஷிகளுடன் உங்களை எப்படி இணைக்கச் செய்கின்றோம்...?

நான் (ஞானகுரு) திரும்பத் திரும்பச் சொல்கிறேன் யாரும் என்று எண்ண வேண்டாம்.

1.ஒவ்வொரு உணர்வுகளுக்கும் அதனுடன்
2.ஒன்றோடு ஒன்று இணைத்து இணைத்து இணைத்து
3.அந்த ஆற்றல்மிக சக்தியை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத்தான் திரும்பத் திரும்ப சொல்வது.

ஏனென்றால் மனிதனுக்குள் 1008 குணங்கள் உண்டு. ஒரு குணத்தைப் பற்றிச் சொல்லும் போது அந்த ஒரு குணத்துடன் இன்னொரு குணம் சேரும் போது என்ன செய்கின்றது?

அந்த இன்னொரு குணத்துடன் சேர்ந்து இயக்கப்படும்போது
1.அதனுடன் எதை இணைத்து
2.அதை எப்படி அடக்குவது என்பதற்காக வேண்டித்தான்
3.அந்த மகரிஷியின் அருள் சக்திகளை உங்கள் குணங்கள் எல்லாவற்றிலும்
4.இணைத்து இணைத்துக் கொடுப்பது…!

 என்ன சாமி…! திரும்பத் திரும்ப அப்போதும் சொன்னார்… இப்போதும் சொல்கிறார்…! என்று எண்ணுவார்கள்.

மிளகாயை மாவிலே போட்டுச் சுட்டால் “வடை” ஒரு பதத்தில் ருசியாக இருக்கும். அதே மாவில் மிளகாய்க்குப் பதில் இனிப்பைப் போட்டு ஊற்றினால் “பனியாரம்” அது ஒரு பக்குவமாக ருசியாக இருக்கும்.

இதே மாதிரித் தான் அந்த மகரிஷியின் அருள் சக்திகளை எதிலே கொண்டு போய் இணைத்தாலும் அதைச் சுவையாக ஆக்கி அந்த உணர்வாக இயக்க வேண்டும்.

வாழ்க்கையில் எந்தெந்த குணங்கள் உங்களை இயக்கினாலும் அந்த நேரம் ஞானிகளின் உணர்ச்சியை உங்களிடம் தூண்டச் செய்து அந்த உணர்வை உங்களுடன் இணைக்கப்படும் போது சந்தர்ப்பத்தால் வந்த தீமையான குணங்களை அடக்கும் சக்தியாக உங்களுக்குள் வளரும்.
               
அதற்குத்தான் இந்த விரிவுரைகளைக் கொடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று இணைத்து இணைத்து அந்த உணர்வின் அணுக்களாக விளையச் செய்து கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் பள்ளிக்கூடத்தில் படிக்கப்போகும் போது ஒரு விஞ்ஞான அறிவோ அல்லது டெக்னிக்கலோ இதைச் சொல்லும் போது அது திரும்பத் திரும்பச் சொல்லி இது இதனுடன் சேர்க்கப்படும் போது இவ்வாறு ஆகும் என்பார்கள்.

ஒவ்வொரு பாட நிலைகளையும் கொடுக்கும் பொழுது செயின் (CHAIN) தொடர் போல ஒவ்வொன்றையும் இணைத்தே தான் சொல்வார்கள்.

இங்கே இயக்கப்படும் போது இதனுடைய சுழற்சி இப்படி வருகின்றது. இந்த இயக்கத்தின் நிலைகள் இது தடைப்பட்டால் மாற்றங்கள் இப்படி ஆகும் என்கின்ற வகையில் அந்தக் குறிப்பைப் பதிவு செய்து கொடுப்பார்கள்.

அதன் பின் தான் நாம் ஒரு இயந்திரத்தையோ அல்லது ஒரு செயலையோ முழுமையாக இயக்க முடிகின்றது.

1.இயக்கத்தை மட்டும் சொல்லிக் கொண்டே போனாலும்
2.இரண்டாவது அதைச் செயலாக்கப்படும் போது இதில் இன்னென்ன பிழைகள் என்ன வரும் என்று
3.இதைச் சொல்லாதபடி இயக்கத்தைப் பற்றிச் சொன்னால் தெரியாது…
4.அறியும் ஆற்றல் வராது.

இன்று பத்திரிக்கையில் படிக்கின்றோம் அல்லவா…! நேற்றுச் சொன்னதையே அடுத்த நாளும் திருப்பிச் சொல்லி அதனின் தொடர்ச்சியாகக் கொண்டு வருவார்கள்.

இன்ன செயலைச் செய்துவிட்டுத் திருடர்கள் தப்பி விட்டார்கள். அடுத்து அதற்காக இன்னென்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள் என்று பத்திரிக்கையில் நேற்று போட்டிருந்தார்கள் என்றால் அதனின் தொடர்ச்சியாக அதைச் சொல்லித்தான் அடுத்த கட்டம் என்ன ஆகின்றது என்று அடுத்த நாள் சொல்ல முடியும்.

அப்படி மறுபடியும் அதை இன்றைக்குச் சொல்லவில்லை என்றால் அன்றைக்கு இருந்ததை எப்படி நாம் தெரிந்து கொள்வது…? முடியாது.

ஆனாலும் சிலர் என்ன செய்கிறார்கள்… சொல்கிறார்கள்…?

இந்த உபதேசத்தை நேற்றுச் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்கிறார் என்பார்கள். ஆனால் திருப்பிக் கேட்டால் சொல்லத் தெரியாது.

1.அந்த மாதிரிப் பயனற்றுப் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான்
2.நீங்கள் மறந்தாலும் அந்த மகரிஷிகளின் உணர்வை நினைவுபடுத்தி
3.உங்களை மீண்டும் மீண்டும் எண்ணி எடுக்கும்படி செய்கின்றோம்.