ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 12, 2018

“ரிஷிப் பிண்டமாக… அன்று எப்படித் தோன்றினார்கள்…!”

பல காலங்களுக்கு முன் ஆண்ட அரசர்கள் தங்கள் மனைவி கறுவுற்றிருக்கிறாள் என்று தெரிந்தாலே அதாவது நான்கு அல்லது ஐந்து நாள்களாக இருந்தாலும் அடுத்த கணம் கர்ப்பமான அந்தத் தாய்க்குப் பல விதமான விஷங்களை உட்கொள்ளச் செய்கின்றார்கள்.

ஒரு தலை முடியின் நுனியில் விஷத்தைத் தொட்டு அதை ஆகாரத்துடன் கலந்து அதைக் கொடுப்பார்கள்.

உணவுடன் கலந்து செல்லும் விஷம் இரத்தத்துடன் கலந்து கருவிலே இருக்கும் குழந்தைக்குள் ஊடுருவி அந்த விஷத்தையே வளர்த்து பலம் பெற்ற குழந்தையாக சக்தி வாய்ந்ததாக உருவாகின்றது.

ஆடு மாடுகளுக்கும் மற்ற மிருகங்களுக்கும் விஷத்தின் தன்மை உடலில் உள்ள அணுக்களில் அதிகமாக இருப்பதனால் தான் அவைகளின் உடலில் வலிமை அதிகமாக இருக்கின்றது.

பல விதமான விஷங்களை அந்தக் கர்ப்பமான தாய்க்குச் சிறுகச் சிறுகக் கொடுத்து எந்த விதமான விஷங்களும் குழந்தையைப் பாதிக்காதவண்ணம் வலு கொண்டவனாக அரச குடும்பத்தில் வளர்ந்து வரும்படிச் செய்வார்கள்.

அடுத்து குருகுலம் என்ற நிலையில் அரசர்களுடைய சட்டங்களையும் அரசாட்சி செய்யும் நிலைகளையும் தன் குல வழியில் அந்தக் கர்ப்பிணிக்குக் கதைகளாகச் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். அந்த ராணியும் அதைக் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

“தன் நாடு.. எதிரி நாடு… தனது சட்டம்… எதிரியினுடைய நிலைகள்…” அதிலே எந்தெந்த நிலைகள் வெல்ல வேண்டுமோ அந்த உணர்வுகளை எல்லாம் தாயின் கருவிலிருக்கும் குழந்தைக்கு ஊட்டினார்கள்.

ஆகவே தன் நாட்டைப் பாதுகாக்கும் வலிமையும் நாட்டின் உண்மை நிலைகளை உணரச் செய்யும் நிலைகளையும் அன்று அரச காலங்களில் இவ்வாறு செய்தார்கள்.

இதனால் குழந்தை பிறக்கும் பொழுதே ஒரு வல்லமை மிக்க வீரனாக அவன் பேச்சிலும் செயலிலும் வலிமை மிக்கவனாகவும் நாட்டை அறிந்து கொள்ளும் அறிவுள்ளவனாகவும் வருகின்றான்.

ஐந்தே வயதானாலும் அவன் அரசாட்சியைப் பற்றி அறிந்திடும் நிலைகள் பெறுகின்றான். பல போதனைகளைக் கொடுத்து நாட்டைப் பாதுகாக்கும் நிலைகள் கருவிலிருந்தே வளர்ச்சி அடையப்படும் பொழுது
1.அவன் மரணத்தைப் பற்றி எதுவும் எண்ணுவதில்லை.
2.மற்றவர்கள் தன்னைத் தாக்கிடாது
3.எதிரிகளை வீழ்த்திடும் உணர்வையே அவர்கள் ஊட்டினார்கள்.

ஏனென்றால் எதிரிகளிடம் அடிபணிவதில்லை. எதிரிகளை வீழ்த்திடும் உணர்வின் தன்மை தான் அந்த அரசர்களுக்கு உண்டு.

அன்று அந்த அரசர்கள் வைத்திருந்த வாளையும் கத்திகளையும் ஆயுதங்களையும் எந்த வகையில் பயன்படுத்தியிருக்கின்றார்கள் என்று பார்த்தால்
1.அவைகளை நம் இரண்டு கைகளினால் கூடத் தூக்க முடியாது.
2.ஆனால் அவர்கள் அதை ஒரு கையில் வைத்துப் போர் முறையில் கையாண்டிருக்கின்றார்கள்.

ஆனால் ரிஷிகளாக வாழ்ந்தவர்கள் என்ன செய்தார்கள்?

கர்ப்பம் என்று தெரிந்தால் அந்தக் கணவனும் மனைவியும் அவர்கள் பெற்ற பெரும் சக்தியினை அடிக்கடி பாட நிலையாக ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வார்கள்.

தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வைத் தன் உடலிலே சேர்த்து அந்த அணுக்களைப் பெருக்கி
1.கர்ப்பமுற்ற தாயின் தன் ஆன்மாவில் வலு கொண்ட நிலைகளாக
2.அருள் வட்டமாக வளைகாப்பாக இணைத்து
3.கருவில் வளரும் குழந்தை உலக ஞானமும் உலகைக் காத்திடும் அருள் ஞானமும்
4.பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்ற உணர்வினை
5.ஒருவருக்கொருவர் உணர்த்தி அருள் ஞானத்தைப் போதித்துக் கொள்வார்கள்.

அப்படி வளர்ந்த அந்தக் குழந்தைகள் அருள் ஞானக் குழந்தைகளாக விளைந்து உலக ஞானம் பெற்று உலகுக்கே மெய் ஞானத்தை ஊட்டும் நிலையாக வந்தார்கள்.

ரிஷி என்பவர் ரிஷிப் பிண்டமாகி விடுகின்றார்கள்.