ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 19, 2018

சொத்து சுகத்துடன் வாழ்ந்தவரின் கடைசி நிலை – குடிக்கத் தண்ணீர் கூட கொடுக்க மறுக்கின்றார்கள்…!

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் நீ தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போலே மறைவதைப் பாராய்
என்று குருநாதர் அடிக்கடி பாடுவார்.

உதாரணமாக செல்வம் சொத்து எல்லாம் ஆரம்பத்தில் சம்பாரித்திருப்பார்கள். வயதான காலத்தில் நோய்வாய்ப்பட்டு நடமாட்டம் குறைந்து படுக்கையில் இருப்பார்கள்.

அந்த மாதிரி நேரத்தில் வீட்டில் இருக்கும் தன் பையனிடமோ மற்றவர்களிடமோ “தாகமாக இருக்கிறது… கொஞ்சம் தண்ணீர் கொடுப்பா…!”  என்பார்கள்.

உடனே தண்ணீரைக் கொடுக்காதபடி “உனக்கு வேறு வேலையே இல்லை… போ..!” என்று இவர்கள் திட்டிக் கொண்டு இருப்பார்கள்.

மெய் ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளை அறியும் வண்ணம் குருநாதர் எனக்குப் (ஞானகுரு) பல உபதேசங்களைக் கொடுப்பார்.

அதே சமயத்தில் அதை எனக்குள் ஆழமாகப் பதிவு செய்து உண்மையை நான் உணர்வதற்காக வேண்டி என்னைக் கடுமையாகத் திட்டுவார். அப்பொழுது எனக்குச் சோர்வு வரும்.

நான் சோர்வடையும் அந்த மாதிரி நேரங்களில் குருநாதர் என்னை அழைத்துச் சென்று இந்த மாதிரி நோயால் வாடும் ஆள்கள் இருக்கும் குடும்பங்களை நிறையக் காண்பிப்பார்.

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா?

1.ஏனென்றால் அவர் நேற்று நன்றாக இருந்தார்.
2.சந்தோஷமான உலகமாக அவருக்கு இருந்தது.
அதிலே அவர் எடுத்து வளர்த்துக் கொண்ட உணர்வு உடலில் சேர்ந்து நோயானவுடன் “கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கொண்டாப்பா…!” என்கிறார்.

சும்மா போகும் பொழுதும் வரும் பொழுதும் ஏதாவது வேலை சொல்லிக் கொண்டேயிருப்பது…! “இது தான் உன் வேலை” என்று பையன் திட்டுகிறான்.

இவர் நன்றாக இருக்கும் பொழுது என்ன செய்கிறார்?

தன் பையனை அவன் சிறு பிள்ளையாக இருக்கப்படும் போது  அவனைக் காக்க வேண்டும் என்பதற்காக “அங்கே போயிடாதடா… இங்கு போயிடாதடா…!” என்று சொல்லி இருக்கின்றார்.

மீண்டும் மீண்டும் பையன் அந்தக் குறும்புத்தனம் செய்யும் பொழுது சங்கடப்பட்டு இவர் சொல்கிறார். பையனைக் காத்துவிடுகின்றார். ஆனால்…,
1.இவர் வயதான காலத்தில் நோயில் விழுந்து விட்ட பின்னாடி
2.அதே சங்கடம் இங்கே பையனுக்கு வருகின்றது.
3.இவருக்கு வேறு வேலையே இல்லை “எப்போது பார்த்தாலும் “நச்… நச்…” என்று எதையாவது கேட்டுக் கொண்டேயிருப்பார் என்கிறான் பையன்.

தன் பையன் நன்றாக இருப்பதற்காக வேண்டிச் சங்கடப்பட்டுச் சொன்னார். அந்தச் சங்கடமான உணர்வு நோயாக வந்து விட்டது. இவர் நோயில் விழுந்து விட்டார்.

அதே சமயத்தில் நோயானபின் “அப்பாவிற்குக் குடிக்கத் தண்ணீர் கொண்டு வாடா…” என்று சொன்னால் பையன் செய்யாதபடி திட்டிக் கொண்டிருக்கின்றான்.

இது நடந்த நிகழ்ச்சி. அப்படியே இந்த உணர்வைப் படம் பிடித்துக் காட்டுகின்றார் குருநாதர்.

இதைப் போன்று மூன்று இலட்சம் பேரைக் (குடும்பங்களைக்) காண்பித்து “மனமே இனியாகிலும் மயங்காதே…!” என்ற பாட்டின் மூலமாக எனக்கு ஒவ்வொரு நிமிடமும் உண்மைகளைத் தெரியும்படிச் செய்தார். அறிய வைத்தார்.

மின்னலைப் போலே மறைவதைப் பாராய்
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா…?
நிலை இல்லாத இந்த உலகத்திற்கு “நீ ஏன்டா (என்னிடம்) வாதாடுகிறாய்…?” என்று மெய்ப் பொருளைக் காட்டுவார்.

குருநாதர் கடுமையாகத் திட்டுவார். அதே சமயத்தில் அதற்குண்டான உதாரணத்தைக் காட்டுவார். இந்த உணர்வுகள் உனக்குள் எப்படி வேலை செய்கின்றது…? என்று  முழுமையான அனுபவமாகக் கொடுப்பார்.

பார்…! செல்வத்தைச் சம்பாதித்து வைத்தார்கள். அவன் நன்றாக இருக்க வேண்டும்… இவன் நன்றாக இருக்க வேண்டும்… தான் நன்றாக இருக்க வேண்டும்…! என்று சொல்லி முயற்சி செய்வார்கள்.

குடும்பத்தின் மேல் உள்ள பாசத்தால் பதறிப் போய் வேலை செய்வார்கள். பிள்ளைகளைத் திட்டவும் செய்வார்கள். சம்பாதித்த காசை பிள்ளைக்குக் கொடுக்கவும் செய்வார்கள்.

கடைசியில்..,
1.இத்தனையும் செய்தேனே “பையன் இப்படிப் போகின்றானே…!”
2.அவன் எதிர் காலம் என்னாகுமோ என்ற வேதனைப்படுவார்கள்
3.அந்த வேதனையும் கோபமும் அதிகமாகிக் கை கால் வராமல் நோயாகிப் படுத்த படுக்கையாகின்றார்கள்.

படுத்துக் கொண்ட நேரத்தில் “முடியவில்லையே… கண்ணு…! கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா…” என்றால் “இந்த வருகிறேன் போ…!” என்பான்.

அட… இன்னும் காணோமே… தண்ணீர் தவிக்கின்றதே… கொடுக்கவில்லையே…! என்று சொல்லித் தவிக்கும் ஆள்களைக் குருநாதர் நிறையக் காண்பித்தார்.

நோயாக இருக்கின்றார்கள். அப்போது உடலுக்கு முடியாத நிலைகளில்
1.கூட ஒரு தரம் கொஞ்சம் வேகமாகச் சொல்லி விட்டால்
2.எப்போது பார்த்தாலும் கத்திக் கொண்டு… செ.., “சனியன் சீக்கிரம் தொலைந்தால் பரவாயில்லை…!” என்று சொல்லாகச் சொல்லிவிடுகிறார்கள்.

மூன்று இலட்சம் பேர் குடும்பங்களில் மூன்று இலட்சம் விதமாக உணர்வுகள் எப்படி இயங்குகின்றது? இதெல்லாம் தீய வினையாக சாப வினையாக பாவ வினையாக ஒவ்வொரு உடலிலும் எப்படிச் சேர்கின்றது. இதை நிறுத்த வேண்டுமல்லவா என்று காட்டுகிறார் குருநாதர்.

மனித வாழ்க்கையில் இது வருகின்றது. பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…? மின்னலைப் போல…, சுகம் பூராம் போகின்றது பார்…! அனுபவிக்க முடிகின்றதா…? என்கிறார் குருநாதர்.

1.சொத்து எல்லாம் அவருக்கு இருக்கின்றது
2.ஆனால் இவருக்குச் சுகமெல்லாம் போய்விட்டதே..!
3.நரக லோகத்தில் அல்லவா இப்பொழுது வசிக்கின்றார்.
4.யாரும் கவனிக்க மாட்டேன் என்கிறார்கள் என்ற நரக லோகத்தில் தான் வாழ முடிகின்றது.
5.சொர்க்கலோகத்திற்குப் போக முடியவில்லை. ஏனென்றால் அவர் எண்ணமே இங்கு இல்லை.

இதைத்தான் அடிக்கடி அடிக்கடி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு உணர்த்திக் காட்டுவார். அந்த அனுபவத்தைத் தான் உங்களிடம் சொல்கின்றேன்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வேதனைப்பட்டு வேதனைப்பட்டு வேதனையை அனுபவிப்பதற்காக நாம் மனிதச் சரீரம் பெறவில்லை.

வேதனைகளை நீக்கிய… தீமைகளை நீக்கிய… மெய் ஞானிகளின் அருள் சக்திகளை எடுத்து எடுத்து நமக்குள் சிறுகச் சிறுச் சேர்த்து வேதனையிலிருந்து விடுபடும் வாழ்க்கையாக வாழ்ந்து உடலுக்குபின் அழியா ஒளியின் சரீரமாக அடைவது தான் மனிதனின் கடைசி எல்லை.

1.மெய் ஞானிகள் அடைந்த உன்னத நிலைகளை நாம் பெறுவதே
2.நமக்கு அழியாச் சொத்து.
3.அதுவே பேரானந்தப் பெரு நிலை.