ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 25, 2018

கெட்ட சந்தர்ப்பமாக இருந்தாலும் அதை “நல்ல சந்தர்ப்பமாக எப்படி மாற்றுவது...?"

திட்டியவர்களை எண்ணும் பொழுது அந்த உணர்வின் தன்மை நம்முள் பதிவாகின்றது. அவர்களை எண்ணினால் அந்தக் குணம் நமக்குள் குருவாக இயக்கி அவருடன் சண்டையிடச் செய்யும்.

ஒருவர் வேதனைப்பட்டு சொல்லும் நிலைகளை நாம் எண்ணத்தில் எடுத்துக் கொண்டால் அதுவும் நமக்குள் பதிவாகின்றது.

அவர் கஷ்டப்படுகின்றார் என்று மீண்டும் நினைக்கப்படும் பொழுது, அந்த வேதனையான உணர்வின் சக்தி நமக்குள் குருவாக நின்று அடிக்கடி வேதனைப்படச் செய்து கடைசியில் நோயை உருவாக்கும்

சண்டை போடுபவர்களையும் கஷ்டப்படுபவர்களையும் எந்த அளைவிற்கு நாம் வேடிக்கை பார்த்து அவர்களுடைய குறைகளை ஏற்றுக்கொள்கின்றோமோ அதே போல
1.நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் குறைகள் நீங்க வேண்டும்,
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
3.அவர்கள் பெற்ற மெய் ஒளி பெற வேண்டும் என்று
4.கூர்மையான எண்ணங்களைச் செலுத்தி ஏக்க உணர்வுடன் நாம் இருந்தால்
5.அதுவே நமக்குள் குருவாக நின்று இயக்கி மெய் வழியில் அழைத்துச் செல்லும்.

இயற்கையின் சக்தி நம்மை எப்படி மனிதனாக வளர்த்ததோ இதைப் போல மனிதனாக வளர்ந்து உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்ற அந்த மெய் ஒளியின் தொடரை நாமும் தொடர முடியும்.

இப்படி எடுத்துக் கொண்டால் தான் அந்த ஆற்றல்களைப் பெற முடியுமே தவிர நாம் அமைதி கொண்ட நேரத்தில் இதைப் பெறவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தால் அது நடக்காத காரியம்.

ஏனென்றால் அமைதி கொண்டு தியானித்து எழுந்த பின் பிறர் செய்யும் செயலைக் கண்ணுற்றுப் பார்த்து அதை நுகர்ந்தால் நம் உயிர் அதனின் இயக்கமாக இயக்கி உணர்ச்சிகளைத் தூண்டி நுகர்ந்த உணர்வின் சொல்லாகவும் செயலாகவும் செயல்படுத்திவிடும்.

தீமைகள் வரும் பொழுதெல்லாம் அந்த இயக்கத்தையே உபயோகித்து “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று விண்ணிலே நினைவைச் செலுத்தினால் நம் எண்ணங்கள் புவி ஈர்ப்பின் பிடிப்பைக் கடந்து செல்லும்.

இப்படிப் பழக்கப்படுத்திக் கொண்டால்
1.தீமை செய்யும் உணர்வுகள் நம்மை இயக்காது.
2.விண்ணின் தொடர்புக்குள் நாம் செல்கிறோம்.
3.மகரிஷிகள் ஆற்றலைப் பெறும் தகுதி துரிதமாக வந்து சேரும்.
4.தீமைகளை அகற்றும் ஆற்றல்களைப் பெறுகின்றோம்.
5.மெய் ஒளி நமக்குள் சிறுகச் சிறுகப் பெருகுகின்றது.
6.மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திலேயே வாழத் தொடங்குகின்றோம்.

சந்தர்ப்பங்கள் நம்மை இயக்கினாலும் அதே சந்தர்ப்பத்தையே நன்மையைப் பெறும் சந்தர்ப்பமாக நாம் மாற்ற முடியும். மனிதன் ஒருவனால் தான் இது முடியும்.