ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 30, 2018

போற்றலும் தேவையில்லை...! புகழும் தேவையில்லை...! இகழ்ச்சியும் தேவையில்லை...!

இந்த மனித வாழ்க்கையிலே பெருமையும் போற்றுதலும் எல்லாம் கிடைக்கும். அத்தகையை சொல்களைக் கேட்கும் பொழுது நமக்கு மிக ஆனந்தமாகவும் இருக்கும். மகிழ்ச்சியும் பெறுவோம்.

நம்மை மற்றவர்கள் போற்றிக் கொண்டேயிருக்கின்றார்கள் என்றால் அந்தப் போற்றல் கடைசியில் படு பாதாளத்தில் தள்ளிவிடும்.

போற்றுதலுக்குகந்த நிலைகளை அந்தப் போற்றுதலையே எண்ணிக் நாம் கொண்டிருப்போம். நம்மையறியாமலே அது இழி நிலைகளுக்கு இட்டுச் செல்லும். பேருண்மையை அறியாத நிலைகளில் நாம் விட்டு விடுவோம்.

ஒருவரைப் போற்றினால் போற்றுதலுக்குத் தக்கவாறு பொருள் கிடைக்கும். ஆனால் நம் உள்ளத்தாலே நமக்குள் எடுக்கும் மெய்யுணர்வின் தன்மையை நாம் இழந்து விடுவோம்.

அதே போன்று தான் ஒருவரைப் புகழ்ந்து கூறும் பொழுது தவறுகள் நிச்சயம் வருகின்றது. ஆகவே
1.புகழ் கண்டு மயங்காதே…!
2.புகழாரம் பாடாதே…!
3.புகழ்ந்துரைக்க எண்ணாதே…!

ஒருவரைப் புகழ்ந்து பாடத் தொடங்கிவிட்டால் புகழ்ந்து பாடிய உணர்வுகள் வெறும் ஏமாற்று வித்தையாகத்தான் இருக்கும்.

புகழைத் தேடி நாம் சென்றால் அந்தப் புகழின் ஏக்கத்தில் இருப்போம். நாம் ஏமாற்றத்தில்தான் சிக்குவோம். நாம் புகழுக்காகச் செல்லுகின்றோமென்றால், நம் வாழ்க்கை நிச்சயம் தடைப்படும்.

1.இன்னல் கண்டு கலங்காதே..!
2.இகழ்ந்துரைக்க எண்ணாதே…!
3.இகழ்ச்சி கண்டு பதறாதே…!

நாம் எத்தகைய இன்னல்கள் வந்தாலும் பிறரை இகழ்ந்துரைக்கும் எண்ணங்களைத் தவிர்த்தல் வேண்டும். ஒருவருடைய நிலைகளில் இன்னல்கள் வருகின்றதென்றால் அதைக் கண்டு இகழ்ந்துரைப்பது தவறு.

ஒருவர் இன்னலில் சிக்கும் பொழுது அந்த இன்னலிலிருந்து “அவர் மீள வேண்டும் ஈஸ்வரா”என்று அருள் உணர்வைத் தனக்குள் எடுத்து அந்த இன்னலில் இருந்து மீள வேண்டும் என்றால் அந்த உயர்வு நமக்குள் கிடைக்கின்றது.

ஆகவே நமது வாழ்க்கையில் பிறரை இகழ்ந்துரைப்பதும் இன்னல் கண்டு கலங்குவதும் நமக்கு நாமே தண்டனை கொடுப்பது போன்றதாகும்.

இதைப்போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட்டுப் பழகுதல் வேண்டும்.

சப்தரிஷி மண்டலங்களாக முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்லும் அந்த மெய் ஞானிகளின் சத்தான ஆற்றல்கள் நமக்கு முன் மிதந்து கொண்டிருக்கிறது.

விண்ணை நோக்கி ஏகி அந்த விண்ணின் ஆற்றலை நாம் பெறுவதற்குண்டான முயற்சி தான் நாம் எடுக்கும் இந்தத் தியானத்தின் நிலைகள்.

ஆகையினாலே நேரத்தையும் காலத்தையும் விரயமாக்காதபடி ஆற்றல் மிக்க அரும் பெரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைச் சுவாசித்து நம்மைத் துன்பப்படுத்திக் கொண்டிருக்கின்ற தீய உணர்வுகளைச் செயலிழக்கச் செய்து இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது ஒளிச் சரீரமாகப் பெறும் தகுதியை நாம் ஏற்படுத்திக்கொள்வோமாக…!