ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 3, 2018

இரவிலே “மகரிஷிகள் உலகில் சஞ்சரித்து…” ஆனந்தமயமாக பேரானந்தமாக நாம் தூங்க முடியும்

விழித்த நிலையில் புற உலகை மட்டும் தான் பார்க்கின்றோம். அதனால் காலையிலிருந்து இரவு கண்களை மூடும் வரை பலவிதமான உணர்வுகளும் எண்ணங்களும் மோதிக் கொண்டு நம்மைப் பல வகைகளிலும் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது.

அதில் சில மோதல்கள் நம்மை ரொம்பவும் பாதிக்கவே செய்கின்றது. ஆனாலும் அதைச் சமப்படுத்த எந்த அளவிற்கு நாம் முயற்சிக்கின்றோம்….! என்பது கேள்விக் குறி தான்,

பெரும்பகுதி அதற்குத் தீர்வு காணாமல் வேறு வேலைகளையே செய்து கொண்டிருப்போம். ஆனால் எல்லாம் முடிந்து தூங்கப் போகும் சமயம் பாதித்த அத்தனையும் நினைவுக்கு வந்து நம்மைத் தூங்கவே விடாது.

அதற்கு மீறித் தூங்கினாலும் நிம்மதியான தூக்கமாகவும் இருக்காது. காலையில் எழும் போது மறுபடியும் அந்த எண்ணம் வரும். உடலும் ஆரோக்கியமாக இருக்காது.

எழும் பொழுதே ஒருவிதமான எரிச்சலுடனே தான் ஆரம்பிப்போம். இதை எப்படி மாற்றுவது?

படுக்கப் போகும் முன் அவசியம் ஒரு 10 நிமிடமாவது ஞானிகளைப் பற்றிய உபதேசக் கருத்துக்களைப் படித்துப் பதிய வைக்க வேண்டும்.

கண்களை மூடியவுடன் நினைவு முழுவதும் வானை நோக்கி இருக்க வேண்டும். அந்த மகரிஷிகளின் பால் இருக்க வேண்டும். அதாவது புற உலகை மறந்து விட்டுக் கண்களை மூடிய நிலையில் மகரிஷிகள் வாழும் இடங்களுக்குள் நம் நினைவு செல்ல வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று அதையே திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கி இருக்க வேண்டும்.

ஒரு ஐந்து நிமிடமோ அல்லது பத்து நிமிடமோ பூமியின் வடக்குத் திசையில் இவ்வாறு எண்ணிக் கொண்டிருந்தால் போதும். சப்தரிஷி மண்டலங்களுடன் தொடர்பு ஏற்படும்.

அந்த மகரிஷிகளின் தொடர்பு அலையும் நம் ஈர்ப்புக்கு வரும். அப்படியே ஒவ்வொரு மகரிஷியாக எண்ணலாம்.

அகஸ்தியர் வான்மீகி வியாசகர் அத்திரி கோங்கணவர் போகர் காளிங்கநாதர் பிருகு கோலமாமகரிஷி ஈஸ்வரபட்டர் ஆதிசங்கரர் ஒவ்வொருவரையும் எண்ணி அவர்கள் பெற்ற விண்ணின் ஆற்றலைப் பெறவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தால் போதும்.

சிறிது நாள் பழகிவிட்டால் போதும். அப்புறம் கண்களை மூடித் தூங்க ஆரம்பித்தாலே நம் நினைவுகள் விண்ணுலகம் செல்லும். மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். உலக நினைவுகள் வராது.

காலையில் எழும் பொழுதும் மிகுந்த உற்சாகம் இருக்கும். அன்றைய நாள் வரும் சிக்கல்களை எப்படியெல்லாம் நீக்கித் தெளிவாக வழி நடத்த வேண்டும் என்ற சிந்தனைகள் படிப்படியாக வரும்.

என் அனுபவத்தில் தூங்கப் போகும் முன் செய்யும் இந்தத் தியானம் காலையில் செய்யும் தியானத்தை விட மிக மிக முக்கியம்.

படுக்கப்போகும் முன் அன்றாடக் கணக்கு வழக்குகளைச் (எண்ணங்களை - பணம் அல்ல) சரியாக முடித்து விட்டுப் (TALLY) பரிசுத்தமாக நம் மனதையும் உடலையும் கொண்டு வந்து பின் மகரிஷிகளுடன் AUTO CONNECTIONல் போட்டு விட்டால் அது தூக்கமாக இருக்காது.

மகரிஷிகள் இருக்கும் இடத்திற்குள் நாம் சஞ்சரித்த உணர்வுகள் தோன்றும்.

அந்தப் பழக்கம் அப்புறம் நிஜ வாழ்க்கையிலும் எல்லா நேரத்திலும் மகரிஷிகளுடன் சஞ்சரிக்க முடியும்.

நல்ல கனவு கண்டால் மகிழ்ச்சி அடைவது போல் தூக்கத்தில் அல்லது தூங்கப் போகும் முன் மகரிஷிகளுடன் உறவாடுவது போல் கனவாக இருந்தால் அது நிஜமான தொடர்பை ஏற்படுத்தும். 

இது என்னுடைய முழுக்க முழுக்க அனுபவித்த நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் மெய் உணர்வு.