ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 6, 2018

மனிதன் தான் எண்ணிய நிலைகளே திரும்ப வேலை செய்கிறது… என்று ஞானிகள் சொன்னதை ஜாதகமாக மாற்றிக் “கஷ்ட காலங்களை எல்லாம் நாம் வரவழைத்துக் கொள்கின்றோம்…!”

நாம் எல்லோருமே ஜோசியரிடம் சென்று ஜாதகத்தைக் காட்டி ஜோசியம் கேட்க விரும்புகின்றோம். ஜோசியக்காரர் “ஏழரை நாட்டான் சனியன் பிடித்திருக்கிறது…!” என்று சொன்னால் “சனியனை…” நமக்குள் பதிவு செய்து கொள்கின்றோம்.

ஏழரை நாட்டான் சனி நான்கு வருடங்கள் கழித்து வருகிறது என்று சொன்னவுடனே இந்த நான்கு வருஷத்திற்கும் கொஞ்சம் கொஞ்சமாக வரும். ஆரம்ப நிலைகளிலே இன்னென்ன இடைஞ்சல் வரும் என்று பதிவு செய்வார்கள்.
1.உங்கள் பையனுக்கு இப்படி ஆகாது,
2.உங்கள் தொழிலில் எது எடுத்தாலும் நஷ்டம் ஆகும்,
3.உங்கள் நண்பர்களுக்குள் பகைமையாகும் என்று
4.ஜாதகத்தின் படி அவர் சொல்லி விடுவார்.

அதை எல்லாம் உங்கள் எண்ணத்தில் பதிவு செய்து கொள்கின்றீர்கள்.
மீண்டும் நினைவுக்கு செய்தவுடனே அது என்ன செய்யும்…!

டேப் ரெகார்டில் ஒன்றைப் பதிவு செய்து விட்டு அதனை மீண்டும் போட்டால் என்ன செய்யும்? அதே பாடலைத்தான் பாடும்.

உங்கள் உடலில் ஜோதிடக்காரன் பதிவு செய்ததைத் திருப்பி எண்ணினால் அந்த உணர்வு தான் முன்னாடி வரும்.

நீங்கள் யாரிடம் போய் வியாபாரத்தைப் பற்றிப் பேசினாலும் இந்த உணர்வு வரப்போகும் போது நீங்கள் சொல்லக்கூடிய சொல் அவர் காதிலே பட்டபின் அவர் என்ன செய்வார்…?

அவர் கண் உங்களை உற்றுப் பார்க்கின்றது.

ஏழரை நாட்டான் சனியன் பிடித்து விட்டது… கஷ்டம் இருக்கிறது…! என்று இந்த உணர்வுகள் உங்கள் உடலிலிருந்து வெளி வருகிறது. உங்களை அவர் கூர்ந்து கவனிக்கும் போது நீங்கள் வெளிப்படுத்தும் வாசனையை அவர் நுகர்கின்றார்.

1.நாம் முதலில் சொன்ன சொல்லை அவர் கேட்டறிந்தாலும்
2.உடலிலிருந்து போன வாசனையை அவர் சுவாசித்தவுடனே
3.நம் பலவீனத்தைக் காட்டிக் கொடுத்து விடுகின்றது.
4.”நம் வியாபாரம் மட்டமாகத்தான் இருக்கும்…, என்னத்த…?” என்கின்ற நிலையை அது காட்டிக் கொடுத்துவிடும்.

"யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே" என்கிற மாதிரி ஏழரை நாட்டான் சனியன் பிடித்து விட்டது கஷ்டம் வரும் என்று பதிவான நிலைகள் எவ்வளவு பெரிய முயற்சி எடுத்துச் செய்தாலும் அது தான் நினைவுக்கு வரும்.

அந்த ஜோசியக்காரன் கஷ்டம் என்று சொல்லி இருக்கின்றான்…! என்ன ஆகப் போகிறதோ…! என்ற இந்த சந்தேக உணர்வுகள் உடலிலிருந்து அந்த மணமாக வந்து விடும்,

நீங்கள் சொல்லும் போதெல்லாம் உங்கள் உடலில் இருந்து போகக்கூடிய மணம் உங்களை எதிரியாக்கி விடும்.

ஜோசியக்காரன் சொன்னதை ரெகார்டு செய்து வைத்துக் கொண்டு அதன் வழியில் தான் உங்களால் நடக்க முடிகின்றது. ஜோசியப்படி மிகவும் சரியாக நடக்கிறது என்று எல்லோரும் சொல்வார்கள்.

ஏனென்றால் அவர்கள் சொன்னதை அப்படியே உற்று நோக்கிப் பதிவாக்கிக் கொண்டு அந்த எண்ணத்தை வளர்த்து கொண்டால் அதன்படி தான் நடக்கும்.

"எண்ணியது தான் பதிவாகின்றது" என்று (அன்றைய) அரசனுக்கும் சரி ஜோதிடக்காரர்களுக்கும் தெரிகின்றது.

எந்த பக்தியின் தன்மையில் எதை அரசன் அன்று உருவாக்கினானோ அதை மதமாக்கி மதத்தின் அடிப்படையில் மக்களைத் தனக்குள் அடிமைப்படுத்திக் கொண்டு வருவதற்காக "ஜாதகக் குறிப்புகளைக் கொடுத்து” அவனவன் மதத்திற்குத் தகுந்தவாறு இணைத்து எடுத்து வைத்துக் கொண்டார்கள்…!

ஒவ்வொரு மதத்தின் அடிப்படையில் அவர்கள் காட்டியதைத்தான் எடுத்து இந்த நேரம் நல்லது… இந்த நேரம் கெட்டது… என்று நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.

அந்தச் சட்டப்பிரகாரம் “இப்படித்தான்…!” என்று வகுத்து கொண்ட அந்த ஜாதகக் குறிப்பு தான் பதிவாகி வேலை செய்யும்.

1.அருள் சக்திகளை நமக்குள் கூட்டப்படும் போது
2.அந்த உணர்வின் சக்தி கெட்டதை நீக்கி
3.நல்லதை உருவாக்கும் என்று தான் ஞானிகள் சொன்னார்கள்.

இவ்வாறு அந்த மெய் ஞானியினுடைய உணர்வினைப் பதிவாக்கி இந்த உணர்வின் சக்தியை நீ இப்படி வளர்த்துக் கொண்டால் இந்த வேலையைச் செய்யும் என்று அன்றைக்கு அந்த ஞானிகள் சொன்னார்கள்

மனிதன் தான் எண்ணிய நிலைகளே திருப்பி வேலை செய்கின்றது என்று ஞானிகள் சொன்னதைத்தான் ஜாதகங்களாக எழுதி வைத்து விட்டு “கஷ்ட காலங்களை எல்லாம்…” நாம் வரவழைத்துக் கொள்கின்றோம்.

அதற்கு இடைவெளியில் இந்த இந்த மாதத்தில் நல்லதாக இருக்கும் என்று நினைப்பார்கள். ஆனால் பாலிற்குள் ஒரு விஷத்தைப் போட்டு விட்டால் என்ன செய்யும்?

அந்த நான்கு மாதத்தில் கொஞ்சம் தெளிவாக இருந்தாலும் அந்த விஷத்தைத் சுத்தமாக துடைக்க முடியாது.
1.என்னமோ முயற்சி எடுத்தேன்…,
2.கஷ்டம் இன்னும் என்னை விட்டுக் போகமாட்டேன் என்கிறதே…! என்று தான்  சொல்வார்கள்.

ஆக ஜாதகக் குறிப்பை எடுத்து வைத்துக் கொண்டு அதையே ஆழமாகப் பதிவு செய்து அதன் வழியில் தான் நாம் (இன்றும்) நடக்கின்றோம்.

இதையெல்லாம் முறியடிக்கத்தான் அன்று ஞானிகள் நாம் திரும்பும் பக்கமெல்லாம் விநாயகரை வைத்துக் காட்டினார்கள்.

துன்பங்களையெல்லாம் நீக்கி விண்ணுலகம் சென்ற அந்த அகஸ்திய மாமகரிஷிகளை எண்ணி அவரின் அருளாற்றல்களைச் சேர்த்து நாமெல்லாம் மகிழ்ந்து வாழ்வதற்காகப் படைத்துள்ளார்கள்.