ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 6, 2018

பதஞ்சலி எப்படித் திருமூலர் ஆனார்…?

குருநாதர் காட்டிய வழியில் சிதம்பரத்திற்குப் போய் பாம்பு (பதஞ்சலி) போன மூலை முடுக்கு எல்லாம் போய் வந்தேன் (ஞானகுரு).

பைத்தியக்காரன் போல குருநாதர் மாதிரியே அந்த உணர்வை நுகர்ந்து போனேன். நான் பைத்தியக்காரன் மாதிரிப் போகவில்லை என்றால் “திருடன்…” என்று உதைத்து விடுவார்கள்.

ஒரு கிழிந்த சட்டையும் கிழிந்த வேஷ்டியும் போட்டுக் கொண்டு தான் போனேன். யாருக்கும் தெரியாது. ஏனென்றால் எந்த இடத்திற்கு எந்த வேஷம் போட்டுப் போனால் நல்லது என்று அவ்வாறு செய்தது.

பதஞ்சலி கூடுவிட்டுக் கூடு பாயும் யுக்திகளைக் கற்றவர். பல பாட நிலைகளையும் கற்றுணர்ந்தவர். அரசனாக இருந்த அவர் தன்னுடைய ஆசையின் நிலையில் ஒரு சந்தர்ப்பம்… “பாம்பு” உடலுக்குள் செல்கின்றார்.

“என் உடலைப் பாதுகாப்பாக வைத்திரு…!” என்று சேனாதிபதியிடம் சொல்லிவிட்டு வெளியில் சென்றார். பதஞ்சலி சென்றபின் சேனாதிபதி பதஞ்சலியின் மனித உடலை அழித்து விடுகின்றான்.

அவருடைய ஆசையும் அதோடு அழிந்து விடுகின்றது.

மகரிஷிகள் காட்டிய உண்மைகளைத் தன் சுயநலங்களுக்காகத் திருப்பிய இந்த நிலைகள் அவை எல்லை கடந்து எவ்வாறு சென்றது என்று பிறகு உணர்கின்றார் பதஞ்சலி.

பாம்பின் உடலிலிருந்து சூது வாதற்ற ஒரு மாடு மேய்ப்பவன் உடலைத் தீண்டி அவனுடைய உணர்வுக்குள் கலந்து தன்னுடைய யுக்திகளை ஊட்டி தான் படித்த உணர்வுகளை அங்கே வெளிப்படுத்தினார்.

உடலின் இச்சைக்குச் செய்த நிலைகளில் சிக்கி பின் வேறு உடலில் வந்து தான் சிந்தித்த பின் மகரிஷிகள் கண்ட உண்மைகளை அவர் அறிந்தார்.

1.பேரண்டம் எவ்வாறு உருவானது என்றும்
2.மனிதன் எப்படி உருவானான் என்ற நிலைகளையும்
3.தான் கண்டுணர்ந்த உணர்வை மக்களுக்கு எடுத்துக் காட்டுகின்றார்.

“தில்லை நடராஜா…” என்று ஒரு எல்லையாக இருந்து நிற்காமல் சுழலும் நிலை வரும் பொழுது தான் அதில் விளைந்த உணர்வின் தன்மையை அவர் காட்டினார்.

ஒன்றுடன் ஒன்று இணைந்த நிலைகளுக்கொப்ப உணர்வுகளும் எண்ணங்களும் அதன் செயலாக்கங்களும்
1.உணர்வுக்கொப்ப உடலும்
2.உணர்வுக்கொப்ப ரூபமும்
3.உடலுக்கொப்ப ஒலியும் என்ற நிலைகளை அவர்
4.தில்லை அம்பலத்தாண்டவா…! என்று தெளிவாகப் பாடினார்.

ஏனென்றால் முதலில் ஒரு சாம்ராஜ்யத்தையே ஆண்டு வந்தவர் தான் அவர். ஆனால் அவரால் தன் உடலான சாம்ராஜ்யத்தை ஆள முடியவில்லை. பிறிதொருவர் கையில் உடல் சிக்கிய பின் அந்த உடல் மடிந்தது.

அந்த உடலில் சேர்த்துக் கொண்ட ஆசையின் நிலையில் பாம்பிற்குள் புகுந்தார். பாம்பாக பூமியில் நகர்ந்தே எவர் எதைச் செய்கிறார்கள் பல செயல்களைக் காண விரும்பினார்.

அப்படிப் பார்க்கும் நிலையில் மனிதனைக் கண்டவுடன் அஞ்சி பொந்துக்குள் ஒளிவதும் இவர்களிடம் இருந்து தப்பிச் செல்வதும் இதைத்தான் இவரால் காண முடிந்தது.

அரசனாக இருந்து ஆட்சியின் நிலைகள் வரப்படும் பொழுது எதிரி எப்படி…? என்ற நிலைகளில் அடுத்த அரசனைக் கண்டு அஞ்சி ஒளிவதும் பின் அவனைத் தாக்கும் உணர்வுகளே வந்தது.

பாம்பு எதிரிகள் தன்னைத் தாக்காது விஷத்தைக் கொண்டு தீண்டி தன் உடலை பாதுகாக்கும் நிலைகளே வந்தது என்ற நிலையைத்தான் பாம்பின் உடலுக்குள் சென்றபின் ஞானத்தை அவன் பெற்றான்.
1.தன்னை அறிந்து கொண்ட பின் தான்
2.தான் செய்த தவறை உணர்கின்றான்.

மெய் வழி காணும் நிலையில் அறிவின் ஞானமாக ஒவ்வொரு அணுவின் இயக்கத்தையும் அந்த மூலத்தையும் உணர்ந்தான்… வளர்த்தான் “திருமூலராக…” ஆனான்.

உலக மக்கள் அதைப் பெறவேண்டும் என்று உணர்த்தினான். ஒளியின் சரீரமாகி இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

அத்திரி இந்த உடலுக்குள் வந்த பின் திருமூலராகி மூலத்தின் உணர்வின் கருத்தை உயிரான மூலத்துடன் ஒன்றி ஒளியின் மூலமாக இன்றும் சுழன்று கொண்டுள்ளான்.

ஒவ்வொரு ஞானியும் மெய்யை எப்படி அறிந்தார்கள்? ஒளியாக எப்படி ஆனார்கள் என்று குருநாதர் எமக்கு உணர்த்தியதை வெளிப்படுத்துகின்றோம்.