ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 4, 2018

எதுவாக இருந்தாலும் உயிரிலே பட்டால் தான் உணர்ச்சிகள் வரும் – படவில்லை என்றால் உணர்ச்சிகள்.. “எண்ணங்களே வராது…!”

”மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை,” என்று சொல்லிக் கொண்டு அந்தப் பாடலைப் பாடுகின்றோம். அதனின் உட் கருத்தை அறிந்தோமா!

மூலாதாரம் என்றால் நம் உயிர். நாம் எண்ணும் எண்ணங்கள் அது நமக்குள் மோதும் பொழுது அதாவது நம் உயிரிலே மோதுகின்றது.

அப்பொழுது
1.உயிரிலே மூண்டெழும் கனலை
2.எந்தக் காரணத்தால் நாம் பார்த்தோமோ
3.அந்த உணர்வின் தன்மையை இயக்குகின்றது.

உயிரிலே (புருவ மத்தியில்) பட்டதனால் தான் அது இயக்குகின்றது. படவில்லை என்றால் அது இயக்காது.

எத்தகைய நிலையாக இருந்தாலும் சரி உயிரிலே பட்டால் தான் “ஓ, ம்,” பிரணவமாகும்.., ஜீவன் பெறும்.

அப்பொழுது “ஓம்…” அந்த வெப்பமாகி கனல் எழும்புகின்றது. நாம் நுகர்ந்த சுவாசத்தை உயிர் உணர்ச்சிகளாக எழுப்புகின்றது.

ஒரு மத்தாப்பூவை நாம் கொளுத்தினால் அது எப்படிப் பல பொறிகளைக் கிளப்புகின்றதோ அதைப் போல நம் உயிர் நுகர்ந்ததை உணர்ச்சிகளாக மாற்றுகின்றது.
1.அந்த உணர்ச்சிகள் எதுவோ
2.அது நிச்சயம் நம்மை “இயக்கும்
3.நமக்குள் “உண்மையை உணர்த்தும் என்று காட்டுகின்றார்கள்.

அதைத்தான் மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை காலத்தால் அறிந்து கருத்தறியும் நிலைக்கு வரவேண்டும் என்று ஞானிகள் உணர்த்துகின்றனர்.

உயிரில் தீமைகள் படாமல் தடுத்துக் கொண்டாலே போதும். தீமைகள் உயிரிலே படாமல் மறைக்கத்தான் “ஓம் ஈஸ்வரா…!” என்று மகரிஷிகளைப் பற்றிப் புருவ மத்தியில் எண்ண வேண்டும் என்று சொல்வது.

மற்ற எந்த உணர்வுகளும் நம்மை இயக்காது. மகரிஷிகளின் உணர்வுகளே உயிரான கனலில் பட்டு மெய் உணர்ச்சிகளாக எழும்பும்.