ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 5, 2018

விக்கிரமாதித்தன் தன் மனைவியை வைத்துப் பெற்ற சக்தியின் நிலைகள் – கடைசியில் மலைப்பாம்பின் உடலைத் தான் பெற்றான் என்று காட்டினார் குருநாதர்

விக்ரமாதித்தன் அரசனாக இருந்தான். அவன் மனைவிகளில் ஒருத்தியின் மீது தன் மந்திரத்தைப் பாய்ச்சினான்.

தன் மனைவி என்ற நிலைகளில் முதலில் பாசத்தை உருவாக்கினான். பின் மந்திர ஒலிகளைப் பாய்ச்சிப் பாய்ச்சி அதற்குண்டான உணவையும் கொடுத்தான். உணர்வு ஒன்றியபின் சோமபானத்தையும் கொடுத்து மயக்க நிலையை உருவாக்கினான். மயக்கப்படும் மருந்தினையும் கொடுத்தான். இந்த உணர்வின் தன்மை வந்தபின் தன் கணவனின் பால் அந்த எண்ணங்கள் வருகின்றது.

இந்த உணர்வின் தன்மையை உணர்ச்சி ஆக்குகின்றான். இது முழுமையான பின் மயக்க நிலையில் அவன் தன் மனைவியைத் தீயிலே விட்டு எரிக்கின்றான்.

எரிந்தபின் தன் கணவன் மீது பற்று கொண்ட அதே உணர்வுகள் இங்கே ஆன்மாவிற்குள் இது வரப்படும் போது அதற்கென்று மந்திர ஒலியைக் கூட்டி அந்த ஆன்மாவைத் தன்னுடன் இணைத்தே பல அரசாட்சியினுடைய நிலைகளைச் செய்தான்.

இதையெல்லாம் குருநாதர் காட்டினார்.

மந்திரங்களைச் சொல்லி இன்னொரு கூட்டிற்குள் செல்வதும் இந்த உணர்வின் தன்மை வரப்படும் போது தன் மனைவியின் உணர்வால் எப்படித் தப்புகின்றான் என்ற நிலையைக் காட்டுகின்றார் குரு.

“காடாறு மாதம்… நாடாறு மாதம்…” என்ற நிலைகளில் அன்று விக்கிரமாதித்தன் அரசாட்சி புரிந்தாலும் இன்னொரு உடலுக்குள் இவன் சென்று தான் ஒவ்வொரு நாட்டையும் ஒவ்வொரு உடலையும் அடிமைப்படுத்தி அவன் எப்படி வாழ்ந்தான் என்ற நிலையைக் காட்டுகின்றார் குருநாதர்.

1.அகஸ்தியரோ தான் பெற்ற உணர்வின் சத்தை தன் மனைவிக்குப் பாய்ச்சி
2.அந்த உணர்வின் தன்மை ஒன்றாக்கி வானுலக ஆற்றலை அவர்களுக்குள் இணைத்து
3.இரு மனம் இரு உயிரும் ஒன்றாகி இரு உணர்வும் ஒன்றாகி
4.உணர்வின் தன்மை ஒளியாக்கி துருவ நட்சத்திரமாக ஆனார்.
5.அதைப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைவரும் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக இயங்குகின்றார்கள் என்பதைக் காட்டினார் குருநாதர்.

ஆனால் உடலின் இச்சை கொண்டு விக்ரமாதித்தன் தன் மனைவியை மந்திரத்திற்கு உள்ளாக்கி அரசாட்சிகள் செய்தாலும் “இன்று அவன் இருக்கின்றானா…? என்றால் இல்லை...!”

அவன் வாழ்ந்த காலத்திற்குப் பின் மீண்டும் இன்னொரு உடலில் சென்று ஆவியாகச் சென்று இப்படிப் பல உடல்களுக்குத் தாவினான்.

ஆனால் அவனுடைய கடைசி முடிவு ஒவ்வொரு உடலையும் வேதனைப்படுத்தியபின் “மலைப்பாம்பு” போன்று அவன் உருவத்தை எடுத்து நரக வேதனைப்படும் நிலைகளுக்கே அங்கே வருகின்றான் என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார் குருநாதர்.

துருவ மகரிஷியின் உணர்விற்கும் அதே சமயத்தில் அன்று விக்கிரமாதித்தன் நிலைகளுக்கும் எந்த நிலை என்பதைத் தெளிவாக்குகின்றார்.

ஞானிகள் காட்டிய நிலைகளை மந்திர ஒலி கொண்டு செயல்படுத்தும்போது அது எவ்வாறு…? என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார்.

உஜ்ஜயினிக்கு செல்பவர்கள் இன்றும் பார்க்கலாம். அன்று விக்கிரமாதித்தன் எதைச் செய்தான்? இன்றும் அவன் வைத்த ஆலமரம் உண்டு. அதன் கீழ் வைத்த யாகக் குண்டமும் உண்டு.

மற்ற மனைவிகள் இருப்பினும் இதற்கென்று இளம் கன்னியை மனைவியாக்கி அன்று அவன் அரசனாக இருக்கப்படும் போது அரக்கத்தனமான செயலாக்கி இந்த உடலின் தன்மை தான் பெற வேண்டும் என்ற இச்சையில் அவன் செய்த உணர்வுகள் என்ன என்று காட்ட அங்கே அழைத்துச் சென்றார் குருநாதர்,

மும்முடிவரத்திலயும் அவர் எப்படி உணவு உட்கொள்ளாதபடி நாற்பது வருடமாக இருக்கின்றார் என்ற நிலையும் அவர் உடலுக்குள் யார் இருந்து செயல்படுகின்றார் என்ற நிலையும் குருநாதர் காட்டினார்.

இப்படி சில உண்மையின் உணர்வுகளை அறியச் செய்வதற்காக அங்கு அழைத்துச் சென்றார் குருநாதர். இதைப் போன்று பல பேருண்மைகள் மறைந்து உள்ளது.

அரசர்கள் மதங்களாக்கி அவர்கள் இட்ட சட்டத்தை நம் உடலுக்குள் பதிவாக்கி விட்டால் மீண்டும் அதை எண்ணும் போது நமக்குள் கடவுளாக அது இயங்கத் தொடங்கிவிடும்.

அது எந்தெந்த குணங்கள் எதுவோ அது குணத்தின் தெய்வமாக அது இயங்கும் என்ற நிலையைத் தெளிவாகக் காட்டினார் நமது குருநாதர்.

மனிதனின் வாழ்க்கையில் நாம் எப்படி எல்லாம் பல இன்னல்கள் பட்டு வளர்ந்தோம்; பிறந்தோம்; இன்று மனிதனானோம்.

வளர்ந்தோம்; பிறந்தோம் என்றால் மீண்டும் மடிந்தோம்; பிறந்தோம்; மடிந்தோம்; பிறந்தோம் - பல கொடுமைகள் பட்டுத்தான் ஒவ்வொரு சரீரத்தையும் காக்கும் உணர்வின் வலு பெற்று வந்தோம்.

எது இதைக் கொடுமைப்படுத்துகின்றதோ அதன் உடலுக்குள் சென்று இப்படித்தான் மாறி மாறி வந்தது என்ற நிலையைத் தெளிவாக்கினார் குருநாதர்.

மனிதனாகப் பிறந்த நிலைகள் தீமைகளை வென்று இன்று விண்ணுலகில் வாழ்ந்து கொண்டு இருக்கும் அந்தத் துருவ மகரிஷி அவன் மகரிஷி ஆவதற்கு முன் அவன் எப்படி எல்லாம் வாழ்ந்தான் என்ற நிலையைச் சினிமாப் படங்களில் பார்ப்பது போல் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

பல கோடிச் சரீரங்களில் வென்று இன்று உன் உயிர் உன்னை மனிதனாக உருவாக்கி உள்ளது,
1.துருவ மகரிஷியைப் போன்று நீ ஆற்றலைப் பெறும் மார்க்கங்கள் எவ்வாறு?
2.அதற்கு எதன் வழியில் நீ செல்ல வேண்டும்?
3.இந்த உடலை விட்டுச் சென்றால் உனது எல்லை எது? என்ற நிலையைக் காட்டுகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

அவர் காட்டிய நிலையில் யாம் (ஞானகுரு) உணர்ந்த உண்மை நிலைகளைத்தான் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றோம்.