ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 20, 2018

“உயர்ந்த சக்தியை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும்…!”


மெய் ஞானத்தைப் பற்றியோ மெய் ஞானிகளைப் பற்றியோ ஆரம்பத்தில் எனக்கும் (ஞானகுரு) ஒன்றும் தெரியாது. நானும் உங்களை மாதிரித் தான் பக்தியிலே தீவிரமாக இருந்தேன். கோயிலில் சாமி இருக்கும் இடத்தில் ஏதாவது தவறாகச் செய்தார்கள் என்றால் உடனே சண்டைக்குப் போவேன்.

கோயிலுக்குப் போய் விழுந்து விழுந்து கும்பிட்டுக் கொண்டே இருப்பேன். பக்தி உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டதால் அந்தத் தெய்வத்திடம் நின்று நின்று சாதிப்பேன்.

அப்போதெல்லாம் அதிலே ஒன்றும் தெரியவில்லை. உணரவும் முடியவில்லை. குருநாதர் இதை எல்லாம் காட்டிய பின் தான் ஞானிகளைப் பற்றிய உண்மையை உணர முடிந்தது. கோவிலின் தத்துவத்தையும் அறிய முடிந்தது.

ஆகையினாலே கோயிலுக்குள் விளக்கை ஏன் காட்டுகின்றார்கள்...? என்று தெரிந்து கொள்ளுங்கள். விளக்கைக் காட்டப்படும் போது தான் அங்கிருக்கக்கூடிய பொருள்கள் அனைத்தும் தெரிகின்றது.

அதைப் பார்த்ததும் பொருளறிந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்க வேண்டும்.

அங்கிருக்கும் தெய்வ குணத்தைக் காவியமாகக் காட்டியிருப்பார்கள். தெய்வத்தைப் பார்த்த உடனே இந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும். இதை உணர்த்திய அந்த மகரிஷியின் அருள் ஒளி பெற நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்க வேண்டும்.

தெய்வத்தின் மேல் போட்டிருக்கின்ற மலரைப் போன்ற மணம் எங்கள் உடல் முழுவதும் மணக்க வேண்டும். எங்களைப் பார்ப்போர் அனைவரது உள்ளங்களிலும் இந்த மலரைப் போல மணமும் மன மகிழ்ச்சியும் தோன்ற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்க வேண்டும்.

இப்படித் தான் ஞானிகள் கோயிலில் கும்பிடச் சொன்னார்கள்.

அடிக்கடி இதை நான் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றேன். என்ன...! சாமி (ஞானகுரு) நேற்றுச் சொன்னார். மறுபடி இன்றைக்கும் அதையே கேட்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்...?

மீண்டும் மீண்டும் நான் சொல்லிக் கொண்டு வந்தாலும் அதை மறந்து விட்டு விநாயகரைப் பார்த்தால் உடனே உங்கள் தலையில் தான் கொட்டுகிறீர்கள். பழக்கத்தில் வந்த அந்த உணர்வுதான் உங்களை இயக்குகின்றது. அதனால் தான் திரும்பத் திரும்ப நான் சொல்வது.

ஒருவனைத் திருடன்... திருடன்... என்று திரும்பத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருங்கள். நம்முடைய சந்தர்ப்பம் அடுத்து “நாமும் கொஞ்சம் எடுத்துப் பார்க்கலாம்... என்று எடுத்துப் பாக்கெட்டில் போட வைக்கும்...!” ஏனென்றால்
1.“அவனைத் திருட்டுப் பையன்... ரொம்ப மோசமானவன்...!” என்று சொல்லிக் கொண்டே இருப்போம்.
2.அந்த உணர்வை ஏற்றுக் கொண்ட பின்
3.நம்மை அறியாமலே அந்த உணர்வுகள் நம்மை எடுக்க வைக்கும்.
4.நாம் அல்ல. அந்த உணர்வுகள் இந்த வேலையைச் செய்யும்.

இதைப்போலத் தான் அடிக்கடி உங்களுக்கு அந்த மெய் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் எப்படியும் வளர வேண்டும் என்று உணர்த்த… உணர்த்த… உணர்த்த… அந்த மெய் ஒளியின் தன்மையை நீங்கள் பெறுவீர்கள்.

குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகள் என்னைச் சும்மா “அடிப்பார்...!” அடித்தவுடனே அவரைத் திரும்பி பார்ப்பேன். என்ன சாமி...? பிள்ளை குட்டிக்காரனை ரோட்டிலேயும் காட்டிலேயும் இழுத்து அடித்துக் கஷ்டப்படுத்திக் கொண்டே இருக்கின்றீர்கள்...! என்று கேட்பேன்.

கஷ்டப்படும் போது அந்த உணர்வு எப்படி இயங்குகின்றது...? உன்னை எப்படிக் கஷ்டப்படுத்துகிறது..? அந்த நேரத்தில் உன்னுடைய நல்ல குணங்கள் எப்படிச் செயலற்றதாகிறது..? இதை நீ உணர்ந்து கொள்…! அதற்காகத்தான் நான் உன்னை இங்கே கூட்டிக் கொண்டு வந்தேன் என்று குருநாதர் சொல்வார்.

ஏனென்றால் அடிபட்டுக் கஷ்டப்பட்டு உணர்ந்தேன். அந்த உணர்வை எனக்குள் வளர்த்தேன். மெய் ஒளியைப் பெறும் மார்க்கத்தைக் குருநாதர் காட்டினார். அதை நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசையில் உங்கள் கஷ்டத்தை நிவர்த்திக்க இப்பொழுது “கொட்டு… கொட்டு…!” என்று கொட்டுகிறேன்.
1.அதாவது குருநாதர் என்னைக் காட்டுக்குள் அலையச் செய்து கொடுத்தார்.
2.உங்கள் வேலை வெட்டி எல்லாம் நிறுத்திவிட்டு இதிலே கொட்ட வைக்கிறேன்.

ஆகவே யாம் உபதேசித்த அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மையை நீங்கள் கூட்டும் போது உங்கள் துன்பத்தைப் போக்க உங்கள் எண்ணம் உங்களுக்கு நிச்சயம் உதவும்.