கடவுளுக்காக வேண்டி ஹோமம் செய்தால் நமக்கு நல்லது. யாகங்களும்
பூஜைகளும் செய்தால் கடவுள் நமக்குச் செய்வான் என்று சொன்னால் உடலின் தன்மைக்காகச் சில
இதுகளை நாம் செய்யலாம்.
அதைப் போல யோகாசனங்கள் செய்கிறோம் வாசி யோகம் செய்கிறோம்
குண்டலினியைத் தட்டி எழுப்புகிறோம் என்று திரும்பத் திரும்ப எண்ணத்தின் வலு
கூட்டுவதற்காகச் சில நிலைகளைச் செய்யலாம்.
ஆனால் உண்மையான நிலைகளில்
1.விண்ணின் ஆற்றலை அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து
2.உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக்கி
3.உயிராத்மாவை உந்தி விண்ணிலே தள்ளவில்லை என்றால்
4.யாராக இருந்தாலும் மீண்டும் இங்கே புவிக்குள் தான் வர வேண்டும்.
அது இல்லாத படி 85 வயது மடாதிபதியாக இருந்தவர் “நான் வாசலைத் திறந்து..
மேலே போகிறேன்...!” என்று சொன்னால் எங்கே போவது...?
லோக குரு என்று பேரை வைத்து இருப்பார்கள். ஆனால் அவரைக்
குருவாக ஏற்றுக் கொண்டு ஐதீகத்தை பின்பற்றி நடந்தவர்கள் அவர் உடலை விட்டுப் பிரிந்த
பின் என்ன செய்தார்கள்...?
ஐதீகப்படி மோட்சம் அடைய வேண்டும் என்று சொல்லிக் கொண்டு
தேங்காயை எடுத்து மண்டையில போட்டு “கபால மோட்சம்...!” அடைய வேண்டும் என்று செய்தார்கள்.
இதுகளெல்லாம் பிழைகள் கொண்டது.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் அதை ஆட்சி புரியும் நிலையாக மடாதிபதிகளாக
இருக்கின்றனர். மந்திரம் சொல்லிக் கொடுக்கக்கூடிய நிலையில் யாக வேள்விகள் எப்படிச்
செய்வது...? கோயிலிலே பூஜை எப்படிச் செய்வது..? கோயிலிலே எப்படி யாகங்கள் வளர்க்கிறது..?
என்று கற்பித்துக் கொடுப்பவர்கள் தான் அவர்கள்.
எந்த மடாதிபதி இருக்கின்றாரோ அவர் சொல்கிறபடி தான் எல்லாம் நடக்க
வேண்டும்.
எது…?
ஒரு அரசன் ஆட்சி புரிந்தான் என்றால் இவருடைய நிலைகளுக்கு மற்ற மடாதிபதிகள்
வர வேண்டும். அந்த மடாதிபதிகள் சொல்வது எதுவோ அவர் இட்ட கட்டளைப்படி அவரின் சீடர்கள்
போய்ச் செய்ய வேண்டும். அத்தகைய மடாதிபதி ஆட்சியினுடைய நிலைகளில் தான் இன்றும் நாம்
ஐதீகங்களாக வைத்திருக்கின்றோம்.
1.மெய் ஞானிகள் அன்று பேருண்மைகளைக் காட்டியிருந்தாலும்
2.சாங்கிய சாஸ்திரத்திலும் ஐதீகத்திலும் தான் மூழ்கி விட்டோமே தவிர
3.அந்தச் சாஸ்திரம் எது...? என்ற மூலத்தை அறியாதபடி நாம்
சென்று கொண்டுள்ளோம்.
யாம் யாரையும் குறை கூறவில்லை. ஞானிகள் சாஸ்திரங்களில் கூறியது
உண்மை என்றாலும் அதை ஐதீகம் என்ற நிலையில் திருத்தி உண்மையின் உணர்வைப் பெற முடியாத
நிலைகள் மூலத்தை மறைத்து விட்டார்கள்.
ஆகையினால் இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீண்டு ஆலயங்களுக்குச்
சென்றால் அந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும் என்று தியானியுங்கள்.
அந்தத் தெய்வ குணத்தை உருவாக்கிக் கொடுத்த மகரிஷிகளின் அருள்
சக்தி பெறவேண்டும்... இந்த ஆலயம் வரும் அனைத்து மக்களும் அந்தத் தெய்வ குணத்தைப்
பெறவேண்டும் அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் என்று இப்படி எண்ணுங்கள்.
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை வலுவாக்கிக் கொண்ட பின்
2.உங்கள் மூதாதையர்களுடைய உயிராத்மாக்களை உந்தித் தள்ளி
3.விண்ணிலிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யுங்கள்.
4.உங்கள் முன்னோர்களை அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்யுங்கள்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் (ஞானகுரு) காட்டியது இத்தகைய
விண் செல்லும்... விண் செலுத்தும் மார்க்கம் தான்...!