ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 23, 2018

உயிரான ஈசனிடம் நாம் எதை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டும்...?


தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும் எல்லா நினைவும் எங்களுக்கு அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

“எல்லா நினைவும்” என்றால் அது எது...?

நமது உயிர் புழுவாக உடல் பெற்ற நிலையிலிருந்து மனிதனாக வருகிற வரையிலும்
1.தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வில் இருந்து தப்பிக்கும் உணர்வை வளர்த்தது.
2.தனது வாழ் நாள் முழுவதும் தீமை என்று உணர்ந்தாலே “அதிலிருந்து மீண்டிட வேண்டும்...” என்ற உணர்வை நுகர்ந்தது.

இப்படித்தான் நாம் ஒவ்வொரு சரீரத்திலும் ஒன்றுக்கொன்று கொன்று தின்று இரையாகி அதிலிருந்தெல்லாம் மீள வேண்டும் என்று எடுத்துக் கொண்ட எண்ணத்திற்கொப்ப அடுத்த உடலை வலுவாக உருவாக்கியது.

1.எதனின் வலுவைத் தனக்குள் நுகர்ந்ததோ
2.தீமையிலிருந்து நீக்கிடும் உணர்வை விளைய வைத்து... விளைய வைத்து... விளைய வைத்து... விளைய வைத்து...!
3.தீமைகளை எல்லாம் அகற்றிடும் உடலின் தன்மையாக நம்மை மனிதனாக உருவாக்கியது இந்த உயிர் தான்.

இன்று நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றிவிட்டு அனைத்தையும் அறிந்துணர்ந்து தீமையை அகற்றிடும் அருள் மணம் கமழும் ஆறாவது அறிவை நமக்குள் ஊட்டியதும் இதே உயிர் தான்.

ஆகவே எனது வாழ்க்கையில் இனி வரும் இருளினை வராது பாதுகாத்திடும் சக்தியாக  
1.தீமைகளை நீக்கினேன்... என்ற உணர்வும்
2.தீமையிலிருந்து மீண்டேன்... என்றும்
3.தீமையிலிருந்து விடுபடும் அந்த உணர்வினை எனக்குள் நீயே (உயிர்) உருவாக்கினாய் என்றும்
4.தீமையிலிருந்து விடுபடும்... “இந்த எல்லா நினைவையும் நான் பெற அருள்வாய் ஈஸ்வரா...!”
5.தீமையற்ற உணர்வின் தன்மையை உருவாக்க - அனைத்தையும் அறிந்திடும் அறிவாக
6.தீமையென்ற நிலைகள் புகாது தடுக்கும் சேனாதிபதியாக நீயே இருக்க வேண்டும் ஈஸ்வரா...!

அகஸ்தியனும் அவர் மனைவியும் தங்கள் வாழ் நாளில் தீமையெல்லாம் அகற்றி தீமைகளை அகற்றிடும் உணர்வின் ஒளியாகப் பெற்று வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரி போன்று இரு மனமும் ஒன்றி  இரு உயிரும் ஒன்றி பேரருள் என்ற உணர்வின் தன்மை பெற்றுப் பேரொளியாகத் துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

1.அகஸ்தியரும் அவர் மனைவியும் பெற்ற அந்தப் பேரருள் உணர்வின் தன்மை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...!
2.இருளில் இருந்து மீட்டிடும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...!
3.இனி வரும் எல்லாத் தீமைகளையும் அகற்றிடும் அருள் மணத்தை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

இவ்வாறு வேண்டி நம் உயிரிடம் பிரார்த்திக்கும் பொழுது நாம் புழுவிலிருந்து மனிதனாக உருவான நிலையில் ஒவ்வொரு சரீரத்திலும் சேர்த்துக் கொண்ட பல கோடித் தீமைகளிலிருந்து விடுபட்ட பேராற்றல் நமக்குக் கிடைக்கின்றது.

அதன் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்து உடலுக்குப் பின் என்றுமே அழியாத ஒளி உடலாக ஒளிச் சரீரம் பெறலாம்.