ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 14, 2018

"கலகப்பிரியன் நாரதன்..." என்றுமே சிரித்த முகத்துடனே இருக்கின்றான்…? ஏன்…? எதனால்..?


நம் பிரபஞ்சத்திற்கு வெளியிலே வட திசையிலே இருப்பது தான் “சப்தரிஷி மண்டலம்…!” என்பது. அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இருந்து வரக்கூடிய ஒளியான சக்திகளைத் தான் “ரிஷியின் மகன் நாரதன்…!” என்று சொல்வது.

அந்த நாரதன் என்பது அவன் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கின்றான். அவன் வைத்திருக்கும் வீணையிலிருந்து வரும் நாதமோ இனிமையாக இருக்கின்றது.
1.நாரதனோ கலகப்பிரியன்.
2.ஆனால் அவன் கலகமோ நன்மையில் முடியும்
3.இப்படித்தான் ஞானிகள் காட்டியிருக்கின்றார்கள்.

ஒருவர் நமக்குக் குற்றம் இழைத்து விட்டால் அவர் மேல் நமக்கு வெறுப்பு ஏற்படுகின்றது, அந்த வெறுப்பின் எண்ணங்கள் நமக்குள் ஓங்கி வளர்ந்த பின் அவரை வெறுப்பாகவே நாம் பேசும் நிலை வருகின்றது.

அப்பொழுது அந்த வெறுப்பைத் தடுப்பதற்காக விண்ணை நோக்கி ஏகி அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் பேரருள் பேரொளியைச் சுவாசிக்கும் போது
1.சுவாசித்த அந்த ஆற்றல் மிக்க சக்தி உடலிற்குள் போனவுடனே
2.அவனை ஏன் வெறுக்கின்றாய்…? அவனை ஏன் நீ தாக்க எண்ணுகின்றாய்…? என்று
3.நம் எண்ணத்தைக் கலைக்கச் செய்து “கேள்வியாக…” உள்ளுக்குள் இருந்து எழுகின்றது.
4.உனக்குள் அந்த மெய் உணர்வை எடுத்து வலுவாக்கிக் கொண்டு
5.அவன் அறியாது செய்யும் தீங்கினை நீக்க
6.உன் எண்ணத்தின் ஒளியைப் பாய்ச்சினால் அங்கே இருள் மறைந்து “ஒளி பெறும் அல்லவா…!” என்று
7.அந்த நாரதன் சொல்வதாக… இந்தத் தத்துவத்தைத் தான் அங்கே காட்டப்பட்டது.

அதைத்தான் ரிஷியின் மகன் நாரதன். நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன். நாரதனோ “கலகப்பிரியன்…” என்று காட்டினார்கள்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உடல் பெறும் உணர்வுகளை எடுப்பதற்குப் பதில் தனக்குள் மெய் உணர்வின் தன்மையைச் சிருஷ்டித்து உணர்வின் ஒளியாக மாற்றிப் பத்தாவது அவதாரமாக “கல்கி…!” என்ற நிலையை அடைய வேண்டும்.

அவ்வாறு உயிராத்மா ஒளியின் சுடராகி விண்ணில் செல்லும்போது
1.விண்ணிலிருந்து வரக்கூடிய எத்தகைய விஷத்தின் ஆற்றலையும்
2.அது ஒளியாக மாற்றும் ஆற்றல் பெறுகின்றது.

மனித உடலுக்குப் பின் ஒவ்வொருவரும் அடைய வேண்டிய எல்லை “அதுவே…!” என்று ஞானிகளால் உணர்த்தப்பட்டது.