விண்ணிலே தோன்றிய ஒரு உயிர் பூமிக்குள் வரும் பொழுது ஒரு தாவர இனச் சத்தை அது
கவர்ந்து கொண்டால் அந்தச் சத்து உயிருடன் உறையும் பொழுது புழுவாக உடல் பெறுகின்றது.
உடல் என்பது சிவம் (திடப்பொருள் - சிவம்)
1.ஆனால் உயிரோ அந்தப் புழுவின் உடலுக்குள் மறைந்து விடுகின்றது… சிவன் ராத்திரி…!
2.அதாவது ஒரு உயிரணு பூமிக்குள் உடல் பெற்ற நாளை சிவன் ராத்திரி என்று காட்டுகின்றார்கள்
ஞானிகள்.
3.இவ்வாறு இருளுக்குள் உயிரின் ஒளி கொண்டு புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி
பெற்று வரும் வரையிலும்
4.பலவிதமான உணர்வுகளையும் குணங்களையும் எடுத்துக் கொண்டோம் என்ற நிலையை உணர்த்துவதற்காக
“நவராத்திரி…!” என்றும் காட்டுகின்றார்கள்.
அதே சமயத்தில் மனிதனாக வரும் வரையிலும் எந்தெந்தச் சக்திகளை எல்லாம் எடுத்தோம்
என்பதைக் “கொலுவாக ஏற்றி வைத்து…” ஒவ்வொருவரும் நாம் அதைப் பார்த்து அறிந்து கொள்வதற்காக
கொலு வைக்கச் செய்தார்கள்.
ஒவ்வொரு உடலிலும் எடுத்துக் கொண்ட சக்திகள் என்றால் அது எது..?
புழுவிலிருந்து மனிதனாக வளர்ந்து வரும் வரையிலும் ஒன்றை ஒன்று கொன்று தின்று
வந்தாலும் அந்த ஒவ்வொரு சரீரத்திலும் தான் தப்பிக்க வேண்டும்… தப்பிக்க வேண்டும்… என்று
தன்னைத் தற்காத்துக் கொள்ளும் சக்திகளை எடுத்து எடுத்துச் சேர்த்துக் கொள்கிறது.
அவ்வாறு எடுத்துக் கொண்ட வினைகளுக்கொப்ப உருப்பெற்ற உணர்வின் எண்ண அலைகள் அது
மீண்டும் உயிராத்மாவாகச் சேர்த்துச் சேர்த்து இதனின் கலவையின் தன்மை கொண்டு அதைத் தன்னைத்
தற்காத்துக் கொள்ளக் கூடிய உணர்வின் ஆற்றலாக விளைந்து மனிதனாக வந்துள்ளோம்...! என்பதையே
கொலுவாக வைத்துக் காட்டுகின்றார்கள்.
1.பல விதமான சக்திகள் இந்த உடலுக்குள் இருளுக்குள் மறைந்திருக்கிறது… என்று
2.தனக்குள் இருக்கக்கூடிய சத்தை உணர்த்துவதற்குத்தான் நவராத்திரி என்று உணர்த்தினார்கள்
ஞானிகள்.
ஏனென்றால் உயிர் விண்ணிலே தோன்றி பூமிக்குள் வந்து பல உடல்கள் பெற்றுத் தாவர
இனச் சத்திற்குள் இருக்கக்கூடிய விஷத்தின் ஆற்றலைத் தன் உடலாக்கி அதை வலுவாக்கிய பின்
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தன்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய நிலையாக அது உருவாக்கியது.
கொலுவில் முதலில் நாம் பார்க்கும் பொழுது சிறு கல் மற்ற பாறையின் நிலைகளை வைத்து
நமது பூமியின் இயக்கத்தைக் காட்டியிருப்பார்கள். அடுத்து காளானிலிருந்து மற்ற செடி
வகைகள் வரை வரிசைப்படுத்தி யாவும் நமது பூமியில் உருவானது…! என்று காட்டியிருப்பார்கள்.
அவை அனைத்தையும் வைத்துக் கீழ் இருந்து மேல் வரையிலும் எவ்வாறு வளர்ந்தது...?
என்ற நிலையை நாம் அறிந்து கொள்வதற்காகக் கொலு வைத்தார்கள்.
அடுத்து சரஸ்வதி பராசக்தி லட்சுமி என்று பராசக்தியை மையமாக வைத்து அதன் அருகிலே
லட்சுமியும் சரஸ்வதியும் வைத்து ஒரு அணுவின் தன்மை இவ்வாறு உருவானது..? என்ற நிலையை
நாம் அறிந்து கொள்வதற்காகச் சிலைகளை வைத்திருப்பார்கள்.
சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் – பராசக்தி.. ஈர்க்கும் காந்தம் – லட்சுமி..
அதிலிருந்து கடந்து வெளி வரப்படும்பொழுது ‘அல்ட்ராவயலட் - ஆதிசேஷன் இந்த மூன்று நிலைகள்
கொண்டு பூமியில் இயங்கினாலும் பூமிக்குள் வந்து ஒரு செடியின் சத்தைக் கவர்ந்து தன்னுடன்
இணைக்கப்படும் பொழுது மணம் ஞானம் சரஸ்வதி…!
எந்தச் செடியின் சத்தை அது கவர்ந்து கொண்டு இயக்குகின்றதோ வெப்பம் பராசக்தி காந்தம் லட்சுமி அடுத்தது ஆதிசேஷன்
(விஷம்) மணம் சரஸ்வதி (ஞானம்)
1.நான்கும் ஒன்றாகச் சேர்த்து ஒரு புது இயக்கமாக
2.எந்த மணத்தின் தன்மை கொண்டு இயங்குகின்றதோ
3.இது ஐந்தாவது நிலை அதற்குப் பெயர் ‘”காயத்ரி”
ஆக எந்த மணமோ அதனின் சக்தியாக தன் மணத்தால் காத்துக் கொள்வதும் தன் மணத்தால்
மற்றொன்றைத் தன் உணர்வின் சத்து எதனுடன் இணைந்ததோ அந்த இனத்தின் சக்தியைத் தனக்குள்
வளர்க்கும் திறன் கொண்டது.
அதே சத்து ஒரு செடியுடன் இணைந்து இயக்கப்படும் பொழுது தன் உணர்வான சத்தை வலுக்கொண்டு
தன் இனத்தை வளர்த்துத் தனக்குள் வளர்வது என்பது “உணர்வு…”இப்படிப்பட்ட வளர்ச்சியில்
1.அந்தந்த வினைக்கு நாயகனாக உடல்கள் எவ்வாறு உருவானது...? என்று
2.புழுவின் உருவத்திலிருந்து பல பல உயிரினங்களை வைத்து வரிசைப்படுத்தி
3.இந்த மனிதப் பிறவிக்கு எவ்வாறு வந்தோம்...? என்ற இந்த நிலையைக் கொலுவாக வைத்து
4.ஒவ்வொருவரையும் அதைப் பார்க்கச் செய்து நாம் தெளிவுறத் தெரிந்து கொள்ளும்
நிலைக்கு அன்று உருவாக்கினார்கள் ஞானிகள்.