ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 17, 2018

மகிழ்ச்சியாக இருக்கும்போது செய்வது தான் தியானமா...?


நாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் நாம் கவலைப்படும்படியாக யாராவது பேசினால் நம்மை அறியாமலே உடனே சோர்வடைவோம்.

அதே மாதிரி நமக்குச் சம்பந்தமே இல்லை என்றாலும் கூட பிறர் கோபத்துடன் பேசிக் கொண்டிருந்தாலோ அல்லது எரிச்சலாகப் பேசிக் கொண்டிருந்தாலோ அதை நாம் உற்றுக் கேட்க நேர்ந்தால் அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி விடுகின்றது.

அதே உணர்வுடன் வீட்டிற்கு வந்தால் பையன் ஏதாவது ஒரு சிறு குறும்புத்தனம் செய்தான் என்றால் அதே எரிச்சல் பட்டு கோபமாகி “என்னடா நாயே...? இப்படிச் செய்கிறாய்...!” என்று பேச வைத்துவிடும்.

நாம் அல்ல...! ஆனால் நாம் நுகர்ந்த அந்த உணர்வின் அலைகள் நம்மை இப்படி இயக்குகின்றது. இது தீய வினைகளாக நமக்குள்ளும் சேர்கின்றது. பையன் உடலுக்குள்ளும் சேர்கின்றது. தீய வினைகள் விளையும் பொழுது நமக்குள் தீய விளைவுகளை விளைவித்துவிடும்.

நாம் தவறு செய்யவில்லை என்றாலும் நம்மை அறியாமல நமக்குள் புகும் இந்தத் தீயவினைகளை யார் தூய்மைப்படுத்துவார்கள்...? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆகவே
1.நாம் எப்பொழுது துன்பங்களைச் சந்திக்கின்றோமோ
2.அப்போது அந்த நேரத்திலேயே மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா...!
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள எல்லா உறுப்புக்களையும் உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் ஈஸ்வரா..! என்று ஏங்கிச் சுவாசித்து
4.இந்தத் தவக் கோலத்தை அந்த நிமிடமே இப்படி மாற்ற வேண்டும். இது தான் தவம்.
5.ஆகவே தவம் என்பது வரம் இருந்து பெறுவதும் அல்ல. வரம் பெற்றுச் செய்வதும் அல்ல.

அந்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்தின் வலுவைப் பெற்றுக் கொண்டால் நீங்கள் சுலபத்தில் தியானிக்கலாம்.

அத்தகைய பழக்கம் வந்துவிட்டால் நாம் எண்ணியவுடன் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் நம் உணர்வின் அலைகள் கலக்கும். அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றும் இணைந்து வாழும் பக்குவ நிலைக்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

இதைப் படிப்போர் உள்ளங்களில் எந்த மனக் கவலை இருந்தாலும் நோய்கள் இருந்தாலும் வேதனைகள் இருந்தாலும் அல்லது அறியாது நிலைகள் எந்தத் தீயது இருந்தாலும் அந்த மகரிஷிகளின் பேராற்றல் உங்கள் உடலுக்குள் ஊடுருவி அந்தத் துன்பத்தை எல்லாம் அகற்றிடும் மிகச் சக்தி வாய்ந்த உணர்வாக உங்களுக்குள் பதிவாகும்.

நோயுடன் வாடிக் கொண்டிருந்தாலும் அல்லது சோர்வுடன் இருந்தாலும் இந்த உபதேசத்தின் உணர்வுகள் உங்களுக்குள் அந்த மெய் ஒளியைக் காணும் உணர்ச்சியாகத் தூண்டச் செய்து
1.உங்கள் வேதனைகளை இப்பொழுது குறைத்து இருக்கும்
2.மகிழ்ச்சி ஊட்டும் உணர்வின் வலுவாக வளர்க்கச் செய்யும்
3.அப்படி வளர்க்க வேண்டும் என்பதற்குத்தான் இந்த உபதேசம்.

ஏனென்ன்றால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நன்மையே செய்து வந்தாலும் உங்களை அறியாது வந்த தீய வினைகளை நீக்க வேண்டும் என்ற இந்த இச்சையில் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இதைச் சொல்கிறோம்.