ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 6, 2018

படிக்க வேண்டுமா...? மனதில் பதிய வைக்க வேண்டுமா..?


கல்வித் திறனை வளர்த்துக் கொள்வதற்காக வேண்டிக் கல்விச் சாலைகளுக்குச் செல்கின்றோம்.
1.அதிலே விஞ்ஞானத்தின் மேல் நாட்டம் வரப்போகும் போது விஞ்ஞான அறிவை (SCIENCE) வளர்த்து அதனுள் இணைகின்றோம்.
2.இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற எண்ணத்திலே செல்லும் போது அதன் மேல் கூர்மையாகி அதை (TECHNICAL) வளர்க்கின்றோம்.
3.மருத்துவம் செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் ஓங்கி வரப்போகும் அதை (MEDICAL) வளர்த்துக் கொள்கின்றோம்.
4.விவசாயத்தின் மீது நாட்டம் வரும் பொழுது அதனின் நுட்பங்களைப் படித்து (AGRICULTURE) வளர்த்துக் கொள்கின்றோம்
5.பொருள்களைப் பற்றிய கணக்கீடுகளைத் தெரிய விரும்பும் பொழுது அதற்குள் இணைந்து அதைக் (COMMERCE) கற்றுக் கொள்கின்றோம்

இது எல்லாம் இந்த மனித வாழ்க்கைக்கு உதவும் நிலையே தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆனால் இதைத் தெரிந்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்க முடியும் என்று இன்று செயல்படுத்திக் கொண்டுள்ளோம்.

இருந்தாலும் படித்த நிலைகள் கொண்டு செயல்படும் போது அதிலே சிறிது குறை ஏற்பட்டால் அதனால் வேதனை என்ற நிலைகள் ஒரு சமயம் பட்டுவிட்டால்
1.கண்டுணர்ந்த படித்த விஞ்ஞானத்தின் அறிவு அனைத்தும் வீழ்ந்து விடுகின்றது.
2.பல காலம் படித்துணர்ந்திருந்தாலும் அதிலிருந்து மீள முடியாதபடி  சோர்வடையச் செய்து
3.முழுவதும் செயலிழந்த நிலைகளுக்குச் சென்று விடுகிறார்கள்.

ஆனால் நானோ (ஞானகுரு) படிப்பறிவு அற்றவன்தான். மூன்றாவது கூட முழுமையாகப் படிக்கவில்லை. ஆனால் இதைப் பேசுகிறேன் என்றால்
1.குருநாதர் கொடுத்த அந்த மெய் ஞானிகளின் ஆற்றலை
2.அவர் எனக்குள் பதிவு செய்ததை நினைவு கூர்ந்து
3.இந்தக் காற்றில் இருப்பதை என் உயிரின் துணை கொண்டு நுகரும் பொழுது
4.மெய் உணர்வின் அலைகளை ஒலி பரப்பும் எண்ணங்களாக அது என்னைப் பேச வைக்கின்றது.

உதாரணமாக படித்துணர்ந்த நிலைகள் கொண்டு ஒரு பாடலைப் பாடுகின்றனர் என்றால் பாடிய முதலின் தலைப்பு சரியாக வந்தால் அந்த பாடலின் கடைசி வரையிலும் ஒரே சீராக எந்தத் தங்கு தடையுமில்லாது வரும்.

ஆனால் பாடலைப் பாடி வரப்போகும் போது இடைப்பட்ட நிலைகள் மறைந்து விட்டால் பாடலின் முழுமையின் நிலை வராது.
1.மறுபடியும் முதலிலிருந்து பாடிக் கொண்டு வர வேண்டும்.
2.(வெறுமனே பாட நிலைகளைப் படித்துக் கொண்டிருந்தால் இந்த நிலையில் தான் இருப்போம்)

அவ்வாறு இல்லாதபடி சீராக்கும் நிலைகளுக்குத்தான் அந்த மெய் ஞானிகள் கண்ட உணர்வின் தன்மையை குருநாதர் எமக்குள் பதிய வைத்தது போன்று உங்களுக்குள்ளும் இதை ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.

ஏனென்றால் உங்களை அறியாது வந்த இருளை நீக்கி மெய்ப் பொருள் காணும் நிலையை உங்களுக்குள் வளர்க்க வேண்டும் என்று இந்த இச்சையில் தான் இதைச் சொல்கின்றேன்.

குருநாதர் இட்ட ஆணைப்படி இந்த எண்ணத்தை நான் சுவாசிக்கும் போது மெய் ஒளியாகப் பரப்புகின்றது எனது உயிர். மெய் ஞானிகளின் உணர்வின் தன்மை என் அங்கங்களைக் கிரியையாகச் செயல்படுத்துகின்றது.

அவ்வாறு கிரியை ஆகி வெளிப்படும் போது ஞானத்தின் செயலாகப் என்னைப் பக்குவப்படுத்தும் நிலையும் பக்குவமான நிலைகள் பேசும் நிலையையும் உருவாக்குகின்றது.

இதே ஞானத்தின் உணர்வுகளை நீங்கள் கேட்டுணரும் பொழுது உங்களுக்குள்ளும் ஆழமாகப் பதிவாகின்றது. அந்த பதிவின் நிலைகள் உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் சீர்படுத்தும் நிலையாக நிச்சயம் வரும்.