ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 5, 2018

சீதா பொய் மானைக் கண்டு ஆசைப்படுகின்றாள் - இலட்சுமணன் கோபப்படுகின்றான் ஏன்...?


இராமனிடம் வில்லும் அம்பும் உண்டு. அந்த அம்பை எய்வது போல மனிதன் ஒரு சொல்லைச் சொன்னவுடனே
1.இந்தச் சொல்லின் உணர்வலைகள் அங்கே அம்பாகப் பாய்ந்து
2.அந்த உணர்வின் அலைகள் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
3.இதனால் தான் சீதா இராமா என்பது. (சீதா என்பது சுவை. இராமன் என்பது எண்ணம்)

நாம் எந்தெந்த வகையான குணங்களை எடுத்து அதற்குரிய எண்ணங்களைச் சொல் வழியாக எப்படிப் பாய்ச்சுகின்றோமோ அந்த உணர்வின் நிலையே “இயக்கம்” என்று இராமாயணத்தில் காட்டப்பட்டது.

தன்னுடைய எண்ணத்தால் கவர்ந்து சுவாசித்த உணர்வுகள் உயிரான ஈசனிடம் பட்டு இந்த உணர்வின் அலைகள் உடலுக்குள் வித்தாக விளைந்து விளைந்த வித்தின் தன்மை உயிருடன் இணைந்து அந்த உணர்வின் எண்ண அலைகளாகப் பரப்பச் செய்யும்... இயக்கச் செய்யும்... நிலையைத்தான் “சீதா இராமா...!” என்பது.

இதைப் போல நமக்குள் எத்தனையோ இராமன்கள் உண்டு. எந்தெந்தக் குணங்களை எடுக்கிறோமோ அவை ஒவ்வொன்றும் இராமன்களே.
1.சீதாராமா (சுவைக்கொப்ப எண்ணம்)
2.ஜானகிராமா (உணர்வின் சக்தி இணையும் நிலை)
3.பலராமா (பல பல எண்ணங்கள்)
4.பரசுராமா (உழுது பயிரிடும் நிலை... சமப்படுத்தும் எண்ணங்கள்)
5.கோதண்டராமா (வில்லை முறித்தது - தீமைகளை ஒடுக்கும் தன்மை)

ஒவ்வொரு உணர்வின் இயக்கத்தையும் இராமன் என்ற சொல்லாக வைத்து அழைக்கிறோம். அதாவது நாம் சுவாசிக்கும் நிலைகளில் நாம் எண்ணும் எண்ணங்களே அந்தந்த உணர்வின் சக்தியாக இயக்கச் செய்கிறது என்ற தத்துவத்தைத்தான் அன்று வான்மீகி எழுதினார்.

ஆஞ்சநேயன் என்பது குரங்கு, பரிணாம வளர்ச்சியில் குரங்கு என்ன செய்கின்றது...? தனது பிடிப்பின் நிலைகள் கொண்டு அது செயல்படுத்துகிறது.
1.கோபம் வந்துவிட்டால் யார் நல்லது சொன்னாலும் நாம் கேட்போமா…?
2.அட போய்யா... உனக்கு என்ன தெரியும்…? என்று சொல்வோம்.
3.சந்தோஷமாக இருக்கும் போது வெறுப்பான விஷயங்களைச் சொன்னால் நாம் ஏற்றுக் கொள்வோமா…? மாட்டோம்.
4.அது போல ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு இயல்பு உண்டு.
5.”குரங்குப்பிடி...!” என்று சொல்வதுபோல நாம் எந்தக் குணத்தை எடுத்துக் கொண்டோமோ
6.அந்த உணர்வின் நிலைகள் கொண்டுதான் நம்முடைய செயல்கள் இருக்கின்றது.

சகல சக்திகளையும் இந்த உடலான நிலைகளைக் கொண்டு இயக்கும்  நிலையைத்தான் இராவணன் என்பது. அதாவது நம் உடல் தான் இராவணன்.

பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து மனித உடலாக வரும் வரையிலும் சர்வ சக்தியும் நமக்குள் சேர்க்கப்படுகிறது. அதிலே அசுர சக்திகளும் உண்டு. அந்த அசுர சக்திகளைக் கொண்டு இராவணன் என்ன செய்கின்றான்...?
1.சிவனை நேசிக்கின்றான்... சிவன் என்பது நம் உடல் (திடப்பொருள்)
2.நாம் அனைவருமே உடலின் ஆசை கொண்ட நிலையில் இராவணனாக இருக்கின்றோமே தவிர இராமனாக அல்ல.

சீதா... தான் கவர்ந்து கொண்ட சக்தி நாம் எந்தெந்தக் குணங்களைக் கவர்ந்து கொண்டோமோ அந்தச் சக்தியை இராவணன் கவர்ந்து கொண்டு இலங்கைக்குள் வைத்திருக்கின்றான். (இலங்கை என்றால் உடல்)

1.ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு எல்லை உண்டு
2.நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் நம் உடலுக்குள் பெரும் கடலாக இருந்தாலும்
3.நாம் எண்ணிய நிலைகள் ஒவ்வொன்றும் (தனித் தனியாக) தீவு போன்று இருந்தாலும்
4.இந்த உடலுக்குள் அது அனைத்துமே “அடங்கி இருக்கிறது...” என்ற நிலையைத்தான் அவ்வாறு காட்டுகின்றார்கள்.

வான்மீகி ஒன்றும் அறியாதவன் தான். காட்டிலே பல உயிரினங்களைக் கொன்று குவித்தவன். அவனுடைய சந்தர்ப்பம் பட்சிகள் மூலம் மெய் ஞானத்தை நுகரும் ஆற்றல் பெற்றான். இராமாயணக் காவியத்தையே படைத்தான்.

விண்ணுலகச் சக்தியின் ஆற்றல் அந்த உணர்வின் சொல் வடிவாக எண்ணங்களின் ரூபத்தைக் கொண்டு எவ்வாறு இயக்குகிறது...? என்பது தான் இராமாயணத்தின் தத்துவமே.

சீதை மானுக்காக வேண்டி ஆசைப்படுகிறாள் என்று சொல்கின்றார்கள்.
1.சீதையினுடைய ஆசையைக் கொண்டு
2.அவள் எண்ணிய நிலைகள் தான் அந்த மான். இது பொய் மான்.
3.அதவது நாம் எண்ணும் ஆசைகள் அனைத்தும் பொய்.
4.நேரிலே பார்க்கப்படும் நிலைகள் வேறு
5.ஆனால் எண்ணங்களில் ஆசைகளைக் (பொய்யாக) கூட்டப்படும் போது அது எவ்வாறு நம்மைத் திசை திருப்புகிறது...? என்ற நிலையை
6.நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் முன் பகுதியிலே நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய நிலைகளைத்தான்... “பொய் மான்...!” என்று
7.அவ்வாறு மிகவும் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

நாம் பேசிய பேச்சும் மற்றவர்கள் பேசிய பேச்சும் இந்த உணர்வின் மூச்சலைகள் இவை அனைத்தையும் சூரியனின் காந்தப் புலன்கள் கவர்ந்து வைத்துக் கொண்டேயிருக்கிறது.

நாம் எதை நினைக்கின்றோமோ அதை இழுத்து நமக்குள் சுவாசித்து அந்த உணர்வுடன் மோதி இயக்கச் செய்யும் போது இலட்சுமணன். அதாவது
1.நாம் நினைப்பதைத் தூண்டி எழுந்து அந்த உணர்வின் தன்மையை நமக்குள் உணர்த்துகிறது.
2.உணர்ச்சிகளைத் தூண்டுவதால்தான் இலட்சுமணன் கோபம் உள்ளவன் என்கிறார்கள்.
3.நாம் நினைத்துச் சுவாசித்த சுவாசம் மோதியவுடன் இது பொய்யான ஆசை...! இதனால் உனக்கு விபத்து...! என்ற நிலையில்
4.இலட்சுமணனாக இருந்து இயக்கி நமக்குள் அந்த உண்மையைச் சொல்கின்றான்.

நாம் சுவாசித்த உணர்வுகள் இந்த உண்மையைச் செய்கின்றது.  ஆனால் ஆசைப்படும் போது இருள் சூழ்ந்த நிலைகளுக்குள் நாம் செல்கின்றோம்.

சைக்கிள் வேலை தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு சைக்கிள் கடையை ஆரம்பிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்தச் சூழ்நிலையைப் பார்த்து “நீ சைக்கிள் கடை வைத்து நடத்தினால் நஷ்டமாகிவிடும்...!” என்று ஒருவர் சொன்னால் போதும்,

இங்கு கடை வைப்பது அவருக்குப் பிடிக்கவில்லை அந்தப் பொறாமையினால் தான் அவ்வாறு சொல்கிறார்...! என்று இப்படித்தான் நினைப்போம்.
1.எண்ணிய ஆசையானது சீதா... அது கவர்ந்து கொண்ட சக்தி
2.அடுத்தவர்கள் சொல்லும் உணர்வினுடைய நிலைகளை நாம் சுவாசித்துச் சிந்திக்கும் போது வருவது இலட்சுமணன்

நாம் எடுத்துக் கொண்ட ஆசையின் நிலைகள் எவ்வாறு இருக்கின்றது... நம்மை இயக்குகிறது...? என்ற நிலையை அன்று வான்மீகி இத்தகைய உணர்வின் தன்மையாக இராமாயணக் காவியத்தில் வெளிப்படுத்தினார். ஞானிகள் சொன்ன மூலக் கருத்து இது தான்.  

ஆனால் இன்று எத்தனையோ நிலைகளில் அந்தக் காவியம் திருத்தப்பட்டுள்ளது.