ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 20, 2018

சீதா ஏன் கடைசியில் மண்ணுக்குள் போகின்றது…!

சீதா என்ற நிலை இராமனிடம் பட்ட துன்பங்களும் அது எண்ணாதபடி அதன் உணர்வின் தன்மை பெறப்படும் பொழுது எத்தனையோ இன்னல்களை இராவணனிடத்தில் பட்டது.

சீதா பட்ட இன்னல்கள் இன்னது என்று சொல்ல முடியாது.

அத்தனை அவஸ்தைகளையும் தாங்கிக் கொண்டு உயிரின் உணர்வின் தன்மையை உண்மையை நிலைப்படுத்திய அந்த உணர்வுகள்
1.இந்த உடலை விட்டுச் செல்லும் உயிரான்மா
2.சொர்க்கத்தை அடைந்தது.
3.இந்த உடல் என்ற சீதா பூமிக்குள் மண்ணைப் பிளந்து
4.மீண்டும் மண்ணுடன் மண்ணாக மற்றவைகளுக்கு உணவாக மக்கியே விட்டது.

இதை இராமாயாணத்தில் தெளிவாகக் காட்டுகின்றனர்.

மனித உடலின் கடைசி முடிவையும்… உயிராத்மா அடைய வேண்டிய எல்லையையும்… இராமாயணத்தில் வான்மீகி தெளிவாகக் காட்டியுள்ளார்.
1.உடல் அழியக்கூடியது. உடல் நமக்குச் சொந்தமல்ல.
2. உயிர் என்றும் அழிவதில்லை. உயிர் தான் நமக்குச் சொந்தமானது.

விண்ணிலிருந்து வந்த உயிர் பூமிக்குள் விஜயம் செய்து பல கோடிச் சத்துகளை எடுத்து பல உடல்கள் பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாகின்றது.

மனிதனான பின்பு அனைத்தையும் அறியும் அறிவாக ஒளியின் உணர்வாக வளர்ந்து நான் “விண் செல்ல வேண்டும்”

1.இராமன் என்பது நம் எண்ணங்கள்.
2.சீதா என்பது சுவை (உடல்). சுவைக்கொப்ப நமக்குள் எண்ணங்கள் தோன்றுகின்றது. சீதாராமன் தான். இராமாசீதா அல்ல.
3.இராவணன் என்பது நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எடுத்துக் கொண்ட ஒலிகள் (நாதங்கள்).
4.லவ குச என்பது நஞ்சை வென்று உயிருடன் ஒன்றி ஒளியான “விண்ணுலக ஆற்றல்”

வான்மீகி மகரிஷி தான் கண்டறிந்த பேருண்மைகளை சீதாவின் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஓதினார் என்று காவியப் படைப்பு உண்டு.

அதாவது மனித உடல் பெற்ற நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர வேண்டும் என்று நுகர்ந்தால் “லவ குசா…!” ஒளியான அணுக்களாக நமக்குள் உருப்பெறும்.

லவ குசா வளர்ந்த பின் இராம காவியைத்தைப் பாடுகின்றார்கள் என்றால் என்ன அர்த்தம்?

நாம் எடுக்கும் மெய் உணர்வுகள் உடலுக்குள் (சீதாவிற்குள்) விளைந்தபின் நம்மைப் பற்றியும் நமக்குள் இயங்கும் அனைத்தையும் அறிந்து அது வெளிப்படுத்திக் காட்டும்.

தன்னைத் தான் அறியும் நிலையாக நாம் நம்மை அறிய முடியும்.

மனித உடலுக்குப் பின் ஒளியின் சரீரம் பெற்று அந்த மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்பதை வான்மீகி தெளிவாகக் காட்டியுள்ளார்.

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.