ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 10, 2018

“விஜய தசமி” – விஜயம் செய்தது எது...?


1.இந்தச் சூரியக் குடும்பத்திற்குள் விண்வெளியில் உயிராகத் தோன்றி
2.அந்த உயிர் பூமியின் ஈர்ப்பலைக்குள் வந்து
3.பூமிக்குள் இருக்கும் தாவர இனச் சத்தைத் தனக்குள் உணவாக உட்கொண்டு
4.அந்த உணர்வின் சத்து கொண்டு எண்ணங்கள் உருப் பெற்று
5.எண்ணத்தின் நிலைகள் கொண்டு ஒவ்வொரு உணர்வையும் மாற்றி
6.ஒலி ஒளி என்ற நிலைகளுக்கு உருப் பெற்றது தான் சப்தரிஷி மண்டலம்
7.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று நாம் சொல்லும் ஒளியான உயிராத்மாக்கள் அனைத்தும்
8.அங்கே தான் இன்றும் வாழ்கின்றார்கள்.

விண்ணிலே எப்படி உயிர் ஒளியாகத் தோன்றியதோ அதே நிலையில் இங்கே பூமியில் இருக்கக்கூடிய தாவர இனச் சத்தின் நிலைகள் அனைத்தும் ஒளியாக மாறி உயிருடன் உயிராத்மாவாக மாறி மீண்டும் “விண் செல்வதே கடைசி நிலை...!

ஒரு உயிர் (உயிரணு) பூமிக்குள் வந்த பின் தாவர இனச் சத்தில் விழுந்தால் அதனின் சத்தைக் கவர்ந்து ஒரு புழுவாக உடல் பெறுகின்றது. இப்படிப் புழுவிலிருந்து பரிணாம வளர்ச்சியில் எத்தனையோ பல கோடிச் சரீரங்கள் பெற்றுத்தான் மனிதனாகத் தோன்றியது. மனிதனான பின்
1.தன் எண்ணத்தால் உயர்ந்த எண்ணங்களைத் தனக்குள் சேர்த்து
2.இந்த உணர்வின் சத்தைத் தன் உடலுக்குள் விளைய வைத்து
3.உடலில் விளைந்த உணர்வின் ஆற்றலை உயிராத்மாவுடன் சேர்த்து
4.உயிருடன் ஒன்றி ஒளியாகச் சேர்வதே கடைசி நிலை – விஜய தசமி...!

விஜய தசமி என்கிற பொழுது விண்ணிலே தோன்றிய உயிரணு பூமிக்குள் “விஜயம் செய்து...” தன் சகல சக்திகளையும் உணர்வுகளையும் ஒளியாக மாற்றித் “தசமி...” பத்தாவது நிலையாக அழியாத ஒளிச் சரீரம் பெறும் நிலை.

மனிதன் விண் செல்லும் நிலையை நினைவுபடுத்துவதற்கே விஜய தசமி என்ற நாளை ஞானிகள் உருவாக்கிக் கொடுத்தார்கள்.