இன்றுள்ள காற்று மண்டலத்தில் நச்சுத் தன்மைகள் அதிகமாகப் பரவி உள்ளது. உதாரணமாக
ஒருவர் தவறு செய்கின்றார் என்று உற்றுப் பார்த்தால் அந்த உணர்வு நமக்குள் பதிவாகி விடுகின்றது.
மீண்டும் அந்தத் தவறு செய்பவரை எண்ணும் போது அதை நுகர்ந்து “தவறு செய்கிறார்…!”
என்று உணர முடிகின்றது. இதே போல் இன்று உலகம் முழுவதற்கும் தீவிரவாதம் என்ற போர் முறை
கொண்டு ஈவு இரக்கமற்று மனிதனைக் கொன்று ரசித்து வாழும் இந்த உலகமாக போய்விட்டது.
1.தீவிரவாதிகள் என்று இன்று “யாரையோ…!” சொல்வதைக் காட்டிலும்
2.அந்த உணர்வுகள் இன்று எல்லா மனிதர்களின் சுவாசத்திலும் கலந்து இயக்கிக் கொண்டுள்ளது.
இப்படிப் பல உடல்களிலிருந்து வந்த தீய உணர்வுகள்… தற்கொலை செய்து கொண்ட உணர்வுகள்…
இவை எல்லாம் பத்திரிக்கை வாயிலாகவும் டிவி வாயிலாகவும் பார்த்துக் கேட்டு நுகரும் பொழுது
(அன்றாடம்) நமக்குள் பதிவாகின்றது.
இதைப் போல இன்றைய விஞ்ஞான உலகில் எங்கு எந்த அசம்பாவிதங்கள் நடந்தாலும் கொலை
கொள்ளை இதைப் போன்ற தவறான செயல்கள் எத்தனையோ நடப்பதைக் கேள்விப்படுகின்றோம்.
ஒரு டாக்டரை எடுத்துக் கொண்டாலும் படித்துக் கொண்ட வித்தைக்கு மாறாகத் தவறான
உணர்வுகளைச் செயல்படுத்தி பலருடைய உடலின் உறுப்புகளைத் திருட்டுத்தனமாக எடுத்து அதை
வியாபாரமாக்கிக் காசாக்கி அந்தத் தவறின் உணர்வைச் செயல்படுத்தும் சக்தியாகப் பரவிக்
கொண்டு இருக்கின்றது. (உபதேசம் கொடுத்த வருடம் 1990 – அன்று நமக்கு அதிகம் தெரியவில்லை.
இன்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம்)
எல்லாவற்றையும் பத்திரிக்கை வாயிலாகப் படித்து டிவி வழியாகவும் பார்த்துப் பதிவாக்கி
கொள்கின்றோம். உடலுக்குள் இது பதிவாகி விடுகின்றது. அதே சமயத்தில் தவறு செய்தவர்கள்
செயலும் இந்தப் புவியில் பரவிக் கிடக்கின்றது. அவர்கள் செயலைப் பத்திரிக்கை வாயிலாகப்
படித்தாலும் அதை மீண்டும் நினைவுபடுத்தும் போது
1.அவருடைய தவறின் உணர்வுகளை நாம் நுகர்ந்து மீண்டும் உணர்கின்றோம்.
2.அதைப் பற்றித் திரும்பத் திரும்பப் பேசத் தொடங்குகின்றோம்.
3.இப்படி தவறான உணர்வுகளும் தவறான உணர்ச்சிகளையும் நாம் அடிக்கடி நுகர்ந்து
4.நம் உடலில் இரத்த நாளங்களில் கலந்து அதிகரிக்கப்படும் போது
5.மனிதனை உருவாக்கிய பண்பு பாசம் பரிவு என்ற நல்ல குணங்கள் நம் உடலுக்குள்ளே
இரக்கமற்றுக் கொல்லப்படுகின்றது.
6.அதனால் நம் உடலுக்குள் பல இன்னல்களும் தொல்லைகளும் ஏற்படுகின்றது.. நோயாகவும்
மாறுகின்றது.
சில இடங்களில் அதீதமான நிலைகளில் அரசியல் ரீதியாக நண்பர்கள் சொல்லும் கஷ்டங்களைக்
கேட்க நேர்கின்றது. அதே போல் உலக அரசியலை எடுத்துக் கொண்டாலும் ஒருவருக்கொருவர் பண்பற்ற
நிலைகள் பேசிக் கொள்வதும் “பண்பு என்பதே அறவே அழிந்த நிலைகளில்” அவர்கள் செயல்பட்டுக்
கொண்டிருப்பதை எல்லாம் நமக்குள் பதிவாக்கிய பின்
1.நமக்குள்ளும் பண்புகள் கெட்டு
2.பண்பு என்ற நிலையே அது எங்கே இருக்கிறது…? என்று தேடும் நிலை வந்து விடுகிறது...!
3.காரணம் நமக்குள் எதைப் பதிவு செய்கின்றோமோ அந்தப் பதிவின் நினைவே நமக்குள்
இயக்கமாகி விடுகின்றது.
எதைத் தெரிந்து கொள்ள விரும்புகின்றமோ அவை எல்லாம் நமக்குள் பதிவாகின்றது. பதிவாவதற்கு
முன் நம் உயிரிலே பட்டு அந்த உணர்வுகளை உணர முடிகின்றது. அந்த உணர்ச்சிகள் அனைத்தும்
அடுக்கடுக்காக நம் உடலில் உள்ள அணுக்களில் தாக்கப்படுகின்றது.
நமது நல்ல உணர்வையும் நல்ல குணங்களையும் செயலாக்கும் உடலிலுள்ள அணுக்கள் அனைத்திலும்
இத்தகைய தீய உணர்வுகள் படரப்படும் போது
1.நம்மை அறியாது நல்ல அணுக்களின் தன்மை மாசுபட்டு
2.மன நோய்… உடல் நோய்… என்ற நிலைகள் அதிகமாக வந்து கொண்டு இருக்கிறது.
பெரும் பகுதி இன்றுள்ள மனிதர்களின் வாழ்க்கையில் மன நோயே அதிகரித்துள்ளது. பின்
அது உடல் நோயாக மாறி பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள்.
அதை மாற்ற வேண்டும் என்பதற்காக
1.ஒவ்வொரு நாளும் நமது மனதைத் தூய்மையாக்கவும்
2.நமது உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளைச் செலுத்தி
3.கண்ணின் நினைவு கொண்டு நம் உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு அணுக்களுக்கும் அதைப்
பெறச் செய்வதே இந்தத் தியானத்தின் நோக்கம்.
நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நமது உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு
நேரடியாகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செலுத்தப்படும் போது ஒவ்வொரு அணுவும்
சிறுகச் சிறுக தூய்மை அடைகின்றது.
மன நோய் அகல்கின்றது. மனம் அமைதியாகின்றது. மனத் தூய்மை பெறுகின்றோம். நம் வாழ்க்கை
சீராகின்றது.