ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 3, 2018

ஊருக்கெல்லாம் நன்மை செய்தார்…! இப்பொழுது அவஸ்தைப்படுகிறார் என்று சொல்பவரின் கடைசி நிலை


இந்தப் பூமியின் பற்று கொண்டு எந்த உயர்ந்த சக்தியையும் எடுப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல.
1.ஏனென்றால் அது மீண்டும் மீண்டும் பின்னிப் பிணைந்து
2.மனிதனுடைய வாழ்க்கையினுடைய ஆசையைத்தான் ஓட்டிக் கொண்டிருக்கும்.
3.இந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் சலிப்பு சஞ்சலம் வேதனைகள்பட்டே  தான் ஆக வேண்டும்.

நாம் நல்லதையே செய்வோம் நல்லதையே பேசுவோம் நல்லதையே எடுப்போம் என்று தான் இருப்போம். உதாரணமாக ஒரு மனிதன் நல்லதையே செய்ய வேண்டும் என்ற நிலையில் தன்னிடம் இருக்கக்கூடிய பொருள் அனைத்தும் இரக்க மனதுடன் பிறர் துன்பப்படும் போது அவருக்கு உதவி செய்கின்றார்.

தக்க நேரத்தில் உதவி செய்தாலும் பிறர் வேதனைப்படும் உணர்வைப் பாசத்துடன் கவர்ந்து விட்டால் அந்த உணர்வின் தன்மை இவருக்குள் வியாதியாக வருகின்றது.

 பிறர் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஓங்கி வளர்க்கின்றார். அந்த உணர்வு கொண்டு தன்னிடம் இருக்கக்கூடிய உழைத்த பொருள்கள் அனைத்தையும் அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டு ஏங்கி உதவுகிறார்.

பிறர் துன்பப்படும் செயல்களைக் கண்ணுற்றுப் பார்க்கும் போது அந்த  இரக்க உணர்வுகள் ஈர்க்கப்பட்டு அவர்களுக்கு உதவி செய்ய வைக்கின்றது.

அப்படி உதவி செய்தாலும் இந்த வேதனையான உணர்வுகள் அனைத்தும்  விஷமாக மாறி நல்லவர்கள் கடும் நோயால் பாதிக்கப்படுகின்றார்கள். அப்படிக் கடும் நோயால் பாதிக்கப்படும் போது அவரை அணுகி உள்ளவர்கள் என்ன சொல்வார்கள்…?

எங்களுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை. ஊரில் உள்ளவர்களுக்கு எல்லாம் வாரி இறைத்தார், இப்போது என்ன செய்வது…. அவர் அவஸ்தைப்படுகின்றார்..! என்று விலகிப் போய்விடுகிறார்கள்.
1.எல்லோருக்கும் நல்லது செய்தார் என்றாலும் ஊருக்குத்தானே வாரி இறைத்தார்…!
2.எங்களுக்கு என்ன செய்தார்…? என்ற நிலைகள் கொண்டு அவரை வெறுப்பார்கள்.

 ஆனால் அதே சமயம் நல்லது செய்தார் என்று அவர் மீது பாச உணர்வுடன் ஒருவர் வந்து ஆகா..! எல்லோருக்கும் இவர் நன்மைதானே செய்தார். அவருக்கு நாம் நன்மை செய்தால் “நமக்கு நன்மைகள் கிடைக்கும்…!” என்று அவருக்கு உபகாரம் செய்கிறார்.

அப்படி உபகாரம் செய்யும் போது அவர் நினைப்பார். என் அருகில் உள்ள அனைவருமே பணத்திற்காகத்தான் என்னை நெருங்கினர். ஆனால் இவர் என் உள்ளத்திற்காக எனக்காக உதவி செய்தார் என்ற ஏக்கத்துடன் எண்ணுவார். இப்படிப்பட்ட ஏக்கம் வளரும்போது கடைசியில் உடலை விட்டுப் பிரியும் இவரின் ஆத்மா அடுத்து எங்கே போகிறது…?

அவர் இறந்ததைக் கேள்விப்பட்டவுடன் உதவி செய்தவர் என்ன எண்ணுகிறார்…!
1.அடடா… இவ்வளவு தூரம் உதவி செய்தோமே… இந்த ஆத்மா போய்விட்டதே…! என்று அந்த ஏக்கத்துடனே அவர் இருப்பார்.
2.எல்லோரும் என்னை விட்டு விட்டார்கள். இவர் தான் எனக்கு உதவி செய்தார்…! என்று உடலை விட்டுப் பிரியும் சமயம் அவரை எண்ணுகின்றார்.
3.இந்த இரண்டு எண்ணங்களும் ஒன்று சேர்கின்றது.
4.அந்த இறந்தவருடைய உயிராத்மா உடலுடன் இருக்கும் உதவி செய்தவரின் உடலுக்குள் வந்து விடுகிறது.
5.இறந்தவருடைய உடலில் இருந்த நோய்கள் அனைத்தும் இந்த உடலுக்குள் வருகின்றது. தொல்லைகளை ஏற்படுத்துகின்றது.
6.ஆனால் இவர் தவறு செய்யவில்லை. அந்த உடலில் விளைய வைத்த உணர்வுகள் இந்த உடலிலும் விளையத் தொடங்குகின்றது.

எந்த வித்தை நிலத்தில் ஊன்றுகின்றோமோ அந்த வித்து தான் அங்கே வளர்ந்து விளைச்சலாக வரும். அதே போல எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணத்தில் மற்றவர்களின் வேதனையான உணர்வுகளை நுகரப்படும் பொழுது அந்த உணர்வுகள் வித்தாக உடலில் விளைந்தது,

விளைந்த வேதனைகள் அனைத்தும் தன் உயிராத்மாவில் சேர்க்கப்படும் போது அது வேதனை கொண்ட உணர்வுகளையே உருவாக்கும் அந்த உணர்வின் ஆத்மாவாக வெளியில் வருகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.நம் உடலிலே எத்தனையோ ஆத்மாக்கள் உண்டு.
2,(யாராக இருந்தாலும் சரி – ஆன்மா இல்லாதவர் யாரும் கிடையாது)
3.நம்மை அறியாமலேயே எத்தனையோ பயந்திருப்போம். பக்தியின் பரவசத்தில் ஏங்கி இருப்போம்.
4.பக்தியில் பரவசப்பட்டு எவ்வளவு நன்மைகள் செய்தோமோ அதே எண்ணத்துடன் ஏங்கும் போது
5.பக்தி நிலையிலிருந்த ஒரு உயிராத்மா நம் உடலில் வந்து அருளாடிக் கொண்டு இருக்கும்.

பயத்தின் நிலைகள் அதிகமாகச் சேரும் போது இதைப் போல எத்தனையோ ஆத்மாக்கள் நம் உடலில் வந்து சேர்ந்து விடுகின்றது. இன்னொரு ஆத்மா நம் உடலுக்குள் வந்த உடனே நம் உடலில் இருந்து வரக்கூடிய மணமும் நமக்குள் சேர்ந்த அந்த உயிராத்மாவும் அது தன் இனத்தை எடுத்துச் சுவாசிக்கின்றது.
1.இரண்டையும் சேர்த்து நாம் சுவாசிக்கும் போது நம் உயிரிலே படுகின்றது.
2.அப்போது இரண்டு எண்ணங்கள் வரும். (இதை உங்கள் அனுபவத்தில் பார்த்திருப்பீர்கள்)
3.அந்த வேதனைப்பட்ட எண்ணங்கள் கொண்டு… “என்னை அங்கே அழைக்கின்றது… இங்கே போகச் சொல்கின்றது…!” என்றெல்லாம் சொல்வீர்கள்.
4.நான் செத்துப்போய்விடுவேன் போலிருக்கிறது என்ற எண்ணம் சர்வ சாதாரணமாக வரும்.

அப்படி வந்தால் அதை உடனே மாற்றிப் பழக வேண்டும். சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய ஜீவாத்மாக்கள் அனைத்தும் அந்த சப்தரிஷிகளின் அருள் சக்தி அருள் ஒளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ண வேண்டும்.

இவ்வாறு எங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய ஜீவாத்மாக்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் ஒளி பெற வேண்டும் என்ற இந்த உணர்வைக் கலந்தபின் அந்த உடலில் இருந்த விஷத்தின் தன்மை நம் உடலில் நோயாக உருவாக்காதபடி தடுக்கப்படுகின்றது.

நாம் எண்ணும் மகரிஷிகளின் அருள் சக்தி நம் உடலிலுள்ள அந்த ஆத்மாக்களுக்கும் கிடைக்கின்றது. அவ்வாறு கிடைக்கச் செய்யும் போது நம் உடலிலிருந்து
1.அந்தச் சப்தரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்தியை அதுவும் பெற்று நம்முடன் ஒத்துழைக்கின்றது.
2.அதுவும் நல்ல நிலையை அடைகின்றது.
3.நாம் உடலை விட்டுச் சென்றபின் அந்த ஆத்மாக்களும் ஒளி நிலை பெற இந்தத் தியானம் உதவுகின்றது.